Wednesday, March 28, 2018

aindham vedham



ஐந்தாம் வேதம்   -   

      20  இனி  காங்கேயன்  '' பீஷ்மன்''

கங்கையைப்  பிரிந்த சோகம்  சந்தனுவை வாட்டியது.   அவன் மனதில்  அந்த பெண்ணை இழந்த  வருத்தம்  மறைய வில்லை. வருஷங்கள் உருண்டோட,  ஒரு நாள்  சந்தனு  வழக்கம்போல  கங்கைக்கரை சென்றான் அங்கே  சுகந்த மணம் வீச, ஒரு பெண்  தோன்றினாள் . அவள் ஒரு  மீன்  பிடிக்கும்  வம்சத்தின்  தலைவனின் மகள். அவள் தந்தை கங்கையை கடக்க  ஓடம் ஒட்டி செல்பவன். அவனுக்கு அவளும் உதவும் ஒரு  ஓடக்காரி. 

சந்தனு அந்த பெண்ணின் அழகில் மயங்கி  அவளை அடைய முடிவெடுத்து, அவள்  தகப்பனிடம் சென்று அவளை மனைவியாக்கிக் கொள்ள  அனுமதி கேட்கிறான் சந்தனு.   அரசனே வந்து தனது பெண்ணை யாசிக்க  பெருமிதமுற்ற அந்த தகப்பன் கொஞ்சம் யோசிக்கிறான். பிறகு  ஒரு நிபந்தனை இடுகிறான்.

 ''மகாராஜா, என் மகள் உங்களை மணந்து ஒரு ராணியாவதில் முதலில் மகிழ்பவன் நானே.  ஆனால் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளே  இளவரசர்களாகவும் நாட்டை  உனக்குப் பின்  ஆளவும் அதிகாரம் பெற்றவர்களாக வேண்டும். இது ஒரு தகப்பனின் நியாயமான கோரிக்கை தானே? ''  
பதில் பேசாமல்  சந்தனு திரும்புகிறான்.

கவலையோடு உள்ள தனது தந்தையின் முக வாட்டம்,  அவனது சோர்ந்த, தெம்பில்லாத,  எதிலும் ஈடுபாடில்லாத  நடவடிக்கை  அவன் மகன் தேவவிரதன் எனும் காங்கேயனுக்கு  சந்தேகத்தை எழுப்ப  அவன்  தனது  தந்தையை  நேரடியாகவே கேட்டுவிடுகிறான்.

''அப்பா  ஏதோ  கவலை உங்களை வாட்டுவது போல் சிந்தனையாகவே  இருக்கிறீர்களே. என்னிடம் மறக்காமல் விஷயம் சொல்லுங்கள்''

''மகனே, வீராதி வீர  காங்கேயா,  ஒரு  மீன் பிடிக்கும்  பெண்ணின் அழகில் என் மனதைப் பறிகொடுத்தேன், அவளை மணந்துகொள்ள அவள் தந்தையிடம் சென்று  அனுமதி  கேட்டேன்.  அவன் என்னை நிலை குலைய செய்த்துவிட்டான்''

''ஏன் நாடாளும் அரசர் உங்கள் விருப்பதத்தை தடை செய்ய அவனுக்கு அவ்வள தைரியமா? என கோபம் கொண்டான் காங்கேயன். 

''காங்கேயா,  அவன் கேட்ட நாராசமாக கோரிக்கை  என்ன தெரியுமா?  அவளுக்குப் பிறக்கும் மகனோ/மகன்களோ, மகளோ தான் இந்த நாட்டின் அடுத்த இளவரசுப்  பட்டம் பெறவேண்டும். இந்த  நாட்டை ஆளும் உரிமை பெறவேண்டும். வேறு யாரும் கூடாது ''என்று சொல்லி விட்டான். மனம் ஒடிந்தேன். நடை பிணமானேன். என் ஆசை நிராசையாக போகட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்'' என்றான் சந்தனு.

தேவவ்ரதன் மௌனமானான்.  சட்டென்று எழுந்தான். அவனுள்  ஏதோ ஒரு முடிவு உதயமானது.

நேராக  அந்த  மீன்பிடிக்கும் வம்ச தலைவனிடம் சென்றான். 

'இளவரசே  வாருங்கள் என உபசரித்தான் சத்யவதியின் தந்தை.  ஆம் அந்த பெண்ணின் பெயர் அது தான். 

'ஐயா நடந்ததை  அறிந்தேன்.  என்  தந்தையிடம்  நீங்கள் கேட்ட  வாக்கு  அப்படியே  நிறைவேறும்.  தங்கள் மகளுக்கும்  சந்தனு மகாராஜாவுக்கும் பிறக்கும் மகனே அடுத்த  எங்கள் அரசன். அவனுக்கு  யாதொரு போட்டியும் கிடையாது.  இது  நான் கொடுக்கும் உறுதி மொழி.''

அசந்து போனான்  செம்படவ  தலைவன்.  ஆனால் அவன் மன உறுத்தல்  தீரவில்லை. பெண்ணைப் பற்றிய கவலை இருந்தது.

''அது இருக்கட்டும்  இளவரசே,  மகா வீரனான   நீங்கள் நல்லவர்.  சொன்ன  வாக்கை  நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. நன்றாகவே தெரியும்.  ஆனால்  உங்களுக்குப் பின்னால் வரும் உங்கள்  மகன், மகள் மற்றுமொரு தலைமுறை, குறுக்கிட்டால் என்  மகள்  மூலம்  பிறக்கும்  மக்களின் கதி என்னாவது?

''ஐயா நியாயமான முறையில் சிந்திக்கிறீர்கள். எதிர் கால கவலை.   அதைப்  பற்றி  ஒரு சந்தேகமும் வேண்டாம்.  உங்கள்  கவலை எல்லாம்  எனது மகன், அவனது சந்ததி  என்று  தானே?.  எனக்கு மகனே கிடையாது, எனக்கு சந்ததியும் இல்லை போதுமா?  நான் ஒரு பெண்ணையும்  தொடக்கூட மாட்டேன், திருமணமும் அதனால் கிடையாது. சந்ததி என்ற பேச்சுக்கே  இடமில்லை. உங்கள் மகள் மூலம்  பிறக்கும் குழந்தைகளுக்கு நானே  பக்க  பலமாக  துணையாக இருப்பேன்.  இப்போது திருப்தியா?''

 செம்படவ தலைவனும்  அந்தப்பெண்  சத்யவதியும்  ஆச்சார்யப்பட்டார்கள். இப்படியும் ஒரு வாலிபனா !  மிக்க மகிழ்ச்சி கொண்டார்கள்.  தேவர்களும் மகிழ்ந்தார்கள்.  ''பீஷ்மன்  பீஷ்மன்  '' என்று  வாழ்த்தினார்கள்.  ஒரு  கடும் விரதத்தை மேற்கொண்டவன் என்று அர்த்தம். பீஷ்மன் எனும்  அழியாத பேர் பெற்றான் தேவவ்ரதன். இனி அவன் பீஷ்மன். பாரதக்கதையில் மிக முக்யமான பாத்ரம்.

''தாயே,  என்  தேரில்  ஏறுங்கள்.'' என்றான்  பீஷ்மன். 

 சத்யவதி அவனோடு தேரில் அரண்மனை  அடைந்தாள் . சந்தனு நடந்ததை   அறிந்து  ஆச்சரியமும்  அதிர்ச்சியும்  ஒரு சேர  திடுக்கிட்டான். அவன் மனம்  சொல்லொணா வேதனையில் ஒரு புறம். அதே கணம் இப்படி ஒரு மகனைப் பெற்ற  பெருமிதம். ஆனந்தம்.  நன்றி உணர்ச்சி. 

 ''பீஷ்மா,  உன்னை  மரணம் ஒரு போதும் அணுகாது.  நீ  விரும்பிய போது மட்டுமே உன்னை அணுகும்'' என  வரமளித்தான் தந்தை சந்தனு.  இந்த வரத்தால் நாம் பெற்ற  மிகப் பெரிய வரம் நினைவிருக்கிறதா.  தனது மரணத்தை  எதிர் நோக்கி பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்தபோது உதயமான  ''விஷ்ணு சஹஸ்ர நாமம் ''. 

சத்யவதி ராணியானாள்.

 மஹா பாரதம் நீளும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...