Saturday, April 6, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்
கிருஷ்ணன் வரவு
கிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்தை நோக்கி புறப்படுமுன் என்ன நடந்தது. பாண்டவர்கள் தமது கருத்துகளை கிருஷ்ணனிடம் கூறினார்கள். யுதிஷ்டிரன் கடைசியாக கிருஷ்ணனிடம் கூறுவதை மற்ற பாண்டவர்கள் அமைதியாக கேட்டுக்கொண்டிருநதார்கள்.

''கிருஷ்ணா, திருதராஷ்டிரன் எங்களது பங்கை திருப்பிக் கொடுக்காமல், சமாதானமாக இருப்பதில் அக்கறை காட்டுவது புரிகிறது. துரியோதனனும் ஐந்து ஊர்களைக் கூட திருப்பிக் கொடுக்க மனமில்லாதவன். மேலும் மேலும் எங்கலுக்கு கெடுதி செய்வதில் மட்டுமே ஆர்வம் உள்ளவன். யுத்தத்தில் அவர்களைக் கொன்று ராஜ்ஜியம் பெறுவது கடைசி கட்டமாக இருக்கட்டும். அவர்களுக்கு நன்றாக அமைதியாக அவரவர் பங்கை அவரவர் பெற்று வாழ்வதற்கு இன்னும் என்ன முயற்சி செய்ய முடியும் சொல். நீயன்றோ எங்களுக்கு என்றும் பக்க துணையாக நின்று அருள் புரிபவன். நான் கொடுத்த வாக்கை முழுதுமாக நிறைவேற்றி விட்டேன்.'' என்றான் யுதிஷ்ட்ரன் . அவனது வார்த்தைகளில் அவன் மனம் தெளிவாக புரிந்து கொள்ளமுடிந்தது. எதுவுமே வேண்டாம். எத்தனையோ பேரின் ரத்தத்தில் குளிப்பாட்டிய ராஜ்ஜியம் தேவையா? ....

''யுதிஷ்டிரா, உங்களுக்காக நானே கௌரவர்கள் அரண்மனைக்கு செல்கிறேன். சமாதானமாக உங்கள் பங்கை பெற என்ன வழி என்று பார்க்கிறேன். முயல்கிறேன். உயிர்ச் சேதம் இன்றி உங்களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்கிறேன்.திருப்தியா?'' என்றான் கிருஷ்ணன்.

"கிருஷ்ணா, நீ போகவேண்டும் என்று நான் கேட்கவில்லை. எனக்கு அந்த துரியோதனன் உன் வார்த்தையை செவி மடுப்பான் என்ற நம்பிக்கை இல்லை. ஒருவேளை உன்னை அவமதிக்கலாம். அது எங்களது விருப்பமல்ல.'' என்றான் யுதிஷ்டிரன்.

"யுதிஷ்டிரா, உன் நல்ல எண்ணம் புரிகிறது. என்னை எதிர்க்க எவராலும் முடியாது. நானே நேரில் சென்று சமாதானம் பேசினேன் என்று உலகம் அறியவேண்டும். அதற்காகவாவது நான் செல்கிறேன். பழி வேண்டாமே. ஒரு வேளை நான் முயற்சித்திருந்தால் உனக்கு நியாயம் கிடைத்திருக்குமே என்று எவரும் குறை சொல்லாவண்ணம் நான் இதை செய்கிறேன். சஞ்சயன் சொன்னது அவர்கள் தரப்பு எண்ணத்தை விளக்கியது. நீயும் உன் தரப்பு விருப்பத்தை சொல்லிவிட்டாய்.

''பீமா, உன் கருத்து என்ன என்று சொல்? என்ற கிருஷ்ணனிடம் பீமன்

'' கிருஷ்ணா துரியோதனன் குணம் தான் தெரியுமே. அவனைக் கடிந்து பேசாதே. யுத்தம் வேண்டாம். அமைதியாகவே இருப்போம். ''

''என் காதுகளை நம்ப முடியவில்லையே. ஆத்திரம், கோபம், வெடிப்பு, இவை நிறைந்த பீமன் பேசுகிற பேச்சா இது. ஒருவேளை யுத்தம் என்று வந்தவுடன், நெஞ்சில் பயம் வந்துவிட்டதா? அப்படித்தான் வீரம் பேசி, தக்க நேரம் வந்ததும், நிறைய பேர் பின் வாங்குவது உண்டு. நீயும் அவர்களில் ஒருவன் என்று புரிகிறது' என்று சிரித்தான் கிருஷ்ணன்.

''கிருஷ்ணா, என்னை இழிவாகப் பேசாதே. துரியோதனன் சமாதானம் பேசப் போவதில்லை. யுத்தம் நிச்சயம் நடக்கும். நான் அதற்காக காத்திருக்கிறேன். அப்போது என்ன செய்வேன் என்று செயலில் காட்டுவேன். அண்ணன் யுதிஷ்டிரர் சமாதான பிரியர். அவரை திருப்திப் படுத்த நான் அவ்வாறு பேசினேன்'' என்றான் பீமன்.

அர்ஜுனா நீ என்ன சொல்கிறாய்?

''ஜனார்தனா, யுதிஷ்டிரன் ஏற்கனவே எல்லாம் சொல்லி விட்டார். உனது பேச்சிலிருந்து கூட சமாதானத்
துக்கு அவ்வளவு வாய்ப்பு இல்லை என்று அறிகிறேன். நீ என்ன முடிவு கொண்டுவந்தாலும் அது சரியாகவே இருக்கும். அதை ஏற்று நிறைவேற்றுவோம்''.

''உன் மனதில் உள்ளதைச் சொல் சகாதேவா''

"எது நடக்கவேண்டும் என்று உனக்கு தோன்றியதோ அதை நிறைவேற்றும் வகையில் நீ பேசப்போகிறாய். துரியோதனன் யுத்தத்தில் பாண்டவர்களை கொன்று இந்த பிரச்னையை ஒரே வழியாக தீர்க்க எண்ணுகிறான். யுத்தமே வரட்டும். திரௌபதிக்கு அவர்கள் செய்த தீச் செயலுக்கு யுத்தத்தில் பரிசு கிடைக்கப் போகிறது'' என்றான் சகாதேவன்

'கிருஷ்ணா, துரியோதனன், துச்சாதனன் கர்ணனால் நான் அவமானப் படுத்தப் பட்டேன். .உன்னருளால் மட்டுமே காப்பாற்றப் பட்டேன். அதற்கு தக்க கூலி அவர்கள் பெறவேண்டும். உனக்கு எது நியாயம் என்று தோன்றுகிறதோ அதை நிறைவேற்று ' என்றாள் பாஞ்சாலி. எனக்கு துச்சாதனன் கர்ணன் துரியோதனன் ஆகியோர் செய்த கொடுமைக்கு, என் கணவர்கள் பழி வாங்காமல் அமைதி சமாதானம் என்று வேண்டினார்கள் என்றால் என்னைப் பெற்ற என் வயதான தகப்பனும் என் சகோதரனும் எனக்காக பழி வாங்குவார்கள் என்பது நிச்சயம்.'' என்றாள் பாஞ்சாலி.

கிருஷ்ணன் அவளைத் தேற்றினான் ''பாஞ்சாலி, நீ அழுவதைப் போல் உனக்கு துரோகம் செய்தவர்களின் குடும்ப பெண்களும் விரைவில் அழப்போவதைப் பார்ப்பாய்''.

சாத்யகி தேரைப் பூட்டி தயாராய் நிற்க கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் புறப்பட்டான். சாரணர்கள் மூலம் கிருஷ்ணன் வருகிறான் என்ற செய்தி ஹஸ்தினாபுரத்திற்கு கிருஷ்ணன் வருமுன்பே சென்று விட்டது. சஞ்சயன், பீஷ்மர் . துரோணர், விதுரர் ஆகியோர் மகிழ்ந்தனர். திருதராஷ்டிரன்

'துரியோதனா கிருஷ்ணனை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் உடனே செய்' என்று கட்டளையிட்டான். பாண்டவர்கள் ஐந்து ஊர்களையாவது கேட்கிறார்கள். அதுவும் தர நீ விரும்பவில்லை என்றால் சமாதானத்திற்கு நீ தயாராக இல்லை என்று தான் பொருள் படும். எனவே தீர ஆலோசித்து சுமுகமாக இதை தீர்க்க வேண்டும்'' என்றான் திருதராஷ்டிரன்.

''அப்பா, கிருஷ்ணன் பாண்டவர்க்காக பாடுபடுபவன். அவர்களையே ஆதரிப்பவன். அவனுக்கு நான் பிரத்யேகமாக உபசாரம் விருந்து என்று வைத்தால் அவன் நாம் அவனைக்கண்டு, பாண்டவர்களைக் கண்டு பயப்படுகிறோம் என்று எடுத்துக் கொள்வான். கிருஷ்ணனுக்கு சாதாரண வரவேற்பே போதும். என்னைப் பொருத்தவரையில் யுத்தம் தான் முடிவு என்று தீர்மானித்தாகி விட்டது.'

இன்னும் கேட்கப்போனால், நான் கிருஷ்ணனை சிறை பிடிக்கப் போகிறேன். அவன் தான் பாண்டவர்களை தூண்டி விடுபவன். நாளை அவன் இங்கு வந்ததும் என்னால் சிறை பிடிக்கப் படுவான். அவனைச் சிறை பிடித்தால், பாண்டவர்கள், விருஷ்ணிகள் பாஞ்சாலர்கள் தன்னாலே வழிக்கு வருவார்கள்.

''கொலை பாதகா, நிறுத்து. கிருஷ்ணன் நமது விரோதி அல்ல. அவன் தூதுவன். நமது பாரம்பரியம் தூதனை அவமதிப்பதோ துன்புறுத்துவதோ அல்ல. புரிந்து கொள். இந்த கெடுமதியை விடு. ச்சே, இந்த குணம் கெட்ட, அதர்ம அக்கிரம பாபியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இனியும் ஒருகணம் நான் இங்கு இருக்க மாட்டேன்'' என்று எழுந்து போனார் பீஷ்மர்.''

பொழுது விடிந்தது. வ்ரிகஸ்தலத்தில் இரவு தங்கி இருந்த கிருஷ்ணன் புறப்பட்டான். கிருஷ்ணன் தேர் ஹஸ்தினாபுரத்தில் நுழையும்போது பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரன், துரியோதனனைத் தவிர அவன் சகோதரர்கள் அனைவரும் வழியில் எதிர்கொண்டு வரவேற்றனர். எண்ணற்ற குடி படைகள் கிருஷ்ணன் வரவு கேட்டு ஆவலாக அவனைத் தரிசிக்க, குழுமி வழியெல்லாம் நிறைந்திருந்தனர்.

கிருஷ்ணன் திருதராஷ்டிரன், பீஷ்மர் துரோணர் ஆகியோரை வணங்கி மண்டபத்தில் நுழைந்தான். மரியாதைகளை பெற்றுக்கொண்டு கிருஷ்ணன் வெளியே சென்று விதுரன் தங்கி இருந்த இடத்திற்கு சென்றான்.

''கிருஷ்ணா என் இல்லத்திற்கு நீ வருகை தந்தது எனக்கு மட்டற்ற மகிழிச்சி என்று பரவசமானார் விதுரர். மாலைவரை விதுரர் இல்லத்தில் இருந்து கிருஷ்ணன் அங்கிருந்து குந்தி தேவி தங்கி இருந்த இடத்திற்கு சென்றான்.

''என்னைக் கண்டதில் மகிழ்ச்சியா உனக்கு அத்தை ?''

'' அப்பா கிருஷ்ணா, நீ எங்களை வாழவைக்கும் தெய்வம். உன்னைக் கடந்ததில் மகிழ்ச்சி என்பதை விட தெய்வத்தை நேரில் கண்ட பரமானந்தம் என்று சொல்வதே பொருத்தம். நான் கஷ்டத்திலேயே வளர்ந்தவள். என் மக்களும் சொல்லொணாத் துன்பங்களை அடைந்து தவிக்கின்றனர். எங்களை அடைந்த அந்தப் பெண் திரௌபதியும் வேறெவரும் உலகில் அடையாத கொடுமைகளை சந்தித்தாள் . எங்களது திக்கற்ற நிலையில் நீ ஒருவனே அவ்வபோது எங்களை காப்பாற்றுபவன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்.'' என்றாள் குந்தி. ''ஏனோ இந்த திக்கற்ற நிலை எங்களுக்கு? நான் என்றுமே திருதராஷ்டிரன் பிள்ளைகளுக்கும் என் பிள்ளைகளுக்கும் எந்த வித்யாசமும் பாராட்டியதில்லை. அவர்கள் மேலும் மேலும் என் பிள்ளைகளை வாட்டி வதைக்காமல் நீ தான் பொறுப்பேற்று காக்க வேண்டும். என் புதல்வர்களை பதிமூன்று வருஷம் நான் அருகில் இருந்து தாயாக பராமரிக்கக் கூட முடியாதவளாக விதி என்னை சோதித்து விட்டது. கிருஷ்ணா நீ ஒருவனே அவர்களுக்கு உதவியவன், உதவுபவன். பகடைக்காய் ஆட்டத்தில் நாட்டை இழந்ததற்கோ, வனவாச துன்பம் அடைந்ததற்கோ நான் வருந்தவில்லை. திரௌபதியை மான பங்கப் படுத்திய துச்சாதனன், துரியோதனன், கர்ணன் ஆகியோர் தண்டிக்கப்
படவேண்டும்''. கண்ணீர் மல்க குந்தி பேச முடியாமல் திணறினாள்.

'அத்தை கவலையை விடு. தர்மம் நியாயம் என்றும் வெல்லும். உன் மக்கள் மிக்க மரியாதையுடன், பெருமையுடன் வெல்வார்கள். எதிரிகளை அழித்து இந்த நாட்டையே ஆள்வார்கள் . பாண்டவர்களோடு நானும் உன்னை வணங்கி உன் ஆசி கோருகிறேன். வாழ்த்து.''

குந்தியிடம் விடை பெற்று கிருஷ்ணன் துரியோதனன் அரண்மனை நோக்கி சென்றான்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...