மனதில் பதியட்டும் - 13 - நங்கநல்லூர் J K SIVAN
மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த தலைப்பில் நான் எழுதுவது பல மேதைகள், ஞானிகள், ரிஷிகள், விஞ்ஞானிகள், டாக்டர்கள் வக்கீல்கள் ஆகியோர் கருத்துகள். எடுத்துச் சொல்வது என் வழியில் என்பதை தான் நான் செய்கிறேன். பல இடங்களில் பல வேளைகளில் படித்ததை, அறிந்ததை எனக்குத் தெரிந்த வழியில் எடுத்து எழுதுகிறேன் அவ்வளவு தான். இதனால் பலனடைவோரில், உங்களில் நானும் ஒருவன்.
நம்முடைய துன்பத்தை நாம் மலைபோல் பெரிதாக நினைக்கிறோம். அது நம் ஸ்வபாவம். நம்மையும் விட துன்பத்தில் வருந்துபவர்கள் எவ்வளவோ மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை நினைப்பதே இல்லை. ''மனிதன் என்பவன்'' என்ற பாட்டில் கண்ணதாசன் . ''நமக்கும் கீழே உள்ளவர் கோடி ...'' என்று அற்புதமாக பி பீ. ஸ்ரீநிவாஸை பாடவைப்பார். நமக்கு கீழே உள்ளவர்களை பற்றி நினைத்து அவர்களுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய நினைக்க வேண்டும். அப்போது நம் துன்பங்கள் கண்ணில் படாது, மனதில் நிற்காது.
தர்மம் செய்ய நினைத்தால் பலன்களை எதிர்பார்த்து செய்யக் கூடாது. யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது நம் வேலையல்ல. அது ஈஸ்வரன் வேலை என்கிறது உபநிஷதம். ஆனால் எவ்வளவு தான் கீதையோ நீதி நூல்களோ எடுத்துச் சொன்னாலும் நமக்கு ஜீரணமாகவில்லை. கோவிலுக்கு கொடுத்த சின்ன க்ரில் கேட், பாதரச குழாய் விளக்கில் கூட அதை மறைக்கும் அளவுக்கு நம்முடைய பெயர். எத்தனையோ கோவில் படிக்கல்கள், சுவர்களில் இதை அருவருப்பாக பார்க்கிறோம். திருந்தவில்லை.
இயற்கையில் மாறுதலுக்கு உட்படாதது என்று எதுவுமே இல்லை. உலகம் என்பதே மாயை, எப்போதும் எல்லாமுமே, சகலமும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. மலையும், நதியும், சமுத்திரமும் கூட காலக்கிரமத்தில் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன. அவற்றின் மாற்றம் நமக்கு கண்ணில் படவில்லை. பழைய சரித்தர பூகோள படங்களில் லெமூரியா கண்டம் என்று ஒன்று இருந்தது. இந்தியாவும் ஸ்ரீலங்காவுக்கு ஒன்றாக இருந்தது. குமரிக்கண்டம் என்று ஒன்றின் மூலம் நடந்து அங்கும் இங்கும் போனார்கள். பூமி, சூரியன் சந்திரன் எல்லாமே சுழற்சி தான். பஞ்சாங்கத்தில் படித்துவிட்டு மறந்து போகிறோம். மாறுதல் தெரிந்துகொண்டால், அறிந்துகொண்டால், பற்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
ராம நாமத்தை தாரக மந்திரம் என்று குறிப்பிடுவார்கள். "தாரகம்' என்றால் "பாவங்களைப் பொசுக்கி மேன்மைப் படுத்துவது' என்று பொருள். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை விடாது ஜெபியுங்கள் என்கிறார்கள் மஹா பெரியவா போன்ற ஞானிகள்.
இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களும் ஒரு நாள் இந்த உலகை விட்டு பிரிந்து செல்லத்தான் வேண்டும். மனிதர்களாகிய நாம், ஆடு மாடு மாதிரி இறக்க கூடாது. ஆனந்தமும், அமைதியும் நிரம்பி அதன்பின் இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அதுதான் பூரணத்துவம் ஆகும். பூரணத்துவத்திற்கு வேண்டிய காரியங்களை நாம் செய்வதாக இருந்தால் நம்மை நாம் அறிய வேண்டும். நமக்கு சாப்பாடு வேண்டும். உத்தியோகம் வேண்டும். கல்யாணம் செய்து மக்களை பெற்று இல்லற தர்மத்தை கடைப் பிடித்தாக வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஸ்வதர்மம் என்று சில கடமைகள் அதற்காகத் தான் நம் முன்னோர்கள் நியமித்திருக்கிறார்கள் . அவற்றை படித்தா வது பார்க்கவேண்டும்.
ஒழுக்கமாக நான்கு பேருக்கு உதவியாக நல்ல பெயருடன் வாழ்ந்த மனிதன், இந்த உலகத்தை விட்டு பிரியும் போது சமுதாயம் அவனுக்காக கண்ணீர் வடிக்கிறது. தானும் அமைதியடைந்து பிறருக்கும் தன்னால் முடிந்தவரை அமைதியை தந்து வாழக்கற்று கொள்பவனே மனிதர்களுள் சிறந்தவனாகிறான். மஹான்கள் அப்படி வாழ்ந்து ஜீவ சமாதியானவர் கள் இன்றும் தெய்வமாகி நம்மை காக்கிறார்கள். நான் எதற்கு ஷீர்டி ஓடினேன்? எதற்கு மஹா பெரியவா நினைவில் அவர் பற்றி நினைக்கிறேன் எழுதுகிறேன்? ஏன் என் மனம் ரமணர், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் என்று நினைக்கிறது? நம்மால் அவர்கள் போல் வாழ முடியாவிட்டாலும் அவர்கள் வாழ்க்கையை யாவது தெரிந்துகொள்ளலாம், சொல்லலாமே என்று தான்.
தாயிற் சிறந்த கோவிலோ,தெய்வமோ இல்லை; சந்நியாசம் வாங்கிவிட்ட மகன் எதிரே வந்தால் தந்தையாக இருந்தாலும் வணங்க வேண்டும். ஆனால் சந்நியாசம் வாங்கிவிட்டாலும் தாயை வணங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தாயை விட சிறந்த தெய்வம் வேறெதுவும் இல்லை. ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம் எழுதினேன் ஞாபகம் இருக்கிறதா? இன்னொரு தடவை படித்து கொஞ்சம் கண்ணீர் உகுக்கலாம் .
ஒருவர் எடுத்த செயலில் வெற்றி பெற்றுவிட்டால், ஆஹா, இச்செயலை அவர் எவ்வளவு பொறுப்புடன், சிரத்தையுடன் (கவனமாக)செய்தார், அதனால் தான் வெற்றி பெற்றார், முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லித்தான் பாராட்டுகிறோம். சிரத்தை என்ற சொல்லிலேயே அவர் மிகவும் நம்பிக்கையாகவும், கடுமையாகவும் உழைத்தார் என்று சொல்லப் பட்டிருக்கிறது. முன்னோர்களுக்கு கவனத்தோடு, பயபக்தியோடு சிரத்தையோடு செய்வது தான் ஸ்ராத்தம் . சிலர் திதி என்று சொல்கிறார்களே அது.
No comments:
Post a Comment