Monday, October 28, 2019

AINDHAM VEDHAM





ஐந்தாம் வேதம் .J K SIVAN

  '' சில  கதம்ப விஷயங்கள் ''-   ''கூடாது'' கள் '

''வைசம்பாயனரே,   பீஷ்மரின் உபதேசங்கள் மயிர்கூச்செரிய வைக்கிறதே.  எவ்வளவு   ஆழ்ந்த  ஞானம் அந்த மஹா வீரருக்கு... ''   அதிசயிக்கிறான்  ஜனமேஜயன்.
''மேற்கொண்டு என்ன நடந்தது என்று சொல்கிறேன்  கேள் ''என்  ரிஷி  வைசம்பாயனர்  தொடர்கிறார்.  பீஷ்மர் தொடர்ந்து சொல்வதைத்தான் இப்போது நான் உங்களுக்கு சொல்கிறேன். சில விஷயங்களை  விட்டு விட்டு  தான்  சொல்ல முடிகிறது. எங்கேயோ  ஆரம்பித்து  எங்கேயோ  கொண்டு முடிக்கும் சமாச்சாரங்கள்  இவை.

''சுவர்ணன்  என்று  ஒரு ரிஷி. பளபளவென்று அவன் பெயருக்கேற்ப  தங்க நிற மேனி. அதாலேயே அவரது ஒரிஜினல் பெயர் மறந்து போய், அவருக்கு 'ஸ்வர்ணன்' என்று பெயர். அவர்  மனுவுடன்  ஒரு நாள்  மேரு மலை மேல்  அமர்ந்து பேசும்போது அசுரர்கள் தேவர்கள்  பற்றியும் பேச்சு திரும்பி  ''மனு, நாம் யாரை வழிபட வேண்டும்?'' என்று ஸ்வர்ணன்  கேட்க, ''ஸ்வர்ணா,  இந்த கேள்வியை நீ மட்டும் அல்ல  அசுர ராஜா மஹாபலி கூட  ஒருநாள் இதை  குருதேவர்  சுக்ராச்சார்யா ரிடம் கேட்டான்.

''மஹாபலி சக்ரவர்த்தி,   முதலில்  தவம்  உருவாகியது. பிறகு  தர்மம். இதற்கிடையில் நிறைய  தாவரங்கள்.  ஒன்று  அம்ரிதம், இன்னொன்று விஷம்.  இதர தாவரங்கள் பற்றி  பேசவேண்டிய தில்லை.   எந்த தாவர  இலை, எந்த வாசனை, எந்த  நிற  மலர்கள், ஆகியவற்றை  மாலையாக தொடுக்கலாம், எந்தெந்த தூப  தீபங்கள்   பூஜைக்கு உகந்தது என்று விலாவரியாக சுக்ராச்சாரியார் சொல்கிறார்.

ஓரு வீட்டின்  நிம்மதி,சந்தோஷம், சுபிக்ஷம்  எல்லாமே  அந்த வீட்டின்  பூஜை அறையாலே தான்  என்பதை எவரும்  மறக்க கூடாது. தெய்வ பலம் ரொம்ப  சக்தி வாய்ந்தது. நாம் உயிர்வாழ எல்லாம் அளித்தவனுக்கு  முதலில்  சுத்தமாக சிறிது அர்ப்பணித்து விட்டு நன்றியோடு நாம்  உண்ணும் சாதம் தான்  அவன்  பிரசாதம்.  இதை   மனு சுவர்ண ரிஷிக்கு சொல்லி, அந்த  ரிஷி இதை  அப்புறம்  நாரதருக்கு சொல்கிறார். நாரதர்  பீஷ்மருக்கு  சொல்லி  பிறகு  யுதிஷ்டிரனுக்கு அது  சென்று அப்புறம்  அதை வைசம்பாயனர் ஜனமேஜயனுக்கு சொல்லி  நான் வியாசரைப்  படித்து  உங்களுக்கு சொல்கிறேன்..  போதுமா. நல்லவேளை  உண்மை  மாறவில்லை. சேதம் அடையவில்லை.  

பக்தியும்  தவ வலிமையும் பெற்றால் மட்டும் போதாது. அதனால்  கர்வம், அகம்பாவம்,செருக்கு, ஆணவம்  இருந்தால் அது அழிவைத்தரும் என்பதற்கும்  ஒரு கதை உண்டு. என்று   பீஷ்மர் சொல்கிறார்.  

"நஹுஷன் அதிக  சக்தி படைத்தவனாகி தேவர்கள்  ரிஷிகள்  அனைவரையும்  ஆட்டிப் படைக்கிறான்  என்று அவன் மேல்  ரிஷிகள்  வருத்தமுற்றனர்.  அகஸ்தியரிடம் முறையிட்டனர்.

''நான்  என்ன செய்யமுடியும்.  நஹுஷனை சபிக்க முடியாதே. இந்திர லோகம் ஆளும்  வரம் பெற்றவ னல்லவா.   அவன்  பார்வையில் பட்டாலே அனைவரும் தமது சக்தியை இழப்பார்களே . எப்படி அவனை தண்டிப்பது'' என்கிறார்  அகஸ்தியர். 
ஒருநாள்  தேவாதி தேவனாகிவிட்ட  நஹுஷன்  தன்னை  ரிஷிகள் தூக்கிச் செல்லவேண்டும்  என்று கட்டளையிட்டான். வேலைக் காரர்களாக  அவர்களை நடத்தினான்.

பிருகு ரிஷி அகஸ்தியரிடம் வந்தார்.  ''மகரிஷி,  நான் பிரம்மனிடம் பேசிக்கொண்டிருந்த போது உங்களால்  தான்  நஹுஷனுக்கு தக்க பாடம் கற்பிக்க முடியும்  என்றார் பிரமன்.  நீங்கள் எப்படியாவது நஹுஷனை ஒழித்தால்  தான் இந்திரன்  மீண்டும் தேவர்கள் தலைவனாக முடியும்.''

ஆரம்பத்தில்  மிக மரியாதையோடு பக்தியோடு எல்லோரிடமும் நற்பெயர் வாங்கிய நஹுஷனுக்கு  இந்திர பதவி  வாய்த்ததும்  கொஞ்சம் கொஞ்சமாக  விநாச காலம் துவங்கியது.  பட்டம் பதவி பணம் பெற்றவர்களின் செய்கையே அப்படித்தானே.  
தேவர்களையும்  ரிஷிகளையும்  அலட்சியப்  படுத்தினான். ரிஷிகளை தனது பல்லக்கைத்  தூக்க வைத்தான். தேரில் அவர்களை பூட்டி குதிரைக்கு  பதிலாக ஓட வைத்தான்.  

ஒருநாள் அவனது யாகத்தை  சரஸ்வதி நதிக்கரையில்  சில  ராக்ஷஸர்கள் தடை செய்வதாக அறிந்து அங்கே செல்ல  பல்லக்கை தயார் செய்து அந்த  பல்லக்கை ரிஷிகள்  முனிவர்கள்,தேவர்கள் ஆகியோர் தூக்கிச் செல்ல அழைத்தான். அன்று அகஸ்தியர் முறை. அகஸ்தியர்  ஜடாமுடியில் பிருகு ரிஷி தனது சக்தியை செலுத்தினார்.

''நஹுஷ மஹாராஜா, எங்கே தங்களை தூக்கிச் செல்லவேண்டும்  சொல்லுங்கள்'' என்று அகஸ்தியர் தலை குனிந்து கேட்டார். நஹுஷனின் கண்களின் பார்வையை தவிர்த்தார். நஹுஷன் கண் பார்வையில் பட்டவர்கள் சக்தி இழப்பார்களே .

''சரஸ்வதி நதிக்கரைக்கு விரைந்து செல்லுங்கள் ''

குள்ளமான  அகஸ்தியரால்  விரைந்து போக முடியவில்லை.   ''சர்ப்ப''  சர்ப்ப'' (வேகமாக வேகமாக )  என்று  அவசரப் படுத்தினான்  நஹுஷன்.  மெதுவாகவே  சென்ற அகஸ்தியரை இடது  காலால் அவரது தலையில் உதைத்தான்.

மிகவும் ஸ்ரேஷ்டரான அகஸ்தியரை  காலால் உதைத்ததால்  நீ  கீழே விழக்கடவாய்.  'சர்ப்ப சர்ப்ப' (வேகமாக  என்பதை தவிர  சர்ப்பம் என்றும்  ஒரு அர்த்தம்)  என்று  அவரை விரட்டி அடித்ததால்   நீ ஒரு  சர்ப்பமாகக் கடவாய்  என்ற பிருகுவின் சாபம் உடனே பலித்தது.  பிருகு  அகஸ்தியரின் ஜடாமுடியில் இருந்ததால்  நஹுஷனின் பார்வையில் அவர் சிக்க வில்லை என்பதால் அவருடைய தவ சக்தி பலன் கொடுத்தது.

 அடுத்த கணமே பெரிய பாம்பாக மாறிய நஹுஷன் தான் செய்த பாபத்தை உணர்ந்தான். கண்ணீர் உகுத்தான்.  பிருகுவை வணங்கி தனக்கு விமோசனம் வேண்டினான்.   அகஸ்தியரும் அவனை மன்னித்து  பிருகுவிடம்  சாப விமோசனம் பற்றி கேட்டார். (பரம பதம்  ஆடும்போது  106ல் தாயம், சோழி விழுந்தால்  கிட்டத்தட்ட மேலே  முழுவதும் ஏறிய நாம்  நஹுஷன் என்ற பாம்பின் வாயில் சிக்கி  மீண்டும் ஆரம்பத்துக்கு  வந்து மீண்டும் ஒரு தாயம் போட்டு கட்டம் கட்டமாக கஷ்டப்பட்டு மேலே  ஏறுவோமே  ஞாபகம் இருக்கிறதா?  நிறைய தடவை நான்  நஹுஷனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன்)

''நஹுஷா, துவாபர யுகத்தில்  யுதிஷ்டிரன் என்ற தர்ம புத்ரன் உன்னை விடுவிப்பான்'' என்கிறார் பிருகு .

''யுதிஷ்டிரா,   நீ  பார்த்தாயே ,  உன்னெதிரே  இப்போது  சென்றானே  விண்ணுலகுக்கு.  அவன் தான்  நஹுஷன். உன்னை  வணங்கி சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் எய்தினான் பார்''  என்கிறார்  பீஷ்மர்.

ஆம்,  யுதிஷ்டிரன் பார்வையில் பட்ட  நஹுஷன்  தேவ உரு பெற்று வணங்கி மேலே செல்வதை  சில நிமிஷங்களுக்கு  முன்பு தான்  யுதிஷ்டிரன்  பார்த்தான்.

நஹுஷன்  பாம்பாக  மாறி சாபம் பெற்று கீழே  விழுந்த பின்,  பிரமன்  இந்திரனை அழைத்து இந்திர லோகம் முன்போல் அவன் ஆதிக்கத்தில் பழையபடி எல்லோருக்கும் திருப்தியாக  நடந்து கொண்டிருந்தது. நஹுஷன் பித்ருலோகத்தில் நூறோடு  நூற்றி ஒன்றாக  சேர்ந்தான்.இழந்த தவ சக்தியை பெற்று திருந்தி ஒளி வீசினான்.

கௌதம ரிஷிக்கும்  இந்திரனுக்கும் ஒரு சம்பாஷணை ஒரு சமயம் நடந்தது.  ஒரு பிராமணன் காட்டில் ஒருநாள்  ஒரு யானைக்குட்டியை பார்க்கிறான். பாவம் அந்த யானைக்குட்டி அம்மாவை  எங்கோ  தொலைத்துவிட்டு  தேடிக்கொண்டி ருந்தது. பிராமணன் அந்த  யானைக்குட்டியை  நன்றாக  பராமரித்து வளர்த்து  அது  சில வருஷங்களில் பெரிய  யானையாக  ஆகிவிட்டது. இந்திரன்  அந்த  யானையைப் பார்த்து அதன் கம்பீரத்தில் மயங்கி,  திருதராஷ்டிர அரசன்  போல் மாறு  வேஷத்தில் வந்து  அந்த யானையை  கவர்ந்து சென்றான்.  பிராமணன் யானை பின்னாலே ஓடி

''நில்  எங்கே  எடுத்துக் போகிறாய் என் யானையை. அது  என் மகன். செல்லப் பிள்ளை. என் யானையைத் திருடாதே. அது  தான்  எனக்கு  தினமும்  நீர் கொண்டு வருகிறது. எனக்கு பாதுகாப்பாக  இருக்கிறது.

"ஹே, ப்ராமணா, உனக்கு  ஆயிரம் பசுக்களை தருகிறேன்.பொன்னும் வெள்ளியும் நிறைய  தருகிறேன். என்னைப்  போன்ற அரசனிடம் அல்லவா இது போல பலமான யானை இருக்க வேண்டும். உனக்கெதற்கு? என்றான் திருதராஷ்டிரன்.

"திருதராஷ்டிரா,   உன்  பொன்னும் வெள்ளியும்  முனிவன்  எனக்கு எதற்கப்பா?''

' 'யானை அரசனிடம் இருக்கும்  மிருகம் என்று எல்லோரும் அறிவார்கள். வழியை விட்டு  அகன்று போ. ''

''மன்னா,  எமனுலகே சென்றாலும்  நான்  விடமாட்டேன்.  என் யானையை என்னிடம் கொடுத்து விடு.

''என் போன்ற  அரசன் எதற்காக  யமனுலகம் போகவேண்டும்.  நான்  ஸ்வர்கம் போகும் அரசன். உளறாதே'' என்றான் திருதராஷ்டிரன் .

''தப்பு நீ  சொல்வது மன்னா. யமன் தர்மன். நீதி வழுவாதவன்.  என்  யானையை நீ திருடிச் செல்வதை முறையிட்டு  நீதியைப் பெறுவேன். யானையையும் பெறுவேன். நீ  கந்தர்வ லோகம், இந்திர லோகம், பிரம லோகம், எங்கே சென்றாலும்  உன்னை விடமாட்டேன் '' என்றான்  பிராமணன்.

பிராமணனின் பிடிவாதத்தையும்,  அவன் யானை மேல் கொண்ட பாசத்தையும்  உணர்ந்த  இந்திரன்  '' திருதராஷ்டிரன் வேஷத்தை  கலைத்து  பிராமணனை ஆசிர்வதிக்கிறான்.

''ஹே,  ப்ராமணா, உன்னைச் சோதித்தேன்.  நீ  வென்றாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் '' என்றான் இந்திரன்.

''தேவேந்திரா,  எனக்கு என் மகன் போன்ற  இந்த  10 வயது யானை தான் வேண்டும்.  அவனைத் தவிர  எனக்கு எதுவும் தேவையில்லை.  நான்  ஏதாவது தவறாக உன்னை பேசியி ருந்தால் என்னை மன்னித்தருளவேண்டும் '' என்றான் பிராமணன்.

இந்திரனின்  ஆசியுடன்  பிராமணனும்  யானையும்  திரும்ப ரிஷியின் ஆஸ்ரமத்துக்கு செல்கிறார்கள்.'' என்று  கதையை முடித்தார்  பீஷ்மர்.

பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு  சொல்லும்  விஷயங்களில் ஒரு சில முக்கியமான சமாச்சாரங்கள் நம்மை  அதிகம் சிந்திக்க செய்யும்படியாக  இருக்கிறது.

ஒருவன்  நீண்ட  வருஷம் வாழ முக்கிய காரணம் அவன் நடத்தையாம். அவனுக்கு செல்வம்,  சந்தோஷம், நீண்ட ஆயுள்,  பேரும்  புகழும் --  எல்லாமே  அவன் நடத்தையால் தானாம். கெட்டவன், பக்தியற்றவன், சமூக விரோதி, பாபி, --இவர்களுக்கு  ஆயுசு கம்மியாம். அப்படியா?  இன்னும் சில  ருசிகர தகவல்கள் பாரதத்தில் உள்ளது: 
பல்லால்  நகத்தை கடிப்பவன், அசுத்தமானவன்,   மனசில் சஞ்சலம் உள்ளவன் நூறு வயசைப் பார்க்க முடியாது.
ப்ரம்ம முகூர்த்தத்தில்  எழுந்திருக்கவேண்டும்.  (காலை 4-மணி உத்தேசமாக)  முகம், கால் கை  கழுவி வாய் அலம்பி, கடவுளை நினைக்கவேண்டும்.  இரு கரம் கூப்பி  ஏதாவது பிரார்த்தனை ஸ்லோகம் ஏதாவது சொல்லவேண்டும்.  
அதேபோல் சாயந்திரம்  அஸ்தமன காலத்தில்.  பேச்சு கூடாது.
சூரிய உதயத்தையோ, அஸ்தமனத்தையோ பார்க்கக் கூடாது. கிரஹணம் சமயத்தில்  மேலே பார்க்கவே கூடாது. நீரில் உருவத்தை பார்க்கக் கூடாது.   இதெல்லாம் அனுஷ்டித்தால்   நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
பெரிய மரங்கள் கண்ணில் தென்பட்டாலோ,  நாலு  தெரு சந்திக்கும் போதோ, தன்னைத் தானே ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்த்துவிட்டு, மேலே செல்ல வேண்டும். யாரையும் வார்த்தைகளால் குத்திக் கொல்லக் கூடாது.  கை  விரல்களை நீட்டி மேலே நக்ஷத்ரங்களை சுட்டி காட்டக் கூடாது.   இவற்றை மீறிச்செய்யும் காரியங்களால்  ஆயுசு குறையும்.

கழிவறைக்கு சென்று வந்தாலோ,  தெருவில் சென்று வந்தாலோ,  சாப்பிடும் முன்போ,  வேதங்களை படிக்கும்போதோ கால் கை கைகளை நன்றாக கழுவ வேண்டும்.  
சூரிய உதயத்துக்கு பிறகு படுக்கையில் படுக்கக் கூடாது. எழுந்ததும்  பெற்றோரை வணங்கவேண்டும். தினமும் சிறிது தானம் ஏதாவது செய்ய வேண்டும். சாப்பிடும்போது பேசக்கூடாது. பல் தேய்க்காமல்  சாமி கும்பிடக் கூடாது.!
வடக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ  படுக்கக் கூடாது.
காலால்  நாற்காலியை இழுத்து அதன் மேல் உட்காருவதை இதை படித்தபிறகாவது  இனி விட்டு விடலாம். உடலில் துணி இல்லாமல் குளிக்கக் கூடாது. இரவில் குளிக்கக் கூடாதாம்.
குளித்தவுடன்  ஈரத் துண்டை  காற்றில்  உதறி வீசி உலர்த்தக் கூடாது. ஈரத்துணி உடுத்தக் கூடாது. சாப்பிடும் முன்னும் பின்னும்  வாயை  மூன்று தரம் கொப்புளிக்கவேண்டும்.

உணவைக் குறை கூறி சாப்பிடக் கூடாது. கிழக்கே  பார்த்து அமர்ந்து சாப்பிடவேண்டும்.  சாப்பிட்ட இலையில் சிறிது  உணவு மீதி  வைக்க வேண்டும்.  கிழக்கு பார்த்து சாப்பிட்டால் ஆயுசு விருத்தியாகும். தெற்கே பார்த்து  சாப்பிடுவனுக்கு பேரும்  புகழும் கிடைக்கும்.  மேற்கே பார்த்து சாப்பிடுவனுக்கு செல்வம் கிட்டும். வடக்கே பார்த்து சாப்பிடுபவன் வாயில் சத்யம், உண்மை நிற்கும்.

நடந்து கொண்டே சாப்பிடக்கூடாது. ஈரக் கால்களோடு  உட்காரவோ படுக்கவோ கூடாது. கால்களை நன்றாக  அலம்பிவிட்டு துடைத்துக் கொண்டு  சாப்பிட உட்காரு பவனுக்கு  நூறு வயது. மூத்தவர்களுக்கு அமர  இடம் கைகளால் பவ்யமாக காட்டி  அவர்கள்  உட்கார்ந்த பின் தான்  உட்காரவேண்டும்.  கைகளை  மரியாதையாக கட்டிக் கொண்டு இருக்கவேண்டும்.  பெரியவர்கள்  தெருவில் நம்மோடு போகும்போது நாம் அவர்களை கடந்து போகக் கூடாது.அவர்களை முதலில் செல்ல அனுமதிக்கவேண்டும்.
மேல் துண்டு இல்லாமல் சாப்பிடக் கூடாது. மற்றவர்களை தலையில் அடிக்கவோ, முடியைப் பிடித்து இழுக்கவோ கூடாது. ரெண்டு கைகளாலும்  பரக்  பரக் என்று தலையை சொறியக்கூடாது. --   ஆயுசு குறைவு.  
இதெல்லாம் நான் சொல்லவில்லை.  வேத வியாசர் சொல்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...