Tuesday, April 19, 2022

OM NAMO VENKATESA

 


ஓம்  நமோ  வெங்கடேசா---  நங்கநல்லூர் J K  SIVAN 


குளிப்பது  என்பது  நமக்கு ஒரு  தினசரி  காரியம்.  சிலர்  விடிகாலையிலேயே  குளிக்கும் வழக்கம் உடையவர்கள்.  உலகத்திலேயே   அற்புதமாக  அதிகம் குளித்தவர் யார் என்றால் முதல் மார்க்  மஹா பெரியவாளுக்கு தான்.  ஆஹா, அவர்  ஸ்னானம் செய்யாத  புண்ய தீர்த்தமே இல்லை. காலால் நடந்து எத்தனை ஊர்கள், க்ஷேத்ரங்கள், எத்தனை தீர்த்தங்கள், புஷ்கரணிகளில்   ஜபம் ஸ்னானம் செய்தவர்.  நாம்  குளிக்க  வெந்நீரைத்  தேடுகிறோம்.  அந்த நேரத்தில் எப்படியோ ஏதாவது ஒரு சினிமா பாட்டு  கர்ணகொடூரமாக வாயிலிருந்து  புறப்படுகிறது.  

தினம்தோறும் காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு பூஜையை செய்தபின் அந்த நாளுக்குரிய பணிகளை, கடமைகளைச் செய்தோமென்றால், நாள் முழுவதும் தன்னம்பிக்கையும், புத்துணர்வும் தெளிவான மனநிலையும் அமைவது சர்வ நிச்சயம்.   கிருபானந்தவாரியார் நீராடுவதற்கு முன்பாக,  எப்போதும்  குளிக்க இருக்கும் தண்ணீரில், 'ஓம் சரவணபவ' என்று நீரில் எழுதிவிட்டுத்தான் குளிப்பாராம்.  இடுப்பில்  அரணாக்கயிறு என்று சொல்லப்படும்  அரைஞாண்  கயிறு அணிவது மிகவும் அவசியம். குளிக்கும் போது இடையில் உள்ளாடை மற்றும் இடுப்பில் துண்டுடன் தான் குளிக்கவேண்டும். அப்படிக் குளிக்கும்போது தனது மனதுக்குப் பிடித்த சுவாமியின் மந்திரத்தைச் சொல்லி வழிபாடு செய்து கொண்டே அன்றைய  தினத்தை தொடங்கலாம்.

எங்கு நாம் குளித்தாலும் நாம் குளிக்கும் நீர், கங்கையென மனசில் நினைத்துக் கொள்ளவேண்டும்.  அப்படி நாம் குளிக்கும்போது சொல்வதெற்கென்று ஒரு குட்டி மந்திரம் இருக்கிறது.

गङ्गे च यमुने चैव गोदावरि सरस्वति ।
नर्मदे सिन्धु कावेरि जलेऽस्मिन् संनिधिं कुरु ॥

Gangge Ca Yamune Chaiva  Godaavari Sarasvati |
Narmade Sindhu Kaaveri Jales
min Sannidhim Kuru ||

'கங்கேச யமுனே  சைவ கோதாவரி சரஸ்வதி
 நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு'

''புண்ய  நதி மாதாக்களே,  ஹே கங்கே, யமுனே , கோதாவரி, சரஸ்வதி, நர்மதே , சிந்து, காவேரி, நீங்கள் எல்லோருமே  இதோ நான் குளிக்கும் கார்ப்பரேஷன் தண்ணீரில் கொஞ்சூண்டு கலந்து கொண்டு என்னிடம் உள்ள அழுக்கு, பாவம் எல்லாவற்றையும்  நீக்குங்கள் '' 
என்று நாம் சொல்லி நீராடினோமென்றால், அந்த நீராடல் புனித நீராடல் ஆக மாறி விடுவதாக ஐதீகம்.

நாம் ஸ்னானம் செய்வதற்கு பெயர் குளியல். பகவானை குளிப்பாட்டுவது  அபிஷேகம். திருமஞ்சனம் என்கிறோம்.  நாம் குளிப்பது இருக்கட்டும். திருப்பதி  வெங்கடேசனுக்கு  வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு நடைபெறும்  அபிஷேகம் பற்றி படித்தேன். ரொம்ப பிடித்ததால் உங்களுக்கும் அதைப் பற்றி சொல்கிறேன். இது நாம் காணமுடியாத விஷயம்..
 
திருப்பதி பாலாஜி என்கிற  வேங்கடேச பெருமாள் ரொம்ப உயரம். 9 1/2 அடி . முழுதும் சாளக்கிராமத்தால் ஆன   தானே தோன்றிய  ஸ்வயம்பு விக்ரஹம்.  வைகுண்ட வாசியான  மஹாவிஷ்ணுவே  பூமியில் அவதரித்த அர்ச்சாவதாரம்.
சுவாமி  அணிந்திருக்கும் பட்டு பீதாபரங்கள் பட்டு உத்தரீயம் முதலியவை அகற்றிவிட்டு  அவருக்கு கௌபீனம் அலங்கரித்து  அவருடைய  திருமேனிக்கு புனுகு தைலம் தடவி அபிஷேகம் ஆரம்பமா கிறது.  வேத சாஸ்த்ரீகள், பண்டிதர்கள், பக்தி  சூக்தங்களை பாராயணம் பண்ணிக் கொண்டு நிற்பார்கள்.  பட்டாச்சாரியார் சுத்தமான தண்ணீருடன் அபிஷேகம் ஆரம்பமாகிறது.  சுத்த ஜலத்துக்கு அப்புறம்   பசும்பால் அபிஷேகம். சாளக்கிராம விக்ரஹம் என்பதால்  பசும்பால் மட்டும்தான் அபிஷேக திரவியம். 

பசும்பால் அபிஷேகத்துக்கு அப்புறம்  
திரும்ப  சுத்த ஜல ஸ்னானம். (சுத்தோதகம்) ,திருமேனியில் ஒட்டிக்கொண்டிருக்கும்  பசும் பாலின் பிசுபிசுப்பு  போவதற்காக  பரிமளம் எனும் சுகந்த திரவியத்தை  (சந்தனம், குங்கும்பபூ, பச்சை கற்பூரம்  எல்லாம் சேர்ந்தது)  வேங்கடேசன்  திருமேனியில்  மிருதுவாக அப்புவது  (மத்தனம்). மீண்டும்  அதன் பின்  சுத்தோதக ஸ்நானம்.

ஸ்ரீனிவாசனின் மார்பில் வலது பக்கத்தில்  வியூக லக்ஷ்மி, ஸ்ரீ,  எனும்  விசேஷ சக்திவாய்ந்த மஹா லக்ஷ்மி இருக்கிறாளே. அவளுக்கு  மஞ்சள் காப்பு.  திருமஞ்சனம்.  அப்புறம் இந்த  சுத்தோதகம்.   பரிமளகாந்தம் சேர்ந்த இந்த சுத்த ஜல ஸ்னான தீர்த்தம் தான் நமக்கு  ஒவ்வொரு  உத்ரணி  ஸ்ரீ தீர்த்தம்தான் அபிஷேக ஜலப்ரசாதமாக  வழங்கப்படுகிறது. .

ஸ்நானத்துக்குப்  பின்  ஸ்ரீனிவாசனுக்கு  ஏகாந்தமாக அலங்காரம்.  திருமேனியில்  இன்னும்  கொஞ்சம் இருக்கும்  ஈரத்தை தோத வஸ்திரத்தினால் ஒத்தி எடுத்து  வேஷ்டி கட்டி விடுவார் பட்டாச்சாரியார்.   வேஷ்டியின்  நீளம்  என்ன தெரியுமா?  24 முழம்.  ஒவ்வொருநாளும்  புதிய வேஷ்டி. 12 முழ நீளம் கொண்ட பட்டு உத்தரீயம். இதெல்லாம்   அணிவித்த பின்  சிரசில்   சிறுவா வஸ்திரம் சுற்றி,  வேங்கடநாதனின்   முக பிம்பத்தில் பச்சை கற்பூரம் நீர்க் காப்பாக, மெலிதாக அலங்கரித்து, சுவாமியின் நிஜபாத தரிசனம் பக்தர்களுக்கு  கிடைக்கிறது.  அதை தரிசனம் செய்தவர்கள் நிச்சயம் ரொம்ப புண்யசாலி  பாக்கியவான்கள்.  எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. இன்னும் எத்தனை ஜென்மம் காத்திருக்கவேண்டுமோ?

இனி  ஆபரணம். ஸ்ரீனிவாசன் திருமேனியில் நாகாபரணம், இடுப்பில் ஒட்டியாணம், மார்பில் ஸ்ரீவத்சம்,கௌஸ்துபம் அணிகலன்கள் சூட்டப்படுகிறது.  அப்போது நாம் பெரும் திவ்ய தரிசனத்துக்கு பெயர்  
நிஜபாத தரிசனம்.   ஸ்ரீனிவாசனின்  பாத  கமல தரிசனம்.  வெங்கடேசனின்   நிஜபாதங்கள் மற்ற நேரங்களில் தங்க கவசங்களாலும் , அர்ச்சனை செய்த துளசி தளங்களால் மூடி இருக்குமே.

நிஜபாத தரிசனம்  முடிந்து.   திவ்ய அலங்காரம் . இதற்குப் பெயர்  சமர்ப்பணா.  நாம்  காண முடியாதது.   கதவு சாத்தி  இருக்கும்.  பட்டாச்சாரியார்  மட்டும்தான்  உள்ளே  கர்ப க்ரஹத்தில் 
அலங்காரம் பண்ணிக் கொண்டிருப்பார்.

முதலில் ஸ்ரீனிவாசன் முகத்தில் பச்ச்சை கற்பூரத்தால்  திரு நாமமம் சாற்றிவிட்டு,  அதன் நடுவில் கருப்பு நிறமான கஸ்தூரி திலகம்,  மூங்கில் இலை  போன்ற வடிவத்தில் விட்டுவிடுவார்.  அப்புறம்  புனுகு தைலம் லேபனம் செய்வார்.  புதிய பட்டு வேஷ்டி உத்தரீயங்களை அணிவிப்பார்.  ஸ்ரீனிவாசனின் ஆபரணங்கள்  அணிவிப்பதில் ஒரு  குறிப்பிட்ட  க்ரமம் , வரிசை, இருக்கிறது. அதன் படி தான்  அணிவிப்பார்.   எல்லா ஆபரணங்களும் இவ்வாறு  சூட்டியபின்  ஸ்ரீனிவாசனுக்கு  கிரீடம் அணிவிப்பார்.   ஸ்ரீனிவாசன் இருக்கும்   தங்கத்தாலான  ஸ்ரீ லக்ஷ்மிக்கு  
குலசேகரப்படியின் உள் பக்கம் ஏகாந்தமாக திருமஞ்சனம் நடத்தி, தாயாருக்கு பட்டுவஸ்திரம் அணிவித்து ஸ்வாமியின் திருமார்பில் அலங்கரிக்கப்பட்ட பிறகு, ஸ்வாமிக்கு நவநீதம் அம்சை  (நைவேத்யம்) செய்வார்..
அப்புறம்  பச்சகற்பூர ஆரத்தி நடக்கிறது. இதன்பிறகு தோமாலை சேவை ஆரம்பாகும்.  இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...