Sunday, April 28, 2019

ARUPATHTHU MOOVAR



அறுபத்து மூவர் J K SIVAN
சண்டேஸ்வர நாயனார்
20 தந்தையென்றும் பாராமல்...
வல்லவரையன் வந்தியத்தேவன் போல் குதிரைமீது ஆரோகணித்து காவிரிக்கரையோர மாகவே தஞ்சாவூர் ஜில்லாவை சுற்றி வளைத்து அலைந்து எல்லா கோவில்களுக்கும் சென்று, தரிசித்து, ஆற்ற்றில் சலசலவென்று ஓடும் குளிர்ந்த நீரில் தானும் குளித்து, குதிரையையும் குளிப்பாட்டி, ஓய்வெடுத்து, கோவில்கள் ஊர்மக்கள் சத்திரத்தில் அளிக்கும் சூடான உணவை அருந்தி, வயல்களில் பெண்கள் நாற்று நடுவது, பாடுவது எல்லா கேட்க ஆசைதான். இப்போது குதிரையும் இல்லை. ஆறுகளும் இல்லை, இருந்தாலும், ஆறுகளில் தண்ணீர் இல்லை, பெண்கள் பாடுவதில்லை. நாற்று நட நிறைய நிலமும் இல்லை.

அப்படி ஒரு அழகான பழைய கால ஊர் சேய்ஞலூர். கும்பகோணம் - அணைக்கரை திருப்பனந்தாள் செல்லும் வழியில், ஓடும் பஸ் , சோழபுரம் கடந்ததும் சேங்கனூர் வந்ததும் சற்று களைப்பாற நிற்கும். நாம் அங்கே இறங்கிக்கொள்ள வேண்டும். கிழக்கு பக்கம் செல்லும் சாலையில் அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் நடந்தால் ஒரு புராதன சிவன் கோவில் தென்படும் . ஒரு விஷயம் சேய்ஞலூர் என்றால் யாரும் பதில் சொல்லமாட்டார்கள். அது தான் சேங்கனூர் ஆகிவிட்டதே!. சிவனுக்கு பெயர் சத்யகிரீஸ்வரர் அம்பாள் சகி தேவி. நமக்கு முன்னாள் ஞான சம்பந்தர் நடந்தே சென்று சிவனைக் கண்டிருக்கிறார்.
கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். கோயில் கட்டுமலை மேல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கர்ப்பக்கிருகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. கட்டுமலை மீது மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்குக் காட்சி தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். மூலவர் சத்தியகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டுமலைக்குக் கீழே அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது.

இந்த ஊர் விசேஷம் என்ன? அது தான் மேலே ஒரு பேர் சொன்னேனே. கவனிக்க வில்லையா.? சண்டேஸ்வரர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகவும் முக்கியமான சண்டேசுவர
நாயனார் இந்த ஊரில் தான் பிறந்தார். பிராமண குலம் . அப்பா எச்ச தத்தன். அம்மா பவித்ரா.
அவர்கள் வைத்த பெயர் விசார சர்மா. கல்வி கற்றான். ஏழு வயதில் உபநயனம். சிவன் மேல் சதா சிந்தனை.

வைணவர்களுக்கும் இது ஒரு முக்கிய ஸ்தலம். நாலாயிர திவ்விய பிரபந்தததிற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை அவதார ஸ்தலம் இது தான். சிவன் கோவில் எதிரே இவருக்கு கோயில் உள்ளது.

சேய்ஞலூர் என்று எதற்கு இந்த ஊருக்கு பெயர்? முருகப்பெருமான் இந்த க்ஷேத்ரத்தில் தந்தை சிவபெருமானை வழிபட்டு சர்வசங்கார ஆயுதம், ருத்ர பாசுபதத்தை பெற்றார். சேய்: முருகன். அவருக்கு நல்லபடியாக வழிபட்ட பலன் கிடைத்ததால் :சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர். இப்படி சொல்வது நான் அல்ல, கந்தபுராணம் ( வழிநடைப் படலம்). ஆலயத்தில் முருகன் சந்நிதி பெரியது.

இந்த ஊரில் வாழ்ந்த விசார சர்மா, ஒருநாள் நண்பர்களோடு தெருவில் போய்க்கொண்டிருந்த போது ஒரு மாட்டிடையன் ஒரு பசுவை கொடுமையாக அடித்துக்கொண்டிருந்ததை பார்க்கிறான்.
ஏனப்பா சாதுவான வாயில்லாத பசுவை வதைக்கிறாய்? பசு உன்னதமான வழிபடும் ஜீவன். தெய்வீகமானது. எத்தனையோ தேவர்கள் குடிகொண்ட தேகத்தை உடையது. அதை பராமரிப்பது பாதுகாப்பது நமது கடமை, பசுவதை செய்பவனுக்கு நரகம் நிச்சயம் என்றெல்லாம் உனக்கு தெரியாதா?
உனக்கு முடியவில்லை ல் என்றால் இனி நானே பசுக்களை பராமரிக்கிறேன்'' என்று அன்று முதல் விசார சர்மா பசுக்களை மேய்க்க ஆரம்பித்தான்.

அந்த ஊர் அந்தணர்களின் பசுக்கள் அவனிடம் மேய்ப்பதற்கு வந்தன. பெற்ற தாய் போல் விசார சர்மா பசுக்களை நேசத்துடன் மேய்த்து பராமரித்ததால் பசுக்கள் அவனை விரும்பின. அதிக பால் கொடுத்தன. விசாரசருமன் சதா சர்வகாலமும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் ஒரு சிவலிங்கம் செய்து பிரதிஷ்டை செயது மகிழ்ந்தான். லிங்கத்தின் மேல் பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்து மகிழ்ந்தான்.
இதனால் பசுக்களின் எஜமானர்களுக்கு பால் அளவு குறையவில்லை.

விசாரசர்மா இப்படி பசும்பால் அபிஷேகம் லிங்கத்துக்கு செய்வதை பார்த்த யாரோ சிலர் அவன் பசுக்களின் பாலை விரயம் செய்கிறான் என்று விசார சர்மாவின் அப்பாவிடமும் கூட புகார் செய்ய அவர்க்கும் கடுங்கோபம் வந்தது.

ஒருநாள் நேரே சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தார். பசுக்களிடம் பாலைக் கறந்து நிறையக மண் லிங்கத்தின் மேல் தாராளமாக அவன் அபிஷேகம் செய்வதை பார்த்து விட்டார். அவன் மந்திரங்கள் ஸ்தோத்ரம் எல்லாம் சொல்லி அபிஷேகம் பூஜை செய்துகொண்டிருந்தான்.

கையில் ஒரு பெரிய கொம்புடன் அவன் தந்தை அவனை அணுகி தாக்கினார். பால் செம்புகளை காலால் உதைத்து உருட்டி கொட்டினார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை யாரென்று கூட பார்க்காமல் ஒரு குச்சியால் கால் மீது அடித்து விரட்ட, அந்த குச்சி சிவனின் மழுவாக மாறி விசார சர்மனின் தந்தை எச்சதத்தரின் கால்களை துண்டாக்கியது.

கால்கள் வெட்டப்பெற்றவர் தன் அப்பா என்று கூட விசார சர்மா அறியாமல் பூஜையில் ஆழ்ந்திருந்து வழி படும் தொண்டனை, பக்தனை சிவன் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா. பார்வதி சமேத பரமேஸ்வரன் அவன் முன் தோன்றி "எவ்வளவு பக்தி என் மீது உனக்கு? தந்தை என்றும் பாராமல் அபிஷேக பால் செம்புகளை உதைத்த கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தை'' அன்று அருளி தான் அணிந்திருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி "சண்டிகேஸ்வரர்" ஆக்கினார். சிவனோடு கலந்த ஈஸ்வரனானார். ஒரு சிவபக்தரால் தாக்கப்பட்ட தந்தைக்கும் மோக்ஷம்.

விசாரசருமன் சிவபூஜை செய்து முக்தி பெற்ற திருஆப்பாடி தலம் சேய்ஞலூரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சண்டிகேஸ்வரர் ஒருவர் தான். இன்றுமுதல் சிவன் கோவில் சென்று தரிசனம் செய்யும்போது சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கை தட்டி அவர் தியானத்தை கலைக்காமல் வணங்கும்போது இந்த திருத்தொண்ட புராண கதை நினைவுக்கு வருமா?
ஒரு ஞானசம்பந்தர் தேவாரம் இதை பற்றி சொல்லி முடிக்கிறேன்.
.
பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.



சிறப்பான கோச்செங்கணான் கட்டிய மாடக் கோயிலான திருச்சேய்ஞலூரில் அருள் பாலிக்குஜ்ம் சிவபிரானே, பசுவின் முலைக் காம்பின் வழிச்சுரந்த பாலைச் சண்டீசர் மணலால் ஸ்தாபித்த சிவ லிங்கத்துக்கு அபிஷேகித்து வழிபட, அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை இடறிய தன் தந்தையின் காலைத் துண்டித்த சண்டீசரின் பக்தியை மெச்சி உன்னுடைய தாரையும் மாலையையும் அவருக்கு சூட்டி சண்டேஸ்வரரை சிவகணங்களின் தலைவன் சண்டிகேஸ்வரனாக உயர்த்தியது ஏனப்பா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...