Sunday, August 11, 2019

KRISHNA RELATED STORIES



    இது தானா  உன் சந்தேகம்..?  J K SIVAN 


அவனை எல்லோரும்  கிருஷ்ண ப்ரேமி என்று கூப்பிடுவது வழக்கம்.  ஐயய்யோ அவன் இவன் என்று  நமது மதிப்புக்கும் மரியாதைக்கும்  உரிய ஸ்ரீ க்ரிஷ்ணப்ரேமி அண்ணாவை நான் குறிப்பதாக  தப்பு பண்ணி விடவேண்டாம் .  கிருஷ்ணன் மேல் பிரியம் ப்ரேமையும் கொண்டவன் சுப்புசாமி. அவனைதான் கிருஷ்ணப்ரேமி என்பார்கள்.  சிலர் கிருஷ்ண பைத்தியம் என்றும் சொல்வதுண்டு. இந்த கதை அவனைப் பற்றி என்றாலும் கதை சாராம்சம் எல்லாருக்கும் தெரிஞ்ச கதையாகத்தான் இருக்கும். இருந்தாலும், தினமும் சாப்பிடறோமே  என்பதால்  மொறுமொறு என்று  காரமாக ரோஸ்ட்  செய்த உருளைக்கிழங்கு காய்   அடுத்த நாள்  அலுத்தா போகிறது. சாப்பிட நாக்கும் வயிறும் அலைகிறதே. அதுபோலவே, இறைவனை பற்றியோ, மகான்களை பற்றியோ பேசவோ, எழுதவோ, நினைக்கவோ அலுத்து போவதே இல்லை!!!  இது ஒரு அருமையான கதை என்று படித்தபிறகு ஆடமேடிக்காக automatic தலையை ஆட்டுவீர்கள்.. எனக்கு என்னவோ இதை எழுதவேண்டும் இன்று தோன்றியது.

அவன் ரொம்ப படித்தவனோ, பணக்காரனோ அல்ல. சொந்தமாக  ஒரு சைக்கிள்  ரிக்ஷா ஒட்டி சம்பாதித்தான். உடம்பு முடியாதபோது ஒரு டைலரிங் மெஷின் வைத்து  பஸ்ஸ்டாண்ட்  ஆலமரம் கீழே  ஒரு  பழையதுணி  தைத்து தரும் ஊழியன். ஒரு நாளைக்கு  மூன்று பேருக்காவது இலவசமாக உழைப்பான் . அதில் ஒரு ஆத்ம திருப்தி. அவனால் முடிந்தது அது தான். 
சுப்புசாமி என்ற க்ரிஷ்ணப்ரேமி  தன் வாழ்நாள் பூரா பகவத் சிந்தனையிலும்  நாமஸ்மரணையிலும் இருந்துகொண்டே தன் உலகவாழ்க்கையில் உழன்றுகொண்டு இருந்தபோது அவனுக்கும்  கிருஷ்ணனுக்கும் ஒரு உடன்பாடு.  

"என்ன வேண்டும் கேள்  தருகிறேன்.''

எனக்கு ஒன்றுமே வேண்டாம் கிருஷ்ணா. . என்னோடு ஒருகணமும் பிரியாது இருந்தாயானால் அதைக்காட்டிலும் மேலான பரிசு எனக்கேது?"
"அவ்வளவுதானே, கவலைப்  படாதே, நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன்.திருப்தியா?"
வருஷங்கள் ஓடிவிட்டன. திடீரென்று ஒரு பெரு மழை. நிறைய பேருக்கு  ஜுரம்  ஊரில். என்னென்னவோ  பேர்  இங்கிலீஷில்  சொன்னார்கள். சுப்புசாமியும் அதில் சிக்கிக்கொண்டான். ஐந்து நாள் இரவு பகலாக நெருப்பாக கொதித்தான். ஆறாவது நாள் சுப்புசாமி பூமியை விட்டு மேலே பறந்து போனான். 
வைகுண்டம் எப்படி இருக்கும் என்று நினைத்தே பார்த்ததில்லை.  எங்கும் அற்புத ஜீவன்கள். பசியோ தாகமோ இல்லை,  எங்கும் எதிலும்  கிருஷ்ணனே  தெரிந்தான். அமைதி, இன்பம், சந்தோஷம், இதெல்லாம் மட்டுமே நிரம்பி இருந்த ஓரிடத்தில் இருந்தால் கேட்கவா வேண்டும்.  கிருஷ்ணனை அடிக்கடி சந்தித்தான்.  நிழலாக தொடர்ந்தான். அளவளாவினான். ஒருநாள் அவர்கள் பேச்சு அவன் பூலோக வாழ்க்கை பற்றியதாக இருந்தபோது திடீரென்று  சுப்புசாமிக்கு ஒரு  சந்தேகம். இப்படியும் இருக்குமோ என்று  யோசித்தான். அன்று மாலையே  கிருஷ்ணன் அவனை சந்தித்தபோது 
"என்ன திடீரென்று மௌனம்? என்ன சிந்திக்கிறாய் “
 “எனது பூலோக வாழ்க்கைபற்றி ?
''எதற்கு முடிந்து போனதை நினைக்கிறாய்?''
''ஒரு சந்தேகம்,  நீ எனக்கு வாக்களித்தது நினைவில் இருக்கிறதா கிருஷ்ணா?''
''முட்டாளே, நான் மறப்பவனா, சொல்கிறேன் கேள்  நீ என்னை   '' எப்போதுமே என்னோடு இருக்கிறாயா?''  என்று கேட்டாய் சரியா ?”
'அப்படி நீ என்னுடன் இருந்தாயா?''
“ஏன் சந்தேகம்? இதோ பார் உன் பூலோக வாழ்க்கைப்  பாதையை.”
கிருஷ்ணன் சுப்புசாமியின்  உலக  வாழ்க்கை பாதையை GPS  மாதிரி காட்டினபோது, ஆரம்பமுதல் இறுதிவரை இரு ஜோடி கால் தடங்கள் தென்பட்டன.
நன்றாக உற்று பார்த்தசுப்புசாமி “ கிருஷ்ணா, நான் எதிர்ப்பார்த்தது போலவே  ஆகிவிட்டது.  என் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது. என் கால்சுவடுகளுக்கு பின்னால் பல இடங்களில்  உன்னுடைய ஒரு ஜோடி கால் சுவடுகள் காணோமே.” இதிலிருந்தே புரியவில்லையா நீ எப்போதும் என் பின்னே உறுதுணையாக இல்லை என்று?”
கிருஷ்ணன் பதில்  சொல்லவில்லை.வாய் கொள்ளாமல் சிரித்தான். 
“சிரித்து மழுப்பாதே உண்மையை ஒப்புக்கொள்”  என்றான்   கிருஷ்ணப்ரேமி சுப்புசாமி 
கிருஷ்ணன் பதில் சொன்னான் :
"அட அசடே, முன்னால் இருப்பது பின்னால் இருப்பது இரு ஜோடிகளும் உனதும் எனதும் தான். எங்கெங்கெல்லாம் ஒரே ஜோடி மட்டும் காண்கிறதோ, அதெல்லாம் வாழ்க்கையில் நீ துன்பமுற்ற காலத்தில் உன்னை சுமந்து நான் சென்ற பொழுது பதிந்த என்னுடைய காலடி சுவடு. புரிகிறதா?”  
நன்றியுடன்  சிலையாக  கிருஷ்ணப்ரேமி கிருஷ்ணனைப் பார்க்க தலையை உயர்த்தியபோது  அவன் அங்கே இல்லை.  அவன் கால் சுவடுகள் மட்டுமே தெரிந்தது.  அந்த கால் சுவடுகளை கண்ணீரால்  அபிஷேகம் செய்து  சாஷ்டாங்கமாக வணங்கினான்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...