Saturday, August 24, 2019

VIKRAMADHITHYA STORIES



விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் J K SIVAN

உண்மை நண்பன்.

முன்கதை:
விக்ரமாதித்தனும் மந்திரி பட்டியும் காடாறு மாதம் காலம் கழிக்கும்போது காட்டில் வெகு தூரம் நடந்து பிரதேசத்தை அடைகிறார்கள். அங்கு எந்த ஆடவனும் கண்ணில் படக்கூடாது. பட்டால் சீவப்படும் என்று அந்த ஊர் ராஜாவின் மகளின் விருப்பத்துக்காக ராஜா பறை அறிவித்திருந்தார்.இப்படிப்பட்ட மகளின் மனம் மாறி அவளுக்கு ஒரு ராஜாவை கல்யாணம் ராஜாவின் விருப்பம்.அந்த நேரத்தில் பட்டி ராஜாவின் மந்திரியைப் பார்த்து விக்கிரமாதித்தனை பெண்ணாக மாற்றி ராஜகுமாரிக்கு அந்தப்புரத்தில் தோழியாக்குகிறான்: நிறைய கதைகள் இதனிடையே அவன் கேட்க நேரிடுகிறது: அதில் ஒன்று ஒரு முனிவர் ஒரு மந்திரி குமாரனுக்கு சொன்ன கதை:
ப்ரம்மபுரி என்று ஒரு சின்ன ஊர். அதற்கு ஒரு ராஜா. அவன் பெயர் சன்மார்கன். அவன் நண்பன் குணபத்ரன். வழக்கம் போல் நம் கதைகளில் வருகிறமாதிரி அவன் மந்திரி குமாரன். நெருக்கமான தோழர்கள். வயதாகி ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிற்று. சன்மார்க்கனுக்கு சுரதவல்லி என்ற அரசகுமாரி. கலிங்க நாட்டில் ஒரு அரசகுமாரியை குணபத்ரன் மணந்தான். கல்யாணம் ரெண்டு பெண்களும் அவர்கள் பெற்றோரிடம் வசித்தார்கள். கொஞ்சம் நாள் கழித்து நண்பர்கள் இருவரும் தத்தம் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவிகளை தம் வீட்டுக்கு அழைத்து வர கிளம்பினார்கள்.. ரெண்டு பேரும் நடந்து போகும்போது சன்மார்கன் முன்னாலும் குணபத்ரன் பின்னாலும் செல்லும்போது அவர்கள் போகும் வழியில் இருந்த ஒரு மரத்தில் ஒரு பறவை இன்னொரு பறவையிடம் என்ன சொல்லியது தெரியுமா? ''கண்ணே, இதோ முன்னால் நடக்கிறான் அவனுக்கு மரணம் காத்திருக்கிறது'' என்று. இது எப்படி குணபத்ரனுக்கு தெரிந்தது? அவனுக்கு தான் விலங்குகள் பறவைகள் பேசும் பாஷைகள் நன்றாக தெரியுமே . அதனால் அவன் அவை பேசுவதை புரிந்து கொள்ள முடிந்தது.. '' சன்மார்க்கா, நீ என் பின்னாலே வா நான் வழி காட்டுகிறேன் என்று தனது நண்பன் அரசகுமாரன் உயிரை காக்க தான் முன்னாலே சென்றான்.

அப்போது அதே பறவைகள் சிரித்தன. ''பாவம் பின்னால் நடக்கிறவனுக்கு நிச்சயம் மரணம் தான் '' என்றன. குணபத்ரனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. சரி நாம் இருவரும் சேர்ந்தே நடப்போம் என்று அவனோடு சேர்ந்து நடந்தான்.
ஓஹோ! ஒருவேளை சன்மார்க்கனுக்கு அவனது மாமனார் ஊரில் மரணம் சம்பவிக்குமோ என்ற பயம் உண்டானது. சில நாட்களில் சன்மார்கன் மனைவி வசிக்கும் ஊருக்கு சென்றார்கள். ஊர் எல்லை அடைந்தது சன்மார்கனின் மாமனார் ராஜாவுக்கு சேதி சொல்லி அனுப்பினார்கள். ராஜாவுக்கு ரொம்ப மகிழ்ச்சி. மாப்பிள்ளை ராஜகுமாரனை வரவேற்க தந்த பல்லக்கு அனுப்பினான். குணபத்ரன் ஒரு பச்சை பல்லக்கில் பின்னால் சென்றான். குணபத்ரனுக்கு ஒருவேளை தந்த பல்லக்கில் ஏதாவது ஆபத்து நேருமோ என்று தான் அந்த தந்த பல்லக்கில் அமர்ந்தான். சன்மார்கனை தனது பச்சை பல்லக்கில் பிரயாணம் செய்ய வைத்தான்.

இரவு சன்மார்கனின் மனைவி அவளது அந்தப்புரத்தில் கணவனை காண இனிப்புவகைகள், பால், பழங்களுடன் வந்தாள் ல். சன்மார்கன் நீண்ட நடை நடந்து வந்ததால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். தனது நண்பன் சன்மார்கன் உயிருக்கு பறவைகள் சொல்லியபடி ஆபத்து நேருமோ என்று அவனைக் காக்க குணபத்ரன் அந்த அந்தப்புர அறையில் யார் கண்ணிலும் படாமல் ஒளிந்து கொண்டிருந்தான். அவன் நண்பன் மனைவி உள்ளே நுழைந்தது. தனது கணவன் அசந்து தூங்கியதை பார்த்ததும் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பிறகு மெதுவாக பக்ஷணங்கள், பழங்களுடன் வெளியே சென்றாள் .குணபத்ரன் நடப்பதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்தான். அவள் வெளியே சென்றதும் அவளைப் பின் தொடர்ந்தான். வெளியே வேகமாக நடந்த அந்த பெண் ஒரு இடத்தில் தனது ரகசிய காதலனை சந்திக்கிறாள். கொடூரமான அழகற்ற அந்த மனிதன் முடவன். அவனைப்பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. ''ஏன் உனக்கு இவ்வளவு நேரம் என்னை பார்க்க வருவதற்கு'' என்று அவளை கோபித்தான்.

''நான் என்ன பண்ணுவேன், எனக்கு தாலி கட்டிய கணவன் வந்து விட்டானே '' என்று சமாதானம் சொன்னாள்.
நீ என்ன பண்ணப்போகிறாய்?

'' தெரியவில்லை, என்னை அவன் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விடுவான். உன்னை இனி சந்திப்பது முடியாது''

''ஏன் இப்படி உளறுகிறாய். இந்தா என்று தனது அரையிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்து அவளிடம் கொடுத்து. நீ இரவோடு இரவாக உன் கணவனை தலையை சீவி அதை என்னிடம் கொண்டுவந்து காட்டு. அப்போது தான் நீ என்னை உண்மையாகவே காதலிக்கிறாய் என்று எனக்கு புரியும் '' என்றான்.

அந்த ராணி கத்தியோடு தனது அறைக்கு சென்றாள் . ஓட்டமும் நடையுமாக குணபத்ரன் பின் தொடர்ந்தான். அவள் முடவன் கொடுத்த கத்தியால் சன்மார்கனின் தலையை சீவினாள். அதற்குள் ஓடி வந்து அவள் கையை பிடித்தான் குணபத்ரன். டூ லேட். அதற்குள் சன்மார்கன் தலை துண்டாகிவிட்டது. அந்த பெண் கூச்சலிட்டாள். ஐயோ ஐயோ என்ற அவள் குரல் கேட்டு எல்லோரும் ஓடிவந்தார்கள். அவள் அந்தப்புரத்தில் குணபத்ரனுக்கு என்ன வேலை?

இந்த ஆள் என் கணவனை கொன்றுவிட்டான் . என்னை கற்பழிக்க முயன்றான் என்று அவள் கத்தினதை நம்பிவிட்டார்கள்.
அவள் தந்தை ராஜா தனது சேவகர்களின் குணபத்ரனை ஒப்படைத்து. ஊர் முழுதும் அவனை சுற்றி இழுத்துக் கொண்டு போய் வெட்டுங்கள் அவனை வெட்டி கொன்றபின் ரத்தம் தோய்ந்த கத்தியை கொண்டு வந்து காட்டுங்கள்'' என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் குணபத்ரனை இழுத்துக் கொண்டு சென்றபோது அவன் எவ்வளவு நல்லவன் என்று புரிந்துகொண்டார்கள். அவனை கொள்ளாமல் தப்பிக்க விட்டு ஒரு மிருகத்தை கொன்று அந்த ரத்தம் தோய்ந்த கத்தியை ராஜாவிடம் காட்டினார்கள்.
தயவு செயது சன்மார்கனின் உடலை பாதுகாத்து வையுங்கள் என்று அந்த வீரர்களை குணபத்ரன் வேண்டியபடியே மறைத்து வைத்தார்கள்.

குணபத்ரன் சொன்னபடியே மறுநாள் இரவு அந்த பெண் ரகசியமாக தன் காதலன் முடவனை சந்திக்க சென்றபோது கூடவே மறைந்து சென்றார்கள். அந்த முடவனையும் அவளையும் கையும் களவுமாக பிடித்து ராஜா முன் கொண்டு நிறுத்தினார்கள். ராஜா ரொம்ப நொந்து போனான். இப்படி ஒரு பெண்ணா? என்று கோபத்தில் அவளையும் அந்த முடவனையும் வாளால் வெட்டி கொன்றான். இந்த பாவம் தொலையட்டும் என்று காசிக்கு சென்றுவிட்டான் ராஜா.
குணபத்ரன் நண்பன் சன்மார்கனின் உடலை ஜாக்கிரதையாக பத்திரப்படுத்தி தன்னோடு எடுத்துக் கொண்டு தனது மனைவி ஊரான கலிங்கநாட்டுக்கு சென்றான். அங்கேயும் ஒரு அதிசயம்.
குணபத்ரன் மனைவி கலிங்க நாட்டு இளவரசி இரவு அவன் தூங்குவதாக நடிப்பதை நம்பி வெளியே சென்றாள் . குணபத்ரன் மெதுவாக அவளை பின் தொடர்ந்தான். உள்ளூர் காளி கோவிலுக்கு சென்ற அவன் மனைவி ''அம்மா தாயே, பகவதி, என் கணவன் என்னை வந்து சேர்ந்ததும் என் தலையை உனக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்று வேண்டிக்கொண்டேன் அதன் படி இதோ என் தலை உன் காலடியில் என்று தனது தலையை வெட்டிக்கொள்ள முயன்றாள் .

காளி ப்ரத்யக்ஷமாகி ''பெண்ணே நீ என் பக்தை. உன் பக்தியை மெச்சுகிறேன். நீ உயிரிழக்க வேண்டாம். இந்தா விபூதி எலுமிச்சம்பழம். உன் கணவன் அவனோடு ஒரு உடலை கொண்டு வந்திருக்கிறான். அந்த இளவரசன் சன்மார்கன் உயிர் பெற்று அவனோடு நாடு திரும்பாவிட்டால் உன் கணவன் குணபத்ரன் தன் உயிரை போக்கிக் கொள்வான். ஆகவே வீட்டுக்கு போ. இந்த எலுமிச்சையின் சாறையும், விபூதியையும் அந்த இறந்த உடல் மேல் பூசு. அவன் உடனே தூங்கியவன் தூக்கம் கலைந்து எழுந்தவன் போல் உயிரோடு எழுந்திருப்பான்'' என்றாள் காளி. அவ்வாறே அரண்மனைக்கு சென்றாள் அந்த பெண்.

இதெல்லாம் நன்றாக கவனித்த குணபத்ரன். மறுநாள் காலையில் தான் ஒரு கனவு கண்டதாக முதல் நாள் இரவு நடந்ததை எல்லாம் மனைவியிடம் சொல்ல அவள் வியந்தாள்.

''நீங்க கனவு காணலீங்க . அப்படி தாங்க நடந்தது '' என்றாள் அந்த பெண். இருவரும் சன்மார்கன் உடலை வைத்திருந்த இடத்திற்கு சென்று காளி சொன்னபடி செயது சன்மார்கன் மீண்டும் உயிர் பெற்றான்.

இந்த கதையை ஒரு முனிவர் மடியில் படுத்துக்கொண்டு சொன்னார் . இப்படித்தான், உண்மை நண்பன் இருக்கவேண்டும்.உன்னுடைய உபயோகமில்லாத நண்பன் மாதிரி இருக்கக்கூடாது.என்று சொல்லி தவம் செய்ய புறப்பட்டு
விட்டார்.

விக்கிரமாதித்தன் பெண் வேடம் பூண்டு சம்பகவல்லி என்ற இளவரசியிடம் அந்தப்புரத்தில் நட்போடு இருக்கும்போது அவள் இந்த கதையை ''விக்ரமாதித்திக்கு'' சொல்லி உன் மனதை திறந்து நீ என்ன நினைக்கிறாய் என்று என்னிடம் சொல்'' என்கிறாள்.

விக்ரமாதித்தி, ''ஆமாம் இளவரசி, உலகத்தில் எங்கும் மணமான பெண்கள் இல்லறவாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள். ஆடவர்களை வெறுப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை நீ அனாவசியமாக ஆண்களை வெறுக்கிறாய். வாழ்க்கையை வீணடிக்கிறாய். அது தான் எனக்கு வருத்தம் '' என்கிறாள்.
''உனக்கு தெரியாது. பெண்ணே நான் ஏன் ஆண்களை வெறுக்கிறேன் என்று. அது நீளமான ஒரு கதை... அது என்னுடைய பூர்வ ஜென்மம் சம்பந்தப்பட்டது ..... என்கிறாள்



பெண்ணாக வேஷமிட்டு சம்பகவல்லி யுடன் இருக்கும் விக்ரமாதித்தன். ''அது என்ன நீளமான கதை. சொல்லேன் கேட்போம் என்று கேட்கிறான். நாமும் கேட்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...