Monday, March 26, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் - J.K. SIVAN

19 தேவ வ்ரதன் வந்தான்

தூங்கிக் கொண்டே குழந்தைகள் அம்மாவிடம் பால் குடிப்பதைப்போல யோகிகள், ஞானிகள், முனிகள், உணவை ருசியோ அளவோ, பார்ப்பதில்லை. உடலில் உயிர் உள்ளவரை அதைப் பாதுக்காக்க வேண்டிய அவசியத்துக்காக தேவையான உணவை மருந்து போல் உபயோகிப்பார்கள்.

மஹா வீர புருஷர்கள் எதையும் தேடி ஓடுவதில்லை, வெற்றி அவர்களை நாடி வரும் காரணம் அவர்கள் வீரத்தில் இழையோடும் தியாகம்.

மஹா பாரத கதைகள் எத்தனை எத்தனையோ நிறைய உண்மைகளை விளக்கும்.

மஹாராஜா யயாதிக்குப் பின் புரு வம்சத்தில் பிறந்தவன் சந்தனு. சந்தனு சத்யவதி என்கிற மத்ச்யகந்தி (பின்னர் சுகந்தி) யை மணக்க விரும்புகிறான். அவளது வளர்ப்பு தந்தை செம்படவ குல தலைவன் ''என் பெண் ராணியாக வேண்டுமானால் அவளுக்குப் பிறக்கும் மகனே அடுத்த அரசனாக வாரிசு பெற வேண்டும்'' என விதித்த நிபந்தனை ராஜா சந்தனுவை யோசிக்க வைக்கிறது. ஏமாற்றத்தோடு சந்தனு வாடுகிறான்.

ராஜா சந்தனுவின் மகன் தேவவிரதன் சந்தனுவுக்கும் கங்கைக்கும் பிறந்தவன் இளவரசன் அல்லவா. அவன் தனது தந்தை சந்தனு ஏன் இப்படி துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார் என வருந்தி அவரது துயரத்தின் காரணத்தை மெதுவாக அறிந்து கொள்கிறான். சந்தனுவின் துயரத்தை தீர்த்து அவர் விருப்பம் பூர்த்திபெற தான் அரசேற்க மாட்டேன் அன்று அரசைத் துறந்து எனக்கு வம்சமும் கிடையாது என்று பிரம்மச்சர்ய விரதம் பூண்டு பிரதிஞ்ஞை செய்கிறான். இத னால் தேவவிரதன் எனும் இளவரசன் ''பீ\ஷ்மன்'' என்றே புகழும் பெருமையும் அடைந்து பாரதத்தில் அறியப்படுகிறான். நான் மிகவும் சுருக்கமாக இந்த அற்புத சம்பவத்தை சொல்வதற்கு விசனப்படுகிறேன். நிறையவே எழுதலாம் இதைப் பற்றி. ஆனால் என் முன்னே மலை போல் மஹாபாரத நிகழ்வுகள் நிற்கிறதே. எப்போது அதை ஒருவாறு முடிப்பது? எல்லோருக்குமே தெரிந்த விவரங்களை சுருக்கமாக சொல்வது என்ற தீர்மானம் உங்களோடு சேர்ந்து ஏகோபித்து நிறைவேற்றுகிறேன்.

பீஷ்மன் சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் பிறந்த தனது தம்பிகளான சித்ராங்கதன், விசித்திர வீர்யன் ஆகியோர் பெருமை பெற்ற அரசர்களாவதற்காகத் தான் உழைக்கிறான். சகோதரர்களில் ஒருவனான சித்ராங்கதன் ஒரு யுத்தத்தில் மறைகிறான். விசித்ரவீர்யனுக்கு அம்பிகை அம்பாலிகை ஆகியோரை திருமணம் செய்து வைத்தும் புத்திர பாக்கியம் இல்லாமல் விசிதர வீர்யன் இறந்து போகிறான்.

எந்த காரணத்துக்காக சத்யவதி பீஷ்மன் அரசனாக கூடாது, அவனுக்கு சந்ததி இருக்கக்கூடாது என்று விரும்பினாளோ அது அவள் வாழ்க்கையிலேயே விளையாடிவிட்டது. சத்யவதி வேறு வழியின்றி வியாசரிடம் ஓடுகிறாள். அவர் அனுக்ரஹத்தால் திருதராஷ்ட்ரன், பாண்டு ,விதுரன் மூவரும் பிறக்கிறார்கள். திருதராஷ்டிரன் பார்வையற்றவன். அவன் காந்தாரியை மணந்து அவர்களுக்கு 100 பிள்ளைகள். முக்யமானவர்கள் அதில் துர்யோதனன், துச்சாதனன், விகர்ணன், சித்ரசேனன்.

பாண்டு என்பவன் வெளுத்த நிறத்தவன். அவனுக்கு இரு மனைவியர். குந்தி, மாத்ரி. பாண்டுவின் போறாத காலம் ஒரு தடவை காட்டுக்கு வேட்டையாட சென்றவன் கண்ணில் ஒரு மான் தனது ஜோடியோடு அழகாக காதல் புரிந்து விளையாடிக் கொண்டிருந்தது.

மான் வேட்டைக்கு சென்றவன் விடுவானா? ஒரே அம்பில் அந்த அழகிய ஆண் மான் வீழ்ந்தது. என்ன ஆச்சர்யம்? கீழே விழுந்த மான் ஒரு கோபமிக்க ரிஷியாக எழுந்தது. ஆம். ஒரு ரிஷி தனது பத்னியோடு மானாக மாறி விளையாடிக் கொண்டிருந்தார் என்பது பாண்டுவுக்கு எப்படி தெரியும்?

''ஹே, பாண்டு, நான் என் மனைவியோடு கலந்து உறவாடுவதைத் தடுத்து என்னைக் கொன்ற நீ இனி உன் மனைவியை நெருங்கினால் அக்கணமே மரணமடைவாய்''.

மான் வேட்டைக்குப் போன பாண்டு மரண சாபம் பெற்று திரும்பினான். ஒரு முறை மனைவி மாத்ரியை நெருங்கிய பாண்டு மாண்டான். மாத்ரி அவனோடு உடன்கட்டை ஏறி மறைகிறாள். பாரதத்தில் மாத்ரி இவ்வாறு வந்து போகிறாள்.

தெய்வ சங்கல்பமாக ஒருமுறை குந்தி தனது தாய் வீட்டில் ரிஷி துர்வாசருக்கு உபசாரம் செய்து அவர் மகிழ்ந்து அவளுக்கு ஒரு வரம் கொடுக்கிறார். ''நீ எந்த தெய்வத்தையாவது வணங்கி புத்திர பாக்கியம் விரும்பினால் உடனே அது உனக்கு சங்கல்பிக்கும்'' என்று. அதை பரிட்சித்துப் பார்க்க உடனே குந்தி வெளியில் வந்தவள் கண்ணில் சூரியன் தென்படவே, சூரியனை வணங்கி ''எனக்கு ஒரு புத்ரனை அளிப்பாய்'' என்றாள் . மணமாகாத கன்னி குந்தி அப்போது. என்ன ஆச்சர்யம். அவள் வயிற்றில் சூரியன் அனுக்ரஹத்தால், ஒரு கரு தோன்றி பிறந்தே விட்டது. அழகிய அந்த ஆண் குழந்தையை என்ன செய்வது என்று பயமும் சந்தோஷமும் கலந்து நடுங்கிய அவள் சேடிமார் ஆலோசனைப்படி குழந்தையை ஒரு மரப்பேழையில் வைத்து ஆற்றில் மரப்பேழை குழந்தையோடு மிதந்து செல்ல, எங்கோ ஒரு கரையில் அதைக் கவனித்த என்கிற அதிரதன் என்கிற தேரோட்டி பேழையை ஆற்றிலிருந்து மீட்டு திறந்து பார்த்து ஒரு அழகிய தெய்வீகமான குழந்தை கவச கர்ண குண்டலங்களோடு சிரிப்பதைப் பார்க்கிறான். குழந்தையற்ற அவனும் அவன் மனைவி ராதையும் அதை எடுத்து வளர்க்கிறார்கள். கர்ண கவசத்தோடு பிறந்ததால் அவனே கர்ணன். பாரதத்தில் ஒரு நக்ஷத்ர பாத்ரம் அவனுக்கு. கர்ணன் ராதேயன் என தன்னுடைய வளர்ப்புத்தாய் பெயரும் கொண்டவன்.

குந்தி பிறகு பாண்டுவுக்கு மனைவியாகி கணவன் பாண்டுவும் வாரிசு இன்றி மரணமடைந்ததால் தனது வரத்தை உபயோகித்து வாரிசு பெறுகிறாள். தர்ம தேவதையை வணங்கி யுதிஷ்டிரன், வாயு தேவன் அருளால் பீமசேனன், இந்திரன் அனுக்ரஹத்தால் அர்ஜுனன் ஆகியோரைப் புத்திரர்களாக அடைந்தாள் . மாத்ரி மரணம் அடையும் முன்பு அவளுக்கு நகுல சகாதேவர்கள் மகன்கள். எனவே மரப்பேழையில் இளம் வயதில் ஆற்றோடு போன குழந்தையைத் தவிர்த்து குந்தி இப்போது ஐந்து குழந்தைகளை வளர்க்கும் தாய். எல்லோரும் ஹஸ்தினாபுரத்தில் அரண்மனையில் வளர்கிறார்கள். பாண்டுவின் வாரிசுகளான இந்த ஐவரும் தான் பாண்டவர்கள்.

இவர்களை அழைத்துக்கொண்டு சென்ற ரிஷிகள் பீஷ்மர் விதுரர் ஆகியோரிடம் இந்த 5 குழந்தைகளை ஒப்படைத்து விட்டு அந்த ஸ்தலத்திலேயே மறைகிறார்கள். யார் அந்த ரிஷிகள்?? பீஷ்மர் இந்த 5 பேருக்கும் பொறுப் பேற்று பாட்டனாகிறார். ஏற்கனவே ஹஸ்தினாபுர அரண்மனையில் வளர்ந்து வரும் 100 திருதராஷ்ட்ரனின் மக்களில் முதல்வனான துர்யோதனன் இந்த பாண்டவர்களை வெறுக்கிறான். விரோதிகளாக பாவிக்கிறான். எண்ணற்ற இன்னல்களை அந்த 5 சிறுவர்களும் அனுபவிக்கிறார்கள். ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் தெய்வ பலத்தால் உயிர் தப்புகிறார்கள். நிறைய விவரங்கள் வரும்.

விட்டுப்போன விஷயத்தை எங்காவது தொட்டு நிரப்பினால் கதைகளில் விறுவிறுப்பு கூடும் அல்லவா? சந்தனு என்கிற புரு வம்ச அரசன் கங்கையை மணந்தான். அவனுக்கு தேவவ்ரதன் பிறந்தான் என்று எழுதினேனே அந்த ஒரு வரிக்குப் பின்னால் ஒரு கதையே இருக்கிறது. அதை இப்போது தொடுகிறோம்.

இக்ஷ்வாகு குலத்தில் மகாபீஷன் என்று ஒரு அரசன். நிறைய அஸ்வமேத யாகங்கள் ராஜசூய யாகங்கள் செய்து இந்திரலோகம் செல்கிறான். அங்கே பிரம்மா அனைவரையும் வரவேற்கிறார் . கங்கையும் வருகிறாள், அவள் மீது பார்வை வீழ்ந்தபோது மஹாபீஷன் பிரம்மனால் ''கங்கையை தவறான எண்ணத்தில் நோக்கினதால் பூமியில் மனிதனாக பிறப்பாய். பலமுறை பிறப்பாய். கங்கையும் இதற்கு உடந்தை என்பதால் அவளும் பூமியில் பிறப்பாள் உன்னை பலமுறை பிறவி எடுக்க வைப்பாள். பிறகு உங்கள் இருவருக்கும் சாப விமோசனம்.'' என பிரமன் சபித்தான்.

விசனத்தோடு திரும்பிய கங்கை வழியில் அஷ்ட வசுக்களை காண்கிறாள். .அவர்களும் துக்கத்தோடு இருக்கவே, 'எனக்கு தான் பிரமனின் சாபம் பூமியில் போய் பிறக்கவேண்டும். உங்களுக்கு என்ன கஷ்டம்'' என வினவுகிறாள்.

''அதை ஏன் அம்மா கங்கா கேட்கிறாள், சொல்கிறோம் ''என அஷ்ட வசுக்கள் கூறுவது:
''நாங்கள் பிரம்மரிஷி வசிஷ்டரால்அவரை மதிக்காமல் மனவருத்தம் ஏற்படுத்தியதால் மானிடராகப் பிறப்பீர்கள் என சபிக்கப் பட்டோம்''

''வசுக்களே, உங்களுக்கும் இதே சாபம் தானா, நான் பூமியில் பல குழந்தைகளைப் பெற்று அவற்றின் பல பிறவிகள் கடந்து சாபம் தீர்க்கவேண்டும் என்பது முடிவான விஷயம் '' என்கிறாள் கங்கை.

''கங்காதேவி, என்ன ஒற்றுமை பார்த்தீர்களா. எங்கள் சாபமும் உங்கள் சாபமும் ஏறக்குறைய ஒன்றே வேறு வேறு ரூபத்தில். எனவே நீங்களே எங்கள் தாயாக இருந்து நம் இருவரின் சாபங்களும் ஒரே சமயத்தில் தீரட்டுமே'' என்றார்கள் அஷ்ட வசுக்கள்.

''ஆஹா. மிக நல்ல யோசனை. சந்தோஷம் தான் எனக்கு '' என்றாள் கங்கா. ஒரு நிரடல் அவள் மனத்தில்.

''அது சரி நீங்கள் எனக்கு நீங்கள் குழந்தைகளாகப் பிறக்க யார் தந்தையாக ஆவது? என அஷ்டவசுக்களை கேட்க

''இப்போது கங்கை நதிக்கரையில் ஒரு சிறந்த ராஜா சந்தனு என்று ஒருவன் உள்ளான். அவனே எங்களுக்குத் தந்தையாகட்டும்.'' என்றன அஷ்டவசுக்கள்.

''அஷ்ட வசுக்களே, இந்த பூமியில் நான் தாயாகி எனக்கு பல குழந்தைகள் பிறந்தாலும் அவற்றை நான் இழந்தாலும் ஒருவனாவது என் மகன் என எனக்கு மிஞ்சவேண்டாமா? உங்களில் ஒருவன் அங்கே நீண்ட நாள் என் மகனாகவேண்டும் என்ற விருப்பமும் எனக்கு உள்ளதே'' என்றாள் கங்கை.

' எங்களில் ஒருவன் பூமியில் பல காலம் வாழ்ந்து உன் விருப்பத்தை நிறைவேற்றுவான் கங்காதேவி என்றனர் அஷ்டவசுக்கள்.

வருஷங்கள் ஓடின. ஒரு நாள் சந்தனு கங்கைக்கரையில் நடக்கும்போது ஒரு அழகிய மங்கை நதியிலிருந்து வெளிவந்ததைப் பார்த்து அவள் அழகில் மயங்குகிறான்.

''நீ யாரோ தெரியவில்லை பெண்ணே, ஆனால் நீ என் மனைவி என்பது நிச்சயம். உன்னை இனி நான் பிரியேன்'' என்று சந்தனு அவளிடம் சொல்ல. அவளும் அவன் இச்சையை பூர்த்திசெய்கிறாள்.

' மஹாராஜா சந்தனு, உங்களை நான் நன்றாக அறிவேன். நான் யாரோ அல்ல, கங்கை, தேவ மாது. சந்தனு மகாராஜா, நான் உங்களை மணக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் செய்யும் எந்தச் செயலுக்கும் நீங்கள் காரணமோ, எதிர்ப்போ காட்டக்கூடாது. என்னை கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. அது பற்றி என்னோடு பேசக்கூடாது. தடுக்கக்கூடாது. அப்படி நீங்கள் ஒப்புக்கொண்டால் இந்தக் கணமே நான் உங்கள் மனைவி. என்றாவது ஒரு நாள் எனது இந்த நிபந்தனையை நீங்கள் மீறினால், என் செய்கையில் குறுக்கிட்டால், அந்தக் கணமே நான் உங்களை விட்டு பிரிந்துவிடுவேன். நம் உறவு அதோடு சரி.''

சந்தனு கண்ணை மூடிக்கொண்டு கங்கை அவனோடு இருந்தால் அதுவே போதும் என்ற எண்ணத்தால் அவளது நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். கங்கை அவன் மனைவியானாள் .

சந்தனு- கங்கை சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன.

ஏழு குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக பிறந்த அன்றே கங்கை அவற்றை கங்கையில் வீசி எறிந்தாள் . மிகவும் வாடினான் சந்தனு. எனினும் அவள் மேல் இருந்த காதலாலும் கட்டிப்போட்ட நிபந்தனையாலும் வாயே திறக்கவில்லை. கண்கள் மட்டும் கெஞ்சின, கேட்டன. ''எல்லாம் உங்கள் நன்மைக்கே'' என்ற பதில் ஒன்று தான் வந்தது கங்கையிடமிருந்து. எட்டாவது குழந்தை பிறந்தது. வழக்கம்போல் கங்கை அதை எடுத்துக்கொண்டு கங்கை நதி நோக்கி சென்றாள் .

சந்தனு மிருகமானான் . பொறுக்கமுடியவில்லை அவனுக்கு. '' நில் கொலைகாரியே , இரக்கமற்ற பேயே. எதற்காக என் குழந்தைகளைக் கொல்கிறாய். இதுவரை 7 குழந்தைகளை இழந்தவன் இனியும் இதை நடக்க விடமாட்டேன். கொண்டு வா இங்கே என் குழந்தையை''.

கங்கை சிலையாக நின்றாள் . பிறகு மெதுவாக பேசினாள் .

'சந்தனு மகாராஜா, நான் ஜானு என்கிற ரிஷியின் மகள் ஜானவி எனும் கங்கை. தேவலோக மங்கை. ரிஷி ஆபவரின் சாபத்தால் , பூலோகபிறவி வாய்த்தது. உன்னைப்போல் சிறந்த அரசன் எனக்கு கணவனாககிடைத்து பல குழந்தைகளைப் பெற்று மீண்டும் விண்ணுலகம் திரும்பவேண்டும். இதற்குள் அஷ்ட வசுக்கள் பூமியில் சாபக்கேடால் பிறக்க நேர்ந்தது. வசிஷ்டரின் நந்தினி என்ற சகலமும் அருளும் பசுவை அவர்கள் திருடிவிட்டார்கள். எனவே வசிஷ்டரால் அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அவர்களுக்கும் உதவ என் குழந்தைகளாக அவர்கள் பிறந்த உடனேயே பிறவி முடிந்து இந்திர லோகம் திரும்பிவிட்டார்கள். இவன் எட்டாவது வசு. ப்ரபாஸன். இவன் திரும்பாமல் நீ தடுத்தாய். இனி இவன் உன் மகன். என் மகன் என் பெயரோடு கங்கா தத்தன், காங்கேயன், என்றும் தேவ வரதன் என்றும் பெயர் கொண்டு உன்னிடமே வளரட்டும். தனுர் வித்தையிலும், ஆயுத பிரயோகத்திலும் வீராதிவீரனான இவனுக்கு நிகர் யாருமே இல்லை. என் சாபம் முடிந்தது. இவன் உன்னோடு இருக்கட்டும். வேளை வேலை இரண்டும் முடிந்தபோது திரும்பட்டும். இப்போது நான் திரும்புகிறேன்''.



பிள்ளை தேவ வ்ரதனோடு மஹாராஜா சந்தனுவும் அரண்மனை திரும்பினான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...