Sunday, August 4, 2019

JKS THOUGHTS

ஓசையும் இசை தான்....J K SIVAN
எனக்கு சத்தியமாக சங்கீதம் தெரியாது கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாடுவேன் என்று சமாதானம் அடைய லாம். இதிலும் ஒரு சிறிய சிக்கல். பாடினால் யாருக்காவது பிடிக்குமா? எனக்கு பிடிக்கும், நான் பாடுகிறேன், பாடுவேன்.
பாடுவது வேறு கேட்பது வேறு. கேட்கப் பிடித்தவர்கள் பாடவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சங்கீதம் நமது பண்பாட்டில் கலந்ததோ இல்லையோ, ரத்தத்தில் கலந்தது என்பது நிச்சயம். ஒரு வரியாவது பாத்ரூமிலாவது பாடாதவர் எவருமே இல்லை. தனக்குள்ளே பாடிக் கொள்கிறவர்கள் வெளியே பிறரைப் பாடிக் கொல்வதை விட இது மேன்மையானது. சமூக விரோதமான செயல் அல்ல. அவுரங்க ஜீப் பாடமாட்டான் என்பதை விட பாடுபவர்களை தண்டிப்பானாம். சங்கீதம் பிடிக்காது அவனுக்கு.
நவராத்திரி சமயம் நிறைய மாமிகள் வீட்டில் வந்தவர்களை பாட சொல்வார்கள். சப்தம் வெளியே வராமல் பாடும் சாமர்த்தியம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், ஒரே ராகத்தில் எல்லா பாட்டுகளும் பாடமுடிந்தவர்களும் உண்டு. எங்கோ உச்சாணி ஸ்தாயியில் ஆரம்பித்து விழி பிதுங்கி முடிக்க முடியாமல் தவிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அடுத்த அடி மறந்து போச்சே, ஒரு வாரமா இருமல், தொண்டை கட்டு என்று வராத நோயை வரவழைத்துக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளும் தெரியும். சிலர் பாட்டு '' படி' ப்பவர்கள். என் சிறுவயது கண .வேலாயுதம் வீட்டில் நான் அவன் அப்பாவிடம் ''சிவன்'' பாட்டு படிப்பாங்க'. என்பான். நகரத்தார் குடும்பங்களில் மரியாதை ஜாஸ்தி. சின்ன குழந்தையை கூட வாங்க போங்க தான். வேலாயுதம் அம்மாவோ அப்பாவையோ ''தம்பி முருகன் மேலே ஒரு பாட்டு படிங்க'' எனும் போது நெளிவேன். முதலில் அவர்கள் சொல்வது புரியாமல் ''அடடா முருகன் மேல் பாட்டு படிக்க சொல்கிறார்களே, ஒருவேளை புஜங்க ஸ்தோத்ரம் , அல்லது கந்த சஷ்டி கவசம் ஸ்லோக புஸ்தகம் கொண்டு வந்திருக்கவேண்டுமோ'' என்று தோன்றியது. அப்புறம் தான் அவர்கள் என்னை பாடச் சொல்கிறார்கள் என்பது புரிந்தது.
நகரத்தார் என்று சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. தோடி மேதை, நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை பிரபல நகரத்தார் தனவந்தர் ஒருவர் இல்லத்தில் விசேஷம் என்பதால் காரைக்குடிக்கு அவர் கேட்ட பணம் கொடுத்து வரவழைத்தார்கள். அவர் நாதஸ்வர கச்சேரி வழக்கம்போல் அபூர்வமாக 3 மணிநேரத்துக்கும் மேல் கான மழையாக பொழிந்தது. ராஜரத்னம்பிள்ளை நாதஸ்வரம் என கேள்விப்பட்டு எங்கிருந்தோ எல்லாம் ரசிகர்கள் மாட்டுவண்டி, கோச் வண்டி, சாரட் எல்லாம் பிடித்துக் கொண்டு பல ஊர்களிலிருந்து வந்து ரசித்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தனவந்தருக்கு மிகப் பெருமை. ஆனால் தனக்கும் சங்கீதம் தெரியும் என்று சபையில் எல்லோர் எதிரிலும் காட்டிக் கொள்ள ஆசை.
கச்சேரி முடிந்து ராஜரத்னம் பிள்ளையை கௌரவித்து பணமுடிச்சு கொடுத்து, பலர் எதிரில், ''ஐயா, உங்கள் கச்சேரி அருமையிலும் அருமை. நேரம் போனதே தெரியவில்லை. ஆனால் எனக்கு ஒரு ஏமாற்றம். நீங்கள் தோடியில் ஒரு கீர்த்தனமாவது பாடி இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருந்திருக்கும் எனக்கு'' என்று உளறினார். அன்று பிள்ளை முக்கால்-- ஒருமணி நேரம் தோடியில் அபூர்வ ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம் செய்து அதிசயமான பிடிகள் பிடித்து எல்லோரையும் சங்கீதக் கடலில் மூழ்க அடித்ததில் எல்லோரும் தொப்பலாக நனைந்து நிறைய பேருக்கு தோடி ' ஈரம்' இன்னும் காயவில்லை. அந்த சமயத்தில் செட்டியார் இப்படி திடீர் என்று தனது அறியாமையை ''ராபணா'' என்று போட்டு உடைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அநேகர் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தனர். ஊரில் பெரிய மனிதராயிற்றே. ராஜரத்தினம் பிள்ளை பெரிய குறும்புக்காரர் என்று எல்லோரும் அறிவார்கள். விடுவாரா இந்தமாதிரி சந்தர்ப்பம் கிடைத்தால்?
பிள்ளை சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு பவ்யமாக எல்லோருக்கும் கேட்கும்படி ''செட்டியார்வாள், உங்கள் சங்கீத ஞானம் பற்றி கேள்விப்பட்டு தான் இங்கே வந்தேன். நீங்கள் ஒரு ரசிகர் ஜாம்பவான் என தெரிந்து நாதஸ்வரம் வாசிக்க ஒப்புக்கொண்டேன். நான் தப்பு செய்துவிட்டேன். அதனால் உங்களை எப்படியாவது சந்திக்காமல் இங்கேயிருந்து ஓடி விடவேண்டும் என்று பார்த்தேன். தோற்றுப்போனேன். கையும் களவுமாக பிடித்துவிட்டீர்களே. நீங்கள் சொன்னது ரொம்ப வாஸ்தவம். நான் இன்று தோடி பாடமுடியாமல் போனதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சொல்லாமல் தப்பிக்கலாம் என்று பார்த்து வகையாக உங்களிடம் அகப்பட்டுக் கொண்டேன். செட்டியார் பெருமிதமாக அனைவரையும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது நாதஸ்வர சக்ரவர்த்தி சொன்னது தான் இங்கு விஷயமே.
''செட்டியார் என்னை மன்னிக்க வேண்டும். சாஷ்டங்க நமஸ்காரம் செய்கிறேன். வரும் அவசரத்தில் நான் வழக்கமாக தோடி ராகம் வாசிக்கும் நாதஸ்வரத்தை வீட்டிலேயே மறந்துபோய் வைத்து விட்டு வந்தேன். பாதி வழியில் தான் ஞாபகம் வந்தது.சரி வந்த இடத்தில் இந்த நாதஸ்வரத்தில் வரும் மீதி ராகங்களை மட்டும் வாசித்து விட்டு நழுவலாம் என்று நம்பி ஏமாந்தேனே என்ன செய்ய '' என்றார். சபையே குலுங்கியது. சிரிப்பு அடங்கவும் கைதட்டல் அடங்கவும் வெகு நேரமாயிற்று. செட்டியார் பாவம் தனது சங்கீத ஞானத்திற்காக அனைவரும் கை தட்டுவதாக எண்ணி பெருமைப் பட்டார்.
நான் பாலமுரளி, மகாராஜபுரம், மதுரை மணி அய்யர், GNB MSS MLV சோமு ரசிகன். நான் இன்று இதை எழுத முற்பட்டது சமீபத்தில் மதியமர் எனும் குழுவில் பாட ஒரு ஆர்வம் வந்ததால். பாலமுரளி பாட்டு ரெண்டு பாடினேன். ஒன்று சொந்த சாஹித்யம். சாருகேசியில் முருகன் மேல். மற்றொன்று சினிமாவில் ஆபோகியில் பாடிய தங்க ரத்தம் என்ற பாட்டு. ரெண்டுமே நண்பர்களின் ஆதரவை பெற்று நிறைய பேர் இந்த குற்றத்தை தொடர்ந்து செய்யுங்கள் என கட்டளையிட்டார்கள். சினிமாப்பாட்டுகளில் எனக்கு PBS AM ராஜா, கண்டசாலா பிடிக்கும். அவர்கள் பாட்டு கேட்டு கூடவே பாடுவேன். எனக்கு இரண்டாம் பரிசு ஆயிரம் அளிப்பதாக அறிவித்தார்கள். மதியமர் நிர்வாகம் அற்புதமாக தான தர்ம காரியங்கள் செயதுவருவதற்கு என்னால் ஆன அணில் கைங்கர்யமாக அதை காணிக்கை யாக்கினேன். பாடியது ஆத்ம திருப் திக்காக.
நிறைவாக ஒரு கஷ்டமான வேலையில் மாட்டிக்கொண்டேன். தானாக இயற்கையாக பாடுவது சௌகர்யம். குறிப்பிட்ட காலத்துக்குள் ஏற்கனவே ஒருவர் பாடிய பாட்டு தாளத்துக்கு, சுருதியில் பாடுவது செருப்புக்காக காலை வெட்டும் வேலை. எப்படியோ அதையும் ஒருவழியாக முதன் முதலாக SMULE ல் நிலவே என்னிடம் என்ற PBS பாட்டை பாடினேன். SMULE ஐ கழற்றிவிட்டு நானாக இதை பாடியிருந்தால் 100 மடங்கு நன்றாகவே என் சுருதியில் பாடியிருக் கலாம். புத்தி கோணலாக போச்சு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...