Monday, October 21, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN

பீஷ்மர் பொன்மொழிகள்

யாராவது ஒரு தாத்தாவோ, பாட்டியோ, நம்மை கூப்பிட்டு அறிவுரை புத்திமதி சொல்லும்போது எவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து தப்பித்து ஓடமுடியுமோ அப்படி விளங்குபவர்கள் நாம். இங்கே அம்புபடுக்கையில் படுத்துக்கொண்டு மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கும் பீஷ்மரை யுதிஷ்டிரன் துளைத்து எடுக்கிறான் கேள்வி மேல் கேள்வியாக. அத்தனைக்கும் பொறுமையாக சந்தோஷமாக பதில் சொல்கிறார் பீஷ்மர்.

''யுதிஷ்டிரா என்னவோ கேட்க ஆரம்பித்தாயே கேள் சொல்கிறேன்'' "தாத்தா, மனிதர்கள் உலகில் பாண்டவர்களாகிய எங்களைப் போல் பாக்கியவான்கள் இல்லை என்கிறார்கள். ஆனால் உண்மையிலே அதிக கஷ்டம், துயரங்கள், துன்பம், சோதனைகள் அடைந்தவர்கள் எங்களை போல வேறு யாரும் இல்லை என்பது தான் வாஸ்தவம் இல்லையா?'' ''யுதிஷ்டிரா, எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. பல பிறவிகள் எடுத்தாலும் கடைசியில் அதற்கும் ஒரு முடிவு உண்டு'' என்கிறார் பீஷ்மர். ''தாத்தா, எனக்கு அத்யாத்மம் பற்றி புரியும்படியாக விளக்குங்கள்'' என்றான் யுதிஷ்டிரன் "அத்யாத்மம் மிக உயர்ந்த ஒரு ஞானம். பஞ்ச பூதங்கள் தான் ஒருவனை உருவாக்கி அவனை கடைசியில் தமக்குள் திரும்ப பெற்றுக்கொள்வன. பஞ்சபூதங்களின் அம்சம் நம்மிலிருந்து ஒவ்வொன்றாக பிரிந்து மண்ணிலே இருந்து பிறந்த நாம் மண்ணில் கலக்கிறோம். கடல் அலையைப் போல் இது ஓயாமல் ஒழியாமல் நடைபெறுவது. சகல உயிர்களும் ஆமை தனது அவயவங்களை ஓட்டுக்கு வெளியே நீட்டி மீண்டும் உள்ளே இழுத்துக் கொள்வது போல் இந்த பிரபஞ்சத்தில் தோன்றி ஆதாரமான பஞ்சபூதத்திலேயே மறைவன. சகல உயிர்களும் இந்த பஞ்சபூத தன்மையைக் கொண்டே மெய், வாய், கண், மூக்கு, செவி, நாக்கு, ஆகியவற்றால் ருசித்து, ரசித்து, அனுபவித்து வாழ்ந்து மறைவன. இந்த ஐம்புலன்களின் அனுபவம் தான் மனதில் பதிகிறது. புத்தி இதில் பெரும்பங்கு வகிக்கிறது. உடலில் உறையும் ஜீவன்உடலின் இணைப்போடு , மூன்று நிலையில் காணப் படுகிறது. விழிப்பு, கனவு, நீண்ட உறக்கம் எனும் மூன்று நிலையில். ஜீவன் மூன்று குணங்களில் செயல்படுகிறது. சத்வ, ரஜோ, தமோ குணங்களில். இன்ப துன்பம், சுக துக்கங்களில் ஈடுபடுகிறது. மனம் உடலின் அவயவங்களை நடத்திச் செல்கிறது. புரிந்து கொள்வது அவரவர் குணத்திற் கேற்ப அமையும். உடலும் ஜீவனும் மீனும் நீரும் மாதிரி. மீனில்லாமல் நீர் இல்லை. நீரில்லாமல் மீன் இல்லை. இரண்டும் வேறு வேறு தான். இருந்தும் பிரிக்க முடியாதவை. மரணத்திற்கு பிறகு உடல் காணாமல் போனாலும் ஜீவன் மற்றொரு, அதற் கென்று அமைந்த உடலில் குடியே றும் போது பூர்வ ஜென்ம வாசனையாக அதன் கர்ம பலன்களை யும் தனது நிழலாக கொண்டு செல்கிறது. இந்த ஊழ்வினைப் பயன் தான் அவனை ஆட்டிப் படைக் கிறது. அதிலிருந்து மீளவே ஆத்ம ஞானம் தேடுகிறான். மனிதனின் வாழ்க்கைச்சக்கரமே கல்யாணம், மனைவி, குழந்தைகள், அவர்களை வளர்த்து ஆளாக்கி க்கு திருமணம் செய்து வைப்பது, அவர்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் நிலை வந்ததும் சற்றே பிரிந்து விலகுவது. அவனுடைய மனைவி, தான் பெற்ற மகன் மகளுடன் இணைந்து பாசத்தொடர்பு கொண்ட போது, அவன் தனது குடும்ப பாசத்தை அறுத்துக் கொண்டு மோக்ஷத்தை நாடுகிறான். ஆசை, பயம் இவை இரண்டும் நீங்கிவிட்டாலே பாதி வழி மனிதன் மோக்ஷம் சென்றாயிற்று என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஜந்துக்கள் உணவைத் தேடி அலைந்து அந்த முயற்சியிலேயே அழிகின் றன.ஒவ்வொருவனும் தானே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதன் சுக துக்கங்களை, இன்ப துன்பங்களை, உருவாக்கிக் கொண்டு அதன் பலனை அனுபவிக்கிறான். அவனால் தோன்றியதாக கருதும் அவ்வளவும் அவனது பூர்வ ஜன்ம கர்ம வினைப் பயனே என்பதை உணர வேண்டும். நாமெல்லாம் களிமண் உருண்டைகள். ஏதோ ஒரு சக்தி, நம்மிடமிருந்து வேறு பட்டது தான் நம்மை உருவாக்கி செயல் படுத்துகிறது. ஏதோ நாம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்ற நினைப்பே தவறு. எப்போது வேண்டு மானாலும் வரும் மரணத்தை எந்த முயற்சியாலும் நம்மால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது என்பதே நம் கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என புரிய வைக்கும். நம்மை மீறிய சக்தி ஒன்று நம்மை எப்போதும் வழி நடத்துகிறது என புரியும். "யுதிஷ்டிரா, ஒன்று சொல்ல விரும்பு கிறேன். சாங்க்ய கோட்பாடுகள் கொண்டவர்களும் யோக முறைகளை பின்பற்றுபவர்களும், தங்கள் வழி தான் சிறந்தது என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். இதற்கு தக்க சான்றுகளையும் ஆதாரங்களையும் எடுத்து அள்ளி வீசி தமது வழிதான் சிறந்ததென வலியுறுத்துகிறார்கள்.

யோக மார்கத்தில் ஈடுபடும் யோக வழிக்காரர்கள் பகவானை நம்பாதவன் மோக்ஷம் பெற முடியாது என்று சொல்லும்போது, சாங்க்யர்கள், சகல சாஸ்திரமும் அறிந்தவன் உலகப் பற்றை அறுத்து உலகிலிருந்து விடுபடும்போது அவன் மோக்ஷத்தை தவிர வேறு எதை அடைவான்? என்று எதிர் கேள்வி கேட்டு மடக்குகிறார்கள்?. எதை ஏற்றுக் கொண்டாலும் நல்ல பயன் தானே. இரு வழியிலும் ஞானிகள் வளர்கிறார்கள். அறிவு பூர்வமாக பக்தி பூர்வமாக ஒரு வழியும், சாஸ்த்ர பூர்வமாக மற்றொன் றும் மிளிர்கிறதே. இரண்டையும் பின்பற்ற அடிப்படையாக ஸ்ரத்தை அவசியம்'' என்கிறார் பீஷ்மர். யுதிஷ்டிரனுக்கு இதெல்லாம் புரிந்தாலும் படிக்கும் நம்மால் எளிதில் புரிந்து கொள்ளமுடியாது. அதற்கு சற்று பொறுமையும் சிந்தனையும் தேவை. பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு உபதேசம் செய்யும் விஷயங்கள் சகலமும் பற்றியவை. அதற்கு தான் அடிக்கடி சொல்கிறேன், பீஷ்மர் ஒரு என்சைக்ளோபீடியா. அவருக்கு தெரியாததே இல்லை. யுதிஷ்டிரன் மிக நன்றாக அவரை பயன்படுத்திக் கொள்கிறான். அவரது உபதேசங்கள் தொடர்கிறது. இவற்றில் ஒரு சிறிதாவது நமக்கு பயன்பட்டால் நாம் முழுதும் மாறிவிடுவோம். இனி நாம் பீஷ்மர் அறிவுரைகள் தொடர் கின்ற சாந்திபர்வம் மூன்றாம் பாகத்தில் அடியெடுத்து வைக்கிறோம் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...