மனதில் பதியட்டும் - 10 நங்கநல்லூர் J K SIVAN
இந்த பதிவுகளை படிக்கும்போது, என்னது இந்த மனுஷனுக்கு வேறே எதுவும் தெரியாதா, சொன்னதையே எத்தனை தடவை திருப்பி திரும்ப திரும்ப சொல்வான்? வேறே வேலை இல்லையா? என்று கேட்க தோன்றினால் தப்பில்லை. ஆனால் இதை நான் மட்டும் அல்ல, எண்ணற்ற ஞானிகள் யோகிகள், தவசிகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மொழிகளில் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கவேண்டும். ஏன்? அப்படியும் மனதில் இன்னும் பதியவில்லையே, அதனால் தான். மனசு தான் மனுஷன். அதை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சரியாக்கி விட்டால் மனிதன் தானாகவே சரியாகி விடுவான். அந்த வேலை தான் இப்படி திரும்ப திரும்ப சொல்வது.
அகிம்சையைப் பின்பற்றினால், நம்மை அறியாமலேயே மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றிலும் அதன் சக்தி பரவத் தொடங்கும். நாம் இருக்கும் இடத்தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத் தொடங்கும் .தானம் தர்மம் செய்யும் போதும் இந்த சந்தோஷம், மன நிம்மதி, ஆனந்தம் அனுபவிக்கலாம்.
நாம் செய்யும் காரியங்களும் அப்படி தான். நமது வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் நிறைய பாவங்கள் செய்து வருகிறோம். அதே அளவு நிறைய புண்ணிய செயல்களைச் செய்து தான் இந்த பாபத்தைக் கரைத்து விடவேண்டும். நன்மைகளைச் செய்வதற்குத் தான் நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.
பணத்தை மட்டுமே சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்று மட்டுமே நமது ஞானத்தின் அளவு. அதைக்காட்டிலும் முக்கியம் எது என்றால், நமது பேச்சிலும் சிக்கனத்தைக் கடைப் பிடிப்பது தான்.
பெற்றோர், உற்றார் அற்ற அனாதைக் குழந்தைகளை பராமரிப்பது, ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவுவது, பசுவைக் காப்பது, இப்படி எந்த விதத்திலாவது நாம் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும். அதனால் ரெண்டு நன்மைகள் உண்டு. ஒன்று மனதுக்கு சந்தோஷம், ரெண்டாவது அதனால் சேரும் புண்யம்.
சிலரோடு பேசிக்கொண்டிருந்தால், அவர்களுக்கு ஒரு பழக்கம். தமது அனைத்து கஷ்டங்களையும் சொல்லி நம்மிடம் அழுவது. தப்ப வழி கேட்பது. அதனால் எந்த பயனும் இல்லை என்று தெரிவதில்லை. ஒரு நோயாளி இன்னொரு நோயாளியிடம் சிகிச்சை தேடுவது போல.
பகவானிடம், கடவுளிடம் மட்டும் தான் நாம் நமது கஷ்டங்களை, துன்பங்களை பற்றி சொல்லவேண்டும். கண்ட இடங்களில் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் வெறும் வம்பு, அக்கப்போராக தான் அது முடியும்.வேறு எந்த பயனும் இல்லை. கடவுளால் மட்டுமே நம்முடைய கஷ்டங்களை பொறுமையுடன் கேட்டு அதற்கு தீர்வு தரமுடியும்.
No comments:
Post a Comment