Thursday, March 8, 2018

ENGAL VAMSAM

என் தாய் வழி முன்னோர்கள் - J.K. SIVAN

அண்ணாமலைக்கு அரோஹரா

தஞ்சாவூர் கனம் கணபதி ஸாஸ்திரிகள் காலமானபிறகு அவர் பிள்ளை சிறுவன் சீதாராமன், மூன்று கணக்கு வழக்கு தெரியாத படிக்காத ஒன்றும் தெரியாத அப்பாவி விதவைகளால் வளர்க்கப்பட்டு அவரது சம்பாத்தியமான நகை நட்டு எல்லாம் ஒன்று ஒன்றாக விற்று வந்த பணத்தில் கஷ்ட ஜீவன காலம் தள்ளி வந்தார்கள் அல்லவா? மணலி சின்னையா முதலியார் கொடுத்த முத்து ஹாரம் சின்னாபின்னமாக வெட்டப்பட்டு அந்த பெண்கள் விற்க தயார் செய்து கொண்டு வந்தார்களே அப்புறம் அதை எப்படி விற்று பணமாக்கி குடும்பம் நடத்த கஷ்ட ஜீவனம் செய்தார்கள்?

நண்பர்களே, இது நடந்தது ஏறக்குறைய முன்னூறு வருஷங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு சிறு கிராமத்தில் வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் என்பது நினைவில் இருக்கட்டும்.

இவர்கள் வசித்த அக்ரஹாரத்துக்கு அருகிலேயே காசுக்கடை அண்ணாமலை என்று பெயர் கொண்ட ஒரு தரகன் வாழ்ந்திருந்தான். அந்த சிறு ஊரில் எல்லோருமே ஒருவரை ஒருவர் நன்றாக அறிவார்கள். அதிக ஜனத்தொகை இல்லையே. பழைய நகைகள் யாரிடமாவது இருந்தால் அதை விற்பதற்கோ வாங்குவதற்கோ காசுக்கடை அண்ணாமலை தான் ஒரே வழி. அவன் தான் அந்த காலத்து நாதெள்ளா, சுராஜ்மல், வீகம்ஸீ, உம்மிடி, எல் கே எஸ், நீரவ் மோடி, மெஹுல் சொக்ஸி எல்லாமே. அவன் நம்பிக்கை உள்ளவனாக, பொய் சொல்லாதவனாக அவர்களிடம் ஒரு இமேஜ் கொடுத்து நடந்துகொள் பவன்.

கணபதி சாஸ்திரி மனைவியும் தாயாரும் ஆள் அனுப்பி அண்ணாமலையை அழைத்து, வெட்டி வைத்திருந்த முத்து ஹாரத்தில் ஒரு நாலு கொத்து எடுத்து அவனிடம் கொடுத்துதார்கள்.

''அண்ணாமலை, நீ ரொம்ப நல்லவன். உன்னை தான் நாங்க எப்போவும் மலை போல் நம்பிண்டிருக்கோம் . எப்படியாவது இதை வித்து கொஞ்சம் கூடவே வரும்படியாக காசு கொண்டு வந்து கொடப்பா, குடும்பம் ஓடணுமே '' என்றார்கள்.

''அம்மா நான் உங்க ஊட்டு பிள்ளே. இங்க உப்பு தின்னவன்.என்னிக்கும் விஸ்வாசம் குறையாதவனாச்சே. மனசுலே கூட உங்களுக்கு வஞ்சகமோ துரோகமோ நினைக்காதவன். நீங்க கடைக்கு வந்தீஹ ன்னா அங்க எல்லாம் களவாணி ப்பயலுவ ஏச்சிப்புடுவானுக. எப்போ எங்கிட்ட இதை கொடுத்தீகளோ நிம்மதியாக கவலையே இல்லாம இருங்க எவ்வளுவு சீக்ரம் பணம் பண்ணமுடியுமோ பண்ணி கொண்டு வாறேன் . பேசாம இருங்க. எப்போ தேவையானாலும் என்னை கூப்பிடுங்க, இந்த நாய் ஓடி வரும். ரெண்டு காசு கூடவே கொண்டு வந்து கொடுக்கும்.''

அண்ணாமலையின் வார்த்தையில் அவர்களுக்கு பரம நம்பிக்கை.

அவன் முத்துக்களை வாங்கிக்கொண்டு நாலு ரூபாய்க்கு காலணா, அரையணா, நாணயங்களாக ஒரு சொம்பு நிறைய கொண்டுவந்து அவர்கள் முன்னால் துணியை விரித்து அதில் கொட்டுவான். விலைவாசி, மதிப்பு, ;கணக்கு எதுவும் தெரியாத விதவைகள் இவர்கள் வெகு சந்தோஷத்தோடு அந்த காசுகளை ஒரு பாத்திரத்தில் அள்ளி முட்டு முடிச்சு பானைக்குள் துணி சுத்தி வைத்துக்கொண்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக செலவழித்து ஜீவனம் பண்ணினார்கள்.

கனம் கணபதி சாஸ்திரி சம்பாதித்த விலையுயர்ந்த முத்து ஹாரம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, நாலு ரூபாய் ஐந்து ரூபாய்க்கு சில்லறைகளாக அவர் குடும்பத்தை இவ்வாறாக வாழவைத்தது. அண்ணாமலை கூடாரத்தில் புகுந்த ஒட்டகமாக கொஞ்சம் கொஞ்சமாக அருமையான முழு நல் முத்து மாலையை துண்டு துண்டு ரூபமாக இருபது ரூபாய்க்கு வாங்கிவிட்டான். இல்லை விழுங்கிவிட்டான்.

முத்து ஹாரம் மறைந்தவுடன் கல் பதக்கத்துக்கு தலை வலித்தது.

என்ன ஆயிற்றென்று பார்ப்போமா ?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...