Thursday, March 22, 2018

THAYUMANAVAR



தாயுமானவ ஸ்வாமிகள் J.K. SIVAN தாயுமானவர் (1705–1744), சுமார் முன்னூறு வருஷங்களுக்கு முன்னாலே நம்ம பூமியில் இருந்த ஒரு மஹான். வேதாந்தி. சைவ சமய சித்தாந்த பாடல்கள் நிறைய எளிமையாக புரியும்படியாக எழுதியவர். 1454 பாடல்கள். மனசை உருக்கும் பக்தி கலந்த ஆன்மீக தேடல் அவர் பாட்டில் நிறைய இருக்கிறது. மௌனத்தின் சப்தம் எங்கும் எதிரொலிக்க அதன் மஹிமையை பரப்பிய மஹான். திருச்சி இருக்கிறவரை மலைக்கோட்டை இருக்கும், மலைக்கோட்டை என்றாலே தாயுமான சுவாமி கோயில், உச்சிப்பிள்ளையார் நினைவில் இருப்பார். திருச்சி ராஜாவுக்கு மந்திரியாக இருந்தவர். தமிழ் சமஸ்க்ரிதம் தெரியும். மனசு சிவன் மேல் போனதும் ராஜாங்க வேலையையும் உதறி விட்டார். அவருடைய அற்புத மான ஒரு வாக்கியம் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது: '' பார்க்குமிட மெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூர்ணானந்தமே '' எங்கும் எதிலும் இறைவனைக் காண்பது. இதை மனசில் அலசினால் ஒரு புத்தகமே எழுதலாம் போல் தோன்றுகிறது. தாயுமானவர் எப்போ பிறந்தார் என்ன பெயர் என்றெல்லாம் விவரம் சரியாக இல்லை. அருளானந்த சிவாச்சாரியார் என்ற ஒரு மௌன ஸ்வாமிகளை அணுகி பல முறை ''என்னை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு அருள் புரியுங்கள்'' என்று வேண்டினார். தொந்தரவு தாங்கமுடியாமல் போய் விட்டது குருவிற்கு. ஏற இறங்க ஒரு தடவை தாயுமானவரை பார்த்தார். பிறகு ஜாடையாக ''சும்மா இரு'' என்கிறார். அதுவே காட்டுத்தீயாக உபதேசமாக போய்விட்டது சீடருக்கு. பகவான் ரமண ரிஷிக்கு மிகவும் பிடித்த சொல் ''பேசாமல் சும்மா இரு'' வீட்டுக்கு போனார். கொஞ்சநாளில் கல்யாணமாயிற்று. பிள்ளை ஒருவன் பிறந்தான். மனைவி இறந்தாள் . உள்ளே துறவறம் இழுத்துக்கொண்டோ, அழைத்துக்கொண்டோ இருந்தது. மீண்டும் அருளானந்த சிவாச்சார்யரை போய் தரிசனம் செய்தனர். சந்நியாசம் பெற்று சீடரானார். உலகத்திலே ரொம்பவும் கடினமான, முடியாத செயல் ஒன்று உண்டு என்றால் அது ''சும்மா'' இருப்பது. ஒரு ஐந்து நிமிஷம் நீங்கள் சும்மா இருப்பீர்களா. உடம்பு சும்மா இருந்தாலும் உள்ளே மெஷின் ஓடிக்கொண்டே இருக்குமே அதை சொல்கிறேன். ஒரு ஐந்து நிமிஷம் அதை ஓடாமல் நிறுத்தி வைக்க முடியுமா. முடிந்தால் நான் உங்கள் சிஷ்யன் மௌன குருவே. தனது குருவை மௌன குரு என்று அழைக்கிறார் தாயுமானவர் : சும்மா இரு என்று போதித்ததை பற்றி எவ்வளவு அழகாக எழுதுகிறார் பாருங்கள்: ஐந்துவகை யாகின்ற பூதமுதல் நாதமும் அடங்கவெளி யாகவெளிசெய் தறியாமை யறிவாதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்றநிலையில் சிந்தையற நில்லென்று சும்மா இருத்திமேல் சின்மயா னந்தவெள்ளந் தேக்கித் திளைத்துநான் அதுவா யிருக்கநீ செய்சித்ர மிகநன்றுகாண் எந்தைவட வாற்பரம குருவாழ்க வாழஅரு ளியநந்தி மரபுவாழ்க என்றடியர் மனமகிழ வேதாக மத்துணி பிரண்டில்லை யொன்றென்னவே வந்தகுரு வேவீறு சிவஞான சித்திநெறி மௌனோப தேசகுருவே மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் மரபில்வரு மௌன குருவே. இனி கொஞ்சம் கொஞ்சமாக முடியும்போதெல்லாம் தாயுமானவர் உபதேசம் பெறலாம். அவரைப் பற்றியும் நிறைய தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...