Tuesday, March 6, 2018

BATHRAGIRIYAR PULAMBAL

ஒரு ராஜாவின் புலம்பல்-- J.K. SIVAN
பத்திரகிரியார் புலம்பல்:

மின்எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள்நின்று என்னுள்ளேயே யான்அறிவ தெக்காலம்?

இந்த மின்னல் போல் பளிச்சென்று உருவாகி பளிச்சென்று என்னுள்ளேயே நீ மறையும்படி பகவானே உன்னை எப்போது உணர்வேன்?

கண்டபுனல் குடத்தில் கதிர்ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம்?
நீர் நிறைந்த குடத்தில் சூரியனின் ஒளி பாய்வதைப் போல இறைவா உன் தரிசனம் பிழைகள் மலிந்த என் இதயத்தில் எப்போது ஊடுறுவும் .

பூணுகின்ற பொன்அணிந்தால் பொன்சுமக்கு மோஉடலைக்
காணுகின்ற என்கருத்தில் கண்டறிவ தெக்காலம்?

அதோபார் அந்த பெண்ணை. எவ்வளவு சவரன் நகைகள் .அவள் உடலில். பொன்னா அந்த பொண்ணை சுமக்கிறது. பெண் அல்லவோ பொன்னை சுமக்கிறாள். என் எண்ணம் எல்லாம் நீ நிறைந்து அதுவே எனக்கு அணிகலனாக எப்போது அது நிறைவேறும்?
செம்பில் களிம்புபோல் சிவத்தை விழுங்கமிக
வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம்?
எவ்வளவு சீக்கிரம் அந்த செம்பு பாத்திரத்தை பச்சையாக களிம்பு பற்றிக்கொள்கிறது. அதை விலக்க எவ்வளவு பாடு படவேண்டும். என் சிந்தை மும்மலத்தால் பீடிக்கப் பட்டிருக்கிறதே. அதை எப்போது அகற்றி உன்னை காண்பேன் சிவனே.

ஆவியும் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனை
பாவி அறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம்?

காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா. அடிக்கடி பாடுவேனே .என் ஆத்மாவில் உன்னை நிரப்பி ''நான்'' வெடிக்க வேண்டும். அது எப்போது ?

ஊமை கனாக்கண்டு உரைக்கறியா இன்பம்அதை
தாம்அறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம்?
ஊமை ஒருவன் காணாக்கண்டால் அதில் கண்ட இன்பத்தை எப்படி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வான். என்னுள் உன்னை நான் அவ்வாறு கண்டு களித்தாலும் அதை எப்படி எப்போது சொல்வேன்?

''மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்?

போதும் நான் உண்ட அசைவ உணவு. அப்பப்பா. எத்தனை உயிர்கள் என் பசிக்காக, ருசிக்காக மாண்டிருக்கிறது. அதுவும் நானே, எதுவும் நானே என்று புரிந்துகொண்டு அஹிம்ஸை கடைப்பிடித்து உன்னை அறிவது எப்போது?

பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்?

இவனா? இவனைவிடவா இனி ஒருவன் மஹா பாபங்கள் செய்யமுடியும் என்று ஊரே காரி உமிழ்ந்து இகழாமல் ஆத்மாவைப் பற்றி அறிந்து அதில் என்னை இழக்கும் நேரம் எப்போது வரும்?

வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்?

எத்தனை ஆரவாரம், கோலாகலம், பகட்டு, டாம்பீகம் , கர்வம், இதெல்லாம் என்னை விட்டு மறைந்து நான் என்னைப்பற்றிய நினைவிழந்து உன்னைப்பற்றியே நினைத்து மகிழ்வது எப்போது?

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்?
இதோ ராஜா வருகிறார் என்று கட்டியம் கூற , யானைமேல் குதிரை மேல், வாத்தியம் முழங்க, பலர் புடைசூழ பட்டு பீதாம்பரம் பளபளக்கும் தங்க ஆபரணங்கள் அணிந்து நிறைய பாவத்தை தான் சேர்த்துக் கொண்டேன். அதெல்லாம் ஒழித்து உன் திருவடி ஒன்றே என் ஆதாரம், சரணம் என்று திருந்துவது எப்போது?

ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்?

எனக்கு ஆமையை ரொம்ப பிடிக்கிறது. சாப்பிட அல்ல. குருவாக்கி கொள்ள. யாரையாவது பார்த்துவிட்டால் அதன் தலை கால்கள் வால் அனைத்தும் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு விடுகிறதே. எவ்வளவு சீக்கிரமாக? அதேபோல் இந்த மாயை, உலக வாதனை, ஐம்புலன்களின் நாட்டாமையிலிருந்து என்னை பிரித்துக்கொண்டு என் ஆத்மாவில் உள்ளே ''நான்'' ஒடுங்குவது எப்போதோ?



பத்திரகிரியாரின் புலம்பல் நீள்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...