Wednesday, August 7, 2019

SHIRDI BABA

மனித உருவில் ஒரு தெய்வம் J K SIVAN
ஷீர்டி பாபா
7 ஷீர்டி பாபா சர்வ வியாபி

ஷீர்டி வந்த தபோல்கருக்கு மனதில் ஒரு நெருடல். அதை நண்பர் பாலா சாஹேப் பாட்டே என்பவரிடம் பரிமாறிக் கொண்டார்.
''ஜீ. நமக்கு ஒரு குரு அவசியமா?''
''ஏன் இப்படி கேட்கிறாய்?''
''நம்முடைய சுதந்திரமான எண்ணம், செய்கையை மற்றொருவரிடம் இழப்பது தானே குருவை நாடி அவர் கைப்பாவையாவது?. அவர் சொல்படி நினைக்கவேண்டும், செய்ய வேண்டும், நடக்கவேண்டும் என்றால் சுதந்திரம் எங்கே? நமது கடமையை நாம் உணர்ந்து செய்வதற்கு ஒரு குரு எதற்கு? அவனவன் தனது முயற்சியில் தன்னாலானதை நல்லபடியாக செய்து தன்னை காப்பாற்றிக்கொண்டால் போதாதா? இதெல்லாம் ஒன்றும் செய்யாமல் பேசாமல் ஒரு மூலையில் படுத்து தூங்குபவனுக்கு குரு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?'' என்கிறார் தபோல்கர்

பாட்டே பதில் பேசவில்லை. வெறிக்க எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். ''எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும்'' மனித முயற்சியில் ஒன்று மில்லை அப்பா. உன் சாமர்த்தியத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு பெரியவர்கள் சொன்னபடி நட. உன் அதிகப் பிரசங்கித்தனம் உனக்கு உதவாது.''

ஒரு மணி நேரத்துக்கு மேல் இந்த விவாதம் எந்த முடிவும் இல்லாமல் தொடர்ந்து பிறகு நின்றது. .இதனால் தபோல்கருக்கு மனதில் நிம்மதி இல்லை. உடல் மேல் நம்பிக்கை இருந்தால் தான் உள்ளம் சீர்படும் என்று எண்ணம் மேலோங்கியது. அதை அழுத்தமாக பேசினால் விதண்டாவாதம் என்ற பட்டம் தான் கிடைக்கிறது என்ற அங்கலாய்ப்பு.

சற்று நேரம் கழித்து இருவரும் மசூதிக்கு சென்றார்கள். பாபா அருகில் இருந்த காகா சாஹேப் தீக்ஷித்தை பார்த்து ஏதோ கேட்டார்.
"வாடாவில் என்ன வாக்கு வாதம்? எதை பற்றி விவாதம்? '' என்று கேட்ட பாபா திடீரென்று தபோல்கரை பார்த்து
'' இந்த ஹேமத் என்ன சொன்னான்? ''
ஹேமத் என்கிற தபோல்கருக்கு தூக்கி வாரி போட்டது. அவரும் பாட்டேவும் வாடாவில் பேசியது யாருக்கும் தெரியாது. எங்கோ தூரத்தில் இருக்கும் பாபாவுக்கு அதற்குள் எப்படி தெரிந்தது? பாபா எங்கும் உள்ளார் என்பது இதிலிருந்து அவருக்கு ஊர்ஜிதமாகியது.

எதற்கு என்னை பாபா பார்க்கும்போதெல்லாம் '' ஹேமத் பந்த் '' என்றே அழைக்கிறார். ஹேமாத்ரி பந்த் என்ற பெயர் கொண்டவர் யாதவ குலத்து அரசர்கள் மஹாதேவ ராமதேவ் என்ற தேவகிரியை ஆண்ட மன்னர்களின் மந்திரி. ஞானி. நன்றாக படித்து கல்வி கற்றவர் நிறைய நூல்கள் வடித்தவர். ஆன்மீக புத்தங்கள் சதுர்வர்க சிந்தாமணி, ராஜ ப்ரசஷ்டி போன்றவற்றை எழுதியவர். கணக்கு வழக்குகளை நூதனமுறையில் எழுத வழி வகுத்தவர். மோடி என்ற மராத்தி குறுக்கெழுத்து அளித்தவர். நானோ இதற்கு எல்லாம் எதிர்மாறானவன். ஞான சூன்யம். எனக்கு அந்த மகானின் பெயரை வைத்து பாபா அழைக்கிறார்? என் அகம்பாவம் ஒழிய, நான் ஒன்றுமில்லை, வெறும் தூசு, என்று அறிந்துகொள்ள இப்படி ஒரு யுக்தியா?
பின்னால் தான் இதன் ரகசியம் வெளிப்பட்டது. பிற்காலத்தில் தபோல்கர், ஹேமத் பந்த் என்ற பெயரிலேயே ஸாயீ ஸமஸ்தான எல்லா வரவு செலவுகளையும் கட்டுப்பாட்டில் வைத்து நல்ல முறையில் நிர்வாக பண்ணியவர் என்றும் உலகம் வியக்கும் ''ஸாயி சத் சரித்ரம்'' புத்தகத்தை எழுதியவர் என்றும் அன்றே பாபாவுக்கு தெரிந்து தான் அந்த சிறந்த பெயரை வைத்தார். பக்தி, தர்மம், ஆத்ம ஞானம் எல்லாம் அந்த புத்தகத்தில் நிரம்பி இருக்கிறதே. இது பற்றி தபோல்கர் ஒன்றும் எழுதவில்லை. பேசவில்லை. ஆனால் காக்கா சாஹேப் தீக்ஷித் இதைப்பற்றி குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறார்.
மறுநாள் காகா சாஹேப் தீக்ஷித் பாபாவை தரிசிக்கிறார்.
''பாபா நான் உத்தரவு வாங்கிக்கொள்ளலாமா? ஊருக்கு போகவேண்டும்.''
'' ஆஹா தாராளமாக'' என்கிறார் பாபா.
இன்னொருவர் குறுக்கிட்டு ''பாபா எங்கே செல்வது?'' என கேட்கிறார்
''ரொம்ப மேலே '' என்கிறார் பாபா
''போக எப்படி வழி பாபா?''
"வழிக்கு என்ன பஞ்சம். நிறைய இருக்கிறது. இங்கே ஷீர்டியிலிருந்து கூட போகலாம். ஆனால் கஷ்டமான வழி. புலி ஓநாய் எல்லாம் இருக்கிற காடு வழியில் இருக்கிறதே'' என்கிறார் பாபா.
' பாபா, ஒரு நல்ல வழிகாட்டி துணையோடு போனால்?'' என்கிறார் காகா சாஹெப் தீக்ஷித்.
"அப்படியென்றால் ஒரு கஷ்டமும் இல்லை. வழிகாட்டி நேராக போகவேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்ப்பான். வழியில் புலி, ஓநாய், மேடு பள்ளம் ஒன்றும் குறுக்கிடாது.. வழிகாட்டி இல்லை என்றால் தான் கஷ்டம் '' இதை சொல்லிக்கொண்டே பாபா தபோல்கரை பார்க்கிறார். ''நச்'' என்று முதல் நாள் தான் கேட்ட ''குரு அவசியமா?'' என்ற சந்தேக கேள்விக்கு பதில் பாபா அளித்தார் என்று புரிகிறது.

குருவின் கடாக்ஷம், அனுக்கிரஹம் இல்லாமல் எதுவும் பயனளிக்காது என்று புரிந்தது. குருவருளால், உபதேசத்தால் மட்டுமே பரமார்த்தம் கிட்டும். இல்லாவிட்டால் ராமன் வசிஷ்டரிடம், கிருஷ்ணன் சாந்தீபனி மகரிஷியிடம் வணங்கி கல்வி பயின்றிருப்பார்களா? ஆத்ம ஞானம் பெற குருவின் தூண்டுதல், ஆசி, பொறுமை ஆகியவை அவசியம் இல்லையா?
.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...