Friday, March 9, 2018

PARAMAHAMSAR

பார் போற்றும் பரமஹம்ஸர் - J.K. SIVAN சிஷ்யனைத்தேடி குருவே வருவார் இதில் ஒரு முக்கியமான விஷயம். நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்தித்த போது அவன் வாழ்வில் ஒருள் திருப்பம் நிகழ்வதை மெதுவாக உணர்ந்தான். அவன் கால்கள் அவனை அறியாமலேயே தக்ஷிணேஸ்வரத்துக்கு இழுத்துச் சென்றது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் தனக்குள் இனம் புரியாத ஒரு பெரிய புயல் உருவாவதை உணர்ந்தான். ராமகிருஷ்ணருக்கு அவ்வாறே தனக்குள் ஒரு புது உற்சாகம் வளர்வதை அனுபவித்தார். ஓஹோ என் எதிரே பரம்பொருளே நிற்கிறதே என்று நரேந்திரனும் அடடா இதென்ன அற்புதம் ப்ரம்மஞானமே மனிதவுருவில் வந்துவிட்டதே என்று ராமக்ரிஷ்ணரும் சந்தோஷப்பட்டார்களோ! முதலில் இவரெல்லாம் ஒரு குருவா என்ற எண்ணம் தான் அவனுள் எழுந்தது. அவரைச் சோதித்து பார்த்தான். அவரும் அதை அனுமதித்தார். ''நரேந்திரா, லேவா தேவிக்காரர்கள் ஒரு தங்கக் காசை கொடுத்தால், ''இது செல்லுமா என்று உறை த்து ப்பார்ப்பார்களே. அது போல் என்னை நன்றாக பரிசோதித்துவிடு'' காசு என்றாலே ஒரே ஓட்டம் ஓட்டுபவர் அவர் என்று நரேந்திரனுக்கு தெரியும். அதை ஒருநாள் சோதிக்க தோன்றியது. ராமகிருஷ்ணர் இல்லாதபோது அவர் படுக்கையில் துணிக்கடையில் ஒரு வெள்ளிக் காசை வைத்து வேடிக்கை பார்த்தான் நரேந்திரன். காத்திருந்தான். வந்தார். ''உஸ் அப்பாடா, என்று களைப்பாக படுக்கையில் அமர்ந்தார். அடுத்த கணமே ஏதோ கரு வேலம் முள் நறுக்கென்று உடலில் குத்தியது போல் ''ஆ'' வென்று கத்திக்கொண்டு குதித்து எழுந்தார். ''என்ன என்ன?'' திகைத்து கேட்டான் நரேந்திரன். ''ஏதோ கடித்தது போல், தேள் கொட்டியது போல் இருக்கிறதே. என் படுக்கையை நன்றாக எடுத்து உதறி என்ன என்று பார்'' ''ணங்'' என்று சப்தத்தோடு தரையில் உருண்டோடியது ஒரு வெள்ளிக்காசு. 'நரேந்திரன் காளி உபாசகனோ பக்தனோ அல்ல. ஒருநாள் ராமகிருஷ்ணர் கேட்டார் : '' நரேந்திரா, காளி மாதாவில் நம்பாதவன் இங்கு எதற்கு வருகிறாய்? ''உங்களைப் பார்க்கவே மட்டும். உங்களை எனக்கு பிடிக்கிறது.'' நாளாக நாளாக ராமக்ரிஷ்ணரோடு ஒட்டிக்கொண்டான் நரேந்திரன். அவரே குரு. 1886ல் அவர் உயிர் பிரியும் வரை அவன் அவரைப் பிரியவே இல்லை. கடைசி ஐந்து வருஷங்கள் அவரது ஆத்ம போதனை முச்சூடும் அவன் மனதில் நிறைந்துவிட்டது. ''நரேந்திரா, நீ ஒரு தியான சித்தன். உனக்கு தியானம் தெரிந்தவரை சொல்லிக்கொடுக்கிறேன்'' என்பார் குரு. ''குருநாதா, எனக்கு நிர்விகல்ப சமாதி அனுபவம் வேண்டும் '' ''ஆஹா இவன் லோக சம்ரக்ஷக புருஷன். இவனால் இந்து தர்ம கலாச்சாரம் உலகெங்கும் பெருக்கப்போகிறது. இவன் ஒரு ஞானப் புயல். இவனை சமாதியில் ஆழ்த்தி தனியாக எங்கோ ஒரு மூலையில் உட்காரவைக்க கூடாது'' என்று அவருள் தோன்றியது. இவன் நாராயணனின் அம்சம் என அனுமானித்த குரு ஒருநாள் ''நரேந்திரா, காளிமாதா என்ன சொல்கிறாள் தெரியுமா என்னிடம். உன்னில் நாராயணனை நான் பார்க்கிறேனாம். அப்படி இல்லாதபோது ஒரு கணம் கூட உன்னை நான் திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். நீ ஆயிரம் இதழ் தாமரை. நிறைகுடம். செங்கண்மால். பெரிய கடல் நீ.'' மற்றவர்களிடம் ராமகிருஷ்ணர் '' நரேந்திரனை சாதாரணமாக எடை போடாதீர்கள். அவன் ஒரு உயர பறக்கும் பெரும் புறா'' அதற்குப் பிறகு பல வாரங்கள் நரேந்திரன் தக்ஷிணேஸ்வரம் போகவில்லை. ஏன் அவனைக் காணோம்?'' குருவே ஒருமுறை அவன் பங்கேற்கும் ப்ரம்ம சமாஜ கூட்டங்களுக்கு சென்றார். வடக்கு கல்கத்தாவில் அவன் வீடு தேடி சென்றார். அவனது தியானப் பாடல்களை கேட்டு அதிசயித்தார். என்ன குரல் !! அவன் வசிக்கும் ராம்தானு சந்து வீட்டுக்கு ராம்லால் என்பவரோடு சென்றார். வெகுநாள் காணாத குருவை வீட்டில் கண்டதில் நரேந்திரன் உணர்ச்சி வசப்பட்டான். அவரை விழுந்து வணங்கினான். முகம் மலர்ந்தது. பெருமிதம். தான் கொண்டுவந்த இனிப்பு ''சந்தேஷ் ''அவரே அவன் வாயில் ஊட்டினார். ''நரேந்திரா ஒரு பாட்டு பாடுப்பா'' அற்புதமான மாலைப் பொழுது, ஜன்னல் கதவு வழியாக வேப்ப மர காற்று வாசனையாக உள்ளே பரவியது. கீழே தரையில் ஒரு விளக்கேற்றி தான் கொண்டுவந்த காளி படம் வைத்தார் குரு. தன்னிடமிருந்த தம்புராவை வைத்து மீட்டி கண் மூடி நரேந்திரன் பாடினான் ''ஜகோ மா குல குண்டலினி ''..... நாதவெள்ளம் எங்கும் நிரம்ப, ராமகிருஷ்ணர் அதில் தன்னை இழந்து மயங்கி, மரக்கட்டையாகி பாவ சமாதி (ஸவிகல்ப சமாதி)யில் ஆழ்ந்தார். நேரம் போனதே தெரியவில்லை. எப்போது நாத வெள்ளம் நின்றது? ''முடிந்தபோதெல்லாம் என்னிடம் வா'' குருவின் வார்த்தை காதில் ஒலித்தது. அவனை மீண்டும் தக்ஷிணேஸ்வரம் வரவழைத்தது. தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...