Friday, April 19, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
பகவத் கீதை
கண்ணனின் குரலமுதம்

அர்ஜுனன் கோழையும் அல்ல. பயம் கொண்டவனும் அல்ல. அவன் கண்ணை மறைத்தது பந்த பாசம். அதனால் தான் கிருஷ்ணன் அவனுக்கு அவனது க்ஷத்ரிய தர்மத்தை, கடமையையும் உபதேசித்தான். இதானால் அர்ஜுனனும் கிருஷ்ணன் ஆனான். இதில் ஒரு உண்மை என்னவென்றால், கீதையை சொன்னவனும், கேட்டவனும், எழுதியவனும் இதை படிக்கும் நீங்களும் எல்லோருமே கிருஷ்ணன் தான்.

இங்கே ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஜட்ஜ். நியாயமானவர். நீதிமான். கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை தயங்காமல் கொடுப்பவர். ஏதோ ஒரு வழக்கில் மாட்டிக்கொண்டு அவரது ஒரே பிள்ளையே ஒரு கொலையாளியாக எதிரே நின்றான். அன்று தீர்ப்பில் அவர் ''தூக்கு தண்டனை கேவலமானது. தலையை வெட்டினாலோ, உயிரைப் பறித்தாலோ ஒருவன் திருந்தப் போவதில்லை, மற்றவர்களுக்கும் பயம் ஒன்று தான் இருக்குமே தவிர மனதில் திருத்தம் கொண்டுவராது. எனவே தூக்கு தண்டனையை நிராகரித்து சில வருஷங்கள் சிறை தண்டனை அளித்தால் தானே யோசித்து திருந்துவான். எஞ்சிய வாழ்நாள் உபயோகமாகும்'' என்று தீர்ப்பு எழுதினார். இது மனதில் இருந்து நியாயமான தண்டனையாக வந்ததல்ல. பாசத்தால் விளைந்தது. அர்ஜுனன் அந்த ஜட்ஜ் இப்போது. அவன் நர நாராயணன். அவனுக்கு நீதி, நியாயம், கர்ம பலன், ஞானம் இதெல்லாம் போதிக்க அவசியமில்லை. அவன் ஞானி. எனினும் பாசம் பந்தம் குறுக்கிட்டு அவனை நிலை குலைத்தது. கிருஷ்ணன் அவனை உத்தேசித்து நமக்கு தேவையான கீதையை அளிக்கிறார்.

''திருதராஷ்ட்ர மஹாராஜா, திடீரென்று மனதில் இப்படி ஒரு இரக்கம் கொண்டவனாக, கண்ணீரால் நிறைந்த கண்களுடனும் மனத்தளர்ச்சியுடனும் இருந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொல்கிறார் . 2:1

"ஓ! அர்ஜுனா, எதிரிகளை கொளுத்தி தள்ளுபவனே, என்னடா இது, உயர்ந்த குலத்தில் உதித்த உனக்கு இது பொருந்தாது. நீ பேடியோ கோழையோ அல்ல. பயம் எப்போதிலிருந்து? அதுவும் இந்த யுத்த களத்தில் கடைசி நிமிஷத்தில், இந்த விரக்தி, தயக்கம் உனக்கு தேவையல்ல. உதறித்தள்ளு. வீரிட்டு எழு '' என்று ஊக்குவித்தார் கிருஷ்ணன். உன்னதப் பிறவிகளுக்குத் தகாததும், ஒருவனைச் சொர்க்கத்திற்கு வெளியே நிறுத்துவதும், புகழ்க்கேட்டை உண்டாக்குவதுமான இந்த மனத்தளர்ச்சி உனக்கு எங்கிருந்து வந்தது? 2:2

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எந்தப் பெண்தன்மையும் அலித்தன்மையும் உனதாக வேண்டாம். இது உனக்குப் பொருந்தாது. எதிரிகளைத் தண்டிப்பவனே இதயத்தின் இந்த அற்ப பலவீனத்தை ,இரக்கத்தை உதறிவிட்டு எழுந்திரு''. 2:3

''இதோ பார் கிருஷ்ணா, எதிரே என் குருமார்கள், நான் வணங்க வேண்டிய வர்களையா நானே கொல்வது? வழிபாட்டுக்குத் தகுந்தவர்களான பீஷ்மர் துரோணருக்கு எதிராக எப்படி நான் வில்லை தொடுத்து அம்புகளை செலுத்துவேன்.] 2:4

பூசிக்கத்தக்கவர்களல்லவா அவர்கள்? ஏதோ பேராசையால் மண்ணாசை கொண்டவர்களாக என் ஆசான்கள் இருந்தாலும், அவர்களைக் கொல்வதால் கிடைக்கும் , இரத்தக்கறை படிந்த இன்பத்தை எப்படி நான் அனுபவிப்பேன்? 2:5 அதை விட நான் ஒரு பிச்சைக்காரனாக மரத்தடியில் இருப்பதே மேல்.
இதோ பார் கிருஷ்ணா, ஒன்று நான் அவர்களை வெல்வது, அல்லது, அவர்கள் எங்களை வெல்வது இந்த இரண்டில் எது சிறந்த தருணம் என்பதை நான் அறிய இயல வில்லை. யாரைக் கொன்று நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ, அந்தத் திருதராஷ்டிர மக்கள் அல்லவோ என் முன் நிற்கிறார்கள்?. 2:6.

என் மனதில் இரக்கம் எனும் களங்கம் உண்டாகிவிட்டது. என் மனம் என் கடமையில் உறுதி
இல்லாமல் போய்விட்டது. கிருஷ்ணா, நான் உன்னைக் கேட்கிறேன். எனக்கு எது நல்லது என்பதை உறுதியாகச் சொல். நான் உனது சீடன் அல்லவா? உனது உதவியை நாடுகிறேன், உன்னைச் சரணடைந்தேன், எனக்கு நீ தான் கற்பிக்க வேண்டும். 2:7 ஏனென்றால் என் மனம் குழம்பிவிட்டது. துயரம்
லிடுகிறது. யுத்தம் புரிய மனம் இல்லை. எனக்கு தெளிவைத் தா ''.

கிருஷ்ணா, எதிரிகளே இல்லாத ஒரு வளமான நாட்டையோ, தேவர்களின் அரசு உரிமையையோ நான் பெற்றாலும் என்னுடைய தேகத்தை வெடித்து சிதறவைக்கும் என் சோகத்தை எதனால் அகற்ற முடியும் என்று எனக்கு தெரியவில்லை. " 2:8 என்கிறான் அர்ஜுனன்.
திருதராஷ்ட்ர மஹாராஜா, கிருஷ்ணனிடம், வீராதி வீரன், யாராலும் எதிர்க்கமுடியாத அர்ஜுனன் திடீரென்று இவ்வாறு கிருஷ்ணனிடம், " முடியவில்லை, கிருஷ்ணா, நான் போரிடமாட்டேன்" என்று சொல்லி விட்டு அமைதியானான் '' 2:9
யுத்தகளத்தில், இரு படைகளுக்கு நடுவே, கிருஷ்ணன் இப்படி திடீரென்று மனச்சோர்வால் பீடிக்கப்பட்ட அர்ஜுனனிடம் சொல்கிறான்: 2:10

அர்ஜுனா, பலே, நீ அறிஞனாக பேசுகிறாயே, எவருக்காக இரக்கப் பட தேவையில்லையோ அவர்கள் மேல் இத்தனை கருணையா? அதால் துயரமா? அறிஞன் இருந்தவன் இறந்தவன் எவனையுமே பற்றி கவலைப் பட மாட்டானே. எவனும் சாஸ்வதமாக இருந்ததுமில்லை, இறக்கவு மில்லை. 2:11 ' தோன்றியதெல்லாம் மறைவது இயற்கை. உடலும் அவ்வாறே. நீ உடலல்ல. ஆத்மா. நீ மட்டுமல்ல. நீ யாரைக் கொல்லமாட்டேன் என்கிறாயோ அவர்களும் நீ காணும் உடல் அல்ல. உயிர் என்னும் ஆத்மா எவராலும் கொல்லப்படுவதில்லை, இறப்பதில்லை. இன்றிருப்பவன் நாளை வேறு உடலில். அறிவாளி இதை உணர்ந்தவன். மயக்கமோ தயக்கமோ கிடையாது அவனிடம். நீயோ, இந்த புவியை இப்போது ஆளும் இவர்களோ எப்போதும் இருந்ததில்லை என்பதும், இனியும் இதன்பிறகு என்றும் இருக்க மாட்ட்டார்கள் என்பதோ கிடையாது. இல்லாதிருந்த காலமும் கிடையாது. எதிர்காலத்திலும் இல்லாமல் இருக்கபோவதில்லை.. 2:12

அர்ஜுனா நினைவு கொள், இந்த உடல் ஒரு பழந்துணி. புதிய ஆடைக்குள் உயிர் புகுந்து புது ஆளாகி விடுகிறது. ஆன்மா புகுந்த உடலுக்கு, பிள்ளைப்பருவம், இளமை, முதுமை ஆகியன தொடர்ந்து வரும். அதை விட்டு ஆன்மா மறு உடலை அடைவதும் அதுபோலவே தான்.. அறிவுள்ள மனிதன், இதில் எப்போதும் மயங்க வோ ஏமாறவோ மாட்டான். வேறு பேர், வேறு உருவம் அவ்வளவு தான் 2:13

ஆத்மாவுக்கு இன்ப துன்பம், உஷ்ணம், தண்மை, இறப்பு பிறப்பு எதுவுமே இல்லை. அது இடம் மாறும் அவ்வளவே. அர்ஜுனா, நீ ஒரு மஹா வீரன், இது போன்ற துன்பம் இன்பத்தைக் கொண்டவனும், மனதில் உறுதியுடையவனும், இவற்றால் பாதிக்கப்படாதவனுமான மனிதன் என்று உணர்ந்து கோல். முக்திக்குத் தகுந்தவனாகு . 2:15

எப்போதும் இருப்பது. அழிக்கமுடியாதை எவன் அழிக்க முடியும், எப்படி சாத்தியம்? அதற்கு தான் சொல்கிறேன், நீ கொல்வதாக அனாவசிய கற்பனை உனக்கு வேண்டாம். உன் வேலையைச் செய். எதனால் இந்த பரந்த அண்ட பகிரண்டம் படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளதோ, அந்த சர்வ வியாபியான ஆன்மா அழிவற்றது என்பதை அறிந்து கொள் . அழைவற்ற ஆன்மாவை எவராலும் அழிக்க முடியாது. 2:17

நடக்கவேண்டியது நடந்தே தீரும்.அது உன் கையில் இல்லை அப்பனே. நீ யுத்தம் புரியும் க்ஷத்ரியன். அது உன் கடமை. தெரிந்த புரிந்த அதைச் செய்யும் போது தெரியாததை பற்றி தவறாக புரிந்து கொண்டு ஏன் வீண் கவலை? பேசாமல் எழுந்திரு எடு கையில் காண்டீபத்தை, தொடு உன் சரங்களை. நிலையானதும் }, அழிவற்றதும், முடிவற்றதுமான ஆத்மாவின் இப்போதுள்ள இந்த உடல் தான் முடிவை அடையப்போகிறது. எனவே, நீ போரிடு'' 2:18

ஆத்மாவை கொல்வதாக நினைப்பவன், ஆத்மா கொல்லப்படுவதாக நினைப்பவன் இருவருமே அஞ்ஞானிகள். அறியாதவர்கள் . மறுபடியும் சொல்கிறேன். ஆத்மா கொல்வதுமில்லை, கொல்லப் படுவதுமில்லை. 2:19. எப்போதும் பிறப்பதும் இல்லை, இறப்பதுமில்லை; என்றும் எப்போதும் இருப்பது இல்லாமல் போகுமா? பிறப்பற்றதும், மாற்றமில்லாததும், நிலைத்ததும், பழைமையானதுமான அந்த ஆத்மா சிறிது காலம் எந்த உடலில் தங்கி இருக்கிறதோ அந்த உடல் அழிவதால், அழிக்கப்படுவதால், ஆத்மா இல்லததாகி விடுமா?2:20.

இன்னொரு விஷயம் இவர்கள் அத்தனைபேரும் பிறவி எடுத்தவர்கள் அந்த பிறவி ஒருநாள் முடிந்துவிடும். பிறந்தவன் எவனும் இறப்பது உறுதி; அப்புறம் இறந்த ஒருவன் மீண்டும் பிறப்பதும் உறுதி. உன்னால் இதை தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது அர்ஜுனா. இதில் நீ வருந்துவது உனக்குப் பொருந்தாத விஷயம். 2:27

''அதோ பார் எத்தனை வீராதி வீரர்கள் உன்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். உனது இந்த நிலை அவர்களுக்கு தவறான செய்தியை அளிக்கும். நீ பயத்தில் நடுங்குகிறாய், உண்மையில் கோழை, வீரமற்றவன் என்று நினைக்க தோன்றும். கொல்கிறேன் என்பதும், கொல்லப் பட்டேன் என்பதும் ரெண்டுமே தப்பு. அர்ஜுனா, அழிவற்றதாக, மாற்றமில்லாததாக, என்றும் உள்ள ஆத்மாவை அறிந்த மனிதன், எப்படியப்பா அதைக் கொல்ல முடியும்?2:21 அழியும் உடலுக்கு நீயும் ஒரு காரணம். வென்றால் உனக்கு ராஜ்ஜியம், வீழ்ந்தால் வீர சுவர்க்கம். ஆத்மாவை எந்த ஆயுதமும் பிளக்க முடியாது. நெருப்பு எரிக்காது. நீர் அதை ஈரமாக்காது. காற்றும் அதை உலர்த்தாது. 2:23. பழசான, கிழிந்த, சிதைந்த ஆடைகளைக் களைந்து, புதியவை பிறவற்றை அணிந்து கொள்ளும் ஒரு மனிதனைப் போல, ஜீவாத்மா அழிந்த, மறைந்த, இறந்த உடல்களைக் கைவிட்டு, புதிதான பிற உடலுக்குள் நுழைகிறது. 2:22 ஆத்மா புலன்களுக்கு புலப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, மாற்றமுடியாதது. அத்தகைய ஆத்மாவை அறிந்த நீ, அதற்காக துன்பப்படுவது, வருந்துவது கொஞ்சமும் பொருந்தாதது. 2:25 பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடப்பது. எவருக்கும் பொதுவானது. இதில் என்ன ஆச்சர்யம், துயரம்? 2:28

ஆகவே அர்ஜுனா, எல்லா உயிரினங்களின் உடலிலும் ஆத்மா அழிவற்று உறைந்திருக்கிறது. எனவே உடலின் மறைவுக்கு, அழிவுக்கு ஏன் வருந்துகிறாய்? 2:30

நீ க்ஷத்ரியன். உன் கடமைகளை கருத்தில் கொள் . கலங்காதே. சிறந்த போர்வீரனாக செயல்படுவதை விட உனக்கு வேறு ஒரு பெருமையோ கடமையோ இல்லை. 2:31 அர்ஜுனா, இந்த போர் உன் போன்ற க்ஷத்ரியனுக்கு திறந்து வைத்த சொர்க்க வாசல். நீ இதற்கு பெருமைப்படவேண்டும். மகிழவேண்டும். 2:32

இன்னொன்று தெரியுமா உனக்கு? இப்படி கிடைத்த தர்ம யுத்தத்தில் நீ போரிடவில்லையென்றால் உன் ஸ்வதர்மத்தை கைவிட்டவன் ஆகிறாய். சுத்த வீரன் என்ற புகழை இழந்து பாபத்தை தான் பெறுவாய். 2:33
மக்கள், உலகம் உன்னை தூ என்று இகழும். உன் போன்ற மஹா வீரனுக்கு இது அபகீர்த்தி. அது மரணத்தை விட கொடியது. 2:34.

இங்கு கூடியுள்ள மஹா வீரர்கள் அனைவருமே நீ பயத்தால் பின்வாங்குகிறாய் என்று நினைப்பார்கள். இதுவரை நீ சம்பாதித்த பேரும் புகழும் விலகும். 2:35 (கண்ணன் தொடர்கிறான்)


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...