Wednesday, April 6, 2022

LIFE LESSON

 மனதில் பதியட்டும்  - 11    -  நங்கநல்லூர்  J  K  SIVAN


மனதில் பதிய  வைத்துக் கொள் என்று சொல்லும்போதே  ஒரு உண்மை புரிகிறது.  மனதை  வேறு எண்ணங்களிலிருந்து  விடுவித்து, எதை இருத்திக்கொள்ளவேண்டுமோ அதில்  செலுத்து.  வேறு எதிலும்  மனது ஓடாமல் பார்த்துக் கொள்  என்பது தான் அது.  தனிமை, கண்ணை மூடிக்கொள்வது, அமைதியான சூழ்நிலை இதெல்லாம் மனதை ஒருமிக்கச் செய்வன.  தியானம் பண்ணும்போது மனது பகவான் மீது மட்டுமே லயிக்கவேண்டும்.  தன் மீது  புற்று மண் மலைபோல் சூழ்ந்து மூடிக்கொண்டாலும் தெரியாமல் தவம் செய்தவர்கள் வால்மீகி போன்றவர்கள். 

நாம்  விடாமல்  ஒன்று மாற்றி  ஒன்று  என்று எத்தனையோ பாபங்களை  செயகிறோமே, அவற்றை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்கள்  இந்த பிறவியிலாவது தீரட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தந்திருக்கிறார்.  பழைய பிறவி ஞாபகத்தையே  அழித்துவிட்டார்.  நான் முந்தைய பிறவியில்  என்னவாக இருந்தேன்?  யாராக இருந்தேன்? ஹுஹும்   ஒன்றுமே தெரியாது. கும்மிருட்டு. காரிருள் எத்தனையோ காலம்.....!.

மனிதன் என்றால் அவன் மனம் தான். அதன் வெளிப்பாடு தான் அவன்.  அதில் எல்லோருக்கும் நிரம்பி இருப்பது ஆசை ஆசை  ஆசை. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். இதைச்  சொல்வது ரொம்ப எளிது.  எத்தனை பேரால்  அடக்க முடிகிறது? மனத்தை அடக்கி விட்டால்  ஏதோ மரக்கட்டை ஆகிவிடுவோம் என்று எண்ணக் கூடாது. ஜடம் ஆகிவிட மாட்டோம்.   மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான  உறுதியான  ஒரு நிலை உருவாகும்.

வாயைத்   திறந்தாலே  எப்போது நிறுத்துவான் இவன்?  என்று  மற்றவர்கள்   நினைக்க  இடம் கொடுக்கக் கூடாது."வள வள' என்று  சம்பந்தா சம்பந்தமில்லாமல்  எல்லையை மீறி  பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்  படுத்திப் பழகவேண்டும் என்று அதனால் தான்  எப்போதோ நமக்கு சொல்லி இருக்கிறார்.  அதை  நினைவில் கொள்ள வேண்டும்.

தர்மம் என்றால்  இருப்பதை எல்லாம் வாரிக் கொடுப்பது அல்ல.  எது நல்லதோ  அதை எண்ணுவதோ, செய்வதோ, சொல்வதோ அது தான்  நமது  ஸ்வதர்மம். தர்மத்தை "அறம்' என்பர். இதை ஒளவையார்  "அறம் செய விரும்பு' என்று சொன்னார். தர்மத்திற்கு அடுத்த நிலையில், நமக்குள்ள  பக்குவக்  குறைவான நிலையால், பணமும் பொருளும் தான் வேண்டு மென்று நினைப்பதால் அதற்கே "அர்த்தம்' என்று பெயர் வந்து விட்டது.

நம் ஆச்சார்யர் சங்கரரோ இந்த அர்த்தம் தான் பெரிய அனர்த்தம் என்று, பஜ கோவிந்தத்தில் சொல்லி விட்டார். ஏனென்றால், ரொம்பவும்  நிரந்தரமில்லாத,  சாஸ்வதமில்லாத,  டெம்பொரரி  சுகத்தை,  அல்ப சந்தோஷத்தை மட்டுமே பணத்தால் நாம் பெற முடியும்.  

பொதுவாக தர்மம் என்பது ஈகை. தாராள  குணத்தை,  கருணை உள்ளத்தையே குறிக்கும். எந்த விதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு நன்மை செய்தாலும்,  அதன் பலன் நம்மையே வந்து சேரும்.

நாம் செய்யும் தர்மத்தை பலன் எதிர்பார்க்காமல் ஈஸ்வர அர்ப்பணமாகச் செய்யத் தொடங்கினால், மனத்தில்  மாசு சேராது.  உள்ளத்தில் உள்ள அழுக்கு நீங்கி பேரின்பம் கிடைக்கும். இந்த எண்ணத் தோடு தர்மம் செய்யும் போது, நாம் பிறருக்கு கொடுக்கும் பொருளே நம்மை பரம்பொருளிடம் சேர்க்கும் சாதனமாகி விடுகிறது.

மறுபடியும் நான் ஏற்கனவே சொன்னதை மீண்டும் சொல்கிறேன். ஏனென்றால் அது ரொம்ப அவசியமாகிறது. அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டாமா? 

நமது தேஹத்தில்  மற்ற எந்த  அங்கத்தையும், உறுப்பையும் விட, வாய்க்குத் தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது, அதாவது சாப்பிடுவது மற்றும் பேசுவது என்று அதற்கு இரண்டு செயல்கள் இருக்கின்றன. கண்  காது, மூக்கு துவாரம், கைகள்  கால்கள் எல்லாம்  ரெண்டாக வைத்த பகவான் வாயை மட்டும் ஒன்றே ஒன்றே ஒன்றாக வைத்ததோடு  அதற்கு ரெண்டு வேலை செய்யும் ஒரே ஒரு நாக்கை மட்டும்  உள்ளே வைத்து நம்மை அனுப்பி இருக்கிறான்.  
 எலும்பில்லாத  நாக்கு இரண்டு செயல்பாடுகளைக் கொண்டதால் முறையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

வாயில் வந்ததையும், கண்டதையும்  வெளியே  வார்த்தையாக, சொல்லாக  பேசுவது கூடவே கூடாது.  பிறரைக் கெடுக்கும் நோக்கத்தில் பேசாமல் பகவத்  விஷயத்தையும், நல்ல சத்விஷயங்களை மட்டுமே பேசுதல் வேண்டும்.   மனதைக் கட்டுப்படுத்த வாயைக் கட்டுவது மிக முக்கியமானது. சாப்பாட்டிலும் கட்டுப்பாடு வேண்டும். பேச்சிலும் வாயைக் கட்ட வேண்டும்.

மௌனத்தை கடைப்பிடித்தால் நமக்கு நல்லது மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கே மிகவும் நன்மை தருவதாகும். எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுத்  தரும் நல்ல உபாயம்  மௌனமே என்றால் அது  சரியே. 

வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி என்னும் போதே, பேச்சு, சாப்பாடு இரண்டையும் கட்டுப்படுத்துவது அவசியம் என்று தெரிகிறது. ஆனால், நாமோ நேர்  மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு விதங் களிலும் நாக்குக்கு வேலை அதிகமாகக் கொடுக்கிறோம். எனவே நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும். 

நாம்  வேளா வேளை  விழுங்கும் சாப்பாடு நம் உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் வளர்ப்பதாக இருப்பதால் நாம் திட்டமிட்டு அன்றாடச் சாப்பாட்டை கவனமாக அமைத்துக் கொள்ளவேண்டும். நல்ல உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.  சாத்வீகமான உணவு எது என்று தெரிந்துகொண்டு அதை உண்ண பழகிக் கொள்ள  வேண்டும். நமது பாரத தேசத்தில்  வித  விதமான காய்கறிகள், கீரைகள், பழங்கள், கிழங்குகள், எல்லாமே  நிறைய  கிடைக்கிறதே.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...