Tuesday, April 23, 2019

BHARATHIYAR



தமிழ் புலவர்கள் , மஹான்கள், சித்தர்கள். 
மஹாகவி பாரதியார்   J K SIVAN 

                   அலகிலா விளையாட்டுடையான் 
           
குழந்தையும்  தெய்வமும்  கொண்டாடும் இடத்திலே.   மஹாகவி ஒருவர்  தன்  மனதில் ஆழமாகப் பதிந்த  அந்த  ஆயர்பாடிக் கண்ணனை எவ்வாறு அனுபவித்தார்?.  தந்தையாக, ஆசானாக,   சீடனாக,  சிறு பெண்ணாக , சேவகனாக .   ஒரு தடவை அவனை  ஒரு  குறும்புக்கார  சிறுவனாக மனதில் சித்தரித்தார். 

கோகுலத்தில்  பிருந்தாவனத்தில் கண்ணனின் விஷமங்களை அவன் தாய் யசோதை, எப்படியெல்லாம் நாளொரு புகாரும்  பொழுதொரு  சமாதானமுமாக    எதிர்கொள்ள  நேர்ந்தது  என்பதை  அபூர்வமாக கற்பனை செய்தார்.  கிருஷ்ணன் அவருக்கு அப்படி ஒரு சக்தியை கொடுத்தான்.  பெருமையாக இருக்கிறது.  ''கொண்டை இருப்பவள்  முடிந்து கொள்கிறாள்''.

 மஹாகவி, மீசைக்கவிஞன் பாரதியார்  அமரக்கவி.     வெறும் மீசையும், முண்டாசும் நெற்றியில்  கீற்றாக குங்குமமும் கழுத்து வரையில் பட்டனோடு கருப்புக் கோட்டும்  அணிந்த வேஷம் ஒருவரை அமரகவி ஆக்குமா?.  சுதந்திர காலத்தில் எத்தனைபேர்  நேருவைப் பார்த்து  தாங்களும்  ஒரு  வெள்ளை குல்லாவை  அணிந்துகொண்டார்கள், நேரு ஆக முடிந்ததா ?   இப்போது அப்படித்தானே  குப்பை பொறுக்குபவரும் மோடி கோட் அணிந்து வருகிறார்.

ஆயர்பாடியில்  நந்தகோபனை அவன் நண்பர்கள் பிடுங்கி எடுத்தனர்'
''ஏன்  அமைதியில்லாமல்  இருக்கிறாய். யசோதாவும்  எப்போதும்  ஒரு  தடுமாற்றத்தோடு   சில நேரம் சந்தோஷம்  சில நேரம் நடுக்கமாகவும்  உள்ளாளே . என்ன தான் நடக்கிறது உங்கள் வீட்டில் ?
'' என்னத்தை  சொல்வேன்  போங்கள் ?''
'' ஏதோ  பத்து காத தூரம் ஓடினாற்  போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க  ஆயாசமாக இருக்கிறாயே  நந்த கோபா . என்ன விஷயம் சொல்?
''ஹும்ம்ம்ம்   எதைச்  சொல்ல. என்னத்தை சொல்வேன்?  எல்லாம்  அந்த குட்டி கறுப்புப்  பயல் செய்யும் லூட்டி?  ஊர் வம்பை  விலைக்கு வாங்கி வந்து விடுகிறான். பொழுது விடிந்தால்  பொழுது போனால் அவனுக்காக  மற்றவரிடம்  மத்யஸ்தம், தாஜா  செய்வதற்கே  சக்தி போய்  விடுகிறதையா.''

''ஒ, அப்படி என்ன செய்கிறான்  உங்கள் பையன்? '' என்று கேட்பவர்   அங்கு மிங்கும் அவன் கண்ணில் தென் படுகிறானா  என்று பார்த்துக்கொண்டே  கேட்பார் நந்த கோபனின் நண்பர்.   அவர் பயம் அவருக்கு தெரியும்.  அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே  அவர் பின்னால்  அவன் ஏதாவது விஷமம் செய்துவிட்டால்?  ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிவிட்டால்?  இருந்தாலும் அப்படி என்னதான் செய்கிறான் பார்ப்போமே என்ற தைரியத்தில் கேட்டுவிட்டார்.

''சொல்கிறேன் கேளுங்கள் '  என்று  ஒரு காலை  நீட்டிக் கொண்டு ஒரு காலை மடித்துக்கொண்டு  திண்ணையில் ஒரு தூணில் சாய்ந்து கொண்டு  ஆரம்பித்தார்  தந்தை நந்தகோபன்..

''உமக்கு தெரியும் இல்லையா,   இந்த  தெருவில்  16வீடுகள்,  அதில்  13 வீட்டில்  இளம் பெண்கள். ஏறக்குறைய  ஒரே வயது. சிலதுகள்  சற்று  பெரியது சிலது  சின்னது. ஆனால்  அவர்கள்  எப்போதுமே  அவனுடன் சேர்ந்து தான்  விளையாடுவார்கள்.  நம்  பயலும் அவர்களோடு சேர்ந்து கொள்ளாத நாளே  இல்லை.  ஆண்  பிள்ளை என்றாலும் அவனை அவர்களுக்குப் பிடிக்கும்.  எல்லோரோடும் பேசி மயக்குபவன்.  அவர்களுக்கு  ஜோடியாக விளையாடுபவன். புதிது புதிதாக  ஏதாவது சொல்லுவான், செய்வான். அவன் சுவாரசியமானவன் என்று  அவனையும் சேர்த்துக் கொள்வார்கள். அங்கு தான்  ஆபத்து உருவாகும்''.

''ஏன், என்ன பண்ணுவான் ?''

''அவனோடு விளையாடினாலும்  தினமும்  யாராவது  ரெண்டு பெண்ணாவது  எங்கள் வீட்டுக்கு வந்து யசோதாவிடம்  அவனைப்பற்றி   ஏதாவது ஒரு குறை  சொல்லாத நாளே கிடையாது.  விளையாட்டு விளையாட்டு  விளையாட்டு. தீராத  விளையாட்டு அவனுக்கு, இந்த கண்ணன் பயலுக்கு.  ஆமாம்  அவன் பெயர் கண்ணன் தான்.  குறும்புக்கு மற்றொரு பெயர் கண்ணன் அல்லவா?''.

 ''ராதே.   இந்தா உனக்கு  கொய்யாப்பழம்  என்று  ஒரு பெரிய பழத்தை எங்கோ மரத்தில் பறித்து,   அந்தப் பெண் ராதாவுக்கு கொடுத்தான். அவள்  ''நீ நல்ல  கண்ணன் டா. எப்படி டா உனக்கு தெரியும்  எனக்கு கொய்யாப்பழம் பிடிக்கும்''   என்று  சொல்லி ஆசையாய் அதை வாங்கி வாயில் வைத்து கடிக்குமுன்பாக  மின்னல் வேகத்தில் அவள் வாயில்  அந்த பழம் ஒரு கடி படும் முன்பே அந்த பழத்தைத்  தட்டி விடுவான். அது கீழே விழுவதற்குள் அதை ஒரு கையால் பிடித்துக்கொண்டு  தான்  ஒரு  கடி கடித்து  கால் பழம் அவன் வாயில் சென்றுவிடும்.   அவள் அழுவாள்.கெஞ்சுவாள்.  ''கண்ணா  கண்ணா  தரேன்  என்று சொல்லி தந்து  ஏனடா  ஏமாற்றுகிறாய்,  கொடுடா'' என் கண் இல்லையா என்  அப்பன் இல்லையா நீ '' என  அவன் பின்னே  கெஞ்சி சரணடையும்போது போனால் போகிறது   இந்தா''  என்று  கடித்த பழத்தை அவளுக்குக்   கொடுப்பான். 

யாராவது ஒருவர்  வீட்டிலிருந்து  நிறைய  நெய் சர்க்கரை தின் பண்டங்கள் ஒரு நண்பன் கொண்டுவருவான். அவனுக்கு  தான்  எல்லா வீட்டிலும் செல்லமாயிற்றே.'' எல்லோரும்  வாருங்கள் உங்களுக்கும் தருகிறேன்''  என்று அவர்கள் அத்தனைபேரும்  ஆசையோடு ஓடி வர,  கைக்கெட்டாத  உயரத்தில்  அதை  மேலே  வைத்து விட்டு,   வேண்டுவோர்  எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு தானே  கொண்டுவந்தேன்'' என்று  அவர்களை  திண்டாட வைப்பான். ரொம்ப கெஞ்சினால்  கொஞ்சம் எடுத்து தருவான்.
ஒரு  பெண்  ரொம்ப அழகானவள்.  உன்னைப்பார்த்தால்  மான்  மாதிரி இருக்கிறாய்  என்று  அவளைப் பற்றி  எல்லோர் எதிரிலும்  புகழ  அந்தப்  பெண்ணுக்கு  உச்சி குளிர்ந்தது.  அவனைச்சுற்றி  வந்து  அவன் சொன்னபடி  எல்லாம்  செய்தது.  அருகில் அது வந்ததும்  நறுக்கென்று அதை  வலிக்க வலிக்க இடுப்பில் நகம் பதிய ஒரு கிள்ளு 0  கிள்ளி  விட்டு  ஓடி விட்டான்.  அந்த  பெண்  வலியோடு ஓலம் இட்டுக்கொண்டு  தன்  வீட்டுக்குள் ஓடியது. கேட்க வேண்டுமா  அதன் தாய்  முகத்தைத் தூக்கிக்கொண்டு  இங்கே யசோதையிடம்   அவனைப்பற்றி புகாருடன் முறையிட வந்துவிட்டாள்.''

''பிரேமா,   இங்கே வாயேன்  உனக்கு  ஒரு அழகான பூ  நந்தவனத்தில் பறித்துக் கொண்டு வந்திருக்கிறேன்''  என்று  தான் பறித்து வந்த அழகான ஒரு  பூவை   அவளிடம் காட்ட  அவள்  பெருமிதத்தோடு ஓடிவந்தாள்.  மற்ற பெண்கள்  ''  கண்ணா,  எங்களுக்கும்  பறித்துக் கொண்டுவந்து தாயேன்''  என்று கெஞ்ச  பிரேமாவின் அருகில் சென்று   ''நீ கண்ணை மூடிக்கொள்  உன் தலையில்  நானே இதை அழகாக  சூட்டுகிறேன்'' என்றான்.  அந்தப் பெண்ணும்  அவனை நம்பி   கண்ணை மூடிக்கொண்டு  நிற்க  அருகே நின்ற  ராதையின் தலையில் அந்தப்  பூவை  சூட்டிவிட்டு  ஓடிவிட்டான்.  ஏமாந்த  பிரேமா  அவனைத் துரத்தினால் அவன்  அகப்படுபவனா?

 இதையும் கேளப்பா.   ஒரு நாள்  ஒரு வீட்டில்  விசேஷம்  ஒரு பெண்  தனது பிறந்த தினம் என்பதற்காக  தானும்  நீளமாக  தலையைப் பின்னி, தாழம்பூ வைத்து மற்ற தோழிகளுக்கும் பின்னி எல்லோரும்  தாழம்பூ மணம்   கம கமக்க  விளையாடிக் கொண்டிருந்தனர்.  அங்கே  வந்து விட்டான்  இந்த  ராக்ஷசன். அவன் கவனம்  அவர்கள் பின்னல் மேல் சென்றது.  ஒளிந்து கொண்டே  அவர்கள் அறியாமல்  பின் பக்கமாக வந்து  அவர்களது பின்னலை  பிடித்து இழுத்து விட்டு  யார் என்று அவர்கள் பார்க்கு முன்பு ஓடிவிடுவான்.  
இதுபோல்  தான்  ஒருநாள்  கோவிலில் விசேஷம் என்று  மைதிலி என்ற பெண்  அதன் அம்மாவின்  புதிய  நீல வண்ணச் சேலை  ஒன்றை  எடுத்து கட்டிக்கொண்டு வந்தது.    ''எங்கே காட்டு   உன் புடவை ரொம்ப புதிதாக  அழகாக இருக்கிறதே  என்று அதைப் பார்ப்பதுபோல் அருகே வந்து  அந்த  புடவையில்  நிறைய சேற்றைப் பூசிவிட்டு  ஓடினான். அழுது புலம்பி  ஊரையே கூட்டிவிட்டது அந்தப் பெண்.   யசோதை  எப்படியோ அந்த  பெண்ணின் தாயின் காலில் விழாத குறையாக  அவளை சமாதானம்  செய்து அன்று சாயந்திரம்  ஒருவாறு  அனுப்பி வைத்தாள்

''அடடா..   பார்ப்பதற்கு  ஒன்றும் தெரியாத  பிள்ளையாக  இருக்கிறான் உன் வீட்டுக் கண்ணன். இவ்வளவு விஷமமா இந்த  6 வயதிற்குள்.  அதுசரி  அவன் எங்கே  சங்கீதம் படித்தான்.  ஒரு  புல்லாங்குழலில் வெகு  நன்றாக  ஊதுகிறானே?.   கேட்கும்போது நாங்கள்  அதிசயிப்போம்.  எப்படி  இந்த நந்தகோபன் பிள்ளை  இவ்வளவு நன்றாக  குழல் ஊதுகிறான் என்று. ''

''அதை  ஏன்  கேட்கிறீர்கள்.  எங்கள்  குடும்பத்தில்  இதுவரை  யாருமே  இப்படி  ஒரு  வாத்தியம்  உபயோகித்த தில்லை.  எதிலுமே இந்தப் பயல்  கண்ணன் தான்  முதல்வன். ஒருநாள்  சில பயல்களோடு  யமுனா நதிக்கரையோரம் ஒரு  மூங்கில் கொத்தில்  இருந்து  ஒரு சில மூங்கில்களை   கொண்டுவந்தார்கள். இவன் அதில் ஒன்றை  எடுத்து  வெட்டி, துளை போட்டு, ஊத ஆரம்பித்தான்.  எங்கிருந்தோ மந்திரம் போட்டது போல் இசை வெள்ளம்!!    எப்படி  அவனுக்கு  இது முடிந்தது  என்று  அடிக்கடி யோசித்தால்  களைப்பு தான்  வரும்.  இந்த  ஊரே திரண்டு அவன் பின்னே  ஓடும்.  கையில் இருந்த வேலையைப் போட்டுவிட்டு  மந்திரத்தால் கட்டுண்டது போல்  அல்லவோ    ஊரில்  எல்லா  பெண்களும், அவர்கள் தாய்மார்களும் மற்ற கோபியரும் இந்த பிருந்தாவனத்தில்  அவன் வாசிக்கும் இடத்துக்கு ஓடுகிறார்கள்.    எனக்கு ஆச்சார்யமாக இருக்கிறது. ஏதோ மந்திர சக்தி இருக்கிறது அவனிடம்.

இதில் வேடிக்கை என்னவென்றால்,  பசுக்களும் கன்றுகளும், பறவைகளும் இதில்  கூட்டு. எப்போது குழல் வாசிக்க ஆரம்பிப்பான் எப்போது முடிப்பான்  என்று யாருக்குமே தெரியாது.  கண்ணன் பயல்  ரொம்ப  வினோதமானவன். அவன் செய்யும்  விஷமங்களுக்காக  தண்டனை கொடுக்கவேண்டும் என்று  கோபமாக  அவனருகில் செல்வேன்.  என்னவோ மாயம் செய்து விடுவான். அவனது புன்  ஒரு சிரிப்பில் நான்  அவன் அடிமையாகி  அவனை  வாரி அணைத்து  முத்தமிட்டு விட்டு திரும்புவேன். நானே  இப்படி என்றால்  யசோதையைப் பற்றி சொல்லவா வேண்டும்?.

உண்மையிலேயே  யமுனையின் சல சல  நீரோட்டத்தில், மாலைவேளையிலும், அதி காலை சிலு சிலு குளிரிலும்  வித விதமான  நறுமண போதையில்,  மரங்களின் அசைவில்,  செடி கொடிகளின் ஆட்டத்தில் தென்றல் புகுந்து வீச  எண்ணற்ற மயில்கள் ,மான்கள்,  பசு கன்றுகள்  எல்லாம்  நிற்க,  இந்த  கோபியர்களின் கூட்டத்திற்கு இடையே    எங்கோ ஒரு மரக்கிளையில் அமர்ந்து அந்த கண்ணன்  குழல் ஊதும்போது கண்ணை மூடி  கேட்பேனே!  ஆஹா!    அந்த  இன்பத்திற்கு மாறாக ''இந்திர லோகமாளும்  அச்சுவை பெறினும் வேண்டேன்''.

ஒரு பெண் அடிக்கடி  வாயைத் திறந்து சிரித்துக்கொண்டிருந்தாள் ,  என்ன தோன்றியதோ அவனுக்கு.   அருகே ஓடிக் கொண்டிருந்த  ஆறு  ஏழு   பெரிய கருப்பு நிற  கட்டெறும்புகளைப் பிடித்து அவள் வாயில் போட்டு விட்டான். பயந்துபோன  பெண்  அப்படியே  துப்பிவிட்டு  பேச்சு வராமல்  உளறலோடு ஓடி விட்டது.  எல்லாருமே  கொல்லென்று சிரித்து விட்டார்கள்.   
கண்ணன்  குறும்புகளை பட்டியல் போட்டு காணாது. ஒரு புத்தகமே  தனியாக  எழுதவேண்டும்.  நான் சொல்வது எல்லாமே  அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் தான். 

''ஏய், வாடி விளையாடலாம் என்று  வீடு வீடாகப்  போய்  அந்த பெண்களை கூட்டி வருவான். ''நீ  போடா  எங்களுக்கு வேலை நிறைய  இருக்கிறது  என்றால் கூட  விடமாட்டான். கையைப் பிடித்து தர தர  என்று இழுத்துக் கொண்டு ஓடுவான். சின்னக் குழந்தைகளைக் கூட  விடமாட்டான். எல்லோரோடும் அவனுக்கென்று ஒரு தனி விளையாட்டிருக்கும். மும்முரமாக  பாதி விளையாட்டில்  திடீரென்று  காணாமல்  போய்விடுவான். வீட்டுக்கு ஓடிவந்துவிடுவான். அவர்கள் அவனைத்தேடி   கூட்டமாக வருவார்கள். அவன் அவர்கள் கண்ணில் படாமல் எங்கோ ஒளிந்து கொள்வான்.
நம்ம கண்ணன் கிட்டே  ஒரு  சாமர்த்தியம் என்ன தெரியுமா?  எல்லோருக்கும் நல்லவன்.
அம்மா,  அப்பா, பாட்டி, அத்தை, சித்தி எந்த வீட்டிலும் அவன் நல்ல பிள்ளை என்ற பெயர் வாங்கும் திருட்டுப் பிள்ளை.    கூசாமல் பொய்  சொல்வான். தான் செய்ததை  அப்படியே  அபாண்டமாய்  அடுத்தவன் செய்தான் என்று நம்பும்படியாக நடிப்பான். ஆளுக்குத் தகுந்தபடி  மன நிலையை அந்த வயதிலேயே  தெரிந்து அதன் படி நடந்து அவர்களைத்  தன் வழிக்குக் கொண்டுவரும்  அசகாய சூரன்.  சமர்த்தன்.  என்ன சொக்குப் பொடி  போடுவானோ தெரியாது  கோகுலம் ஆயர்பாடி பிருந்தாவனம் பூரா அவன் ஆட்டுவித்தபடி ஆடாத பெண்ணே கிடையாது  போங்கள் ''  என்று  நண்பனிடம்  சொல்லி முத்தாய்ப்பு  வைத்தார் நந்தகோபன் .
கண்ணன் என்றுமே   தீராத விளையாட்டுப்பிள்ளை  தான் என்பதில்  ஒரு சந்தேகமும் இல்லையே.  மஹாகவி  பாரதியாரின்  கற்பனையில் ஊறிய  இந்த  அற்புதப் பாடலை கீழே படியுங்கள்.  நான்  மேலே  எழுதியது ஒரு சிறு விளக்கம் தான்.


           9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை


கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரசங்கள்; அற்புதம் , சிருங்காரம்

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. ... (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். ... (தீராத)

 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான்; ... (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், ''கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்'' - என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். ... (தீராத)

4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். ... (தீராத)

5, புல்லாங் குழல்கொண்டு வருவான்; - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். ... (தீராத)

6  அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? ... (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். ... (தீராத)

8.
அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி 
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். ... (தீராத)

9. கோளுக்கு மிகவும் சமர்த்தன்; - பொய்ம்மை
குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். ... (தீராத    

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...