Tuesday, March 27, 2018

THIRUMOOLAR



திருமூலர் திருமந்திரம் J.K. SIVAN

'சக்கனி'' ஒரு ராஜ மார்க்கம்.

திருமூலர் மனதில் எப்போதும் ஒரு இடத்தில் இருப்பதால் அடிக்கடி தலையை காட்டுகிறார். அற்புதமான சில திருமந்திரங்களை அனுபவிப்போமா?

ஒன்றுஅவன் தானே;இரண்டுஅவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்;நான்கு உணர்ந் தான்; ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்;ஏழுஉம்பர்ச்
சென்றனன்;தான்இருந் தான் உணர்ந்து எட்டே.

கே. பி. சுந்தராம்பாளின் திருவிளையாடல் பாடலை நினைவிருக்கிறதா. ஒன்றானவன் ரெண்டானவன் மூன்றானவன் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போவார்கள் இன்னிசையோடு. திருமூலர் திருவிளையாடல் படம் பார்த்ததில்லை. இறைவன் ஒருவனே, சக்தி சிவன் என பிரிந்து ரெண்டாவது தான் பிரபஞ்ச இயக்கம். மூன்று என்பது இறைவன் பிரபஞ்சத்தில் உயிர்களைப் படைத்து அதை காத்து முடிவில் அழியவேண்டிய நேரத்தில் அழிப்பதை, மாறாத இந்த முத்தொழில் புரிவதை குறிக்கின்றார்.

நான்கு பற்றி என்ன சொன்னால் சரியாக இருக்கும் என்று யோசித்து அறம், பொருள், இன்பம், வீடு எனும், வடமொழியில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ சமாச்சாரங்களை சொல்கிறார். ஆஹா இப்படி உலகில் உலகில் ஒன்றானவன், இரண்டாக மாறி, மூன்று தொழில்களில் உயிர்களை ஆடவிட்டு, நான்கு விஷயங்களை அவர்கள் தேடி அலைய வைத்ததும் ஐந்தாவதாக அவனை ஆட்டிப்படைக்கும் ஐம்புலன்களையும் நினைவு கூறுகிறார்.

அப்புறம் செயலுக்கு காரணமான, ஆதார மந்திரமாக, பதமாக, வன்னமாக, புவனமாக, தத்துவமாக, கலையாக என்று ஆறாக காட்டுகிறார். இறைவன் எடுக்கும் வடிவங்கள் இவை. எங்கெங்கெல்லாம் இறைவன் ஈடுபாடு என்பதை சப்த லோகங்களாக பிரமலோகம், விஷ்ணு லோகம், ருத்ர லோகம், மஹேஸ்வர லோகம், , சதாசிவ ஆனந்த லோகம், சக்தி லோகம் , சிவலோகம் என்று காட்டுகிறார். இதெல்லாம் கடந்து மேலே உள்ளவன் எவனோ அவனை , அந்த சிவனை நீ தொட்டு விடு, எட்டிவிடு என்று எட்டாக முடிக்கிறார். எட்டு நாராயணனின் அஷ்டாக்ஷர மந்த்ரமும் தானே. திருமூலர் அசாத்தியமானவர். அவர் திருமந்திரங்கள் படிப்பதற்கு எளிதாக நான்கு அடிகளில் சந்தங்களோடு அமைந்தாலும், அப்பப்பா , உள்ளே ஆழமான கருத்துகள் கொண்டவை. இல்லாவிட்டால் ''திரு மந்திரம்'' என பெயர் பெறுமா?


உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே…

சீ சீ இந்த உடம்பு எதற்கும் உதவாதது. இது வெறும் உபத்திரவம், என்ற எண்ணம் என் மனதில் ஒரு காலத்தில் இருந்தது. வாஸ்தவத்தில் அது ஒரு அதிசயம் என்று என் மண்டைக்குள் ஏறவில்லை. அற்புதமான உன்னத பொருள்களை உறுப்புகளாக அந்த பகவான் படைத்திருக்கிறான். நம் கண்ணில் கையில் பட்டால் கண்டிப்பாக கெடுப்பவர்கள் என்று நம் கைக்கு எட்டாமல் உள்ளே ஜாக்கிரதையாய் ஒழித்து வைத்திருக்கிறான். அதை யாராவது கவனித்துக் கொள்ளவேண்டும், வேறு யார், நானே அதை பார்த்துக்கொள்கிறேன் என்று நம் அனைவரின் உடலுக்குள்ளும் தானே குடி கொண்டான். அவன் இருக்கும் இடம் கோவில் இல்லையா. உடம்பு அப்படியென்றால் கோயில் தானே. இது புரிந்துவிட்டால், நாம் நமது உடம்பை எப்படி பாதுகாக்க வேண்டும். போற்றவேண்டும், அதன் மேன்மையை உணர்ந்து இறைவனை வாயார புகழவேண்டும். நம் உடலை நாமே கெடுத்துக் கொண்டு, அதை வெட்டி எறியும் டாக்டருக்கு காசு கொடுத்து டாக்டர் சுப்பாமணி ஒரு நடமாடும் தெய்வம் என்று புகழ் வேறே.
இறைவன் சிரிக்கிறான் என்றால் பின்னே சிரிக்கமாட்டானா இந்த வேடிக்கையை பார்த்து.


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே…

உடம்பை நன்றாக புரிந்து கொண்டீர்களா. உடம்பு அழிந்தால் உள்ளே இருக்கும் ஆன்மா ஜீவன் மறைந்து விடும். கோவில் காலியானால் அங்கே தெய்வமேது? உடம்பை உணரும்போது தான் நான் அது இல்லை, அதற்கும் மேலான ஒருவன் கை வேலை என்பது புரியும், ஞானம் மனதில் குடிபுகுந்து இதயம் லேசாகும்.
இந்த கோவிலை நான் பரிசுத்தமாக வைத்துக்கொண்டால் அதன் உள்ளே இருக்கும் சிவனுக்கும் அளிக்கும் திரிகால பூஜை, நைவேத்தியம் எல்லாமே. அவன் அருள் உடல் ஆரோக்யம் மூலம் கிட்டும்.


நெறியைப் படைத்தான்;நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே!

பாதை என்றால் என்ன. வாழ்க்கையை வாழும் முறை. பாதையில் கைகாட்டி மரம், எவ்வளவு தூரம், எங்கே போகவேண்டும், எப்படி என்று திசை காட்டுவது போல், வாழ்க்கை முடியும் வரை வழிகாட்டும் நெறி முறைகள். கோட்பாடுகள். இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று சொல்லிக்கொடுப்பவை. குறுக்குப்பாதையில் போனால் தான் கருவேல முள், நெருஞ்சி முள் குத்தும். ''சக்கனி ராஜ மார்கமு'' இருக்கும்போது சந்து வழி எதற்கு.... நான் சொல்லவில்லை. திருமூலர் சொல்கிறார்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...