Monday, April 15, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்.

கடைசி தூதுவன் வந்தான்
வைசம்பாயனரே, ''எனக்கு ஆர்வம் தாங்கவில்லை . உலகமே போற்றும், இந்த்ராதி தேவர்களும் ஜெயிக்க முடியாத வைராக்ய சுத்த வீரர், நைஷ்டிக பிரம்மச்சர்ய சீலர், பீஷ்ம பிதாமகர் சாகும்வரை கௌரவ சேனைக்கு தலைமை சேனாதி பதியாக எதிரே நிற்கப்போகிறார் என்ற செய்தி கேட்டதும், பாண்டவர்கள் என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார்கள்?'' என்று சொல்லுங்கள் என்றான் ஜனமேஜயன்.

''யுதிஷ்டிரன் தம்பிகளை அழைத்தான். கிருஷ்ணனும் அங்கே இருந்தார்.

''மிக முக்யமான செய்தி இது. நாம் முதலில் எதிர் கொள்ளப் போவது பீஷ்மரை என்பது நினைவிலி ருக்கட்டும். அவர் அமைக்கும் வியூகத்தை உடைத்து தான் நாம் முன்னேற வேண்டும். இதை மனதில் கொண்டு நம் சேனாதிபதிகள் படையை நகர்த்தவேண்டும். எவராலும் வெல்லமுடியாத மகா சக்தி கொண்டவர் நம்மை எதிர்க்கப் போகிறார்.

கிருஷ்ணன் பதில் சொன்னார்:
''யுதிஷ்டிரா, நீ சொல்வது ரொம்ப வாஸ்தவம். எதை அனுசரித்து சாத்தியமாக்க முடியுமோ அதை முயற்சிக்க வேண்டும். நமது ஏழு சேனைத் தலைவர்களை முதலில் நியமி''

யுதிஷ்டிரன் ஏற்கனவே தீர்மானித்தபடி துருபதன், விராடன், திருஷ்டகேது, சிகண்டி, திருஷ்டத்யும்னன், மகத நாட்டு சகாதேவன் ஆகியோர் சேனைத்தலைவர்களாக நியமிக்கப் பட்டனர்.

யுதிஷ்டிரா, இந்த ஏழு சேனாதிபதிகளை வழி நடத்த அர்ஜுனன் முன்னே செல்வான். பின் பலமாக அபிமன்யு, பிரத்யும்னன், சாருதேஷ்ணன், சாம்பன் ,இன்னும் பலர் அணி வகுப்பார்கள்.'' என்றார் கிருஷ்ணன்.

பலராமன் குறுக்கிட்டு '' யுதிஷ்டிரா, ஆஹா நன்றாக இருக்கிறது உன் ஏற்பாடு. இந்த யுத்தம் தவிர்க்க முடியாதது. இதில் நீங்கள் அனைவரும் உயிர் மீண்டு வரவேண்டும் என்பது என் விருப்பம். ரத்தம் சிந்துதல், உயிரை விடுதல் இன்றியமையாதது க்ஷத்ரியர்களுக்கு. கிருஷ்ணன் உங்களுக்கு துணையாக இருப்பான். இதோ அர்ஜுனன் இருக்கிறான். கிருஷ்ணன் சொல் தட்டாதவன். இருபக்கத்திலும் எனக்கு வேண்டியவர்கள் என்பதால் யுஹதத்தில் பங்கேற்க மாட்டேன். எனவே நான் தீர்த்த யாத்திரை புறப்படுகிறேன்'' என சொல்லி சரஸ்வதி நதியை நோக்கி புறப்பட்டார் பலராமன்.

''ஜனமேஜயா, அங்கே ஒரு எதிர்பாராத திருப்பம் நடந்ததே அதைச் சொல்கிறேன் கேள்.

பீஷ்மகர் மகன் ருக்மி தனது படைகளோடு யுதிஷ்டிரனை நாடி வந்துவிட்டான். அவனிடம் ஒரு சக்திவாய்ந்த வில். எப்படி காண்டிபம் அர்ஜுனன் வசம் இருந்ததோ அது போல் விஜயா என்கிற அந்த தனுசு ருக்மியிடம் இருந்தது. எப்போது ருக்மிணியை கிருஷ்ணன் அபஹரித்து எதிர்த்த தன்னை வென்று அவமானப் படுத்தினானோ அன்றிலிருந்து அவன் கிருஷ்ணனை எதிரியாகவே கருதினவன்.

இப்போது ஒரு அக்ஷௌணி சேனையுடன் ''என் பலத்தை உனக்கு அளித்து உதவுகிறேன் '' என்று அர்ஜுனனை நோக்கி ருக்மி சொன்னான்.

யுதிஷ்டிரனையும் கிருஷ்ணனையும் நோக்கியவாறு அர்ஜுனன் ருக்மியை வாழ்த்தி வணங்கி ''நன்றி ருக்மி. உன் எண்ணத்தைப் போற்றுகிறேன். ஆனால் எனக்கு மேலும் இனி எந்த சைன்யமும் தேவையில்லை. இருப்பதே போதும் கௌரவர்களை வெல்ல, கொல்ல'' என்று ருக்மியின் உதவியை நிராகரித்தான்.

ருக்மி பிறகு நேராக துரியோதனனிடம் சென்றான். அவனும் ருக்மியின் உதவி தேவையில்லை என்றதும் திரும்பினான்.

இவ்வாறு பாரத யுத்தத்தில் பலராமன், ருக்மி இருவருமே பங்கேற்க வில்லை.

ஹஸ்தினாபுரத்தில், த்ருதராஷ்டிரன், ''சஞ்சயா நீ எனக்கு இருப்பக்க சேனையின் பலத்தை எடுத்துச் சொல்'' என்றான்.

''துரியோதனனும் தனது சைன்யத்தை குருக்ஷேத்ரத்தில் பாசறையில் இறக்கி தயார் நிலையில்
நிறுத்தினான். உலூகனை அழைத்து

'உலூகா, நீ பாண்டவர் சைன்யத்துக்கு சென்று யுதிஷ்டிரனிடம நான் சொன்னதாக இந்த சேதியைச் சொல். ''யுதிஷ்டிரா, நீ வீரன் என்று நிரூபி. யுத்தத்தில் எங்களை மோதி ஜெயித்துக் காட்டு. அர்ஜுனன் பீமன் கிருஷ்ணன் என்று வீரம் பேசினாயே இப்போது செயலில் காட்டு. ஒரு கிழப்பூனை இவ்வாறு தான் சாமியார் வேஷம் போட்டு ''பறவைகளே, எலிகளே, நான் உங்கள் நண்பன், எல்லோரிடத்திலும் அன்பு காட்டுபவனாக மாறி விட்டேன். எங்கள் வம்சம் உங்களுக்கு இழைத்த தீங்கை நான் நேர் செய்ய உங்களோடு நல்லுறவு, நட்பு பூண்டேன் என்றதை அவை நம்பின. என்னை தினமும் சில எலிகள் நதிக்கரைக்கு தூக்கி செல்லட்டும். அங்கே உங்கள் நலனுக்கு நான் பிரார்த்தனை செய்து திரும்புவேன் என்று உருத்திராட்ச பூனை சொன்னதை நம்பி சில எலிகள் அதை தூக்கி சென்றன. நதிக்கரையில் எலிகளை பூனை ஸ்வாஹா பண்ணிவிட்டு திரும்பியது. எலிகள் குறைந்து கொண்டே வந்ததை கவனித்த மற்ற எலிகள் ஒருநாள் பூனையை பின் தொடர்ந்து சென்று நடப்பதை அறிந்து கொண்டன. பூனை விரட்டியடிக்கப் பட்டது. இதுவே யுதிஷ்டிரனுக்கும் நடக்கும். ஆனால் ஒரே ஒரு வித்யாசம், ருத்ராக்ஷ பூனை உயிர் தப்பி ஓடியது. யுதிஷ்டிரன் உயிர் மிஞ்சாது.''

''கிருஷ்ணனிடமும் சொல். அவன் மாய வேலைகளைக்கண்டு நாங்கள் மயங்கமாட்டோம். உன் வீரத்தை போரில் காட்டு பார்க்கலாம்'' என்று நான் சொன்னேன் என்று சொல் என்றான் துரியோதனன்.

''பீமனையே அவசியம் கண்டு என் சேதியைச் சொல், '' ஏ பீமா, நீ ஒரு முட்டாள் சமையல் காரன் என்று தெரியும். நீ வீரமாக சபையில் அன்று சபதம் செய்தாயே தைர்யம் இருந்தால் அதைப் பூர்த்தி செய் பார்க்கலாம். அதுவரை நீ உயிருடன் இருந்தால் துச்சாதனனின் ரத்தத்தையும் சேர்த்தே குடிக்கலாமே ..!''
என்று நான் சொன்னதாக சொல்.

நகுலனிடம் சொல் . ''ஆன்மை இருந்தால் போரிட்டு உன் வீர சாகசத்தை காட்டு.
சஹாதேவனிடமும் சொல், '' திரௌபதிக்கு மானபங்கம் செய்தேன் என்று சொல்லித்திரிபவர்களே, அதை பழிவாங்குவோம் என்று கூட்டத்தில் கத்தினால் போதாது செயலாக்க துணிவு உண்டா என்று கேள்''.

துருபதன், விராடன் ஆகியோருக்கும் சொல், ''அடிமைகளே, வீறு கொண்டு எழுந்து உங்கள் வீரத்தை போரில் காட்டுங்கள். நிழலில் குளிர் காயாதீர்கள்.''

த்ரிஷ்டத்யும்னனிடமும் சொல், ''உன் கனவுகளி லிருந்து விழித்து ஏழு, துரோணரிடம் மோதிப் பார்'' என்று.

"சிகண்டியையும் விடாதே, நான் சொன்னேனென்று சொல். ''நீ தப்பித்தாய் பீஷ்மர் யாரைக் கொன்றாலும் உன் உயிர் தப்பும். அது உன் அதிர்ஷ்டம். நீ ஆணுமல்ல , பெண்ணுமல்ல, உன்னைப் போன்ற பேடிகளை பீஷ்மர் கண்ணாலும் காண மாட்டார் என்பதால் உனக்கு உன் உயிர் போனஸ். அதிர்ஷ்டம். வீராப்பு பேசாதே'' என்று.

உலூகனிடம் இதெல்லாம் சொல்லி துரியோதனன் இடி இடி என்று சிரித்தான். அர்ஜுனனிடம் இன்னும் ஒரு வார்த்தை சொல், ''முடிந்தால் எங்களைக் கொன்று முடிசூடு. அது நிச்சயம் முடியாது, ஏனென்றால் நீ தான் மடிந்து விடுவாயே. எங்கிருந்தோ எல்லாம் ஆயுதம் பிச்சை எடுத்து வந்தாயே எங்கே அதெல்லாம் வீசிப்பார் பீஷ்மர் எதிரில் நிற்குமுன்பு எதற்கு வீண் பேச்சு என்று புரியும். மேருமலையை ஒரு காற்று உலுக்குமா? யுத்தத்தை பேச்சால் வெல்ல முடியுமா? பதிநான்கு வருஷம் நான் அனுபவிக்கும் இந்த ராஜ்ஜியம் இனியுமா உனக்கு கிடைக்கப் போகிறது? நீ உனக்குத் தெரிந்த பெண்களுடன் வளையல் அணிந்து நாட்டியம் ஆடி கற்றுக் கொடுத்து, உன் சொச்ச காலத்தைத் தள்ளு.'' என்று சொல்.

'' உலுகா, நான் சொன்ன இதெல்லாம் கிருஷ்ணனின் காதில் விழும்படியாகவே சொல்.'' என்றான் துரியோதனன்.

உலுகன் யுதிஷ்டிரனிடம் சென்றான். ''அரசே நான் தூதன். சொல்லச் சொன்னதை சொல்கிறேன். என் மீது கோபம் வேண்டாம். இவை என் வார்த்தைகள் அல்ல: உலூகன் வார்த்தைகளைக் கொட்டினான். பீமன் அர்ஜுனன் கிருஷ்ணன், மற்ற அரசர்கள் எல்லோரும் ஆத்திரமடைந்தனர்.

''தூதனாக வந்ததால் உயிர் தப்பினாய். போ அந்த கேடு கெட்ட துரியோதனனிடம் சொல். பாண்டவர்கள் சொன்னதைச் செய்பவர்கள். நாளை எண்ணிக்கொள்'' என்று சொல்.''பீமன் சொன்னவாறே உன் ரத்தம், உன் தம்பிகள் அனைவர் ரத்தத்தையும் குடிக்க தாகமாக இருக்கிறான். சில நாள் தான் உங்கள் பூலோக வாழ்க்கை அனுபவியுங்கள் ''என்று சொல் என்றான் பீமன்.

யுதிஷ்டிரன் ''உலுகா, என் பதிலை துரியோதனனிடம் சொல். ''நீ தான் பேடி. உனக்கு என்று வலிமை இல்லாமல் நாங்கள் யாரை பூஜிக்கிறோமோ அவர்கள் வலுவில் நீ வாழ்கிறாய். யுத்தத்தில் உன்னை சந்தித்து உங்களை வெல்வோம். '' என்றான்.

கிருஷ்ணனும் '' என் பங்குக்கு நான் சொன்னதாக இதையும் சொல் உலுகா '' ஜனார்தனன் யுத்தத்தில் பங்கேற்க வில்லை என்கிற தைர்யத்தில் பேசிவிட்டாய். கிருஷ்ணன் ஆயுதம் எடுக்க வேண்டிய நிர்பந்தம் வந்தால் எடுக்கத் தவறமாட்டான். நீங்கள் அனைவரும் கொழுந்து விட்டெரியும் தீயின் முன் காய்ந்த வைக்கோல் பதர்கள். அர்ஜுனன் சொல்லியவண்ணமே தவறாமல் துரோணர் பீஷ்மர் கர்ணன், நீ , உன்னை சார்ந்த சேனாதிபதிகள் அனைவரையும் கொல்வான் . நாளை சூரிய உதயம் முதலே போர் ஆரம்பமாகும்'' என்று சொல்.

'நாங்கள் பொறுமையின் வரம்பு மீறுவதற்கு முன் இங்கிருந்து ஓடிவிடு உயிர் தப்பிச் செல், உலூகா , நாங்கள் சொன்னதைச் சொல்.'' என்றான் அர்ஜுனன்

சைன்யங்கள் இருபக்கமும் யுத்தத்திற்கு தயாராக குருக்ஷேத்ரம் காத்திருந்தன.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...