Monday, April 22, 2019

AVVAIYAR




தமிழ் புலவர்கள்    J K SIVAN 
ஒளவையார் 

                    அவளுக்கென்ன  சொல்லி விட்டாள் .

அப்பப்பா , இந்த  தேர்தல் சமயத்தில் எங்கிருந்தோ மழைக்கால புற்றீசல் போல்  ஜாதி சமயம் எல்லாம் தலை தூக்குகிறது.  என்ன செய்வது மத சார்பற்றவர்கள் அல்லவா நாம்?!  ஒளவையாரும்  இந்த ஜாதி சமயம் பற்றி எல்லாம் தெரிந்தவள் தான். அப்போதிலிருந்தே  இந்த ஜாதி 
சாதி   சண்டைகள்  இன்னும் முடிந்தபாடில்லை. ஒரு  இளைஞன் வேறு குல  பெண்ணை  காதலித்தான். யாரும்  ஆதரிக்கவும் இல்லை,  கல்யாணமும் பண்ணி வைக்கவில்லை.  பதிலாக கொல்வதற்கு  தயாரானார்கள்.   எனவே சிறிசுகள் ரெண்டும்  உயிர் தப்பி ஓடின.  பல  மாசங்கள்   கழித்து சாமர்த்தியமாக   வரவழைத்து  ஆத்திரமடைந்த  பெற்றோர்கள் ஆள்  வைத்து கொன்று எரித்தனரோ புதைத்தனரோ,   நிறைய இது போன்ற செய்திகள்  பத்திரிகையை நிரப்புகின்றன.  அரசியலில்  சாதி,  பள்ளி  கல்லூரிகளில் சாதி, ஆபிசில் சாதி.  ச்சே! என்று மடியும்  இந்த அநீதி  அக்கிரமம்.  ஒருவன்   பிறக்கும்போது  அவனைக்கேட்டுக்கொண்டா சாதி அமைகிறது. ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னாலும்  சாதி  இருந்திருக்கிறது என்று  ஒளவைக்  கிழவி வெறுத்துப்போய் ஒருநாள்  ஒரு  பாட்டு
பாடியிருக்கிறாள்.  '' ஏ   மானிடர்களே  சாதி  என்ன சாதி.   அதெல்லாம் ஒன்றுமே  கிடையாது.  ரெண்டே ரெண்டு  தான்  உலகில்  சாதி.  ஆண் சாதி, பெண் சாதி தான்   இயற்கையாகவே  உள்ளதே.  உனக்கு  வேண்டுமானால்  புரிந்துகொள்  உயர்ந்த சாதி  யார்  தெரியுமா,  நாலு பேருக்கு  தான தர்மம் புரிந்து உதவுபவர் தான்   பெரியோர். அப்படி இல்லாத கருமிகள் தான்  இழி குலத்தோர்.  தாழ்ந்த சாதியினர்.    அது சரி யார் கேட்கிறார்கள்?????
''சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் யார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி ''

++++

ஆற்றங்கரை  குளத்தங்கரை  அரசமரத்தடி, நாற்சந்தி விநாயகா,  கோவில்களில் கணேசா,  உனக்கு தான்    தினமும் தோப்புகரணம்  போடுகிறேனே. விளக்கு ஏற்றுகிரேனே.  உனக்கு  கண்ணில்லையா?    எனக்கு மட்டும்  இத்தனை கஷ்டம்  ஏன்?  ஒண்ணுமே பண்ணாதவன்  எல்லாம் ரொம்ப நல்லா  இருக்கான்.  அவனை    நன்றாக  வைக்கிறாய். எனக்கு மட்டும்  சோதனையா?

இதை  அத்தனையும்  கேட்டுக்கொண்டு  பிள்ளையார்  பேசாமல் தானே  இருக்கிறார்.  பாவம்  அவர்  என்ன பண்ணுவார்.  மூட்டை  மூட்டையாக  பாவம்  பண்ணி  ஜன்ம ஜன்மமாக  சேர்த்து வைத்துவிட்டு,  இப்போது  அதன்  பலன்  வருத்தும்போது பிள்ளையாரை  நொந்து, கடிந்து என்ன பயன்?  போனது   போகட்டும்.பாபம்  தீர,  முடிந்த அளவு  நல்லதே  நினைத்து, நல்லதே செய்து,  நாலு  பேருக்கு உதவி,  தான  தர்மம்  பண்ணி இனியாவது  கொஞ்சமாவது  பாபத்தை  குறைத்துக் கொள்ளவேண்டாமா?  ஒன்றுமே செய்யாமல்  இருந்து விட்டு, மேலும்  மேலும்  பாபத்தை  வளர்த்துக்கொண்டு நல்ல கதி  தேடுவது  எதற்கு  சமமாகும்?

சாதம்  வேண்டுமானால்  நல்ல  தண்ணீரில்,  நல்ல அரிசியை களைந்து போட்டு  அல்லவோ  அடுப்பில் கொதிக்க வைக்கவேண்டும்.  வெறும்  பானையை அடுப்பில்  வைத்தால்  சாதம் உலையிலிருந்து பொங்கியா வெளியே வரும்.?!    

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்?- வையத்து
"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்பானை பொங்குமோ மேல்? 
++++

70-75  வருஷங்களுக்கு எங்கள்  வகுப்பு  வாத்தியார் P. S .ராகவய்யருக்கு யாராவது  நெற்றிக்கு  இட்டுக்கொண்டு வராவிட்டால்  கெட்ட  கோபம்  வந்துவிடும்.  அப்படியே  ஒவ்வொரு நெற்றியாக கவனித்து ஒருவனை பிடித்து '' எழுந்திரு  இங்கே வா.  தூங்கிட்டு  நேரே  பள்ளிக்கூடம்  வரியா?
'' இல்லே  சார்.
'' குளிக்கலியா? 
 ''குளிச்சேன் சார்''
 ''பின்னே  ஏன்  மோட்டு  நெத்தியோட  வந்திருக்கே?
  ''அவசரத்திலே  மறந்துட்டேன்  சார்''
 '' எதாவது சாப்பிட்டியா இல்லியா?''
  ''ரெண்டு  இட்டிலி  சார்.  
  ''அதுக்கு  மட்டும்  மறக்கலியோ.  உருப்படா  கழுதை  போய் மூஞ்சி அலம்பிண்டு  வாசல்லே  மாடப்பிறையிலே  மரவையிலே  இருக்கே விபுதி,  அதையாவது ''ஓம்  நமசிவாய''  என்று  ரெண்டு தரம் சொல்லிட்டு  நெற்றியிலே இட்டுக்கோ. போய்  பள்ளிக்கூடத்தை  ரெண்டு  சுற்று ஓடி சுற்றிட்டு வா.''''
ராகவய்யர் செய்ததை  ஒளவைக்கிழவி  முன்பே  ''நீரில்லா  நெற்றிப்பாழ்'' என்றாள்.   எதெல்லாம்  தேவை  என்று  லிஸ்ட்  எடுக்கிறாள்.  நெற்றிக்கு ஏதாவது  விபூதியோ, திருமண்ணோ,  சந்தனமோ, குங்குமமோ  வேண்டும்.  சூடான மல்லிப்பூ  போன்ற  சாதத்தில்  பருப்பு போட்டவுடனே கமகம வென்று மனக்கும்  நெய் ஒரு   ஸ்பூனாவது வேண்டும். (அந்த காலத்தில்  வாழை இலையில்  தொன்னை செய்து  அதில் பெரிய  ரெண்டு கரண்டி  காய்ச்சின  நெய் விட்டுக்கொள்வார்கள். --  நோ  கொலஸ்ட்ரால் பயம்.....???.  சுட்ட   அப்பளத்தின் மேல்  ஒரு  ஸ்பூன் நிறைய   நெய்   விட்டுக்கொண்டு  என்  அப்பா  சாப்பிடுவதை  பார்த்திருக்கிறேன்.)  அதே போல்  ஒரு  ஊர் என்று  ஒன்று இருந்தால்  அதற்கு  திலகம்  போன்றது சின்னதாகவாவது ஒரு ஆறு.  ஒரு குடும்பத்தில்  ஒவ்வொருவருக்கும்  ஒரு  உடன் பிறப்பு ஆனந்தத்தை  கொடுக்க வல்லது.  உடன் பிறந்தே  கொல்லும்   வியாதியாக  சில  உடன் பிறப்புகள் இருப்பது  பூர்வ ஜன்ம  கர்மா வகையை  சேர்ந்தது.   

கடைசியாக கிழவி  அற்புதமான  ஒரு  சொல்  உதிர்க்கிறாள்.  அதாவது  எவ்வளவு தான்  ஒரு  வீடு  வசதிகளோடு  சகல  சம்பத்தோடு  சௌகர்யங்களோடு  வீடு   கட்டப்பட்டிருந்தாலும்   மனைக்கு  அழகு மனையாள் . மனைவி.  துணைவி இல்லை.  அவள்  இல்லத்துக்கு அரசி. அவள்  இல்லாத  ஒரு  வீடு  பாழடைந்ததாகும். 
நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...