Saturday, March 31, 2018

AF


ரகசியத்தை சொல்லட்டுமா?
J.K. SIVAN

கோபம் என்பது திடீரென்று வருவது. ஆனால் எனக்கு சொல்லி வைத்தாற் போல் ஒரு நாள் கோபம் வரும். யார் மீது?. என் மீதே தான், ஒரு குறிப்பிட்ட நாள் மீது. சிரிப்பும் வரும் ஒருவர் மீது. ஸ்ரீமான் சூளைமேடு சுப்ரமணிய ஐயர் என்பவர் மீது. என்னை உலக முட்டாள் தினத்தில், ஏப்ரல் முட்டாளாக்கிய மஹாநுபாவன்.

ஏப்ரல் முதல் நாள் என் மனைவி பிறந்தாள். பரிசுகள் வாழ்த்துகள் எல்லாம் நிறைய பெற்று களிக்கிறாள். எனக்கும் அன்று நிறைய வாழ்த்துக்கள் வருகிறது. அவள் பிறந்ததற்காகவோ அவள் கணவன் என்பதாலோ இல்லை சார், நான் ''பிறக்காமல்'' பிறந்ததற்காக. உலகத்தில் அந்த நாள் நான் 80க்குள் நுழைந்தாதாக அர்த்தம். .

உலகம் பூரா எனக்கு தெரிந்தவர்கள் என்னை வாழ்த்திடுவது ஏப்ரல் 1ம் நாள். ஒரு ''உம்மையை சொல்வதானால் '' அது 'நான் பிறக்காத எனது பிறந்த நாள்' .d

பிறந்த நாள் அன்று இப்போது எல்லோருமே ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலேயே. பக்கத்து அறையிலிருந்தே வாழ்த்து கூற முடிகிறது. வாட்சாப், face book, மெஸ்செஞ்சர், ஐபேட், லேப்டாப் போன்ற வசதி உபகரணங்களினால் முடிகின்ற சமாசாரம். அநேகமாக மொபைல் போனில் sms அனுப்புவதிலும், வாட்ஸாப்பில் வாழ்த்துவதுமாக மனிதே நேயம் சுருங்கியுள்ளது.

சற்றைக்காலத்துக்கு முன்பு க்ரீடிங் கார்ட் இமெயிலில் வந்து கொண்டிருந்தது.

அதற்கும் முன்பு போஸ்டில் '' சார், போஸ்ட்'' என்று கூவிக்கொண்டு வாசலில் விழுந்தது.

அதற்கும் முன்னால். டெலிபோனில் ''அல்லோ அல்லோ'' என்று கத்தி நான்கு ஐந்து முறை கட் ஆகி, ராங் நம்பர்களோடு கொர கொர வென்ற சத்தத்தோடு அலைமோதும் இரைச்சலோடு ''என்னடா சிவப் பயலே, சவுக்கியமா. உனக்கு பொறந்தநாளாச்சே இன்னிக்கு. க்ஷேமமாக இரு'' என்று பெரியவர்கள் குரல் கேட்கும். ''சாப்பிட்டியா'' என்று நடு ராத்திரி நன்றாக தூங்கும்போது கூட உள்ளூரிலிருந்து கூட டெலிபோன் அலையோசையோடு வெளியூர் கால் மாதிரி வரும்.

அந்த கால கட்டத்திற்கும் முன்பு பின்னோக்கி போனால், ''' இப்பவும் அனேக ஆசீர்வாதம், உன்னுடைய பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களை அனுப்புகிறேன். திட காத்ரமாக நோய் நொடியின்றி சிறஞ்ஜிவியா இருக்க பகவானைப் பிரார்த்திக்கிறேன் '' என்று போஸ்ட்கார்டில் ஒண்ணரைப்பக்கம் சிறிய எழுத்துக்களில் 100 வரியாவது எழுதி போன வாரம் எழுதினது சென்னைக்கு நான்கு நாள் கழித்து வந்து சேரும்.

அதற்கும் முன்பு -- நாம் இப்போது இன்னும் 50- -60 வருடங்களை கடந்து பின்னால் சென்று விட்டோம். --- அவரவர் வீட்டில் பாயசம் மட்டும் இலையில் கொஞ்சம் விழும். வழக்கமானவர்களைவிட அண்டை அசலில் இருந்து சில நெருக்கமான உறவினர் வருவர். பெரியவர்கள் நமஸ்காரம் பெற்று ஆசிதருவர். சிறியவர்கள் நமக்கு நமஸ்காரம் பண்ணி கையில் சில்லறை பெறுவார்கள்.

ஒரு விஷயம். பிறந்த நாளை ஆங்கிலேய மாதத்தில் தேதியில் கொண்டாடும் வழக்கமில்லை. தமிழ் மாசம் தேதி தான் ஏற்றுக் கொள்ளப்படும். உள்ளூர் கோவிலில் ஒரு அர்ச்சனை செய்யப்படும்.

வசதி இருந்தால் ஒரு வேஷ்டி துண்டு வாங்குவோம் அல்லது யாராவது பெரியவர்கள் கொடுப்பதோடு சரி.

விஷயத்துக்கு வருகிறேன்.

எனக்கு இன்று ஆங்கிலேய கணக்குப்படி ஏப்ரல் முதல் தேதி பிறந்த நாள். 79 முடிந்தாகி விட்டது. 80ல் காலை வைக்கிறேன். இது எனது உத்தியோக தஸ்தாவேஜ், பாஸ்போர்ட், பான் கார்டு ட்ரிவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு பிரகாரம் அன்று தான் பிறந்ததாக ஐதீகம். ஆனால் ஒரு ரகசியம். நான் இன்று பிறக்கவில்லை. நான் பிறக்காமலேயே பிறந்ததற்கு எனக்கு இன்று வாழ்த்துகள் வருகிறது. ஒரு தரம் என்னுடைய பிறந்தநாள் பற்றி எனது தந்தையிடம் பேசியது கவனத்திற்கு வருகிறது.

'' நான் ஏப்ரல் முதல் நாளிலா பிறந்தேன்.?''

''இல்லியே.''

''பின் எதற்கு இந்த தேதி கொடுத்தீர்கள் பள்ளியில்'?'

'' ஒ அதுவா'' என்று மெதுவாக சிரித்தார்.

'' என்ன சொல்லுங்கோ ?''

'' ஒன்றுமில்லை. உன்னைப் பள்ளிக்கூடம் சேர்க்கும்போது ஸ்கூல் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் ''உம்ம பையனுக்கு என்ன பிறந்த தேதி ? என்று கேட்டார்.

மூக்குக் கண்ணாடிக்கு மேல் வழியாக என் அப்பாவைக் கேட்டு விட்டு சுப்ரமணிய ஐயர் கட்டை ஸ்டீல் நிப் பேனாவை பதிவு ரிஜிஸ்தரிடம் கொண்டு போயிருக்கிறார்.

''எனக்கு சட்டென்று உனது பிறந்த தேதி ஞாபகத்துக்கு வரவில்லை (இதைச் சொன்ன அன்றைக்கு கூட அவருக்கு எனது உண்மை பிறந்த தேதி தெரியாது. பெரிய குடும்பம். நிறைய குழந்தைகள், பலதில் சிலது அல்பாயுசில் மரணம். எஞ்சியதில் மிஞ்சியதற்கு எதற்கு என்ன பிறந்த தேதி என்று அவரால் எப்படி சொல்லமுடியும்?) கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும் இது தான் நடைமுறையில் அக்கால வழக்கம்.. வைத்த பெயர் ஒன்று, அழைக்கும் பெயர் வேறு. பள்ளியில் இன்னொன்று.

''சரி அப்பறம் என்னாச்சு?''

'சுப்ரமணிய அய்யர் சீக்ரம் சொல்லுங்கோ நிறைய வேலை இருக்கு. ரிஜிஸ்டரில் என்ட்ரி பண்ணனும் என்று என்னை அவசரப்படுத்தினார். எனக்கோ சட்டென்று ஞாபகம் இல்லை '' என்றார்

''புரட்டாசிலே மஹம், ஆனால் என்ன வருஷம் என்று தான் யோசிக்கிறேன்....'' என் அப்பா.

''இங்க்லீஷ் தேதி தான் வேணும். அதைச் சொல்லுங்கோ முதல்லே.''

''.............................''

அப்பாவின் யோசனையை அறுத்தவாறு சுப்பிரமணியர் பார்வை என் மீது விழுந்தது.

''டேய் இங்க வா'' என்று என்னைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கதவின் நிலைப்படியில் நிற்க வைத்தார் சுப்ரமணிய அய்யர். கதவின் நிலையில் பென்சில் கோடுகள் சில தெரிந்தன. என் தலை உச்சி அருகே ஒரு கோடு தென்பட்டது. பரவாயில்லே உயரம் சரியாகத்தான் இருக்கு.

''டேய் பயலே, உன் வலது கையால தலைக்குமேலே கொண்டு போய் இடது காதைத் தொடு''. கஷ்டப்பட்டு தொட்டேன்.

'' சரி பரவாயில்லை. ஆறு வயசுன்னு போடறேன். இன்று என்ன தேதியோ அது லேர்ந்து 6 வருஷம் முன்னாலே' அப்பதான் அட்மிஷன் கிடைக்கும். இல்லேன்னா HM சுந்தரேசன் தொலைச்சுடுவான் என்னை''.

''சரி'' என்றார் அப்பா

''புரியறதா கிருஷ்ணய்யர் உங்களுக்கு ? இன்றைய தேதிக்கு உங்க பையனுக்கு 6 வயது என்று எழுதிக்கிறேன்? '' என்று என்னை எக்ஸ்ரே கண்களோடு கண்ணாடி வழியாக பார்த்தார் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் ( பாதிநாள் தலைமை ஆசிரியர் வரமாட்டார் எனவே சு. அ. தான் பள்ளிக்கூடத்தின் சர்வாதிகாரி) .

'இல்லேன்னா. இப்படி செய்யட்டுமா? 6 வருஷத்துக்கு முன்னாலே ஏப்ரல் முதல் தேதி என்று போட்டுக்கட்டுமா?'' என்று கேட்டார் சு. அ ,

'' அப்படிப் போட்டால் என்ன ஆகும்? - என் அப்பா.

'' நீங்கள் ஜூலை 1 அன்று வந்திருக்கேள் . ஏப்ரல் 1 என்று D.O .B. போட்டால் மூன்று மாதம் பையன் முன்னாலேயே பிறந்ததாக காட்டும். 6 வயது தாண்டிட்டுது என்று ரெகார்டு பேசும் . சந்தேகமில்லாமே பள்ளியில் சேர்த்துக் கொள்வோம். தேதியும் சுலபமா கவனத்திலே நிக்கும். உங்களுக்கும் உங்கள் பிள்ளை சிவன் பிறந்த தேதி சட்டென்று ஞாபகம் இருக்கும். இப்படி யோசிக்கவோ தடுமாறவோ வேண்டாமே.

''ததாஸ்து'' என்றிருக்கிறார் அப்பா.

இப்படியாகத்தானே இந்த பூவுலகில் நான் சத்தியமாக பிறக்காத ஏப்ரல் முதல் நாள் 1939 அன்று அரசாங்க கணக்கு தொடங்கும் நாளில் ''பிறந்து'' நிறைய பேரிடம் வாழ்த்துகளை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்னைவிட ஒரு சிறந்த ஏப்ரல் முதல் நாள் ''அறிவாளியை'' பார்த்ததுண்டா?

வருஷாவருஷம் என் அம்மா எப்பவோ சொன்ன கணக்குப்படி புரட்டாசி மக நக்ஷத்ரம் அன்று வீட்டுக்கருகில் இருக்கும் திருமால் மருகன் கோவிலில் அர்ச்சனை நடந்து வருகிறது. வீட்டில் பாயசத்தோடு சாப்பாடு. ஒரு மேல் துண்டு புதுசாக அன்று போட்டுக்கொள்கிறேன். அது வெளியே அதிகம் தெரியாத பிறந்தநாள் ரகசிய விழா.



அக்டோபர் 9 என்று ஆங்கில பிறந்த நாள் என் குழந்தைகள் பேரன் பேத்திகள் கொண்டாடி ஏதேதோ பரிசுகள் அளிக்கிறார்கள். எனவே எனக்கு மூன்று பிறந்தநாள்கள். உலகறிந்த சுப்ரமணிய அய்யர் ரெஜிஸ்டரில் தோற்றுவித்த பிறந்த நாள் ஏப்ரல் 1. அதன்படி நான் 79 வருஷங்கள் ப்ரயோஜனமின்றி வாழ்ந்து 80லும் அப்படியே காலம் தள்ள போகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...