Friday, April 22, 2022

 

ஜன சேவா ஜனார்த்தன சேவா  -  நங்கநல்லூர் J K  SIVAN 


இது நான் சமீபத்தில் பம்பாய் போனபோது அறிந்து ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம்.

வாழ்க்கையில்  கஷ்டப்படாதவர்கள் கிடையாது.  ஆண்கள்  பெண்கள் இருவருமே  கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் என்றாலும்  பெண்களுக்கு  அது ஜாஸ்தி.  அவர்கள் படும்  வேதனையில் ஆண்கள் அளிக்கும் பங்கு தான் அதிகம் என்பதை சரித்திரம் பல தலையணை புஸ்தகங்களாக  சொல்லும்.  ஆணாதிக்க சமூகம் என்பது பல நூற்றாண்டுகளாக நமது பாரததேசமெங்கும்  எதிரொலித்த உண்மை. கொஞ்சம் கொஞ்சமாக சமூக நாகரிகம் பண்பாடு பழக்கவழக்கங்கள் மாறுபட  பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து  அது கொஞ்சம் அதிகமாகவே கூட இப்போது போகுமளவு  வளர்ந்து விட்டது எனலாம். 


ஒரு பெண்  பட்ட கஷ்டத்தை மட்டுமே சொல்கிறேன்.  அவள் பெயர் சிந்து தாய்.  என்னைக்காட்டிலும்  ஒன்பது வயது சின்னவள். மஹாராஷ்டிராவில், வார்தா ஜில்லாவில் பிம்ப்ரி மேகே க்ராமத்துக்காரி. அங்கே பிறந்தவள்.  அப்பா அபிமான சாதி  மாடு மேய்ப்பவர்.   ஏழைகள் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதற்கு  மதிப்பு கிடையாது. வேண்டாத  ஜீவன்.  சிந்தூதாய்க்கு பெற்றோர் இட்ட பெயர்  சிந்தி,  (மறதியில் ''கிழிசல் துணி'' ). அவள் அப்பா எப்படியாவது அவளை படிக்க வைக்கவேண்டும் என்று எண்ணி,  அம்மா மற்றும் பாட்டி அத்தைகள் விருப்பத்துக்கு மாறாக  பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்.  நாலாவது படிப்பதற்கும் நாலாயிரம் ப்ராப்ளம் . பாதிநாள் பள்ளிக்கூடம் அனுப்பமாட்டாள் அம்மா.  வீட்டில் வேலைசெய்ய ஆள் வேண்டுமே. எருமைகள் வீட்டில் இருந்ததே  அதை யார் மேய்ப்பது?  இந்த பெண் அந்த முக்கியமான வேலையை விட்டுவிட்டு எதற்கு படிக்கிறேன் என்று பள்ளிக்கூடம் போக வேண்டும். அதால் யாருக்கு லாபம்?  எருமை மேய்க்க அந்த குழந்தை . படிப்பு அதோடு நின்றுவிட்டது.

 ஒன்பது பத்து வயதாகி விட்டது. குதிரையாட்டம் வளர்ந்தாச்சு,  சீக்கிரம்   கல்யாணம் பண்ண வேண்டுமாம்!  மாப்பிள்ளை ஸ்ரீஹரி சப்கால், முப்பது வயதானவன். பெண்ணுக்கு 9-10 வயது.   அவளுக்கு  20 வயது முடிவதற்குள் மூணு குழந்தைகள். 

பெண்கள் மாடுகள் ஆடுகள் போல் வேலை வாங்கப்பட்டார்கள்.  பணம் கூலி சாப்பாடு சரிவர கொடுப்பதில்லை.  சிந்து தாய் கடுமையாக உழைத்தும்  வயிற்றுப்  பசி போக்க முதலாளி சம்பளம் கொடுக்கவில்லை என்பதால்  தைரியமாக  அந்த ஊர் அதிகாரி ஒருவரிடம் சென்று அழுது முறையிட்டாள்.  அந்த அதிகாரி போலீஸ் துறைக்கு வேண்டப்பட்டவன். சரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு அந்த பலான முதலாளி எச்சரிக்கப்பட்டான். அவனிடமிருந்து கூலி எல்லா ஏழை பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது.  அவனுக்கு எவ்வளவு கோபம் வரும் சிந்து தாய் மேல்? அவள் போய்  அதிகாரியிடம் சொன்னதால் தானே, முறையிட்டதால் தானே  தனக்கு இந்த கதி என்று அவள் புருஷனிடம் போய் இல்லாததும் பொல்லாததும் காதில் போட்டான். எப்படியாவது சிந்து தாயை பழிவாங்கவேண்டும் என்று தீர்மானித்தான் அந்த கொடிய  முதலாளி.   அப்போது நான்காவது குழந்தையை சிந்து தாய் 9 மாத கர்ப்பிணியாக  சுமந்துகொண்டிருந்தாள் .  

''டேய், உன் பொண்டாட்டியை அடக்கி வை. அவள்  எல்லை மீறி போகிறாள். அவள் பணத்துக்கு எதையும் செய்வாள் . நடத்தை கெட்டவள். நீ அவளை உடனே கொல் . இல்லாவிட்டால் உன்னையும் அவளையும் நான் கொன்று  விடுவேன் என மிரட்டினான்.  இந்தா ஒரு போனஸ் விஷயம்.   எனக்கும் உன் மனைவிக்கும் வெகுநாள் தொடர்பு உண்டு.  அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தகப்பன்.  நீ இல்லை . போதுமா?''

புருஷன் கோபாக்னியானான். அன்றிரவு வீட்டுக்கு வந்தவன்  சிந்து தாயை அடியோ அடி  என்று அடித்து வயிற்றில் உதைத்தான்.  வயிற்றில் உதைத்து அவள் குழந்தையை கொல்ல, அவளையும் கொல்ல  முற்பட்டான்.    நிறைமாத கர்ப்பிணியை அடித்து  உயிர் போய்விட்ட  நிலை ஆகிவிட்டது. மயக்கமாக  இருந்தவளை சிறந்தவள் என்று எண்ணி இழுத்துக்  கொண்டு போய்   பசு மாட்டு கொட்டிலில் போட்டு விட்டான்.  மாடுகள் மிதித்து இறந்தாள்  என்று ஊர் நினைக்கட்டும் என்று எண்ணம்.  

அவள் கண்ணைத் திறந்தாள்.  உயிர் போகவில்லை.  அவள் மேல் ஒரு பசு அவளை தனது நான்கு கால்களுக்கு இடையே வைத்து காப்பாற்றிக்  கொண்டிருந்தது. மற்ற மாடுகள் அவளை மிதிக்க அனுமதிக்கவில்லை.  அவள் மாமியார் நாத்தனார், அம்மா எல்லோரும் அவள் இறந்து விட்டாளா  என்று பார்க்க அங்கே வந்தபோது  அந்த பசு அவர்களை சீறிப்  பாய்ந்து விரட்டியது.   இது கட்டுக்கதை இல்லை, நிஜம் என்று தெரிகிறது.

அந்த நேரத்தில் பிரசவ  வலி வந்துவிட்டது. முக்கி முனகி  அருகே இருந்த ஒரு கல்லினால்  பிரசவித்த  பின் தொப்புள் கொடியை கஷ்டப்பட்டு அறுத்தாள் .பிறந்தது ஒரு பெண்குழந்தை. பசு மாட்டின் கால்களுக்கு இடையே பிறந்த குழந்தை. 

மெதுவாக எழுந்து என்னையும் என் குழந்தையும் காப்பாற்றிய  என் தெய்வமே  என்று அந்த பசுவின் கழுத்தைக் கட்டி கண்ணீரால் அலம்பி முத்தமிட்டாள். மணிக்கணக்காக நீ என்னை நிர்க்கதியாக இருக்கும் போது  காப்பாற்றியது எனக்கு கண்ணைத் திறந்து விட்டது.  அது ஒரு பாடம். நானும்  என்னால்   முடிந்தவரை  நிற்கதி யானவர்களுக்கு இனி இந்த வாழ்வில் உதவுவேன் இது சத்தியம் '' என்று  மனதில் தீர்மானம் செய்து கொண்டாள்.

தனது தாய்வீட்டுக்கு குழந்தையோடு சென்றவேளை தாய் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. ''கல்யாணம் ஆனபின் புருஷன் வீடு தான் உனக்கு கதி. திரும்பிப் போ''. அப்பா சில மாதங்களுக்கு முன்பே  செத்துப் போய்விட்டார்.  ''அப்பா இருந்தால் என்னை இப்படி நிர்க்கதியாக விடமாட்டாரே '' என்று கண்ணீர் உகுத்தவள், அருகே இருந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றாள் .  குளிருக்கு குழந்தையோடு ஒண்டினாள் .

ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி ஒரு  மயான பூமி. அங்கே  பிணங்களை  எரிப்பவர்கள்  போடும்  வாய்க்கரிசி, கோதுமை போன்ற தானியங்களை இறைப்பார்கள். அதெல்லாம் சேகரித்து  அந்த பிணங்கள் எரியும் தீயிலே  கஞ்சி காய்ச்சி குடித்தாள். குழந்தைக்கு பால் கொடுத்தாள் . ரெண்டு ஜீவன்களும், எப்படியோ இவ்வாறு உயிரோடு  வளர்ந்தது..  ஸ்டேஷனில் இருப்பவர்கள் விரட்டின   போதெல்லாம் மயான பூமி   யாரும் வராத இடம் என்பதால்  பாதுகாப்பு அளித்தது.   ஒவ்வொரு சமயம்  பேசாமல்  குழந்தையோடு தற்கொலை செய்து கொண்டுவிடலாமா? பிழைக்க வழியில்லாத போது மரணம் தான் சுகம் என்று தோன்றியது.  அப்படி ஒரு சமயம் தான் இருந்த ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ட்ரெயின் அடியில் குழந்தையோடு அரைபட்டு சாகலாம்  என்று முடிவெடுத்தபோது ஒட்டு அழுகுரல் கேட்டு யார் என்று சென்று பார்த்தாள் . ஒரு மரத்தடியில் வயதான ஒருவன் பசி பசி என்று அழுது கொண்டிருந்தான். நடக்க முடியாதவன்.  அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள் .  குழந்தையோடு எங்கெல்லாமோ ஓடி  பிச்சை எடுத்து  உணவு சேகரித்து அவனுக்கும் ஊட்டி விட்டு தானும்  சாப்பிட்டாள் .

'' கோழைகள் தான் மரணத்தை நாடுவார்கள். நான் எதிர்நீச்சல் போடுவேன். என் வாழ்வின் கடைசி மூச்சு இருக்கும் வரை என்னால் முடிந்தவரை  அனாதைகளுக்கு உதவுவேன் என்று  அசுர பலத்தோடு உழைத்தாள்.

அந்த கிழவனின் குரல் '' நீ  சாக முயற்சிக்காதே, அதைவிட உன்னால் முடிந்த காரியங்கள் எத்தனை யோ இருக்கிறது என்று  உபதேசித்த  கிருஷ்ணனின் குரலாக  காதில் விழுந்தது.''

அவள் அந்த கிழவன் இருந்த மரத்தை மேலே நோக்கி பார்த்த  போது  ஒரு கிளை  ஒரு மயிரிழையில் தொங்கிக்  கொண்டிருந்தது. எவனோ அந்த கிளையை வெட்டி இருக்கிறான். முழுதும் வெட்டாததால் துளி ஒட்டிக்கொண்டு மரத்தோடு தூங்கினாலும் அது கொடுத்த நிழலில் தான் கிழவன் கீழே படுத்து அழுதுகொண்டிருந்தான்.  

ஆஹா  என்ன இந்த தாராள மனது  இந்த மரைக்கிளைக்கு.   தன்னை வெட்டினாலும்  அந்த  நிற்கதி நிலையிலும்  கூட அந்த  மரக்கிளை   மற்றொரு ஜீவனுக்கு நிழல் கொடுத்தது  என்று உணர்ந்தாள் சிந்து தாய்.  இனி அவள் பிறர்க்குதவும் தாய். எந்த சக்தியும் அவளைத்  தடுக்க முடியாது. 

இனி  அந்த  கிழவன் அவளுக்கு இன்னொரு குழந்தை.  இதை அறிந்த பல அனாதைகள் அவளை நாடினார்கள். அவள் மும்முரமாக  எங்கெல்லாமோ அலைந்து பிச்சை எடுத்து கேட்டு பணம் சேகரித்து  அவர்கள் அனைவருக்கும்  உணவளித்தாள்.  ஒரு அனாதை இல்லமே  அட்ரஸ் இல்லாமல் அங்கே உருவானது.   சிந்து தாய்க்கு நல்ல குரல் வளம். கிருஷ்ணன் மேல் நிறைய  பாடிக்கொண்டே  பிச்சை எடுத்தாள் . பிறகு உதவ பசி தீர்க்க என்று கேட்டு  நிறைய அனாதைகளைத் தேடி அலைந்து உணவிட்டு ஆதரித்தாள் . உலகத்தில் நல்ல உள்ளங்களும் உள்ளனவே.  அவளுக்கு ஒரு அனாதை இல்லம் கட்டி கொடுத்தார்கள். நிறைய  பேர்  உணவு உடை தானம் வழங்கினார்கள்.  கிடுகிடுவென்று எண்ணற்றோருக்கு புகலிடம் கிடைத்தது. சிந்து தாய் அனைவருக்கும் உண்மையில் தாய் ஆனாள் .  ஆம்  அனைவரும் அவளை  '' மாயி'' மா, அம்மா என்று தான் அழைத்தார்கள்.பூனாவில் சாஸ்வாத் எனும் இடத்தில்,  அவள் அனாதை இல்லம்  கால் பதித்தது.

உயிர் வாழ  எவ்வுயிர்க்கும்  ஒரு அன்பு நிறைந்த அம்மா அவசியம் தேவை. இந்த உலகத்தில் இருக்கும் எண்ணற்ற  அனாதைகளுக்கு யார்  தாய்? சிந்து தாய்  தாயாகவே மாறி விட்டாள்.  ஆயிரக்கணக்கான  '' வயதான குழந்தைகள்''  ஆயிரக்கணக்கான  பேரன் பேத்திகள்  அவளிடம் ஆனந்தமாக வளர்ந்தார்கள்.    பாசமிகு தாயன்பு பெற்றார்கள். எத்தனையோ பேர்  அங்கேயே கல்யாணம் செய்து கொண்டு பேரன் பேத்திகள், மகன், மருமகளாக  அம்மாவுக்கு உதவி செய்தார்கள். 

ஒரு நாள் ஒரு  80 வயது கிழ  அனாதை வந்தான்.  உடம்பெல்லாம் புண்.  கண் பஞ்சடைந்து பசி.  அவனுக்கும் அவள் புகலிடம் அளித்தாள். அவன் தான் அவளைக் கொல்ல  துணிந்த  சப்கால், புருஷன்.  அவனிடம்  '' நீயும் எனக்கு ஒரு குழந்தை தான் இங்கே, நான் உன் தாய், மனைவி இல்லை ' என்று சொல்லிவிட்டாள் .

அவளிடம் படித்து வளர்ந்த அனாதைக் குழந்தைகள் பலர்  டாக்டர்கள், இன்ஜினியர்கள்,  வக்கீல்கள், பேராசிரியர் கள். 

ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேனே .  சிந்து தாய் பசுவின் கால்களுக்கு இடையே பிரசவித்தபோது பிறந்த பெண் குழந்தை   அம்மாவின் அனாதை இல்லத்தில் வளர்ந்த பின்  ஒரு வக்கீல். அனைவருக்கும் இலவச மாக  நீதி நியாயம் கிடைக்க பாடுபடும் பெண்.  சிந்து தாயின் பெண். தாயைப்போல சேய். நூலைப்போல சேலை. 

2016ல்  சிந்து தாய்க்கு மஹாராஷ்ட்ரா வில் ஒரு  நிறுவனம் சிந்து தாய்க்கு  டாக்டர் விருது  வழங்கியது.  அனாதைகளின் தாய் என்று அழைத்தது.  சிறந்த சமூக சேவகி என கௌரவித்தது.  அதன் பெயர்  DY Patil Institute of Technology and Research .  தேசத்தின் பல பாகங்களிலும், அகில உலகிலும் சிந்து தாய் அறியப்பட்டு விருதுகள் கௌரவம் பெற்றாள். ஒரு சில விருதுகள், கௌரவப்பட்டியல் கீழே தருகிறேன். 2010ல்  சிந்து தாய் வாழ்க்கை ஒரு மராத்தி திரைப்படமாக வெளிவந்தது.  ''மீ  சிந்து தாய் சப்கால்'' என்று அதற்கு பெயர். சக்கை போடு போட்டது. 54வது உலக அளவு குறும்படமாக லண்டனில் தேர்ந்தெடுக்கப்பட்டது.  

Maharashtra State “Ahilyabai Holkar Award” for social workers who work for women and children.2015 – Ahmadiyya Muslim Peace Prize for the Year 2014

2014 – Basava Bhushan Award 2014 Award from and with Baswa Seva, Pune.

2013 – Mother Teresa Award for social justice.

2013 – The National Award for Ionic Mother.

2012 – Real Heres Award, from CNN – IBN & Reliance Foundation.

2010 – Ahilyabai Holkar, Award is given by the Government of Maharashtra.

2008 – Woman of the Year Award is given by Loksatta.

1996 – Adoption Mother Award.

1992 – Leading Social Contributor Award.

Sahyadri Hirkani Award

Shivlila Women Gaurav Award.

Sindhutai Sapkal Organization

Sanmati Bal Niketan, Bhelhekar Vasti, Hadapsar Pune 

Mamta Bal Sadan, Kumbharwalan, Tasteful 

My Ashram Chikhaldara, Amravati 

Abhiman Bal Bhawan, Wardha 

Gangadharbaba dormitory cavity 

Saptasindhu Women’s Adhar Balasangopan and Educational Institution Pune


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...