Friday, March 9, 2018

aindham vedham

ஐந்தாம் வேதம்       ஜே.கே. சிவன் 

           
  14    ஏழு நாள் மரண  கெடு

உக்ராஸ்வரர் தொண்டையை கனைத்துக்கொண்டு  எல்லா ரிஷிகளையும் பார்க்கிறார், அவர் பார்வை குறிப்பாக சௌனகர்  மீது விழுந்ததும்  புன்சிரிப்போடு துவங்குகிறார்.


''வாசுகி  எப்படியாவது  ரிஷி  ஜரத்காருவுக்கு  தனது சகோதரியை  மணம்  செய்துவைத்துவிட வேண்டும்  என்று  துடித்தான்.

உனக்கு  தெரியுமா  பாண்டு வம்சத்தில்  அர்ஜுனன் மகன் அபிமன்யு ஒரு  பிள்ளை பெற்றான். அவன் பெயர்  பரிக்ஷித். அவன் வேட்டையாட காட்டில்  ஒரு மானை  நோக்கி அம்பெய்து  அது  அடி வாங்கிக்கொண்டு உயிர் தப்பி ஓடியது.  அதைத் துரத்திக்கொண்டு ஓடிய  பரிக்ஷித்  வழியில்  சமிகர்  என்ற ஒரு ரிஷி ஆஸ்ரமத்தில்  அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்ததைக் கண்டான்.  இங்கே  ஒரு  மான்  ஓடியதா என்று  அவரைக் கேட்டான். அவர் மௌன த்யானத்தில் இருந்ததால்  பதில்  சொல்லவில்லை.  பலமுறை கேட்டும்  பதில் சொல்லாததால்  அவர் மேல்  அருவறுப்புற்று   பரிட்சித்  அருகே  இருந்த ஒரு செத்த பாம்பை வில்லின்  முனையால்  எடுத்து அவர்  கழுத்தில் போட்டுவிட்டு  அரண்மனை திரும்பினான். 

ரிஷி சமீகரின் குமாரன் ஸ்ரிங்கின் வந்து  தந்தை கழுத்தில் ஒரு  செத்த பாம்பை போட்டவன் யார்  என்று விசாரித்ததில் அது  ராஜா  பரிக்ஷித்தின் வேலை  என்று  அறிந்து கோபம் கொண்டான்.  

''இன்னும்  ஏழே  நாளில்   அந்த ராஜா  தக்ஷகன் என்னும் பாம்பு கடித்து மரணம் எய்துவான்'' என்று  சாபமிட்டான்.

த்யானம் முடிந்த  ரிஷியிடம்  ஸ்ரிங்கின்,   ''தந்தையே,   தங்களை  இப்படி  மரியாதைக்குறைவாக  நடத்திய  ராஜாவுக்கு மரண தண்டனை சாபம் இட்டுவிட்டேன்'' என்று கூறினான்.   

'' நாம்  ரிஷிகள். எதற்கும்  உணர்ச்சி வசம் படக்கூடாதப்பா. ராஜா அல்லவோ  நம்மைக்  காப்பவன். அவனால்  அல்லவோ  நாம்  அமைதியாக  இந்த காட்டில்  அமர்ந்து  த்யானம் செய்ய முடிகிறது. ராஜா வேட்டையாடி  களைத்து   பசி தாகத்தோடு ஓடி வந்தவன்  நான்  பதில் சொல்லவில்லை என்று  தவறாக எண்ணிவிட்டான் போலிருக்கிறது.    நான் மௌன த்யானம் இருந்தது அவனுக்கு தெரிய ஞாயமில்லை அல்லவா.  நம்மை  ரக்ஷிப்பவனை  நீ  சாபம் இட்டுவிட்டாயே. '  என்று அறிவுரை  வழங்கினார்  ரிஷி.''

''அது சரி,  மகனே  நீ  இட்ட  சாபம்  ராஜா அறிவானா?''
 ''இல்லை ''
''உன் சாபம் நிறுத்தப் பட  முடியாதே.  அதை அவனுக்கு தெரியப்படுத்து. என்ன செய்து கொள்ள வேண்டுமோ  அதை செய்யட்டும்.''

கௌருமுகன்  என்ற சிஷ்யபிள்ளை  பரிக்ஷித்தின் அரண்மனைக்குச்  சென்றான்.  ராஜா அவனை வரவேற்று உபசரித்தான். ரிஷிகுமாரன் இட்ட சாபம்  நிவர்த்திக்க  முடியாததை  சிஷ்யன்  எடுத்துச் சொன்னதும் பரிக்ஷித்  அதிர்ந்து போனான். தான் செய்த  காரியத்துக்கு  வருந்தினான்.  ஆவன செய்யவேண்டுமே.   மந்திரிகளை கலந்தாலோசித்தான்.  நடுக்கடலில்  ஒரு  ஸ்தம்பம்  அதன் மேல்  ஒரு  மாளிகை.  சுற்றிலும் இரவு பகல் காவல். அவனைச்  சுற்றி  பாம்பு கடிக்கு  மருந்து, மருத்துவர்கள்.  வேதமோதும் பிராமணர்கள்.  காற்று கூட   அனுமதியின்றி  உள்ளே வரமுடியாது. இப்படிப்பட்ட  பாதுகாப்பான  ஏற்பாடு செய்யப்பட்டு ராஜா அதனுள் இருந்தான். நாடெங்கும்  ராஜாவை  நாகத்தின் விஷத்திலிருந்து காப்பாற்ற முடித்தவர்களுக்கு  நிறைய பரிசு அறிவிக்கப்பட்டது. 

 ஆறு நாள்  ஓடிவிட்டது. 

ஏழாம் நாள்  காலையில்  காச்யப ரிஷி வந்தார்.  அவரை  விட  சிறந்த  விஷ வைத்தியர்  கிடையாதே. தக்ஷகன்  என்ற  சர்ப்பம்  காச்யபரைக் கவனித்து விட்டது. ''அடடா  என் விஷத்தை எடுத்து பரீக்ஷித்தை இவர் காப்பாற்றிவிடுவாரே'.  தக்ஷகன்  தன்னை ஒரு பிராமணனாக மாற்றிக் கொண்டது.

''காச்யபரை  வணங்கி  குருதேவா  எங்கே  இவ்வளவு வேகமாக  போகிறீர்கள்''

''தக்ஷகன்  என்ற  கொடிய  விஷ நாகம் குரு  வம்ச  ராஜா  பரிக்ஷித்தை இன்று  தீண்டப்போகிறது. சீக்கிரமாகப் போய்  அவனுக்கு  விஷ முறிவு வைத்தியம் செய்யப்போகிறேன்.''

''குருதேவா  நான்  தான்  தக்ஷகன். என் விஷத்தை  தாங்களால்  முறிக்க முடியுமா?  முடியும் என்றால்  இதோ நான் இந்த  மரத்தை கடிக்கிறேன்.அது பற்றி எரியும்.  அதன் விஷத்தை முறியுங்கள்.''

ஒரு பெரிய  ஆலமரத்தை   தக்ஷகன் கடித்து  விஷத்தைப் பாய்ச்சினான்.  கண  நேரத்தில்  அது அவனது கொடிய  விஷத்தில் எரிந்து பொசுங்கி  சாம்பலானது.

சௌடி எனும் உக்ரஸ்ரவரர் கதையை  நிறுத்தினார். 

 ''அப்புறம்  என்னாச்சு சொல்லுங்கள்?   என்று   தூண்டினார்  சௌனகர்.

''காச்யபர்  அந்த  பெரிய  விருக்ஷம் சாம்பலானதைக் கண்டு  அந்த  சாம்பலை சேகரித்தார்.  சில  மந்திரங்களை உச்சாடனம் செய்தார்.  சாம்பலிலிருந்து  ஒரு  பச்சைநிற செடி உருவானது. இலைகள்  தோன்றின, வளர்ந்தது.  பெரிதானது.  கப்பும் கிளையுமானது.  பழையபடி  ஆலமரம்  அந்த இடத்தில் நின்றது.

தக்ஷகன் திகைத்தான்.

''குருதேவா, உங்கள்  பெருமையை,  தவ வலிமை  அறிவேன். ஆனால்  ஒன்று. ஒரு பாவமும் அறியாத  இந்த  ஆலமரத்தை  நீங்கள் உயிர்ப்பித்தீர்கள்.  ஆனால்  பரிட்சித் என்னுடைய  ஆக்ரோஷ  கடியிலிருந்து விஷத்தி
லிருந்து தப்பவே முடியாது.  மேலும்  அவன்  ஒரு  ரிஷியின் சாபத்துக்குட்பட்டவன்.கவனம் இருக்கட்டும்.  நீங்கள்  பரிக்ஷித்திடம்  எதை எதிர்பார்த்து  செல்கிறீர்களோ  அதை  நானே  கூட  தருவேன்.''

 ''பரிக்ஷித்திடம்  பொன்னும் பொருளும்  பெற  செல்கிறேன்.  அதை நீயே  கொடேன். நான் உடனே  திரும்பிச் செல்கிறேன்.  ஒரு ரிஷி சாபத்தில் நான் இன்னொரு ரிஷி  குறுக்கிட வில்லை''

 ''ஆஹா.  பரிக்ஷித்  உங்களுக்கு பரிசளிப்பதைவிட  நான்  அதிகமாகவே  தங்களுக்கு  அளிப்பேன்.''

காச்யபர்  அங்கே  அமர்ந்து  த்யானத்தில்  ஞானத்ரிஷ்டியில் பரிக்ஷித்தின்  ஆயுசு  எவ்வளவு என்று  கவனித்தார். அவன்  காலம்  முடிந்தது  என்று  அறிந்தார்.  இனி அங்கே போவதில் பயனில்லை.  எனவே  தக்ஷகன் அளிக்கும்  பரிசோடு திரும்புவதே  சரியான முடிவு என  உணர்ந்தார்.

 தக்ஷகன்  ஹஸ்தினாபுரம் சென்றான். பரிக்ஷித்தின் ஏற்பாடுகள் பற்றி தெரிந்துகொண்டான்.

சில  விஷ நாகங்களை  முனிவர்களாக மாற்றி  அவர்கள் மூலம்  குச தர்ப்பை, தீர்த்தம், பழங்கள்,  பரீக்ஷித் ராஜாவுக்கு உடனே கொடுக்க வேண்டும்  என்று சொல்லி அனுமதி கேட்டு  அவை உள்ளே சென்றன.

பரிக்ஷித்  அந்த  ரிஷிகள் கொடுத்த பழங்களை தட்டில் வைத்துகொண்டான்.  அந்த  ரிஷிகளை அனுப்பிவிட்டு அருகில் இருந்த  மந்திரிகள் மற்றவர்களோடு  விதிவசத்தால்  அந்த  பழங்களை  அவர்களுக்கும் கொடுத்து தானும்  ஒன்றை உண்டான்.

அவன் உண்ட  பழத்தில்  தக்ஷகன் இருந்ததை  பாவம் பரீக்ஷித் அறியவில்லை

ஒரு வண்டு  அந்த பழத்தில் இருந்து  தனது  கருநிற  கண்களால்,  தாமிர  உடல் நிறத்தோடு  பார்த்தது.  சூர்யன் அஸ்தமனமாகும் சமயம்.

 7 நாள்  கெடு  முடிந்தது.  பரீக்ஷித் மகிழ்ந்தான்.

''இனிமேல்  சாபம்  நிறைவேற முடியாது.  பொழுது சாய்ந்துவிட்டது'' என்று  பரிக்ஷித்  தைரியம் கொண்டான். சிரித்துக் கொண்டே  அருகிலிருந்த மந்திரி சேனாபதிகளிடம் 

 ''இதோ பாருங்கள் இந்த  பழத்தில் ஒரு சிறிய  வண்டு.  இது தான் தக்ஷகன் என்று  எடுத்துக் கொள்வோம்.  பாவம்,   இதுவாவது என்னைக்   கடிக்கட்டும். அந்த  ரிஷியின் சாபம் கொஞ்சமாவது பலிக்க வேண்டாமா? '' என்று கேலிசெய்தவாறு  அந்த  சிறு வண்டை கையில் எடுத்தான். அது பறந்து அவன் கழுத்தில்  உட்கார்ந்தது.  கண் இமைக்கும் நேரத்தில்   அந்த சிறிய வண்டான  தக்ஷகன்  மா பெரும்  விஷ நாகமாக  உருப்பெற்று   பரிக்ஷிதின் கழுத்தை இருக்க வளைத்து  அவன் உடலில்  விஷத்தை பாய்ச்சினான்.   அருகில் இருந்தோர்  பயத்தில் பேச்சு மூச்சின்றி சிலையாயினர்.    மற்றவர் தலை தெறிக்க ஓடினார்கள்.  தக்ஷகன்  வந்த வேலை முடிந்து வானத்தில் பறந்தான்.

பரிட்சித்  மாண்டான்.  அவனுக்கு  அந்திமக் கிரியைகள் நடந்தன.  அவன் மகன் சிறுவன்  ஜனமேஜயன், அடுத்த குரு  வம்ச அரசனானான்.  

அப்புறம் என்ன நடந்தது?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...