Monday, April 4, 2022

nostalgia

 


பிறந்த நாள் ரஹஸ்யம்  - நங்கநல்லூர்  J K  SIVAN 


இன்று 4.4.2022.   மூன்று நாள்  முன்பு என்னுடைய  பிறந்தநாள் சத்தம் போடாமல் வந்து போய்விட்டது.  சிலர்  எனக்கு வாழ்த்துகள் அனுப்பியதற்கு  நான் நன்றி தெரிவிக்கவில்லை.  எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

என்னுடைய  பிறந்த  நாள் எல்லோருடையதும் போல ஆங்கில  காலண்டர்  பிரகாரம், தவிர  தமிழ்  வருஷம்,  மாசம், நக்ஷத்ரம்  பிரகாரம் மட்டும்  அல்ல.  இது ரெண்டையும்  தவிர   இன்னொன்றும் இருக்கிறது. அதி  முக்கியமான அந்த பிறந்த நாள்  ஏப்ரல்  1, 1939.   அது தான்  என்னுடைய  ஆவணங்களில் நான் பிறந்ததாக காட்டும்  நாள். அதன் பிரகாரம் தான் உலகத்தில் என்னை  எல்லோரும்  வாழ்த்துகிறார்கள்,  பல  நாடுகள்  பறந்தேன்.   எல்லோரும்  என்னை  அன்று  பிறந்ததாக அறிகிறார்கள். உத்யோகம்,  படிப்பு, வீடு வாசல், என் வருவமான வரி,  ஆதார்,  டிரைவிங் லைசென்ஸ்.  இன்சூரன்ஸ்  பாலிசி,  பாஸ்போர்ட்,   சகலத்திலும்  நான்  அன்று தான் பிறந்திருக் கிறேன்.

ஆனால் நான் அன்று பிறக்கவே இல்லை என்பது தான் விசேஷம்.  இதற்கு பின்னால் உள்ள கதையை சொன்னால் தான் புரியும்.  

 84 வருஷங்களுக்கு முன்னால்  வெள்ளைக்கார  அரசாங்கத்தில் பள்ளிக்கூடங்களில்  ''உன்னை சேர்த்துக்  கொள்ள மாட்டோம், போய் உன் பிறந்தநாள் சான்றிதழ் கொண்டுவா. இல்லையென்றால்  இத்தனை ரூபாய் காசு கொடு '' என்று கேட்க யாருக்கும்  தோன்ற  வில்லை,  தெரியவில்லை.

ஆறு  வயதில் தான் பள்ளிக்கூடத்தில்  ஒண்ணாம்  கிளாஸில் சேர்ப்பார்கள். பிரி KG ,LKG , UKG  நர்ஸரி  என்று காசு பிடுங்கும் வித்தை தெரியாது.   கூரைக்  கட்டிடம் .   கார்பொரேஷன்  பள்ளிக்கூடம் ஒன்று சூளைமேட்டில்  இருந்தது.   இன்னும் இருக்கிறது.  அதில்  சேர்த்தார்கள்.

'' என்னை பள்ளிக்கூடம்  சேர்த்தபோது  சுப்ரமணிய அய்யர்  அப்பாவுக்கு  தெரிந்தவர் தான் ஆக்ட்டிங் ஹெட்மாஸ்டர். 
'' கிருஷ்ணய்யர்  என்ன  உங்க  கடைசி பையனா?  எத்தனாவது படிக்கிறான்?
'' ஆறு வயசு ஆயிட்டுது.   அழைச்சுண்டு வந்திருக்கேன்.''
 ''உம்ம  பையனுக்கு  என்ன   பிறந்த தேதி ?  என்று  மூக்குக்  கண்ணாடிக்கு  மேல் வழியாக  
 என்  அப்பாவைக் கேட்டு பேனாவை  பதிவு  ரிஜிஸ்தரிடம்  கொண்டு போனார்  சுப்ரமணிய ஐயர் . என்னைப்போலவே  இன்னும் நிறைய  பிள்ளைகள் பெற்றோரோடு, அழுதுகொண்டே நின்றார்கள்.
 ' சட்டென்று  எனது உண்மையான  ஆங்கில   பிறந்த தேதி  அப்பாவுக்கு  ஞாபகத்துக்கு வரவில்லை    பெரிய குடும்பம். நிறைய  குழந்தைகள்,  பலதில் சிலது  அல்பாயுசில்  மரணம். எஞ்சியதில் மிஞ்சியதற்கு  எதற்கு  என்ன  பிறந்த தேதி  என்று  பெற்றோர்களால்  சொல்ல முடியாத  காலம். அப்பாவால் உடனே  என் பிறந்த தேதியை நினைவுக்கு  கொண்டுவர முடியவில்லை. 

கிட்டத்தட்ட எல்லா  குடும்பங்களிலும்  இது தான்  நடைமுறையில் அக்கால  வழக்கம்..  வைத்த பெயர்  ஒன்று,   அழைக்கும் பெயர்  வேறு. பள்ளியில்  இன்னொன்று.

 ''கிருஷ்ணய்யர்  சீக்கிரம் யோசிச்சு சட்புட்டுன்னு  இவன் பிறந்த தேதி சொல்லுங்கோ.  நிறைய பேர்  அட்மிஷனுக்கு வந்திருக்கா. ஜூன் மாதம் ரொம்ப  அதிக வேலை எங்களுக்கு.   ரிஜிஸ்டரில்  என்ட்ரி
 பண்ணனும்''  என்றார்  

 ''புரட்டாசிலே  மஹம், ஆனால்  என்ன வருஷம்னு  தான் யோசிக்கிறேன்....''- 
இப்போது போல்  மொபைல் போன் இருந்தால்  அப்பா அம்மாவை கூப்பிட்டு கேட்டிருப்பார். போன் என்றாலே  என்ன வென்றே தெரியாது.

''JK  எனக்கு  இங்க்லீஷ் தேதி  தான்  வேணும்.  பஞ்சாங்க தேதிக்கு  சரியான  ஆங்கிலச் தேதி பார்க்க நேரம் கிடையாது.  அதைச் சொல்லுங்கோ முதல்லே.''
 ''.............................''
அப்பாவின்  யோசனையை  அறுத்தவாறு,  சுப்பிரமணியர்  சுவர் கடிகாரத்தை பார்த்தார்.  நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர தேதி கிடைக்கவில்லை.  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னை அழைத்தார்.

''டேய்  இங்க வா'' 
 என்னை  கையைப் பிடித்து  இழுத்துக்கொண்டு போய்  கதவின் நிலைப்படியில்  நிற்க வைத்தார்  சுப்ரமணிய  அய்யர்.   கதவின் நிலையில்  பென்சில்  கோடுகள்  சில  தெரிந்தன.   என்  தலை உச்சி  அருகே  ஒரு  கோடு  தென்பட்டது.  பரவாயில்லே  உயரம்  சரியாகத்தான்  இருக்கு.  சிவனுக்கு  ஆறு வயசுன்னு போடறேன்.
''ஓஹோ.  அப்படி  பண்ண முடியுமா?
 ' இன்று என்ன தேதியோ  அது லேர்ந்து  6 வருஷம் முன்னாலே''ன்னு  ஸ்கூல் ரெக்கார்ட்  வயசைக்  காட்டும்.  
 ''சரி' ஒரு சில  மாசங்கள் , நாட்கள் தான்  பிறந்த தேதியிலிருந்து  வித்யாசமாகும் பரவாயில்லை.' என்றார்  அப்பா
'' ஆமாம்.  புரியறதா ?  இன்றைய தேதிக்கு  உங்க  பையனுக்கு  6 வயது  என்று  எழுதிக்கிறேன் "?'  என்று  என்னை  எக்ஸ்ரே  கண்களோடு  கண்ணாடி வழியாக  பார்த்தார் வாத்தியார்  சுப்ரமணிய  அய்யர்( பாதிநாள்  தலைமை ஆசிரியர் வரமாட்டார்  எனவே  சு. ஐ. தான் பள்ளிக்கூடத்தின் சர்வாதிகாரி) .

 'இல்லேன்னா. இப்படி  செய்யட்டுமா?  இன்னும்  நன்னா  உங்களுக்கு ஞாபகம் இருக்கும்படியான ஒரு தேதி பிக்ஸ் FIX பண்றேன்.    6 வருஷத்துக்கு  முன்னாலே  ஏப்ரல் முதல்  தேதி  என்று  போட்டுக்கட்டுமா?''  என்று கேட்டார் சுப்ரமணிய ஐயர் .

 '' அப்படிப்  போட்டால் என்ன  பிரயோசனம்?  -   என்  அப்பா.
 '' நீங்கள்  ஜூன்   4ம் தேதி  அன்று வந்திருக்கேள் .  ஏப்ரல்  என்றால்  மூன்று  மாதம்  பையன்  முன்னால்  பிறந்ததாக  காட்டும்  6  வயது தாண்டிட்டுது  என்று ரெகார்டு  பேசும்.
  சந்தேகமில்லாமே  பள்ளியில்  சேர்த்துக் கொள்வோம்.  தேதியும்  சுலபமா  கவனத்திலே  நிக்கும்.   உங்களுக்கும்  சிவன்  பிறந்த  தேதி  சட்டென்று  ஞாபகம் இருக்கும். இப்படி யோசிக்கவோ தடுமாறவோ  வேண்டாமே. ''

 ''ததாஸ்து''  என்றிருக்கிறார்  அப்பா.  

 இப்படியாகத்தானே   இந்த  பூவுலகில் நான்  சத்தியமாக  பிறக்காத   ஏப்ரல் முதல் நாள்  1939 அன்று  அரசாங்க கணக்கு  தொடங்கும்  நாளில்  ''பிறக்க வைக்கப்பட்டு '' இன்றும்    நிறைய பேரிடம்  வாழ்த்துகளை  வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிக்  கொண்டிருக்கிறேன்.  என்னைவிட  ஒரு  சிறந்த  ஏப்ரல் முதல்  நாள்  ''அறிவாளியை''  பார்த்ததுண்டா?

வருஷாவருஷம்  என்  அம்மா  எப்பவோ  சொன்ன கணக்குப்படி   புரட்டாசி  மக  நக்ஷத்ரம்  அன்று வீட்டுக்கருகில் இருக்கும்  திருமால்  மருகன்  கோவிலில்  அர்ச்சனை  நடந்து வருகிறது. வீட்டில் பாயசத்தோடு  சாப்பாடு. ஒரு மேல் துண்டு புதுசாக  அன்று  போட்டுக் கொள்கிறேன். வெளியே  அதிகம் தெரியாத  பிறந்தநாள் ரகசிய விழா.  அதற்கு சரியான ஆங்கில தேதி  9.10.1939 என்று  முகநூலுக்கு மட்டும்  தான் தெரியும்.  அன்று வாழ்த்துபவர்களுக்கு மனப்பூர்வமான  நன்றி.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...