Monday, April 4, 2022

kaalabairvashtakam

 ஆதி சங்கரர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

கால பைரவாஷ்டகம். 3  - 

பைரவ புராணம்

சிவபெருமானைப்  பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான  தக்ஷ பிரஜாபதியின் மகளாக பிறந்தாள். ஆகவே அவள்  பெயர்  தாக்ஷாயினி என்றும் சதி தேவி என்றும் ஆனது. பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தந்தை தக்ஷனின் விருப்பமின்றி   சிவ பெருமானை திருமணம் செய்து கொள்கிறாள் . ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையைக் கொய்து பூமியில் ஆலயமோ பூஜையோ யின்றி போகட்டும்  என   சாபம் அளித்ததால்  சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தக்ஷன்  கோபம் கொண்டிருந்தான்.  ஒரு யாகம்  வளர்த்தான்.  அதற்கு  எல்லோரையும் அழைத்தவன் சிவபெருமான் தாக்ஷாயினியை  மட்டும்  அழைக்கவில்லை. அவமதித்தான்.  தனது கணவன் பரமசிவனைத்  தக்க மரியாதையோடு அழைக்காத போதும்  சிவனின் வார்த்தை கேளாமல்  தாக்ஷாயினி  அந்த யாகத்திற்கு செல்கிறாள். பலர் முன்னிலையில் சிவனை அவமதித்து தக்ஷன் அவள் மனதை புண் படுத்துகிறான். தந்தையே  தனது கணவனை இவ்வாறு உதாசீனப்படுத்திய வருத்தத்தில்  தந்தை  மூட்டிய  அந்த யாகத்தீயில்   சதிதேவி விழுந்து ஜீவனை விடுகிறாள். 

விஷயம்  சிவபெருமான் காதில் எட்டுகிறது.  கடும் கோபத்தோடு  சிவன்  தக்ஷனை அணுகி அவனைக்  கொன்று விட்டு,  சதியின் கருகிய  உடலைச்  சுமந்து  தாண்டவமாடுகிறார்.  மஹா விஷ்ணு  சக்ராயுதத்தினால்  சதியின்  உடலைத்   துண்டிக்க, சதியின்  உடலின்  பல்வேறு பாகங்கள்    பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதருண்ட சதி தேவியின் உடலின்  பாகங்கள்  விழுந்த  ஸ்தலங்களை எல்லாம் சிவபெருமான் 51 சக்தி பீடங்களாக ஆக்கி விட்டார்.

 தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்கு வரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரைக்  காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

குத்தாலம் என்கிற  ஊர்  என்று நான் சொல்லும்போது,  ஆஹா  இந்த  கோடையில்  ஜிலுஜிலு என்று  எவ்வளவு குளிர்ச்சியாக  நீர்வீழ்ச்சி தட தட வென்று மேலிருந்து விழும் என்று நினைக்கவேண்டாம். அது வேறு இது வேறு. அது குற்றாலம், தென்காசியில் இருப்பது.  இது குத்தாலம். கும்பகோணம் தஞ்சாவூர் ஜில்லவை சேர்ந்தது . இங்கே குளத்தில் தான் குளிக்கலாம்.  அதிலிருந்து ரெண்டு கி.மீ. தூரம் சென்றால் ஒரு சின்ன கால  பைரவ க்ஷேத்ரத்தை காணலாம். அந்த ஊருக்கே  க்ஷேத்ரபால புரம் என்று
 பெயர்.

ஊருக்கே பிரதானமானது  அந்த  பைரவர் கோயில் தான்.  ஸ்வாமிக்கு  ஆனந்த கால பைரவர் என்று பெயர். பைரவர் என்றாலே ரொம்ப  கோபம் பொங்கும்   உக்ரமானவர் என்று தான் நமக்கு தெரியும்.  ஆனால் க்ஷேத்ரபாலபுரத்தில் அவர் ஆனந்தமயமாக   இருக்கிறார். காரணம் என்னவென்றால்,  இங்கே தான் சிவனுக்கு  பிரம்மனின் ஐந்தாம் சிரத்தை கொய்த ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கியது.(ஆரம்பத்தில்  சிவனைப் போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலை. தானும் சிவன் போலவே என்று இறுமாந்து  சிவனை அலட்சியம் செய்த ப்ரம்மாவின் ஐந்தாம் தலையை  சிவனின் அம்சமான பைரவர் கொய்ததால்  பைரவருக்கு ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்து இந்த ஆலயத்தில் தான் அது நீங்கியது என்பது ஒரு வரி புராணம்).  

நமது பாரத தேசத்தில்  பைரவருக்கு என்றே தனியாக உள்ள கோவில் இந்த சின்ன  க்ஷேத்ரபால கிராமத்திலே தான்.  மேற்கே பார்த்த ஆலயம்.  ஸ்வேத விநாயகர் இருக்கிறார்.  பைரவர் நான்கு  கரங்களில் கபாலம், சூலம், பாசம், டமருகம் எல்லாம்  ஏந்தி நிற்கிறார். பைரவரைப் பார்த்தபடி நந்தி தேவர். 

''பரமேஸ்வரா,  எனக்கு  ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க  அருள் புரியவேண்டும்''  என்று  பைரவர் வணங்கினார் .
''பைரவா, நீ  பூலோகம் செல்.  அங்கே  திருவலஞ்சுழி சென்று பிக்ஷாடனனாக என்னை  வழிபடு'' என உத்தரவாகியது. .

திருவலஞ்சுழி ஒரு அற்புதமான க்ஷேத்ரம்.  கும்பகோணம், சுவாமிமலை அருகில் இருக்கிறது.   இந்திரன் தேரோடு அங்கே வந்தபோது  தேர் மேலே பறக்கமுடியாமல்  பூமியில் புதைந்தது.   கல் சிற்பங்கள் நிறைந்த  புதைந்த அற்புதமான இந்திரன்  தேரை அங்கே காணலாம். ஸ்வேத விநாயகர்  (வெள்ளை கடல் நுரைப் பிள்ளையார் இன்னும் இருக்கிறார். சென்று காணலாம்) . பைரவர் அங்கே செல்கிறார். வெள்ளைப் பிள்ளையாரைச்  சந்திக்கிறார்.

''கணேசா,  நான் உன் தந்தை ஆணைப்படி என் ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க  இங்கே வந்துள்ளேன் நீ எனக்கு உதவி செய்'' என்கிறார் பைரவர்.

''பைரவரே, உமது கையில் உள்ள சூலத்தை  அதோ அந்த பக்கம் தூக்கி எறியும்'' என்கிறார் ஸ்வேத விநாயகர்.

''பைரவர் எறிந்த சூலம் விழுந்த இடம் தான் க்ஷேத்ரபால புரம். அமைதியான சின்ன ஊர்.

'' பைரவரே  நீங்கள் அங்கே போய்  தியானம் செய்யும்''  என்கிறார் விநாயகர். க்ஷேத்ரபாலகனான காலபைரவர் தங்கிய இடம் ஆகையால் அந்த ஊர்  இன்றும் க்ஷேத்ரபாலபுரம் என்று இன்றும் நமக்கு அங்கே சென்று  பைரவரை வழிபட  வாய்ப்பளிக்கிறது. . 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...