Sunday, April 3, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  - நங்கநல்லூர்  J K  சிவன் 


''பத்திரம்  பத்ரம்''

நான்  இப்போது சொல்லும்  நிகழ்ச்சியை படித்தபோது  எனக்கு அது முற்றிலும் வித்யாசமானதாக 
இருந்தது எனக்கு படிப்பதற்கு.  நமது சிற்றறிவுக்கு எட்டாதது எத்தனையோ.  அதில் ஒன்றாகக்  கூட இது இருக்கலாம். நடந்திருக்கலாம்.


அது என்ன அப்படி ஒரு வித்யாசமான நிகழ்வு?
காஞ்சி மடத்தில் ஒருநாள்  மத்யானம்   மஹா பெரியவா  பிக்ஷை புசித்துக் கொண்டிருந்த சமயம்.அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போல  தோன்றவே அவர்  பார்வை அங்குமிங்கும் சென்றது.  அவர்  அமர்ந்திருந்த  அறையின்  ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறே ஒரு  குட்டிக் குரங்கு  நின்று இருந்தது. 
''டேய்  யாராவது  போய்  ஒரு வாழைப்பழம் எடுத்துண்டு வந்து  அந்த குரங்குக்கு  கொடுங்கோ. பசியா இருக்குன்னு தோண்றது ''
தொண்டர்  ஒருவர்  ஜன்னல் அருகே சென்று வாழைப்பழத்தை நீட்டியபோது அந்த குட்டிக் குரங்கு அதை ஏற்கவில்லை.   வாங்க மறுத்துவிட்டது. 
''அதற்கு சாதம் தான் வேண்டும் போல் இருக்கு. கொஞ்சம் பருப்பு  சாதம் கொண்டு வந்து வையுங்கோ''
ஒரு வாழை இலையை மடித்து தொன்னை போல்  செய்து அதில்  சாதம் பருப்பு நெய்  கலந்து ஜன்னலருகே வைத்ததும்  வேகமாக,  ஆர்வமாக,   அந்த குட்டி குரங்கு அதை அப்படியே  கண் மூடி திறப்பதற்குள் சாப்பிட்டு விட்டு, கீரீச் கீரீச் என்று கத்திக்கொண்டு  அருகே ஒரு  மரத்தில் ஏறி மறைந்தது.
அதன்பிறகு,  மடத்தில் வந்து சாதம் சாப்பிடுவது  தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு "கோவிந்தா' என்று பெயரிட்டு அழைத்தார் மஹா பெரியவா.  அவர்  பிக்ஷா போஜனம் பண்ணும் நேரத்தில் வரும். 
வழக்கமாக வரும்  கோவிந்தா, ஒருநாள்,  நீண்ட நேரமாகியும் சாப்பிட வரவில்லை.  தான் பிக்ஷை போஜனம் செய்ய  மனமின்றி, மஹா பெரியவா கோவிந்தாவுக்காக  காத்திருந்தார்.  கண்மூடி  ஒரு நிமிஷ காலம் த்யானம் பண்ணினார். ஒரு சிறு புன்னகை முகத்தில்.

மடத்துக்கு  அருகில் இருந்த  ஒரு வீட்டில்  நாராயண அய்யர் என்பவர்  வசித்து வந்தார். பாக்யவான். தினமும் மஹா பெரியவா தரிசனம் செய்பவர்.  அவர் வீட்டில் அன்று யாரும் இல்லை. எங்கோ வெளியே போயிருந்தார்கள்.  ஆகவே  வீட்டுக் கதவைப்  பூட்டி விட்டு   பெரியவா  தரிசனத்துக்குமடத்திற்கு வந்து விட்டார்.  அவர்  வீட்டுக்குள் கோவிந்தா நுழைந்ததை அவர்  பார்க்கவில்லை.  அதை வீட்டுக்குள் வைத்து பூட்டிக்கொண்டு வந்துவிட்டார். 

நாராயண  ஐயர்  அன்று  மஹா பெரியவாளை தரிசனம் செய்ய வந்ததற்கு  இன்னொரு முக்கிய காரணம் அவர்  புதிதாக வாங்கிய நிலத்தின்  கிரய  பத்திரத்தை, பெரியவா எதிரில்  வைத்து  அவருடைய  ஆசி பெறவேதான்.  

மடத்துக்கு வந்து  பெரியவா எதிரில் நின்று  பையில்   கையை விட்டபோது தான் மஹா பெரியவா கிட்டே  காட்டவேண்டிய   பத்திரத்தைக் பைக்குள் காணோம்.   நாராயண அய்யருக்கு பகீர் என்றது.  பாத்திரத்தை எங்கே வைத்தேன்?   அடடா  வீட்டை பூட்டும் முன்பு  பத்திரத்தை  பீரோவில் இருந்து எடுத்து  அலமாரி மேல் ஒரு குட்டி நீலத் துணிப்பையில்  வைத்தது  நினைவுக்கு வந்தது. அதைக் கொண்டு வராமலேயே  கதவைப் பூட்டிக்கொண்டு வந்து விட்டார்.  பெரிய மஞ்சள் பையில் குட்டி நீலப்  பையைத் தேடினால் எப்படி கிடைக்கும்?
மஹா பெரியவாளுக்கு  நாராயணய்யரை நன்றாக தெரியுமே. அவர் ஏதோ  பையில் தேடிக்கொண்டு அவஸ்தை படுவது புரிந்தது.

"நாராயண அய்யரே! என்ன தேடறீர்.... நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ..'' என்று சிரித்தார்  மஹா பெரியவா

''இல்லே,  ஆமா, பெரியவா'' என்று ஏதோ உளறினார்  நாராயணய்யர்..  அவர்  மனம் பத்திரத்தின் மேல்  இருந்தது. 

"போங்கோ... போங்கோ.... ஆத்துல போய் தேடிப் பாருங்கோ.... நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கெடைக்கும்....'' 

நாராயண ஐயர்  விறுவிறு என வீட்டுக்கு வந்து  கதவைத் திறக்க, சரேலென  குரங்கு ஒரு நீலப்  பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார். தெருவிலுள்ளஎல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.   வேகமாக தாவி ஓடிய  கோவிந்தா  மடத்திற்குள் நுழைந்தது. பெரியவா அருகில் வந்தது.

""வா  கோவிந்தா ..... உனக்கு பசிக்கலையா... எங்கே போயிட்ட? உனக்காக  எத்தனை நேரம் காத்திண்டிருந்தேன் தெரியுமா?

நாராயண அய்யர் குரங்கைத் தேடிக்கொண்டு  அங்கே வந்துவிட்டார். முகம் உடம்பு பூரா  வியர்த்துக் கொட்டியது. 

"ஐயோ ,குரங்கு ...பத்திரம்.... பத்திரம்....'' என பதட்டத்துடன் ஓடி வந்தார்.

பெரியவா  அவரிடம்   ''நாராயணய்யர்வாள்,  பயப்படாதீங்கோ.... குரங்கும் பத்ரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்ரமாத் தான் இருக்கு'' என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி...

அதன் பின், தன் முன் குரங்கு போட்ட   நீலப்  பையிலிருந்து  தொண்டர்  ஒரு பத்திரத்தை எடுத்து மஹா பெரியவா எதிரில் தட்டில் வைத்தார்.  

'இந்தாங்கோ பத்திரம்..பத்ரம்'' என்று  அவரிடம்  வழங்கி ஆசியளித்தார்.

கோவிந்தா  தனக்கு ரெடியாக வைத்திருந்த போஜனத்தை திருப்தியாக சாப்பிட்டது. பத்திரம் எடுக்க நாராயணய்யர்  வீடு திரும்பவில்லை என்றால் அவர் வந்து கதவைத் திறக்கும் வரை அதற்கு அன்று  உபவாசம் தான்..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...