Saturday, April 2, 2022

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கூரத்தாழ்வான்.        

''அருமையான குருவும் அபிமான சிஷ்யனும் ''- 3 

கூரேசருக்கு ஒரே  ஒரு குறை. தனக்கு புத்ர பாக்யம் இல்லையே  என்று.    ஸ்ரீ ரங்கத்தில்  அவரது வாழ்க்கை   எளிமையாக குரு  ஸ்ரீ ராமானுஜருக்கு சேவை செய்வதிலும்    நித்ய   உஞ்சவ்ரத்தியிலுமாக  சென்று கொண்டிருந்தது.
 
ஒருநாள் கொட்டும் மழை நிற்கவில்லை. எனவே கூரேசரால்  உஞ்சவ்ரத்திக்கு வெளியே போக முடியாததால்  அன்று அவருக்கும்  அவர் மனைவிக்கும்  உணவில்லை. துளசி ஜலம் தான் ஆகாரம். அன்றிரவும் வாயு பக்ஷணம் தான் போலும்.   இதில் கூரேசருக்கு வருத்தமே இல்லை. பரம சந்தோஷம். ஆஹா,  இன்று திருவாய் மொழி படிக்க நிறைய நேரம் கிடைத்ததே என்று ஆனந்தம்.!. ஆண்டாளுக்கோ நெஞ்சிலும் வயிற்றிலும் வலி. தனக்கு பசி என்பதற்காக அல்ல,  அருமையான  ஒரு காலத்தில்  ராஜாவாக இருந்த  தன்னுடைய  கணவர்  இப்படி  பட்டினி கிடக்க  நேர்ந்ததே  என்று.!.
நேரம் ஓடியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மணி சாயந்தர நைவேத்ய பூஜையை அறிவித்தது. ஆண்டாள் அம்மாள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அவள் மனம் என்ன வேண்டியது தெரியுமா? 

 "ஹே!! ரங்கநாதா உன் பக்தன் இங்கே ஆகாரமின்றி வாட உனக்கு மட்டும் உண்ண மனம் வருகிற தா?” 

ரங்கன் இதை கேட்டு சும்மாவா இருப்பான்?  அன்றிரவு   கோவில் பிரதான பட்டாச்சார்யர் உத்தம நம்பியின் செவியில் ஒரு குரல் ஒலித்தது :

”உடனே பிரசாதங்களுடன் கூரேசன் வீட்டுக்கு போ. பசியோடு உள்ளான். என் ஆசிகளையும் பிரசாதத்துடன் அனுப்பினேன் என்று சொல்".

உத்தம நம்பிக்கு உடல் சிலிர்த்தது வியர்க்க விருவிருக்க ஓடினார். மேள தாளங்களுடன் ரங்கனின் நைவேத்ய பிரசாதங்களுடன் அனைவரும் புடை சூழ நள்ளிரவில் கூரேசன் வீட்டுக்கு நடந்தார். வெறும் ஜலம் அருந்தி படுத்திருந்த கூரேசன் திடுக்கிட்டார். உத்தம நம்பி சொன்னதை அவரால் நம்பவே முடியவில்லை. ரங்கனின் கருணை அவரை திக்குமுக்காட வைத்தது. ஆண்டாள் அம்மா மனதில் நன்றியுடன் ரங்கனை வணங்கினாள். 

''இது ரங்கன் அனுப்பியது. அவசியம் நீங்கள் ஏற்றுகொள்ள வேண்டும்” என்றாள். கூரேசன் மனதில் ஒரு ஐயம். இது ஆண்டாளின் வேலையோ? என்று. அவரது கேள்விகளுக்கு விடையாக, தான் ரங்கனிடம் முறையிட்டதை சொன்னாள்.

"ஆண்டாள்,  நீ என்ன காரியம் செய்து விட்டாய் ஒரு கவளம் சோற்றுக்காக அந்த பேர் அருளாளனை சோதிக்கலாமா? "
இரவு ரங்கன் கூரேசன் கனவில் தோன்றினான்.

 " கூரேசா! நான் உனக்கு அனுப்பியது வெறும் சோறு மட்டும் அல்ல. உனக்கும் ஆண்டாளுக்கும் பிறக்கப்போகிற இரண்டு குழந்தைகளுக்கான வரப்ரசாதமும் கூட . அவர்கள் எம் குழந்தைகளும் ஆவர். எம்மை அவர்களில் நீங்கள் இருவரும் காண்பீர்”
கூரேசர் குதித்து எழுந்தார்.

"அடியே ஆண்டாள், இந்த அதிசயத்தை கேள்" என்று கூரேசர் அவளை எழுப்பி விவரம் சொன்னதில் அவளது சந்தோஷத்தை எழுத எனக்கு வார்த்தை இல்லை. ராமானுஜருக்கு விவரம் சென்றது. ஒரே வருடத்தில் இரு பிள்ளைகள் பிறந்தன. ராமானுஜரே அவர்களுக்கு “வியாச பட்டர்” “ பராசர பட்டர்” என நாமகரணம் செய்வித்தார். பிற்காலத்தில் பராசர பட்டரே ராமானுஜரின் வாரிசாக ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ சம்பிரதாய ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர்.


ஸ்ரீ ராமானுஜருக்கு வயது ஆகிவிட்டது. ஸ்ரீ வைஷ்ணவம் எங்கும்  வேரூன்றி விட்டது. எண்ணற்ற வைஷ்ணவர்கள் அவரைப்  போற்றினாலும் சில எதிரிகளும் முளைத்தனர். சைவ சமயம் அவரை எதிர்க்காவிட்டாலும் சில சைவர்கள் அவர் வளர்ச்சியில் கவலை கொண்டனர். கங்கைகொண்ட சோழ புரத்தில் ஒரு கிளர்ச்சி. அவருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் தீவிர எதிர்ப்பாக அமைந்தது. அந்த காலத்தில்  சோழ தேசத்தை ஆண்ட  சோழ ராஜா குலோத்துங்கன் வம்சத்தில் வந்த  , கிருமி கண்ட சோழன் ஒரு வீர சைவன். தனது ராஜ்யத்தில் வைஷ்ணவத்தை  பூண்டை வேரோடு அழிக்க நினைத்தான். அது ராமானுஜரை அழித்தால் மட்டுமே முடியும்.

"அழைத்து வாருங்கள் அந்த ராமானுஜனை இங்கே" , கட்டளை பிறந்தது. ராமானுஜரை தனது சைவ குருமார்களுடன் விவாதம் செய்ய வைத்து தோற்கடிக்க வேண்டும் வைஷ்ணவத்தை விட்டு சைவத்தை ஏற்க செய்யவேண்டும், மறுத்தால் கொன்றுவிடவேண்டும். இந்த எண்ணம் செய்தியாக கசிந்து சில பக்தர்கள் ராமானுஜரிடன் ஓடினர். எக் காரணம் கொண்டும் நீங்கள் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல கூடாது. உடனே சோழநாட்டை விட்டு வெளியேறுங்கள்" என்று கெஞ்சினர். அரசனின் ஆட்கள் வந்துவிட்டனர் ராமானுஜரை தேடி. கூரேசர் எப்படியோ ராமானுஜரை சம்மதிக்க வைத்து, தான் அரசனை சந்தித்தார். விரக்தியுடன் ராமானுஜர் சிலருடன் மட்டும் கர்நாடகாவில் மேல் கோட்டையை (திருநாராயணபுரம்) நோக்கி நகர்ந்தார். அங்கு பன்னிரண்டாண்டுகள் அந்த முதியவருக்கு வனவாசம் விதி வசமாகியது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை அங்கு பரப்பினார். ஸ்ரீ சம்பத் குமாரன் கோயில் கட்டினார். அவரது விடா முயற்சியில் மேல்கோட்டை ஸ்ரீ ரங்கத்துக்கு அடுத்ததாக சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலமாகியது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...