Sunday, April 24, 2022

NOSTALGIC RECOLLECTION


 


ஆரம்ப  பள்ளிக்  கல்வி -   நங்கநல்லூர்  J K  SIVAN 

இப்போதெல்லாம்  தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை மார்பில் இருந்து பிடுங்கி இழுத்து பள்ளிக்கூடத்தில்  அந்த தாயே சேர்க்கிறாள் . ரெண்டு ரெண்டரை வயசிலே பள்ளிக்கூடம். போய் அழுதுவிட்டு ஒரு மணியில் திரும்பி வர பல லக்ஷங்கள் வாங்குகிற  பள்ளிக்கூடங்கள் பெருகி வருகின்றது.      வயதானவுடன்  பெற்றோரிடம் இருந்து குழந்தை
கள் பாசமில்லாமல் பிரிந்து போகிறது என்று பின்னால் அழுது வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு என்ன பிரயோஜனம்.  ஆரம்பத்திலிருந்து  இடைவெளி விடுவது நாம் தானே. 

எழுபத்தைந்து வருஷங்களுக்கு முன்னாள்  நாங்கள் அரசாங்கம் நடத்திய  ஆரம்ப தமிழ்ப்  பள்ளியில் தான் படித்தவர்கள். ஊரில் ஒரு பள்ளிக்கூடமாவது இருக்கும். அதில் ஆண் பெண் இருவரும் சேர்ந்தே படிப்போம்.  ஐந்து வகுப்பு வரை தரையில் தான் உட்கார்ந்தோம்.   மேலே FAN  கிடையாது.  கூரைக்கட்டு பள்ளிக்கூடங்கள். முக்கால்வாசி நேரம் மரத்தடிகளில் ஜிலுஜிலுவென்று காற்றில், மரத்தில் காக்கைகளுடன் தான் எங்கள் கல்வி போதனை நிகழ்ந்தது.  

கொஞ்சம் கொஞ்சமாக  வசதிகள் பெருகின. கூரைக்கட்டு பள்ளிக்கூடங்கள் அஸ்பெஸ்டாஸ் சிமிட்டி கொட்டகை போட்ட  ஜன்னலில்லாத அரை சுவர் கட்டிடங்களில் வகுப்புகளாக  சுவர்களால் தடுக்கப்பட்டு தரையில் நீண்ட பலகைகளில் உட்க்கார்ந்தோம். வகுப்பில் கரும்பலகை போர்டுகள் ஆசிரியருக்கு ஒரு நாற்காலி,  அப்புறம்  மேஜை, எங்களுக்கு பெஞ்சுகள்,  எதிரே எழுத டெஸ்க் கள்,  மரங்கள் எங்கும் நிறைந்து இருந்ததது. மின் விசிறி இல்லாமல்  அப்போது வியர்க்கவில்லை.   மாக்கல் ,   தகர  ஸ்லேட் தான் எழுத உபயோகிப்போம். .  அதைத் துடைப்பதற்கு  சிலர் நறுக்கிய கோவைக்காய்  கொண்டு  போவோம்.  அது தான்  ஸ்பான்ஜ் . அதால் துடைத்து  பலப்பம்  என்னும்  எழுது கோல். அச்சு கொட்டும் பல்பம்  சிறிய துண்டு  கொடுத்து  நிறைய  மேட்ச் பாக்ஸ்,  லேபிள் ,வாங்கி கொள்வான்  ஜெகதீசன். எங்களுக்கு  நோட் புக்   பென்சில்  உபயோகம் அப்போதெல்லாம்  தெரியாது.  

வகுப்பில் எப்போதும் வாத்தியார் இருக்க மாட்டார்.  ஒரு சில வாத்தியார்கள் தான் பள்ளிக்கூடத்தில். 
நாங்களாகவே  பேசிக்கொண்டு  விளையாடிக்கொண்டு இருப்போம்.  ஸ்லேட்டில்  '' சிவாஜி  வாயிலே   ஜிலேபி'' '' கரடி ரயில் டில்லி''   என்று  மேலும்  கீழும் எழுதி அந்த மூன்று வார்த்தை அதிசயத்தில் ஆனந்தமாக  மூழ்கி  லயித்ததுண்டு.  இதே போல்  இங்கிலீஷில்  CEYLON  / LONDON   என்று  மேலும் கீழும்  ஒரே மாதிரி வரும் வார்த்தைகளில் பிரமித்தது  உண்டு.  

சூளைமேடு  நுங்கம்பாக்கம்  பகுதியில்   சௌராஷ்டிர நகர்  அப்போதுதான்  புதிதாக   உருவாகிய  காலனி.  அதில் 2 வது தெருவில் இருந்து  க்ரிஷ்ணமூர்த்தி  என்ற  பட்டுநூல் காரர்கள்  வம்ச பையன் இது மாதிரி  விஷயங்களை  பிடித்துக் கொண்டு வந்து எங்களை அசத்துவான்.  

தென்னை ஓலையில் பாய்  பின்னச் சொல்வார் சுப்ரமணிய அய்யர். தக்கிளியில்  நூல் நூற்க சொல்வார்.  தக்கிளியில்  பஞ்சு நூலாக  வராமல்  அறுந்து போனால் கன்னா பின்னா என்று எங்கள் அப்பாவில் இருந்து  ஆரம்பித்து  திட்டுவார். சபிப்பார்.  தக்ளியில் நூல் நூற்க கற்றுக் கொடுக்காமல்  எங்களை சரியாக வளர்க்க வில்லையாம்.

பச்சை சட்டை லோகநாதன்  வீட்டில்  தோட்டம் இருந்தது.  அவனிடம் இருந்தது அந்த பச்சை சட்டை ஒன்று தான். அது எங்களுக்கு தெரியாதே.   அவன் அப்பா  தெருவில்  பழைய  பேப்பர்  அலுமினியம்  பொறுக்கி  விற்பவர்.  எங்களுக்குள்  எந்த வித்யாசம் தெரியாத தெய்வீக காலம் அது.  அவ்வப்போது  கொஞ்சம்  கத்திரிக்காய், வெண்டைக்காய் கொண்டு வந்து சுப்ரமணிய அய்யருக்கு  தருவான். தக்கிளி கொண்டுவர மாட்டான்  நூற்க மாட்டான் என்றாலும் காய்கறிகளுக்காக  அவனைப் புகழ்வார். அப்போதே வெள்ளக்கார  இந்தியாவில்  நமது நாட்டில்  லஞ்சம் தலை விரித்தாடியிருக்கிறது என்பதை  இது திருஷ்டாந்தமாக விளக்கும்.

விஸ்வேஸ்வரன்  பேர்  தான் பெரியதே  தவிர  குள்ளமாக  நரங்கலாக இருப்பான். இடது கால்  கொஞ்சம்  ஊனம். . போலியோ  என்று  சொல்கிறோமே  அதை  இளம்பிள்ளை வாதம் என்பார்கள்.   பிறவியிலிருந்தே இடது கால்  சூம்பி இருக்கும்.  விந்தி விந்தி நடப்பான்.  கால் பந்து கவர் பாலில் விளையாடும்போது தானும் விளையாட வருவான். சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.  அது அவனுக்கு பழகிப் போய் விட்டது.   விந்தி நடப்பதை ஒரு குறையாக  அவன்   நினைத்தே  பார்த்ததில்லை.  எங்களோடு அவனும்  நொண்டிக்கொண்டே   ஓடி ஆடுவான்.  கவர் பால் என்ற  ரப்பர் பந்தில், பழசான  டென்னிஸ் பந்தில்   படை படைக்கும் வெயிலில்  சாப்பாடு நேரத்தில் கால்பந்து விளையாடு வோம்.   ஓடிஏ முடியாது என்பதால்  விஸ்வேஸ்வரன்  தான்  கோல் கீப்பர்.  ஆள்  வேறு வேண்டுமே  விளையாட.  தன்னை விளையாட்டில் சேர்த்துக்  கொள்ள வேண்டும் என்பதால்   அவனே நான்  தான்  கோல் கீப்பர் என்று  அனௌன்ஸ் பண்ணி  விடுவான்.   அதனால்  அவன் எங்கள்  பர்மனண்ட் கோல் கீப்பர்.

சுப்ரமணிய அய்யர்  ஒண்ணாவது முதல் ஐந்தாவது வரை  வகுப்புகள் எடுப்பார். ஒரு  பெரிய  கூரை கொட்டகை 
ஹாலில்  சிறு தடுப்பு  சுவர்கள் கொண்ட வகுப்புகள். ஒன்று முதல்  ஐந்து வரை.   அவரே  ஹெட்மாஸ்டர். சர்வாதிகாரி. மூங்கில் பிரம்பு அவரோடு  உடன்  பிறந்தது.  கையை  நீட்டச்சொல்லி  உள்ளங்கையில் விளாசும் கிராதகன். 

அவர்  வீட்டுக்கு அருகே  பாரத்வாஜேஸ்வரர்  கோவிலில் அவர் தான் நிர்வாகம்.  இப்போது அது ட்ரஸ்ட்புரம்.  அர்ச்சகர் நாகநாதய்யர் அவர் மைத்துனன்.    ஆனால்   பாதிநாள் சங்கல்பம் பண்ணி வைக்க  அர்ச்சனைகள் பண்ண, சுப்ரமணிய அய்யர்  சென்று விடுவார்.  சில மந்திரங்கள் மட்டுமே  இதற்காக தெரிந்து கொண்டு மனப்பாடம் பண்ணி வைத்திருப்பார்.  

என் அருகே  எப்போதும்  உட்காரும்  விஸ்வேஸ்வரனின் அப்பா  வைத்தீஸ்வர கனபாடிகள்.  சூளைமேட்டில் பிரபலமான  வாத்யார்.  நல்லது பொல்லாது, சுப  அசுப காரியங்களுக்கு அவரை பல வீடுகளில் பார்க்கலாம்.  

சுப்ரமணிய அய்யர் அவருடைய  நண்பர்  என்பதால்  எல்லா கல்யாணங்களுக்கும், சுப  அசுப  காரியங்களிலும்  ஆள்   குறைந்தால் சுப்ரமணிய அய்யரை  ஆள் சேர்த்துக் கொள்வார்.  உபாத்யாயம், சிராத்தம்  தர்ப்பணம், எல்லாவற்றிற்கும் கூப்பிட்டுக் கொள்வார்.  வேஷ்டி, துண்டு, தக்ஷனை, சாப்பாடு இப்படியே   வாரத்தில்  மூன்றுநாள் எப்படியோ அய்யருக்கு  ஓடி விடும்.  வீட்டில் யாரும் இல்லாதவர்.  தனிக்கட்டை.  இப்படியாகத்தான் பல வித அனுபவஸ்தர் எங்கள் ஹெட்மாஸ்டர்.

சந்தோஷ நேரங்களில்  வகுப்பிலேயே  ''சிவ தீக்ஷாபரு ,  நகுமோமு''  என்று ஆலாபனை பண்ணிக்கொண்டே   பாடுவார். பல பாட்டுகளை அவருக்கு தெரிந்த  ஒரே ராகத்தில் பாடுகிறார் என்று  எனக்கு  அப்போது தெரியாது..

ஒருநாள்   திடீரென்று சுப்ரமணிய ஐயர்  பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை. ராமநாதன் அவருடைய அபிமான சிஷ்யன்.  எங்கள் வகுப்பு சட்டாம்பிள்ளை. அவன் அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது  கும்பலாக  இருக்கிறது  என்று திரும்பி வகுப்புக்கு ஓடி வந்து  விட்டான்.

ஒரு மணி நேரத்துக்கு பிறகு  மணியடிக்கும் அப்பாதுரை வந்து  ''ஹெட்மாஸ்டர் மாரடைச்சி செத்துட்டார். பள்ளிக் கூடம் மூடணும். எல்லோரும் போங்கோ''  என்றான். எங்கள் வகுப்பை மூட வேண்டிய அவசியம் இல்லை.  கதவு கிடையாது. மேலே கூரை  தடுப்புச் சுவருக்கு இரண்டு புறமும் குட்டிச் சுவர்கள்.  தரையில் தான்   உட்காருவோம். எனவே எழுந்து ஓடிவிட்டோம்.

 செத்துப் போவது என்றால் என்ன  என்று எங்களில் நிறைய  பேருக்கு சரியாக தெரியாத வயது.  சில பையன்கள்  செத்துப்போவது பற்றி  பயமாக  சொல்வார்கள். அப்போது எழுந்து சென்று  மரத்தடியில் சிறிது சிறுநீர்  கழிக்க  வைக்கும்படியான  பயம் தோன்றியது  இப்போதும்  நினைவிருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...