Friday, April 12, 2019

aindham vedham


ஐந்தாம் வேதம்                                 
மஹா பாரதம் 

                                  இருதலைக் கொள்ளி 

எல்லோருக்கும் தெரிந்த விஷயமா என்பதை  விட கிருஷ்ணனுக்கு    தெரிந்த விஷயம்  கர்ணனை போரில் வெல்வது எளிதல்ல.  ஒரு நாள் வெகுநேரம்  கிருஷ்ணனும்  விதுரனும்  விதுரன் வீட்டில் பேசிய விஷயங்களில் அதிகமாக பேசப்பட்ட விஷயம் இது.   அப்போது கிருஷ்ணன் சொல்லிய யோசனைகள் விதுரனுக்கு  நினைவுக்கு  வந்தது.  கிருஷ்ணன்  சமாதான பேச்சு  முடிவடைந்தது என்பதை விட  முறிவடைந்தது   என்று  ஆகி  விட்ட தால்  , போர் நிச்சயம்,    அதில் பாண்டவர்கள், முக்கியமாக  அர்ஜுனன் கர்ணனை வெல்வது என்பது மிக கடினம் என்பது விதுரனுக்கும் புரிந்து விட்டது. குந்தியைக் கண்டு பேசினான் விதுரன்.

''குந்தி தேவி. யுத்தம் வருவது நிச்சயமாகி விட்டது.  பாண்டவர்கள் அசகாய சூரர்கள் என்றாலும் கர்ணன் அர்ஜுனனைக் கொல்வதே லட்சியமாக கொண்டவன். துரியோதனனுக்கு வாக்கு கொடுத்தவன்'' எனவே முடிவாக ஒன்றும் சொல்வதற்கில்லை.'' என்றான் விதுரன்.

குந்தி வெகுநேரம் யோசித்தாள் .  மனதில் தீர்மானித் தாள். நேராக கர்ணனிடம் சென்று அவன் யார், தனக்கும் அவனுக்கும் என்ன உறவு என்று வெளிப்படுத்த முடிவெ டுத்தாள் .

மறுநாள் விடியற்காலை கங்கைக் கரை சென்றாள். வேதமந்திர ஒலி கேட்டது. கிழக்கு நோக்கி இரு கை உயர்த்தி கர்ணன் சூரியனை வழிபட்டுக் கொண்டிருந்தான்.

அவன் பின்னால் கர்ணன் உடுத்திய மேலாடை நிழலில் அந்த காலை வெயில் மேலே படாதவாறு நின்றாள் குந்தி. வழிபாடு முடிந்து திரும்பிய கர்ணன் அதிசயித்தான்.

"அம்மா, நான் கர்ணன், ராதேயன், இந்த நேரத்தில் என்னைத் தேடி வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்று அவளை வணங்கினான் கர்ணன்.

'கர்ணா, நீ ராதேயன் இல்லை. கௌந்தெயன். குந்தியாகிய என் மகன். என் கன்னி வயதில் விளையாட்டாக மணமாகும் முன் சூரியன் அருளால் பிறந்தவன் நீ. சூரியனின் கவச குண்டலத்தோடு பிறந்தவன். அபவாதத்தை தவிர்க்க, குலத்திற்கும் அரசனுக்கும்  தாழ்ச்சி வராமல் தடுக்க வேறு வழி தெரியாமல் உன்னை ஆற்றில் கை விட்டேன். உனக்கு எந்த ஆபத்தும் வராமல் நீ எடுத்து வளர்க்கப் பட வேண்டினேன். அவ்வாறே சூரியன் அருளால் நடந்தது. உன் சகோதரர்களை அறியாமல் நீ திருதராஷ்டிரன் அரண்மனையில் வளர்ந்தவன். இனி நீ உன் சகோதரர்களோடு இணைந்து கொள். உன் சகோதரர்களுக்கு சேர வேண்டிய ராஜ்யத்தை துரியோதனனிடமிருந்து பெற்று நீயே முதல் பாண்டவனாக அரசு புரி. நீயும் அர்ஜுனனும் ராமன் கிருஷ்ணன் போல் சேர்ந்து உலகில் பெருமையோடு விளங்க வேண்டும்.

கர்ணன் சிலையாக நின்றான். அவன் காதில் சூரியனின் குரல் ஒலித்தது. ''கர்ணா, உன் தாய் குந்தி சொல்வது வாஸ்தவம். அவள் சொல்படியே கேள். '' ஆனால் கர்ணன் இம்மியும் தனது தீர்மானத்திலிருந்து மாறவில்லை.

''அம்மா, நீங்கள் எனக்கு செய்தது ஈவு இரக்கமில்லாத கொடுமை. ஒரு தாய் எப்படி நடக்கக் கூடாதோ அதற்கு உதாரணம் நீங்கள் செய்தது. நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. நான் க்ஷத்ரியன் என்று உலகிற்கு தெரியாததால் என் வாழ்வையே இழந்து, அவமானப் பட்டேன். அனாதை என்று அறியப்பட்டேன். எந்த எதிரியும் கூட இவ்வளவு கொடுமை எனக்கு செய்ததில்லை. ஒரு தாயாக ஒரு நன்மையையும் செய்யாத நீங்கள் இன்று என்னை பாண்டவர்களோடு சேர் என்கிறீர்களே. அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் எவரும் வெல்ல முடியாது என்று எல்லோரும் சொல்லும்போது நான் அங்கே வந்து அவனோடு சேர்ந்து கொண்டால், உயிருக்கு பயந்து பாண்டவர்களை சரணடைந்தேன் என்ற அபவாதம் உங்களால் எனக்கு வந்து சேரும். பாண்டவர்களுக்கு நான் சகோதரன் என்று இந்த கணம் வரை எவரும் அறியவில்லை. இப்போது அது தெரிந்தால் எவர் என்னை மதிப்பர்? என்னையே நம்பி எனக்கு எல்லா வசதிகள், உதவிகள் செய்த கௌரவர்களுக்கு இது தான் நான் செய்யும் பிரதி பலனா? என்னை உயிர் காக்கும் படகாக நம்பி யுத்தக் கடலில் இறங்கும் துரியோதனாதிகளுக்கு நான் துரோகம் செய்யலாமா?

என் தாய் என்று நீங்கள் வந்து நேரில் கேட்கும்போது நான் இல்லை என்று சொல்லமாட்டேன். போரில் அர்ஜுனனைத் தவிர மற்ற நான்கு சகோதரர்களை நான் கொல்ல மாட்டேன். பாண்டவர்கள் ஐவர் என்பது உலகில் நிலைக்கும். ஒன்று நான் அல்லது அர்ஜுனன் மட்டுமே மரணம் எய்துவோம். மற்ற நால்வரோடு எங்களில் ஒருவர் சேர்ந்து உங்கள் பிள்ளைகள் ஐவர் என்றும் இருப்பார்கள். என்றும் கவலை வேண்டாம். இது சத்தியம்.'' என்றான் கர்ணன்.

குந்தி கர்ணனை அனைத்துக் கொண்டாள் .'' கர்ணா நீ சொல்வதே நடந்தாலும் கௌரவர்கள் அனைவரும் அழிவது உறுதி. உன்னால் அதை தடுக்க முடியாது''. என் மகனான நீ  பாண்டவனாக உயிர் இழக்காமல் என்னோடு  இருக்கவேண்டும்.

''அம்மா  இதை நினைவு கொள் .  என்னையே பாண்டவர்களில் ஒருவனாக உன் மகனாக ஏற்றுக்கொண்டாலும் நான் விரும்பினாலும்  என்னோடு பாண்டவர்கள் ஐவர் ஆறாக இருக்க முடியாது.   ஆறிலும் சாவு  நூறிலும் சாவு நிச்சயம்?

என்ன சொல்கிறாய் கர்ணா?

ஆம் அம்மா.  பாண்டவர்களோடு  நான் சேர்ந்து விட்டால்  ஐவர் ஆறாகிவிடுவோம்.   துரியோதனன் மற்றும் கௌரவசேனை  நான் செய்த துரோகத்தை மறக்காது, மன்னிக்காது. என்னையே முதலில் குறிவைத்து   கொல்வார்கள்.  ஆறு பேராக இருந்தாலும் எனக்கு சாவு நிச்சயம்.   நான் பாண்டவர்களோடு சேராமல் கௌரவர்களோடு உன் மகன் அர்ஜுனனை கொன்றால் அப்போதும்  உனக்கு  என்னைச்சேர்த்தது  பாண்டவர்கள் ஐவர்  உண்டு. அல்லது  நூறு பேர்  கொண்ட  கௌரவர் தலைமையிலான சேனையில் நான் உயிரோடு இருந்தால் அர்ஜுனன் என்னை தேடிக்  கொல்வது  நிச்சயம். அதற்கு கிருஷ்ணன் தான் முதலில் உதவி  செய்வான். அப்படியெனில் எனக்கு  நூறில் இருந்த போதும் சாவு நிச்சயம்.  ஆகவே தான் சொன்னேன்  எனக்கு  ஆறிலும் சாவு  நூறிலும் சாவு  என்று.  புரிகிறதா?

குந்தி கதி கலங்கி நின்றாள்.  விதியை நொந்தாள்.   விடைபெற்றாள். கர்ணன் வெகுநேரம் தன் தாய் புள்ளியாக மறையும் வரை  கண் இமைக்காது பார்த்துக்கொண்டே இருந்தவன் கண்களில் நீர் மறைத்ததால் துடைத்துக் கொண்டு திரும்பினான்.   துரியோதனனுக்கு   தான் ஆற்றவேண்டிய  செஞ்சோ ற்று கடமை முன்னால் வந்து நின்றது.

 அந்த  நேரத்தில்  கிருஷ்ணன், உபப்லாவ்யத்தில் யுதிஷ்டிரனை சந்தித்து ஹஸ்தினாபுரத்தில் நடந்ததை விவரித்து கொண்டிருந்தான். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...