Thursday, April 11, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம்              J K SIVAN                    
மஹா பாரதம் 

                 உனக்கும் எனக்கும் தெரிந்த ரஹஸ்யம் 

''கர்ணா  உனக்குள் இருக்கும் ஒரு ரஹஸ்யத்தை நானும் அறிந்தவன் தான்.  வெளியே   நீ தேடிய  தேவையான விவரத்தை அறிந்தும்  அறியாதவன் போல் நடந்து கொள்கிறாய்.   நேரிடையாகவே சொல்கிறேன் கேள். நீ  ராஜமாதா குந்தியின் மகன்.  குந்தி போஜன் மகளாக  கன்னியாக இருக்கையில் துர்வாச மகரிஷி அவளது சேவையை மெச்சி அளித்த மந்திரத்தை  விவரம் தெரியாத பருவத்தில் உச்சாடனம் செயது சூரிய பகவானால் உன்னை பெற்றாள். மணமாகாத தாய் என்று  ஊரும் உலகமும் பழிக்குமே என்று திகைத்து,  அஞ்சி உன்னை ஜாக்கிரதையாக ஒரு மரப்பெட்டியில் வைத்து ஆற்றில் அனுப்பி அதை  ராதை, அதிரதன் தம்பதியர் எடுத்து உன்னை வளர்த்து நீ ராதேயனாக வளர்ந்து துரியோதனனின்  நெருங்கிய நட்பை பெற்று வள்ளலாக வாழ்ந்தாலும் உன் உள் மனதில் உன் தாய் செய்தது  தவறு  துரோகம் என்று அவளை வெறுத்தாய். இதனால் உண்மை மறையாது.  சந்தர்ப்ப சூழ்நிலை அவளை அவ்வாறு செய்ய தூண்டியது.  

''கர்ணா, வேதம் அறிந்தவர்கள்  சஹோதர  உறவை அறிவார்கள். தந்தை வேறாக இருந்தாலும் ஒரே தாயிடம் பிறந்தவர்கள் சகோதரர்கள் ஆவார்கள். கர்ணா நீயும் ஒரு விதத்தில் பாண்டு புத்ரனே. பாண்டவர்கள் உன் சகோதரர்கள் என்று சொன்னேன்.உன் தாய் குந்தி வ்ரிஷ்ணி குலத்தவள். என் தந்தையின் சகோதரி.  ஆகவே  நீயும் எனக்கு ஒரு அத்தை மகன் என்றும்  நீ  அறிவாய். நீ யுதிஷ்டிரனுக்கு மூத்தவன் என்பதால் நீயே அனைத்து பாண்டவ சாம்ராஜ்யத்துக்கும் தலைவனாக இரு. உனக்கு பாண்டவர்கள் பணி புரிவார்கள். இந்த நாள் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேரும் நாளாக இருக்கட்டும்.''

 எனக்கு தெரிந்த இந்த உண்மை உனக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவும்  ஒருவேளை நீ ஏற்கனவே  இதை அறிந்திருந்தால் அதை உணர்த்தவும்  உன்னைத் தனியே கூப்பிட்டு இதைச் சொல்கிறேன்'' என்றான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா, நீ என் நன்மை கருதி இதெல்லாம் சொன்னாய். குந்தி சூரியன் அறிவுரைப்படி என்னை பிறந்ததுமே வெளியேற்றிவிட்டாள் . என்னை வளர்த்தது ராதையும் அதிரதனும். அவர்களே என் பெற்றோர்கள் .அவர்களே எனக்கு திருமணமும் செய்து வைத்தவர்கள். நீ சொல்கிறபடி நான் பாண்டவர்களில் ஒருவனாகவோ, உன் குலத்தவனாகவோ இருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், அது பழங்கதை.  என்னை ஒரு அரசனாக்கி நட்பு கொண்டவன் துரியோதனன். என்னை அர்ஜுனனோடு தனித்து போரிட்டு அவனை வெல்வேன் என்ற நம்பிக்கையில் வளர்த்தவன். ஆகவே இந்த உறவே எனக்கு திருப்தியளிக்கிறது. பாண்டவர்களில் ஒருவன் என்பது உனக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த ஒரு விஷயமாக இருக்கட்டும். நான் அவன் மூத்த சகோதரன் என்று யுதிஷ்டிரன் அறிந்தால், நிச்சயம் ராஜ்யம் தனக்கு வேண்டாம் எனக்கே சேரவேண்டும் என்று சொல்வான். என்னைப் பொருத்தவரை எனக்கு ராஜ்ஜியம் கிடைத்தால் அதை துரியோதனனிடமே ஒப்படைப்பேன். அவனுக்கு துணையாக நிற்பேன். நான் கடினமாக பாண்டவர்களிடம் நடந்து கொண்டால் அது துரியோதனனை திருப்திப் படுத்தவே தான்.  துரியோதனன் உறவை விட்டு நான் இந்த ஜன்மத்தில் பாண்டவர்களோடு நட்போடு உறவோடு இருக்கப் போவதில்லை. பாண்டவ உறவு என்னை  விட்டு அகன்றுவிட்டது.

திரௌபதியிடம் தகாத பேச்சுப் பேசியதற்கு என் மனம் வருந்துகிறது. அர்ஜுனனை என் முன் நிறுத்து. அவனோடு கடும் யுத்தம் புரிவேன். இருவரில் ஒருவன் மட்டுமே பிழைக்கும் வாழ்வா சாவா யுத்தம் ஒன்று நிகழட்டும்''

''ஆஹா, எது விதிப்படி நடக்க வேண்டுமோ அப்படியே ஆகட்டுமே. இன்னும் ஏழு நாளில் அமாவாசை வருகிறது. இருபக்கமும் படைகளும் தயாராகிவிட்டன. யுத்தம் ஆரம்பிக்கட்டும்''.

கர்ணன் கிருஷ்ணனை வணங்கினான். ''  கிருஷ்ணா, உனக்குத் தெரியும். இருபக்கமும் நிறைய உயிர்ச் சேதம் நேரும்.ரத்தம் வெள்ளமாக ஓடும். சகுனி, துரியோதனன்,அவன் சகோதரர்களோடு பூண்டோடு அழிவார்கள். யுதிஷ்டிரன் வெல்வான். நானும் தப்ப முடியாது.  இதை நன்றாக உணர்ந்தும் நீ   பின் எதற்காக என்னை பாண்டவர்களோடு சேர் என்று சொன்னாய். இதுவும் உன் விளையாட்டா? என்றான் கர்ணன்.

''கர்ணா, என் வார்த்தை உனக்கோ, கௌரவர்களுக்கோ பயன் படவில்லை என்பதால் நீ சொல்வது நடக்கவே போகிறது''

''ஆமாம் கிருஷ்ணா, யுத்தம் நடைபெறும். வென்றால் நான் உயிரோடு மீண்டும் உன்னை இவ்வுலகில் சந்திப்பேன். இல்லையென்றால் மேலுலகத்திலாவது உன்னை சந்திப்பேன். அங்கே தான் இது நிச்சயம் என்று தோன்றுகிறது.'' 

இதைச் சொல்லிக்கொண்டே கர்ணன் கிருஷ்ணனை மார்புற அணைத்துக் கொண்டான். கிருஷ்ணனின் தேரை விட்டிறங்கி திரும்பி நடந்து சென்றான். 

அவன் நடையில் முதன் முதலாக தளர்ச்சி தெரிந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...