Monday, August 12, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
16ம் நாள் யுத்தம்..
சாபக்கேடு

மஹாபாரதத்தில் கர்ணன் என்ற பாத்திரம் விசித்திரமானது. வீரத்தின் உச்சி, தான தர்மத்தின் தலைவன், நன்றிக்கடனுக்கு ஒரு உதாரணம். அதே சமயம் கொடிய சொற்களை வாரி வீசுபவன், சாபங்களை பெற்றவன், தெய்வங்களால் தேவர்களால் பல மிழந்தவன், கூடா நட்பு, நாகாக்க தெரியாதவன் என்று பல சோதனைகளுக்கும் வேதனைகளும் பாத்ரமானவன். அவனை கடிந்து கொள்வதா, வெறுப்பதா, விரும்புவதா என்று யோசிக்கவைக்கும் பரிதாபத்துக்கு உரியவனாக காட்சி அளிக்கிறான். குருக்ஷேத்திர யுத்த களத்தில் சல்லியனைத் தேரோட்டியாக பெற்றதால் அவன் வேதனை அதிகமாகிறது.
''கர்ணா உன் வீரம் அந்த ஜம்பம் பேசிய காக்கையை போல் தான். அர்ஜுனனை, பாண்டவர்களை நீயாவது கொல்வதாவது . துரியோதனன் உனக்கிட்ட பிச்சை யில் மமதை கொண்டு திரிகிறாய். உன் போல் இல்லை என்ற கர்வம். இதோ எதிரே பாண்டவர்கள், அதுவும் அர்ஜுனன் கண்ணுக்கு தெரிகிறான் பார். உனக்கு பாடம் கற்பிக்கிறானோ இல்லையோ, உன் உயிர் போன பிறகு என்ன பாடம் கற்கப் போகிறாய் ?'' என்றான் சல்லியன். பேசாமல் அந்த காக்கையை போல் கிருஷ்ணன் காலடியில் விழுந்து உயிர் பிச்சை கேள். அர்ஜுனனின் அம்புகளிலிருந்து தப்பித்துக் கொள்.'' என்றான் சல்லியன்.

''சல்லியா, ஒரு உண்மை இப்போது வெளிச்சமாகி விட்டது. நீ என்னை இப்படி இகழ்வதற்கு, மற்ற நேரமாக இருந்தால் நீ இத்தனை நேரம் உன் தலையை வைத்துக்கொண்டு பேசியிருக்க மாட்டாய். எனக்கு உன்னாலும் ஒரு சோதனை இப்போது.

பரசுராமனை ஏமாற்றி நான் பிராமணன் என்று நடித்து அவரிடமிருந்து வில் வித்தை அஸ்திரங்கள் கற்றுக்கொண்டேன். ஒருநாள் அவர் என் மடியில் தலை வைத்து படுத்துக்க கொண்டிருந்தபோது, இந்திரன் ஒரு வண்டாக வந்து என் தொடையைப் பிளந்து ஊடுருவி சென்றான். வலியைப் பொறுத்துக்கொண்டேன். என் குருநாதர் என் மடியில் தலைவைத்து உறங்கும்போது அவர் உறக்கம் கெடக்கூடாது என்ற எண்ணத்தில் நான் அசையாது இருந்தேனா? ரத்தம் ஆறாக பெருகி ஓடியது. குரு விழித்து அருகே ரத்தம் நிறைந்திருப்பதை பார்த்து என் தொடையையும் பார்த்து ''எப்படி இவ்வளவு ரத்தம் உன் தொடையிலிருந்து வந்தும் வலியைப் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தாய். யார் நீ உண்மையைச் சொல்? நிச்சயம் ஒரு பிராமணன் இவ்வளவு வலியைத் தாங்க முடியாது? என்று துருவித் துருவி கேட்க, நான் யார் என்ற உண்மையை சொன்னேன். ஒரு பிராமணன் என்று என்னை பொய் சொல்லி நம்பவைத்து நீ கற்ற வித்தை தக்க நேரத்தில் உனக்கு மறந்து விடும்'' என்று சபித்தார்''

''சல்லியா, இப்போது எனக்கு எந்த அஸ்திரத்தை அர்ஜுனன் மீது பிரயோகம் செய்ய நினைத்தேன் என்பதே எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. இன்று காலை கூட நினைவில் இருந்ததே.'' என்றான் கர்ணன்.
வியர்வை வழிந்தது அவன் உடலில்.

''போகட்டும். அதனால் நான் மனம் தளர மாட்டேன். என்னிடம் இருக்கும் மற்ற சக்தி ஆயுதங்களால் அர்ஜுனனைக் கொல்வேன். நீ அதைப்பார்க்கத்தான் போகிறாய். இன்று நடக்கப் போகும் யுத்தத்தை போல் எவரும் என்றும் கண்டிருக்க முடியாது. நீ ஒரு துரோகி, உன்னைக் கொல்வதில் பாபமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் முட்டாள் தனமாக பேசிய உன்னை மன்னித்து இப்போது உயிரோடு விடுகிறேன். அர்ஜுனனை கொன்றபிறகு அடுத்தது தலையை இழக்கப்போவது நீ'' என்றான் கர்ணன்.

கர்ணனுக்கு மற்றொரு சம்பவமும் திடீரென்று நினைவுக்கு வந்தது.

ஒரு முறை காட்டில் தனது விஜயா என்ற சக்தி மிக்க வில்லில் அஸ்திரங்களை பிரயோகித்து பயிற்சி செய்யும்போது ஒரு அஸ்திரம் அங்கே ஒரு பிராமணன் ஹோமத்திற்கு வளர்க்கும் பசுவின் கன்றின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிராமணன் திடுக்கிட்டு ''ஐயோ ஹோமம் திடீரென்று என் சுவின் கன்றின் மரணத்தால் தடை பட்டதே'' என்று தேடி வந்த பிராமணன் கர்ணனைப் பார்த்தான்.

'' யார் நீ? எதற்கு என் பசுங் கன்றை கொன்றாய்?'' என்றான் பிராமணன்.

''ஓ ப்ராமணா, நான் வேண்டுமென்று உன் பசுவின் கன்றைக் கொல்லவில்லை. யுத்தத்தில் தேரில் ஓடிக்கொண்டே ஏவும் கணைகளைப் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். தவறு நிகழ்ந்து விட்டது என்னை அறியாமலே. உன் பசுவின் கன்றுக்குட்டி இறந்துவிட்டது நான் என்ன செய்வது?'' என்றான் கர்ணன்.

'அப்படியா சேதி. ஓஹோ. தேரில் ஓடிக்கொண்டே எந்த அஸ்திரத்தை பிரயோகிக்க நினைத்தாயோ அந்த தேர் சக்கரம் முக்கியமான யுத்தத்தில் தரையில் புதைந்து திடீரென்று ஓடாமல் நின்று விடும். அப்போது நீ செய்த காரியத்தின் பலனை தெரிந்து கொள்வாய்.'' என்று சபித்துவிட்டு சென்றான் பிராமணன்.

''சல்லியா, நீ இத்தனை பேச்சுகள் பேசியும் நான் பொறுத்துக் கொண்டு எதற்காக இதெல்லாம் சொன்னேன் என்றால் உன் உதவி எனக்கு இப்போது துரியோதனனுக்கு சேவை செய்வதற்காக தேவை. தேரை எங்கும் நிற்காமல் ஜாக்கிரதையாக செலுத்து. தேர் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கட்டும்'' என்றான் கர்ணன்.

இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தை கவனித்த துரியோதனன் இருவரையும் சமாதானப் படுத்துகிறான். அவரவர் பங்கை பொறுப்பை யுத்தத்தில் செலுத்த வேண்டுகிறான்.

''சஞ்சயா, கர்ணன் எப்படி போரிடுகிறான் என்று பார்த்து சொல்?'' என்றான் திருதராஷ்டிரன்
''தேர் வேகமாக நிற்காமல் ஓட்டுகிறான் சல்லியன். கர்ணனை எதிர்ப்பட்டோர்கள் பிணமாக பூமியில் விழுகிறார்கள். கர்ணன் புயலாக சீறுகிறான். ஒருபுறம் கிருபர், மறுபக்கம் அஸ்வத்தாமன், துச்சாதனன், சகுனி ஆகியோர் புடைசூழ கர்ணன் பாண்டவர்களை எதிர்க்கிறான் .

ONLY A FEW SETS OF COPIES OF MAHABHARATHAM BOOK ''AINDHAM VEDHAM'' (TWO VOLUMES), AVAILABLE FOR DISTRIBUTION. INTERESTED MAY CONTACT 9840279080 BY PHONE OR WHATSAPP MSG GIVING NAME AND ADDRESS




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...