Friday, March 2, 2018

MANICKA VACHAGAR 6

மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள் 6 - J.K. SIVAN

சிதம்பரத்தில் ஒரு விவாதம்

என் தந்தையே ஈசனே, என் மேல் இவ்வளவு நேசமா. அதற்கு நான் செய்த கைம்மாறு உனக்கு என்னால் முடிந்தவரை நான் அளித்த துயரமா. இந்த பாபத்தை எங்கே சென்று தொலைப்பேன் என் தெய்வமே? மனமுறுகிய மணிவாசகர் சிதம்பரம் நோக்கி நடந்தார். வழியெல்லாம் பல ஊர்கள். எங்கெல்லாம் சிவன் ஆலயம் உண்டோ அங்கெல்லாம் சென்று கண்ணார பெருமானை நேரில் காண துடித்தார். காணாமல் அங்கிருந்து நகரவில்லை. சிவன் மனமுவந்து காட்சி அளித்தார். மணிவாசகர் மனமகிழ்ந்து தரிசித்தார். பதிகங்கள் பாடினார்.

உத்தரகோசமங்கையில் மணிவாசகர் பரமேஸ்வரனை காணாமல் நெகிழ்ந்து கண்ணீர் உகுத்தார். ஒருவாறு சிதம்பரம் அடைந்தார். ஆஹா இங்கே தானே எண்ணற்ற சிவனடியார் நடந்து வந்து சபேசனைக் கண்ட இடம் என தரையில் அவ்வடியார்கள் திருவடி பட்ட மண்ணில் உருண்டார். முத்தமிட்டார். ஆலயத்தை ஒட்டிய நந்தவனத்தில் அமர்ந்தார். இங்கே தான் நமக்கு அவர் அளித்த மா பெரும் பரிசான திருவாசகம் உருவாகியது.

தில்லை வாழ் மக்கள் திருவாசகத்தை மணிவாசர் இயற்றி பாடியதைக்கேட்டு ஆனந்தித்தனர்.

பொன்னம்பலவா பல்லாண்டு வாழ்க என்று ஒரு ஈழத்து துறவி அடிக்கடி சொல்வார். அவர் சொல்வது ஈழ அரசனுக்கு புரியவில்லை. அவன் புத்த மதத்தினன் .துறவியை வரவழைத்தான். அரசன் முன்னே அமர்ந்த துறவி வழக்கம்போல் பொன்னம்பலவா பல்லாண்டு வாழ்க என்கிறார்.

''இதற்கென்ன அத்தம் என்று சொல்லுங்கள்?'' என வினவினான் அரசன்.

''அரசே, சோழநாட்டில் மிக புனிதமான இடம் பொற்சபை. அந்த ஊர் சிதம்பரம். அருவமான சிவன் நடராஜனாக, சபாபதியாக காலைத்தூக்கி நின்றாடுகிறான். உலகம் அவனது ஆனந்த நடனத்தில் உய்கிறது. உயிர்கள் வாழ்கிறது. மாயையிலிருந்து ஜீவனை ரக்ஷிப்பதே அந்த நடராஜனின் நடனம் தான். அங்கே சிவஞான கங்கை என்று புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடியதால் தான் மனுவின் மகன் ஹிரண்யவர்மன் தனது சரும தொழு நோய் நீங்கப் பெற்றான். இந்த புனித தடாகத்தில் நீராடி நடேசனை வழிபட்டோர் சகல பாபங்களும் நீங்கப் பெறுவார்கள். பிறவிப்பிணியிலிருந்து விடுபடுவார்கள்.'' என்கிறார் துறவி.

அருகிலே அரசனின் குரு, ஒரு புத்த பிக்ஷு இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் இடைமறித்து ''அரசே, இது பேத்தல். நமது புத்தரை அன்றி வேறு ஒரு பகவான் இருக்கமுடியுமா. இவர் ஏதோ கனவு கண்டு பேசுகிறார். நானே நேராக சிதம்பரம் செல்கிறேன். அங்கிருக்கும் சிவனடியார்களை, சைவ பண்டிதர்களை வாதத்தில் வென்று அவர்கள் எல்லோரையுமே பௌத்தர்களாக மாற்றிவிடுகிறேன். சிதம்பர ஆலயத்தை பௌத்த விஹாரமாக மாற்றிவிடுகிறேன்'' என்கிறார் வீராவேசமாக.

நேராக புத்த பிக்ஷு தில்லை செல்கிறார். ஈழநாட்டு அரசனும் உடன் செல்கிறான். அவனுக்கு ஒரு ஊமைப் பெண். அவளும் கூடவே போகிறாள். புத்த பிக்ஷு சைவர்களோடு வாதிட வருகிறார் என்னும் செயதி சோழ ராஜாவுக்கு சென்று அவன் சிதம்பரத்தில் சைவ பௌத்த மத விவாதம் நடைபெற ஏற்பாடு செயகிறான்.

முக்கியமான இந்த மத விவாதத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது. அதற்கு முந்தைய நாள் சைவ தீக்ஷிதர்களும் பண்டிதர்களும் கல்விமான்களும் நடராஜா எங்களுக்கு இந்த விவாதத்தில் பூரண வெற்றி கிட்டி புத்த சமயம் இங்கே பரவாமல் தடுக்க நீ அருளவேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

அவர்கள் தலைவன் கனவில் அன்று தில்லை சபேசன் தோன்றி ''கையில் வெண்ணை இருக்க நெய்க்கு என்ன பஞ்சம் . வாதவூரர் இருக்கிறாரே. அவரையல்லவா நீங்கள் அழைத்து பௌத்தர்களோடு விவாதம் செய்விக்க வேண்டும். ''என்கிறான் உடனே சிதம்பர தீட்சிதர்கள் பண்டிதர்கள் வாதவூரரை நேரில் கண்டு விஷயம் சொல்ல ''ஆஹா என் பரமேஸ்வரன் அவ்வாறு ஆணையிட்டால் அதை நான் சிரமேற்கொண்டு ஏற்று உடனே சிதம்பரம் வருகிறேனே ''என்று வந்துவிட்டார்.
மறுநாள் சூரியன் உதயமானான். விடியற்காலையிலேயே மணிவாசகர் நடராஜனை தரிசித்தார். விவாத மேடைக்கு வந்தார்.

தொடரும்


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...