Wednesday, October 9, 2019

AINDHAM VEDHAM


 ஐந்தாம் வேதம்   J K SIVAN 


                                                   நாராயணன்  தான்  பிரபஞ்சம்

நாம்  தொடர்ந்து  குருக்ஷேத்திர  யுத்த  களத்தில் தான் இருக்கிறோம்.  அம்பு படுக்கையில் கிடந்தவாறு பீஷ்ம பிதாமகர்  யுதிஷ்டிரனுக்கு  சொல்லும்  நீதி நெறி உரைகள் நாமும் கேட்கிறோம்.  அவர் சொல்வதை மேலும் கேட்போம். 


'' யுதிஷ்டிரா,   வியாசரின் புத்திரர் சுகர் ப்ரம்ம நிலை அடைந்த ரிஷி.   அவரை  எல்லோரும்  சுகப்ரம்மம் என்று தான் அழைப்பார்கள் .  அவர் சக்தி படைத்து, எங்கும் நிறைந்தவராக, எங்கும்,எதுவுமாகி விட்டார். ப்ரம்மம்      அல்லவா. அவர் தன்னை விட்டு பிரிந்து இவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்தது ஒருபக்கம் வியாசருக்கு மகிழ்ச்சியும் மறுபுறம் வருத்தமும் தந்தது.    ''சுகா'' என்று மகனை விளித்து குரல் கொடுக்கிறார். மூவுலகும் அது எதிரொலிக்கிறது. எங்கும் வியாபித்து இருக்கும் சுகரின் காதில் அது விழுகிறது.

வியாசருக்கு  வானம் பூமி, மலை  காடு  கடல்  சூழ்ந்த  மூவுலகுமே  சுகரின் பதில்  குரலாக  கேட்கிறது ஒரே வார்த்தையில் ''போ'  '(Sambho வில் வருமே அந்த போ ) என்று எதிரொலிக்கிறது. வியாசர் இவ்வாறு மகனின் குரல் கேட்டு ஆனந்தமடைகிறார். அவரது தியானம் கலைகிறது. மலைகள், கணவாய்கள், நதிகள், நீர் வீழ்ச்சிகள் அனைத்தும் ''போ, போ ''என்று சுகரின் குரலை எதிரொலிக்கின்றன. எழுந்து நடக்கிறார். வழியே மந்தாகினி நதியில் குளித்துக் கொண்டிருக்கும் அப்ஸரஸ் கந்தர்வ பெண்கள் வியாசரைப் பார்த்ததும் நாணி, கோணி, உடலை, உடையால் மறைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் சுகரை எதிர்கொள்ளும்போது அவ்வாறு வெட்கம் கொள்ளவில்லையே. பேதம் அடையவில்லை.

வியாசருக்கு புரிந்து விட்டது. தான் இன்னும் தனது மகன் சுகரின் புலன்களை வென்ற அபேத நிலை அடையவில்லை என்பதை உணர்கிறார். எதிரே மஹாதேவன் சிவன் தரிசனம் தருகிறார்.

''கிருஷ்ண த்வைபாயனா, வியாஸா, என்னை வேண்டி ஒரு மகனை  நீ  பெற்றாய். பரிசுத்தமான ப்ரம்ம ஞானம் பெற்றவனை அடைந்தாய். வியக்க  வேண்டியவன் நீ  ஏன் வருந்துகிறாய்?. இனி எங்கும் எப்போதும் உனது  நிழல் உருவில் உன் மகன்  உன்னோடுஇருப்பான்''--

''இப்படித்தான் யுதிஷ்டிரா,பரமசிவன் வியாசரிடம் சொன்னார்'' என்கிறார் பீஷ்மர்.

ஆம்  இன்னொரு விஷயம்  ஞாபகம் வருகிறது. 

நாரதர்  ஒருமுறை நாராயணனிடம் கேட்டதை உனக்கு சொல்கிறேன்.    க்ரித யுகத்தில் மனுவின் காலத்தில்,  பரமாத்மா நாராயணன் தர்மத்தின் நான்கு உருவாக அவதரித்தார்.    நரன் ,நாராயணன், ஹரி, கிருஷ்ணன் என்று.    நரனும்  நாராயணனும் பத்ரியில் தவ முனிவர்கள்.

நாரதர் பத்ரியில் ரிஷி நாராயணனை தரிசித்து ஆசி  பெற்று மேரு மலையில் சற்று இளைப்பாறி பிறகு  அதன் வட மேற்கே உள்ள திருப்பாற்கடலைப் பார்க்கிறார்.   மேருவிலிருந்து வடக்கே ஒரு வெள்ளைத்தீவு கண்ணில் படுகிறது.   அதை நோக்கி நடக்கிறார்.   அங்குள்ளோர் பசி தாகம் இல்லாதவர்கள். கண்கள் இமைக்காது நறுமணம் வீசும் வெள்ளை நிற மேனியுடையவர்கள்.பாபமற்றவர்கள்.இடியைப் போன்ற குரல் வலிமை வாய்ந்த தேகம். தெய்வீக மானவர்கள்.  தலை குடையைப் போல் இருக்கும்.நான்கு கைகள்.அறுபது வெண்ணிற  பற்கள்,   இதோடு எட்டு சின்ன பற்கள்.  பல நாக்குகள்.   உள்ளங்காலில் நூற்றுக் கணக்கான ரேகை கோடுகள்.   (இதெல்லாம் மஹா பாரதத்தில் சாந்தி பர்வ முடிவுப் பகுதியில் வியாசரின் வர்ணனைகள். எனதல்ல)

'தாத்தா,  இது என்ன அதிசயமாக இருக்கிறதே.   ஒன்றும் சாப்பிடாமலே இவ்வளவு சக்தியா? யார் இவர்கள்?'' என்கிறான் யுதிஷ்டிரன்.

''நிதானமாக  கேள். அவசரப்படாதே.    ஒரு கல்பத்தின் முடிவில் பிரஹஸ்பதியின் சிஷ்யனாக உபரிச்சரன் என்கிற ராஜா தனது குருவின் பாதம் பணிந்து சிறந்த மாணவனாக கல்வி கற்கிறான். அவனுக்கு வசு என்றும் பெயர் உண்டு. சித்ர சிகண்டிகள் என்ற பெயர் கொண்ட ஏழு ரிஷிகள்  பயிற்சித்த  ஜீவனை பாபங்கள் தொடராமல் அகற்றும் யாக யஞ முறைகளை,வித்தைகளை,  உபரிச்சரன்  குருவிடம் கற்கிறான். சிறந்த அரசனாகிறான். தனது குரு பிருஹஸ்பதியை ஹோதாவாக சிறப்பித்து செய்யும் அஸ்வமேத யாகத்தில் பிரம்மனின் புத்திரர்கள்   ஏகதா, த்விதா, த்ரிதா ஆகியோர்  ஸதஸ்யர்கள் (  ஒரு ஸதஸில் ( மேடை கூட்டத்தில்)  முன்னின்று சரிவர நடத்துபவர்கள்).எண்ணற்ற ரிஷிகள் முனிவர்கள் ஆகியோர் அந்த யாகத்தில் பங்கு கொண்டனர்.தேவர்கள் நேராக உருவத்தோடு வந்து ஹவிர்பாகத்தை ஏற்றுக்கொள்ள நாராயணன் மட்டும் அருவமாக வந்து ஏற்றுக்கொண்டதில் குரு பிரஹஸ்பதி கோபம் அடைகிறார். ராஜாவும் மற்றோரும் அவரை சமாதானப் படுத்தினார்கள். நாராயணனை நேரில் காண எல்லோரும் தவமிருந்த இடம் தான் இந்த வெள்ளைத்தீவு.  அந்த தவத்தின் பலனாகவே அவர்கள் இவ்வாறு பாபமற்று சிறந்து விளங்குகிறார்கள்'' என்கிறார் பீஷ்மர்.   அப்போது வெள்ளை வெளேர் என்று ஒளியாக நாராயணன் காட்சியளித்தார் அவர்களுக்கு.

நாராயணன் நாரதரிடம் பல வர்ண ஒளிப்பிழம்பாக தனது உருவத்தைக் காட்டிய போது அதிசயிக்கி
றார். அப்பப்பா, ஆயிரக்கணக்கான கண்கள், நூற்றுக்கணக்கான தலைகள், ஆயிரமாயிரம் கால்கள், வயிறுகள், கைகள் இத்யாதி.

''நாரதா, நீ எனது பிரதம பக்தன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்றான் நாராயணன்.
''சுவாமி, தங்கள் தரிசனமே எனது பாக்யம்'' என்கிறார் நாரதர்.
''நாரதா,  
 இந்த தீவு மக்கள் புண்யசாலிகள். தவ ஸ்ரேஷ்டர்கள். ரஜோ தமோ குணம் நீங்கி சத்வ குணம் ஒன்றே கொண்டவர்கள். அன்ன ஆகாராதிகள் தேவையற்றவர்கள். என்னையே நினைவில் கொண்டவர்கள். என்னை வாசுதேவன், புருஷன் என்று பிரார்த்திப்பவர்கள். பஞ்ச பூதங்களும் என்னில் அடக்கம் என உணர்ந்தவர்கள். ஓவ்வோர் பிறவிக்கும் இந்த பஞ்சபூதமே ஆதாரம். எல்லா பிறவிகளின் மனதும் என் பெயராலே ப்ரத்யும்னன் எனப்படும். காரணமாகவும் காரியமாகவும் ப்ரபஞ்சமாகவும் நான் ப்ரத்யும்னனிலிருந்து அநிருத்தனா கிறேன். ஈசானன் என்றும் எனக்கு பெயர் உண்டு. ஒவ்வொரு செயலிலும் நான் உண்டு என்பதால்  வாசுதேவன் என்றும் க்ஷேத்ரஞன் என்றும் என்னை அறிவார்கள்.ஹிரண்யகர்பன், நான்முகன், பிரமன் எனப்படுவோனும் என்னில் இருந்து தான் உருவானவன். ருத்ரன் என் நெற்றியில் உருவானவன். ஏகாதச ருத்ரர்கள் என் வலது பாகத்தில் தோன்றியவர்கள். பன்னிரு ஆதித்யர்கள் இடதுபாகம் உருவானவர்கள். முன்னால்  முன்னே அஷ்ட வசுக்களும் பின்னே அஸ்வினி குமார்களும் உருவானவர்கள். பிரஜாபதிகள் , சப்த ரிஷிகளும் அவ்வாறே என்னில் தோன்றியவர்கள். என்னிலிருந்து நான்கு வேதங்கள், அம்ரிதம்,யாக யஞங்கள் உண்டாயின. என்னுள்ளே தான் லட்சுமி சரஸ்வதி பூமி, ஆகியோர் சகலரும்  வாசம்''  என்கிறார் நாராயணன்.

அந்தந்த யுகத்தில் நாராயணன் தோன்றி ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன், மஹாபலி, ராவணன், பாணாசுரன்,நரகாசுரன், ஆகியோரை வதம் செய்ய அவதரித்ததை கூறுகிறார்.''

பீஷ்மர் இதைச் சொல்லி முடித்தவுடன் யுதிஷ்டிரனும் மற்ற பாண்டவர்களும் நாராயணனை துதித்து தியானம் செயகின்றனர். ''

நைமிசாரண்யத்தில் சுதர் மற்ற ரிஷிகளுக்கு சொன்னது இது. 

''வைசம்பாயனர் இவ்வாறு ஜனமேஜயனுக்கு மஹா பாரதத்தை வர்ணித்தார் '' என்று முடிக்கிறார்.  மஹாபாரதத்தைக்   கேட்ட ஜனமேயஜன் சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல் தனது ராஜ்யத்தை ஆண்டான். ரிஷிகள் நீங்கள் எல்லோரும் மிகவும் சிரத்தையோடு தக்க முறையில் உங்கள் யாக யஞங்களையும் தவங்களையும் வேத சாஸ்திரங்களையும் அனுசரித்து இந்த நைமிசாரண்யத்தில் வசித்து வருகிறீர்கள். சௌனகன் நடத்தும் மிகப்பெரிய வேள்விக்கு வந்திருக்கிறீர்கள்.  யாகத்தில் தியானத்தில் தவத்தில் பரமாத்மன் நாராயணனை பூஜியுங்கள். நானும் இதுவரை வம்சாவளியாக இந்த அழகிய சரித்திரத்தை கேட்கும் பாக்யம் கிடைத்தது'' என்கிறார் சுதர் .

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...