Sunday, April 3, 2022

RAJAJI STORIES

 வெளியே  தெரியவில்லையே  ஏன் ?

நங்கநல்லூர்   J K  SIVAN 


1925  பெப்ரவரி 6ம் தேதி ராஜாஜி திருச்செங்கோட்டில், புதுப்பாளையம்  காலனியில்  காந்தி ஆஸ்ரமத்தை    ஆரம்பித்தார்.  இதற்காக  ரத்னசபாபதி கவுண்டர்   நாலரை ஏக்கர் நிலம் தானமாக தந்தார்.   ராஜாஜி தனது மகன் நரசிம்மன்(15) ,மகள் லட்சுமி(12) மற்றும் 15 ஆசிரமவாசிகளுடன் குடில் அமைத்து ஆசிரமப் பணிகளைத் தொடங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து வக்கீல்    தொழிலை உதறித்தள்ளிய  மதுரை N.நடராஜன் ஆசிரம மேலாளர்.1920 முதல் ராஜாஜியின் சீடர்  க. சந்தானம் காதி பணிகளுக்கான மேலாளர். “காந்தி ஆசிரமம்” ஒரு முன்மாதிரியாக சமூக மாற்றத்திற்கான வித்தாக தீண்டாமை ஒழிப்பு,மது ஒழிப்பு மற்றும் காதியை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. P.S.ராமதுரை, R.கிருஷ்ணமூர்த்தி N.S. வரதாச்சாரி போன்ற ராஜாஜியின் சீடர்களும் சேர்ந்துகொண்டார்கள்.  ஆசிரமவாசிகளில் 5 பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். மற்ற ஆசிரமவாசிகளுடன் ஒன்றாக உணவருந்தி ஒரே கூரையின் கீழ் வசித்ததால் சுற்றியிருக்கும் கிராமத்தாரின் வெறுப்பை எளிதில் சம்பாதித்துக் கொண்டார்கள்.பால்,காய்கறி வரத்து அடியோடு நிறுத்துப்பட்டது. ரகசியமாக ஒருவர் பால் கொண்டுவந்து கொடுத்து உதவினார். ஆசிரமத்தை கொளுத்த ஏற்பாடு நடப்பதாக ஒரு புரளி ராஜாஜியின் காதுக்கு எட்டியது.தீ விபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆசிரமவாசிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ரத்னசபாபதி கவுண்டரின் உதவியுடன் நிலைமையை சமாளித்தார்கள்.
அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று மது விலக்கு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தார் ரத்னசபாபதி கவுண்டர். வீரன் என்றொரு செருப்பு தைக்கும் தொழிலாளி குடி போதையில் அடித்து துன்புறுத்துவதாக  வீரனின்  மனைவி ராஜாஜியிடம் வந்து அழுது புலம்பினார். ராஜாஜி  வீரனைக் கூப்பிட்டு விசாரித்தார். ''சாமி அது பொய்  சொல்லுது, நான் அதை அடிச்சதேயில்லை '' என்றான் வீரன். ''வீரா  நீ  தைத்து விக்கிறா செருப்பு இதோ.  இதன் மேல் சத்தியம் செய் நீ சொல்வது பொய்  இல்லை என்று''  என்று  அவன் கையில் செருப்பை கொடுத்தார்.''சாமி  நான் சொன்னது பொய் , நான் இனிமேல்  குடிக்கவே மாட்டேன்.'' என்று சத்யம் செய்தான் வீரன். மனம் திருந்தி சாகும் வரை மதுவைத் தொடவில்லை. அவன். காந்தி ஆஸ்ரம  காலணி தயாரிக்கும் பிரிவிற்கு  வீரன்  மானேஜர்.  ராஜாஜி வீரனிடம் செருப்பு தைக்க கற்றுக்கொண்டார். அருகில் வசித்த பட்டியல் சாதியினரின் குடியிருப்புகளுக்கு    ஆஸ்ரமம் புதிதாக கிணறு வெட்டி கொடுத்தது.   அசுத்தமாக இருந்த பட்டியல் சாதி குடியிருப்புகளுக்கு சென்று ஆஸ்ரம தொண்டர்கள்  சுத்தப்படுத்தினார்கள். பிள்ளைகளுக்கு கல்வி போதித்தார்கள்.பட்டியல் சாதியைச் சார்ந்த சின்னான் என்பவரைச் சமையலுக்கு அமர்த்தினார்கள். ஆசிரமவாசிகளில் சகன் என்ற முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒருவரும் இருந்தார்.

அங்கமுத்து என்கிற பட்டியல் சாதி ஆசிரமவாசியை மசூலிப்பட்டினம் அனுப்பி காதி – அச்சு வரைகலை கற்றுக் கொள்ளவைத்தார் ராஜாஜி.அவரது மூத்த மகனை லயோலா கல்லூரியில் படிக்க வைத்தார். அவருக்கு இந்திய தபால் துறையில் வேலை கிடைத்து.நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அங்கமுத்துவின் மகளை கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார் ராஜாஜி.  பட்டியல் சாதியைச் சார்ந்த செவி குறைபாடுள்ள ஒருவரை அதற்கென உள்ள விசேஷப் பள்ளியில் ராஜாஜி  சேர்த்துவிட்டார். ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்ற அந்த மாணவனுக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுத்தார். காதி வேலை தெரிந்த பெண்ணிற்கு மணம் முடித்து வைத்தார். அந்த பெண்ணும்  மூன்று குழந்தைகளுடன் நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். புது தையல் இயந்திரம் வாங்க வசதி இருந்தும் ராஜாஜி கொடுத்த பழைய இயந்திரத்தையை இறுதி வரை பயன்படுத்தினார்.

ஆசிரமம் ஆரம்பித்து இரண்டு மாதங்களில் அருகில் இருந்த இருபதுக்கும்  அதிகமான  கிராமங்களை சேர்ந்த   ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பஞ்சில் இருந்து நூல் நூற்பதன் மூலம் மாதத்திற்கு ரூ ஒன்றரை வரை சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். ஆகஸ்ட் 1925 க்குள்  70க்கு  மேல்  நெசவாளர்கள் காதி துணி தயாரிப்பில் ஈடுபட்டார்கள்..

மொலிபள்ளி கிராமத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்காக திருசெஞ்கோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி கிராமத்தினர் துன்புறுத்தப்பட்டார்கள். காவல் அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூபாய் 200 வரை மிரட்டி கையூட்டு பெற்ற பின்பே விடுவித்தனர். கிராம மக்கள் ராஜாஜியை சந்தித்து முறையிட்டனர். அம்மக்கள் சார்பாக ராஜாஜி முறைப்படி மேலதிகாரிகளுக்கு புகார் அளித்ததன் பெயரில் கையூட்டாக பெற்ற தொகை திருப்பி அளிக்கப் பட்டதோடு நில்லாமல் காவல் நிலைய அதிகாரிகள் நிபந்தனை அற்ற மன்னிப்பும் கோரினார்கள்.

டிசம்பர் 1925 இல் திருப்பதியின் அடிவாரத்தில் உள்ள திருச்சானூர் ஆலயத்தில் நுழைந்த முருகேசன் என்கிற பஞ்சமர் (மாலா) ஒருவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் IPC 295 சட்டப்படி ஒரு மாதக்  கடுங்காவல் தண்டனையோ அல்லது 75.ரூபாய் அபராதமோ கட்டவேண்டிய கொடுமையான சூழலில் அவர் சிக்கியிருந்தார். சித்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கில் ராஜாஜி பங்கேற்க வந்தார். தன்னுடைய ஒத்துழையாமை சபதத்துக்குப் பங்கம் வராமல் தோள்கள், தலை ஆகியவற்றைக் கதர் துணியால் மூடிக்கொண்டு வந்திருந்த அவர் வழக்கறிஞர் ஆடையை அணியவில்லை.

நீதிபதியிடம் குற்றஞ்சாட்டப்பட்டவரின் நண்பராக வழக்கில் வாதாட அனுமதி பெற்றார். ‘குற்றஞ் சாட்டப்பட்டவர் இறைவனைத் திருடிக்கொண்டு போனார். தன்னுடைய இதயக் கூடையில் இறை வனை அளவில்லா அன்போடு கொண்டு சென்றது எப்படித் தவறாகும்? பத்தாண்டுகளாகக் கோயிலுக்கு வெளியே நின்று தேங்காய் உடைத்துக் கொண்டிருந்த அவர் இந்த முறை பக்தி மேலீட்டால் ஆலயத்துக்குள் நுழைந்திருக்கிறார். கோயில் நிர்வாகமே எதிர்த்தாலும், தன்னுடைய உரிமையை அவர் பறித்துக் கொள்வது தவறாகாது.’ என்று ராஜாஜி கம்பீரமாக வாதிட்டார். அவர் ஆலயத்துக்குள் சென்றது தவறில்லை என்றாலும், சட்டப்படி ஆலய நுழைவு செல்லாது என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி மதத்துக்கு எந்த அவமானமும் அவரால் உண்டாகவில்லை என்று சொல்லி குற்றஞ்  சாட்டப்பட்டவரை விடுவித்தார். இந்தச் சம்பவத்தை ஒட்டி ராஜாஜி அந்தப் பக்தர் பாடுவதாக எழுதிய பாட்டு  தான் இன்று  உலகப்பிரசித்தமாகி நீங்களும் நானும் கூட  தினமும்  பாடுகிறோம்: 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...