Saturday, March 3, 2018

MANICKAVACHAGAR 7

மணிவாசகர் பற்றி சில வாசகங்கள் - 7  J.K. SIVAN
                      பேசாமடந்தை பேசினாள்

சோழ மன்னன்  ஏற்பாடு செய்த  சிதம்பர  ஆலய  சபாமண்டபத்தில்  எள் விழுந்தால் எண்ணை ஆகியிருக்கும். அவ்வளவு கூட்டம். மிகப்பிரபலமான கற்றறிந்த புத்த பிக்ஷு ஈழத்திலிருந்து வாதாட வந்திருக்கிறார். அவரை எதிர்த்து சைவ மதத்தைப் பற்றி எடுத்துச்சொல்ல  வாதில் வெல்ல பாண்டியனின் மந்திரியாக இருந்த வாதவூரர். அவர் தோற்றால் இந்த சிதம்பரம் ஒரு புத்த விஹாரமாகப்போகிறது. நடராஜா, நீ எங்களுக்கு வேண்டுமே.
''என் நடராஜனை எதிர்த்து பேசும் இவர்கள் முகத்தைக்கூட நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு திரையை இடையில் போடுங்கள். அவர்கள் பேசுவது எனக்கு கேட்டாலே போதும்'' என்று கண்டிஷன் போட்டார் மணிவாசகர்.
பௌத்த பிக்ஷு எடுத்துரைத்தவற்றை நிராகரித்து சைவ ஆச்சார ஆகம நூல்கள் என்ன சொல்கிறது என்பதை புட்டு புட்டு  வைத்தார் மணிவாசகர்.  அவரது சைவ கோட்பாடுகளின்  மஹத்வத்தை, தத்துவத்தை,  புத்த பிக்ஷுவால் எதிர்த்து தங்களது வாதத்தை நிரூபிக்க முடியவில்லை. சொன்னதையே  திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு தான் சமாளித்தார்கள். சபையோர் கவனம் முழுதும் முற்றிலுமாக  மணிவாசகாரின் சொல் திறமை மிளிர்ந்தது.

மணிவாசகர் ''நடராஜா, ஈஸா, நீயே எனக்கு மேலும் சக்தியை, திறனைக்கொடு. வேரோடு இந்த வினையை அழிக்கவேண்டும்.  நடராஜனின் அருளால் வாக்தேவியான சரஸ்வதி  பௌத்தர்களை பேசமுடியாமல் செய்டுவிடவே, தடுமாறினார்கள் . திக்குமுக்காடினார்கள்.  பிக்ஷு தங்களது தோல்வியைசபையோர்கள் முன்னே ஒப்புக்கொண்டார்.

சோழன் மணிவாசகரின் அருமை பெருமையை அறிந்துகொண்டான். விருந்தினனாக வந்த ஈழ அரசனும் மணிவாசகரின் அறிவாற்றலில் அடிமையானான் .

''ஐயா மணிவாசகரே , உங்கள் பக்தி, ஞானத்தால்  எனது ஆசான், குருவான, புத்த பிக்ஷுவையும் அவருடன் வந்திருந்த பண்டிதர்களையும்  வாதத்தில் வென்று ஊமையாக்கினீர்கள். எனக்கு ஒரு குறை.  பேசியவர்களை பேசமுடியாமல் ஊமையாக்கினீர்களே. ஊமையாகவே பிறந்த என் மகளை பேசவைத்து அருள்வீர்களா?  என்று கண்ணீர் மல்க ஈழ அரசன் கெஞ்சினான். அதற்கு பிரதியுபகாரமாக நானும், என் ஈழநாட்டு மக்கள் அனைவரும் சைவமதத்தை பின்பற்றி சிவனின் பக்தர்களாவோம்.''  என்றான் அந்த அரசன்.
''சிதம்பரேசா, சர்வேசா, இன்னுமொரு திருவிளையாடல் நிகழ்த்து. நாங்கள் கண்டு களிக்கிறோம். பேசாமடந்தையை பேசும் கிளியாக்கு''  என்று  மணிவாசகர் நடராஜனை வேண்டினார்.

''ஈழமன்னா  உன் பெண்ணை இங்கே அழைத்து வரச்சொல்''
அந்த பெண் நாணிக் கோணி அச்சத்தோடு தலைகுனிந்து மணிவாசகரை வணங்கி எதிரே அமர்ந்தது.
''பெண்ணே, நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் சொல்கிறாயா?''
''............'' 
ஊமைப் பெண் எப்படி பதில் சொல்லும்.  மிரள மிரள அவரைப் பார்த்து விழித்தது.
''என் கேள்விகளுக்கு அல்ல, உங்கள் ஆச்சார்யர், புத்தபிக்ஷு கேள்விகள் கேட்கட்டும் அதற்கே பதில் சொல் ''
புத்த பிக்ஷு தன்னைக் கேட்ட கேள்விகளை மீண்டும் அந்த பெண்ணிடம் கேட்டார் மணிவாசகர். மணிவாசகர் சொன்ன பதிலையே அந்த ஊமைப்பெண் கணீரென்ற குரலில் உரைத்தது. சபை ஆஹா  ஓஹோ  என்று கரக்கம்பமும் சிரக்கம்பமும் (கைதட்டி, தலை அசைத்து)  வியந்தது.  ஈழ அரசன்  தனது ஊமைப்பெண் பேசியதில் ஆகாசத்தில் பறந்தான்.

ஒட்டு மொத்தமாக  ஈழ அரசனும் அனைவரும் சைவ மதம் தழுவினார்கள். சைவ சித்தாந்தம், கோட்பாடுகளை மனமார ஏற்றுக் கொண்டார்கள். சிவ பக்தர்கள் ஆனார்கள்.  ஈழத்தில் தமிழும் சைவமும் காலூன்ற மணிவாசகரின் பங்கும் தில்லை நடராஜன் அருளும் அதிகம்.
நடராஜனுக்கு ஒரு ஆசை.  அது என்ன?
தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...