Monday, April 29, 2019

VADAPALANI

    வினை தீர்க்கும்  வேலவா  -   ஜே கே சிவன் 
                               
வட பழனியாண்டவர் கோவில் ஒரு சிறிய குடிசை வேய்ந்த க்ஷேத்ரம் அப்போது. கதவு கிடையாது.  ஓலைத் தட்டி. உள்ளே ஒரு பெரிய அழகான முருகன் படத்தில். அந்த படம் கிடைத்து அதை இணைத்தி ருக்கிறேன்.    இந்த ஒரு கோவிலில் விசேஷம் பழனி ஆண்டவன் பாத ரக்ஷையுடன் தாமரை இதழ்மேல் நின்று அருள் பாலிப்பது என்று பிறகு தான் தெரிந்து கொண்டேன். வலது பாதம் சற்று முன்னால்  வைத்திருப்பார்.   நான்கு ஐந்து வயதில்  எனக்கு  இது தெரியவில்லை.  ஸ்தல விருக்ஷம் அத்திமரம்.

கிராம நிர்வாகிகள் பிள்ளைமார்களுக்கு என் அப்பா ஜே. கிருஷ்ணய்யரை  ரொம்ப பிடிக்கும். நிறைய படித்தவர். அவர்களுக்கு விஷயங்களை வாரி வழங்குவதில் பிள்ளைமார் குடும்பங்கள் திருப்தி அடைந்து எங்களை ஆதரித்து வந்தனர்.

இப்போது  லேக் ஏரியா எனப்படும் வள்ளுவர் கோட்டம் பகுதி அப்போது கிடையாது. எங்கும் மண் பாண்டம் சட்டி பாத்திரங்கள் செய்பவர்கள் நிறைந்து காணப்படுவார்கள். லயோலா காலேஜ் இருந்தது. புஷ்ப நகர்  பகுதியெல்லாம் ஒரே தோட்டம் வயல்களாக இருந்தது.  மின்சார ரயில் வண்டிகள் கோடம்பாக்கம் விட்டால் அடுத்து சேத்துப்பட்டில்   தான் நிற்கும். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அப்போது பிறக்கவில்லை. அதேபோல்  கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை  அடுத்து ஒரு  இரும்பு லெவல் கிராஸ்ஸிங்.  ரெண்டு பெரிய  கேட்களை  மணி அடித்ததும் மெதுவாக மூடுவார்கள்.  வண்டிகள் கடந்தவுடன் பச்சை விளக்கு எரியும் போது திறந்து விடுவார்கள். அரைமணி நேரமாகவாவது  ஆற்காட் சாலையின் இரு பக்கமும்   அடைபட்டு,  வண்டிகள், போக்குவரத்துகள்  காத்திருக்க வேண்டும்.   நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அப்போது  பிறக்க வில்லை. ஆற்காடு ரோடு ஒன்று தான் நேர் வழி. இரண்டு பள்ளங்கள். நடுவே மேடு.  பள்ளங்கள் மாட்டு வண்டிகள்  குதிரை வண்டிகள் ஏற்படுத்தியவை. நாகேஸ்வரராவ் கட்டிடம் என்று பெயர் தாங்கிய  கார்ப்பரேஷன்   உயர்நிலைப்  பள்ளிக்கூடத்தில் எங்கள் தகப்பனார் சரித்திரம், ஆங்கில பாடங்கள் சொல்லிக்கொடுப்பார். இன்னும் அந்த பள்ளிக்கூடம் இருக்கிறது.  நுங்கம்பாக்கம் போகும்போது அதை பார்க்கும்போது பழைய சின்ன வயது ஞாபகம் வருகிறது.

என் அண்ணாக்கள்  ரத்தினம் அய்யர் (இன்றும்  FB யில் என்னுடைய கட்டுரைகளை படித்து கருத்துகள் சொல்லிக் கொண்டிருக்கிறாரே. ஜம்பு (இப்போது  இல்லை. மேலே சென்று விட்டான்.) அங்கே தான் படித்தவர்கள். அப்பாவோடு  எட்டே முக்காலுக்கு  வடபழனியிலிருந்து  நுங்கம்பாக்கம் தினமும் காலை  எட்டரை மணிக்கு  வடபழனியிலிருந்து நுங்கம்பாக்கம்  இருவேளைகளும்  நடந்து சென்றவர்கள்.

வடபழனி முருகன் கோவிலில் தான் நாங்கள்  விளையாடுவோம். பின்னால்  நிறைய மரங்கள் நந்தவனமாக இருந்தது. பூக்களை பறித்து  படத்துக்கு போடுவோம். என்னை வடபழனி ஆண்டியாக்கி விபூதி பூசி கோவணத்தோடு கையில் ஒரு கொம்பை கொடுத்து (அது தான் வேல்)  வெகுநேரம் நிற்க வைத்து தலையில் அட்டையில் கிரீடம் அணிவித்து அலங்கரித்து விளையாடுவார்கள்.  எனக்கு இப்படி ஒரு பாக்யம் சின்ன வயசில் கிடைத்ததா?? பிறகு தான் நான் பாக்கியசாலி என்பதை புரிந்துகொண்டேன்.

எங்கள்

  கிராம 
 பெரியவர்களிடம் என் அம்மா தெரிந்துகொண்டு  சொல்லியதை  கேட்டிருக்கிறேன். இந்த கோவில் உருவாக காரணம் சில மஹான்கள்.  அண்ணாசாமி நாயக்கர் ஒரு முருக பக்தர். தீராத வயிற்றுவலி. எப்போதுமே  சிவ முருக பக்தர்களுக்கு வயிற்று வலி ஒரு காரணமா?  திருநாவுக்கரசருக்கு வந்தமாதிரி சூலை நோய்.    நாயக்கர் எங்கெல்லாமோ அலைந்து பல கோவில்களுக்கு சென்று வேண்டினார். ஹுஹும்.  வயிற்று வலியால் துடித்தார். தீரவில்லை. பழனி முருகன் வலி தீர்த்தான். நாயக்கர் நன்றிக்கடனாக தனது நாக்கை அவன் முன்னால் துண்டித்து பேச்சிழந்தார்.   நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுப்பதற்கு  பாவாடம் என்று பெயர்.

நாயக்கர்  கண்ணில்  பழனியில்  ஒரு முருகன் படம் தென்பட்டது.  காந்தமாக அது அவரை ஈர்க்க அதை வாங்கினார்.  அது தான்  என் மனதில் பதிந்த இன்றும் வாழும் வடபழனி முருகன். அந்த படத்தை தலையில் சுமந்துகொண்டு புலியூர் வந்தார். அப்போது வடபழனி ஏரியாவுக்கு புலியூர் கோட்டம் என்று பெயர். 

அவருக்கு ஒரு வீடு விஸ்தாரமாக இருந்தது. அதில் ஒரு கீற்றுக் கொட்டகை நிர்மாணித்தார். அதில் அந்த படம் ஜம்மென்று வீற்றிருந்த  போது தான் நான் விளையாடியிருக்கிறேன்.



அந்த படம் இன்றும் வடபழனி முருகன் சந்நிதியில் உட்ப்ரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருக்கிறது. முருகன் எனக்கு பிடித்த ஒரு அழகான  தெய்வம். நிறைய முருகன் பாடல்கள் கேட்டதுண்டு. இன்னமும் கேட்கிறேன். கே.பி. சுந்தராம்பாள், T.M.S, சீர்காழி, பெங்களூர் ரமணியம்மாள், பித்துக்குளி முருகதாஸ், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம்   ஆகியோர் பெயர்கள் உடனே நினைவுக்கு வந்தவை. இன்னும் அநேகர் உண்டு.   கல்லிடைக்குறிச்சி  M.A . மஜீத்  ஒரு முஸ்லீம். பட்டை பட்டையாக விபூதி, இடுப்பில் எப்போதும் திருநீறு சுருக்குப் பை . கணீரென்ற குரலில் எங்கள் வீட்டில் வந்து முருகன் பாடல்கள் பாடி இருக்கிறார்.  சமீபத்தில் நான் கேட்ட பாலமுரளி கிருஷ்ணா பாடல் என்னை கவர்ந்ததால் அதை பாட விருப்பம் எழுந்தது. அதை பாடுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...