Saturday, March 24, 2018

PARAMAHAMSAR

\பார் போற்றும் பரமஹம்ஸர் -- J.K. SIVAN 



          ''  பொருள் கேட்கப்போய்....''


அது மாலை நேரம்.  ராமகிருஷ்ணர்  கங்கையின் அழகை ரசித்து சூரியனின் பொன் கிரணங்கள் கங்கையின் மேல் பிரதிபலிக்கும் ஆனந்த அனுபவத்தில்  அம்பாள் பவதாரிணி நீர் திவலைகளாக நிறைய தோன்றி நர்த்தனம் ஆடுவதில் திளைத்திருந்தார்.  பின்னால்  யாரோ வருவது போல் தோன்றியது.  கவனம் சிதைந்தது. அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு  சூரியன் தான் வேறு  யார்.  ஞான சூரியன்.  நரேந்திரன்.

''வா  நரேந்திரா. நீ வருவாய் என்று எவ்வளவு நாள் காத்திருந்தேன். அதிருக்கட்டும் உன் மேல் எனக்கு இவ்வளவு அன்பு எதனால் என்று உனக்கு தெரியுமோ?

''எனக்கு எப்படி தெரியும் குரு மஹராஜ். நீங்கள் சொன்னால் தானே புரியும்.''

''நீ  நாராயணன். ஆமாம்.  நீ அந்த மஹாவிஷ்ணு  நாராயணனே தான். எப்படி தெரியுமாவா?  எனக்கு முதலில் தெரியாது. என் அம்மா தாய்  பவதாரிணி தான் எனக்கு சொன்னாள் . அதனால் தான் உன் மேல் எனக்கு இத்தனை ஆசையும் பாசமும் என்கிறாள். ஒரு நாள்  கூட  உன்னில் நான் நாராயணனை நான் பார்க்கவில்லையென்றால், அவ்வளவு தான், நான் உன்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். ஆமாம் . நீ  ஆயிரம் இதழ் தாமரை.  நிறைந்த நீர் குடம். வாயகன்ற  பாத்திரம்.   இது எல்லாம் கொள்ளும். எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளும் '' என்று நரேந்திரன் தலையை கையால் தொட்டார். நீ பெரிய  ராஜ ஹம்சம்.''

ஒருநாள்  ராமகிருஷ்ணரின் படுக்கையில் ஒரு வெள்ளிக்காசு வைத்து நரேந்திரன் அவரை சோதித்தானே அது போல் ராமக்ரிஷ்ணரும் நரேந்திரனை சோதித்தார். 

ஒருநாள் நரேந்திரன் வரும்போது ராமகிருஷ்ணர் அவனை லக்ஷியம் பண்ணவில்லை, வா என்று கூட தலையை ஆட்டி வரவேற்கவில்லை.  வழக்கமாக  இன்முகத்தோடு வரவேற்பாரே .  இப்படியே  ஒரு மாதம் ஓடியது. 

பிறகு என்றோ ஒருநாள்,  ''நரேந்திரா ஒன்றை நீ கவனித்தாயா?

''இல்லையே சொல்லுங்கள் மஹராஜ்''

''நான் உன்னை வா என்று வரவேற்கவில்லை, ஒருவார்த்தை உன் கூட பேசவில்லை. முழுக்க உன்னை அலட்சியம் பண்ணினேன். அப்படியும் நீ எதற்கு விடாமல் இங்கே வருகிறாய்?''

''நான் தான் சொன்னேனே  மஹாராஜ் , உங்களை  எனக்கு பிடிக்கிறது. உங்களுக்கு என்னை பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன.  நான் எதையும்  தேடவில்லையே.''   நரேந்திரனின் இந்த பதில் ராமகிருஷ்ணருக்கு பிடித்து ஹாஹா  என்று சிரித்தார். 

1884ல்  நரேந்திரன் பரிக்ஷைக்கு படித்துக் கொண்டிருந்தான்.   பி. ஏ.  படிப்பு. அவனது தந்தை  விஸ்வநாத் தத்தா திடீரென்று காலமாகி விட்டதில் குடும்பம் தத்தளித்தது.   கையில் காசில்லை. கடன்காரர்கள் நெருக்கி னார்கள்.  சொந்தங்கள் வேறு ஸ்வரூபத்தை காட்ட தொடங்கின.  விஸ்வநாத் தத்தாவின் அந்த  பழைய வீட்டில்  சிலருக்கு  பாத்யதை.  எனவே  நரேந்திரனையும் அவன் தாயையும் அப்புறப்படுத்த முனைந்தனர்.  பணக் கஷ்டம் தெரியாமல் வளர்ந்த நரேந்திரன் தலையில் பனங்காய்.  கல்லூரியில் பணம் கட்ட முடியாத ஏழை மாணவன்.   வேலை தேடினாலும் யாரும் கொடுக்கவில்லையே.  சே  கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இருந்தால் என்னை இப்படி விடுவாரா?  என்று கோபம்.  நரேந்திரனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை குறைந்த சமயம்.  இந்த நேரத்தில் மனதிற்கு  ஆறுதலாக  இருந்தது ராமகிருஷ்ணரை பார்ப்பது . நரேந்திரனின்  தக்ஷிணேஸ்வர  பிரயாணம் அதிகரித்தது. 

நரேந்திரனால்  பண நெருக்கடி  கடன் தொல்லை  வீட்டில் சமாளிக்க முடியவில்லை.  ஒருநாள்  ''குரு மஹாராஜ், எனக்காக  நீங்கள் உங்களது  தாயாரை, அம்பிகை காளியை, எனக்கு கொஞ்சம் காசு ஏதாவது பெற வழி கேட்கிறீர்களா?  அப்பா விட்டு விட்டுப்போன கடன் தொல்லை கஷ்டமாக இருக்கிறது'' 

ராமகிருஷ்ணர்  '' நரேந்திரா அப்படியானால் நீயே நேராக அவளைக் கேளேன்'' . மேலேமேலே குருநாதர் அவசரப்படுத்த அன்றிரவே  நேராக பவதாரிணி சந்நிதி சென்றான்.  

நிசப்தம். விளக்கு அசையாமல் எரிந்து கொண்டு அவள் திருமுகம் தெரிந்தது. சிறு புன்சிரிப்பு அவள்  முகத்தில் பிரகாசித்தது.   மனது உருகியது. விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கினான். ஆனால்  ''எனக்கு பணம் கொடு ''என்று கேட்க  வந்தவனுக்கு அது மறந்துவிட்டது.  அவளை  மனப்பூர்வமாக தரிசித்து வெளியே சென்றான்.  

என்ன நரேந்திரா அம்மாவிடம் கேட்டாயோ ?''
''ஒன்றுமே கேட்க தோன்றவில்லை ''
''இல்லை  நீ போய் அவளைக் கேள். 
இரண்டாம் முறை நரேந்திரன் பவதாரிணியிடம் சென்றான். அவள் முன்னே நின்றவன் சிலையானான், அவனை அறியாமலேயே  ''அம்மா தாயே, எனக்கு உன் அருளை த்தா,  அறிவைத் தா, பகுத்தறியும் சக்தியை தா, சர்வமும் துறக்கும் தியாகத்தை தா, உன்னை எப்போதும் கண்டு களிக்க   உன் தரிசனத்தைத்  தா ''

பொருளைக் கேட்க சென்றவன் அருளைக் கேட்டான். பெற்றான்.  நமக்கு விவேகானந்தர் கிடைத்தார். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...