Wednesday, August 14, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்
16ம் நாள் யுத்தம்..

''அர்ஜுனா    இன்னுமா  கர்ணன் உயிரோடு?

எனக்கு  என்ன சொல்வதென்றே  தெரியவில்லை.  இப்படி எல்லாம் என் முன்னோர்கள் வாழ்வில் நடந்திருக்கிறது என்று அறியும்போது எனக்கு  பலவித உணர்ச்சிகள் ஒன்று சேர்ந்து ஒருபக்கம், துக்கம், சந்தோஷம், வீரம், சோர்வு கலக்கம், மயக்கம் எல்லாமே கலந்து ஆட்டி படைக்கிறது.  மேலும் சொல்லுங்கள்  யுத்தம் எப்படி தொடர்ந்தது? கர்ணன் என்ன செய்தான்.
ஜனமேஜயா, சொல்கிறேன் கேள்.
குருக்ஷேத்திர  யுத்த களத்தில்  ஒருபக்கம் அர்ஜுனன் கௌரவர்களை தீக்கிரையாக்கிக்கொண்டிருந்த சமயம் பீமன் வேறொரு பக்கம் உடலெல்லாம் ரத்தம் ஆறாகப் பெருக துரியோதனன் சேனையை துவம்சம் செயது கொண்டிருக்கிறான்.
''அர்ஜுனா நீயும் அங்கே செல்.   கர்ணனைத் தடு. சம்சப்தகர்களை வந்து கவனிக்கலாம்''   என்கிறான் யுதிஷ்டிரன்.
''சஞ்சயா, எனக்கு அந்த பீமன் மேலே தான் புத்தி செல்கிறது. அவன் என்ன செயகிறான் நமது சேனைக்கு அவனால் என்ன அழிவு ? பார்த்து சொல்'' என்று இன்னொருபக்கம் திருதராஷ்டிரன் அனலில் வாட்டப்பட்ட  மெழுகுபோல் தவித்தான்.
பாஞ்சாலர்களையும் பீமனையும் கர்ணன் தாக்குகிறான். திருஷ்டத்யும்னன் துச்சாதனன் சேனையை தாக்க, நகுலன் வ்ரிஷசேனனை எதிர்க்க, யுதிஷ்டிரன் சித்ரசேனனுடன் மோதுகிறான். அஸ்வத்தாமன் மீண்டும் அர்ஜுனனனுடன் யுத்தம் புரிகிறான். கிருபர் யுதாமன்யுவோடு சண்டை போடுகிறார். கிருதவர்மன் ஒரு பக்கம் உத்தமௌஜாவை துரத்துகிறான். இதற்குள் சிகண்டியும் கர்ணனை ஒருபக்கம் அம்புகளால் துன்புறுத்துகிறான். பீமன் மூன்று அக்ஷ்வுணி சைன்யத்தை தனி ஒருவனாக அழித்துக் கொண்டிருந்தான். வேறு ஒரு பக்கத்தில் மேலும் மேலும் தன்னை சூழ்ந்த சம்சப்தகர்களை, பதினாலாயிரம் வீரர்களை அர்ஜுனன் ஒருவனே கொன்றான். கர்ணனின் அம்புகள் பாண்டவ சைனியத்தை சூறாவளியாக தாக்கி அநேக வெட்டுண்ட உடல்கள், பற்றி எரியும் தேர்கள், வெந்து மடியும் யானை குதிரைகள், மலை போன்ற இறந்த உடல்கள், இவற்றினூடே ரத்த ஆறு. ''அர்ஜுனா, கௌரவர்களை சீக்கிரம் முடி. யுத்தம்  தொடர்ந்து கொண்டே  போகிறது.  நேரம் வீணாக்க வேண்டாம்.'' என்றான் கிருஷ்ணன்.   கிருஷ்ணன் செலுத்திய தேர் கௌரவ சேனையைப்  பிளந்து உள்ளே சென்றது. ஆஞ்சநேயர் கொடியில் பறந்தார். இரு கைகளாலும் விடுபட்ட அர்ஜுனனின் கடுமையான சரங்கள் எதிர்ப்பட்ட மனிதர்களையும் மிருகங்களையும் கொன்றன. அஸ்வத்தாமன் குறுக்கிட்டு அர்ஜுனனை தடுத்து அம்புகளால் தாக்கினான். அர்ஜுனன் அவனது அம்புகளை முறித்து ஒன்றுக்கு நூறாக பதிலடி கொடுக்க அஸ்வத்தாமன் திகைத்தான். போர் நீண்டது.
''அர்ஜுனா பிராமணன், குரு புத்ரன் என்று இரக்கம் காட்டாதே'' என்று கிருஷ்ணன் சொன்னதும் அர்ஜுனன் மிக சக்தி வாய்ந்த அம்புகளை அவன் மீது வீச அஸ்வத்தாமன் தோளில் காயமுற்று தேரில் அமர்ந்தான். மயங்கினான். அங்கிருந்து விலக்கப் பட்டான். அஸ்வத்தாமன் காயமுற்றதை கண்ட கர்ணன் அர்ஜுனனை எதிர்த்தான். அவனை எதிர்க்க சாத்யகி, சிகண்டி, திருஷ்டத்யும்னன் ஆகியோரை விட்டுவிட்டு யுதிஷ்டிரன் நிலையை பார்க்க அர்ஜுனன் செல்கிறான். யுதிஷ்டிரன் மிகவும் வருத்தமடைகிறான்.
''அர்ஜுனா நீ மஹா வீரன் எவராலும் வெல்ல முடியாதவன் என்று நீ பிறந்தபோதே அசரீரி சொல்லியது. எனினும் நீ கர்ணனை எதிர்கொள்ளாமல் என்னை எதற்கு பார்க்க வந்தாய்?. உன்னை நம்பி தானே கௌரவ சேனையை எதிர்த்தோம். பல வருஷங்கள் அலைந்து நீ சக்தி ஆயுதங்களை பெற்று வரும் வரை காட்டில் எத்தனையோ இன்னல்களை கழித்தோம். எல்லாவற்றையும் வீணடிக்காதே. கர்ணனைக் கொல்வதை மற்றவர்களிடம் விடுவது  உன் வீரத்துக்கு  ஏற்றதல்ல. பீமன் தனி ஒருவனாக நமக்காக அங்கே நமக்காக போராடிக் கொண்டிருக்கிறான். நீ போகலாம். உன் காண்டீபம் உனக்கு பயன் படவில்லை என்றால் வேறு ஒரு வீரனிடமாவது தந்து விடு. அவனாவது வீரத்தோடு பாண்டவர்களுக்கு உதவட்டும்'' என்கிறான் யுதிஷ்டிரன். ஒரு நிலையில் யுதிஷ்டிரனை தாக்க அர்ஜுனன் வாளை உருவுகிறான். கிருஷ்ணன் குறுக்கிட்டு, ''அர்ஜுனா, நீ வந்தது யுதிஷ்டிரன் உயிரோடு இருக்கிறானா என்று அறிந்து கொள்ளத்தானே தவிர அவன் உயிரையே .எடுக்க அல்ல, உன் வாள் எடுக்க என்ன தேவை சொல்? திரும்பு.  கர்ணனிடம் போர் புரிந்து அவனைக் கொல் . அது தானே உன் கடமை.'' கிருஷ்ணா, ''என் காண்டீபத்தை எவர் இகழ்ந்து பேசினாலும் அவர்களைக் கொல்வேன் என்று சபதம் செய்ததால் யுதிஷ்டிரனையே கொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதற்காகவே வாளை உருவினேன். இந்த நிலையில் நீ என்னை என்ன செய்ய சொல்கிறாய். அதன் படி நடக்கிறேன்'' என்றான் அர்ஜுனன். ''அர்ஜுனா, நீ அமைதியாக உனது மனதை உணர்ச்சி வசம் இழக்காமல் தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதில் தவறுகிறாய் . கடமையில் உன் சக்தி ஈடுபடவேண்டும். காண்டீபத்தை பற்றி நீ செய்த சபதம் தேவையற்றது. அதை இன்னும் எதற்காக கெட்டியாக பிடித்துக் கொள்கிறாய். காண்டபம் தானாக இயங்காது. இயக்குபவன் நீ. அதன் சக்தி என்று தனியாக ஒன்றும் இல்லை. உன் சக்தியை அதன் மூலம் வெளிப்படுத்துகிறாய். உன் சக்தியை நீ இழந்து உனது இயலாமையை, தோல்வியை காண்டீபத்தின் மேல் திணிப்பது தவறான முடிவு. யுதிஷ்டிரன் ஒருவேளை உனக்கு கோபமூட்டி நீ உடனே கர்ணனைக்  கொல்லவேண்டும் என்பதற்காக கூட இப்படி பேசியிருக்கலாம். கர்ணன் ஒருவனே இப்போது கௌரவ சேனையில் உங்களுக்கு எதிராக பலம் வாய்ந்த ஒரு எதிரி. அநேகரைக் கொன்று பலி வாங்குபவன். ''திருதராஷ்டிரா,  கிருஷ்ணன் அர்ஜுனனை அமைதிப் படுத்தி கர்ணனை எதிர்கொள் என்கிறான். அவனும் யுதிஷ்டிரனை வணங்கி, அண்ணா, அடுத்து உன்னைப் பாக்கும்போது, கர்ணன் உலகத்தில் இருக்க மாட்டான். இதோ போய் பீமனை விடுவித்து கர்ணனை கவனிக்கிறேன்'' என்றான். கிருஷ்ணன் தேரை செலுத்தினான். கிருஷ்ணன் யுதிஷ்டிரனை சமாதானப்படுத்தி விட்டு தான் கிளம்பினான்.
''அர்ஜுனா, யுதிஷ்டிரனை வெட்ட உருவினாயே வாளை, நீ யுதிஷ்டிரனைக் கொன்றிருந்தால் எவ்வளவு பெரிய பாபத்துக்கு ஆளாகி இருப்பாய் என்று யோசி. இல்லை நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று உன்னையே வெட்டிக்கொண்டிருந்தாலும் என்ன அனர்த்தம் நடந்திருக்கும்?. எதற்காக இந்த யுத்தம் துவங்கிற்றோ அதன் காரணமே அர்த்தமின்றி போயிருக்கும். இத்தனை உயிர்களை பலி வாங்கியிருக்க வேண்டாமே. தர்மம் எப்படி, என்று, வெல்லும்? நீதியையே கொன்றிருப்பாயே! யுதிஷ்டிரனை வார்த்தைகளாலும் அம்புகளாலும் துளைத்த கர்ணனைக் கொன்று உன் காரியத்துக்கு பிராயச் சித்தம் செய் துகொள்'' என்றான் கிருஷ்ணன். யுதிஷ்டிரனும் அர்ஜுனனை '' வெற்றியுடன் திரும்பு'' என வாழ்த்துகிறான். ''அர்ஜுனா, கர்ணன் செய்த கொடிய செயல்கள் மன்னிக்க முடியாதவை. திரௌபதியை மானபங்கப் படுத்த விழைந்தவன், யுதிஷ்டிரனை சூதுக்கழைத்து சகுனியால் தீய வகையில் உங்கள் ராஜ்யத்தை இழக்க வைத்து, பல வருஷங்கள் வனவாசம் செய்ய வைத்து, உன் மகன் அபிமன்யுவின் வில்லை ஒடித்து அந்த இளஞ்சிறுவனை, ஐந்து ஆறு மஹாரதர்கள் யுத்த நெறியையும், தர்மத்தையும் மீறி கொல்ல காரணமானவன். யுதிஷ்டிரனையும் மற்ற உன் சகோதரர்களையும் ஏசினவன். உன்னை மதியாதவன். இரக்கம் காட்ட தேவையில்லை அந்த பாதகன் மீது'' என்றான் கிருஷ்ணன். பீமனின் தேர்ப்பாகன் விசோகன் ''பீமா, இதோ அர்ஜுனன் வருகிறான் க்ரிஷ்ணனோடு உனக்கு துணை யாக. இனி நீங்கள் இருவரும் கௌரவர்களை துவம்சம் செய்வது சுலபம்.'' என்றபோது ''விசோகா , நல்ல சேதி சொன்ன உனக்கு நான் 14 கிராமங்களையும் 100 சேடிப் பெண்களையும், 20 தேர்களையும் பரிசாக கொடுப்பேன்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னான் பீமன். அர்ஜுனன் கர்ணனை நெருங்குமுன் நான்கு படைகளை பிளந்து செல்ல வேண்டியிருந்தது. பாஞ்சால படையை கர்ணன் அழித்துக் கொண்டிருந்தான்.    அவனை அடுத்து அஸ்வத்தாமன், கிருபர், துரியோதனன் படைகள், கிரு த வர்மன் ஆகியோர் சூழ்ந்திருந்தனர். 'கர்ணா அதோ அர்ஜுனன் தேர் வருகிறது இங்கே. இன்றே அர்ஜுனனை கொன்றாயானால் நமது வெற்றி நிச்சயம். நீ பீமனை தாக்குவதை அறிந்து உன்னோடு மோத வருகிறான். அவன் வெல்ல முடியாதவன் என்ற பெயர் கொண்டவன்.'' ''சல்லியா , இன்று கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் கொல்லாமல் நான் திரும்ப மாட்டேன். எதற்கு சிரிக்கிறாய்?' என்றான் கர்ணன். 'நீ சொல்வது கேட்க இனிக்கிறது. நடக்க வேண்டுமே?''  என்றான் சல்லியன். அர்ஜுனனை நெருங்க விடாமல் கிருபர், அஸ்வத்தாமன், க்ரித வர்மன் ஆகியோர் எதிர்க்க ஒரே அம்பு பல நூறாக வெளிப்பட்டு அவர்களை தாக்கி துன்புறுத்தியது. எங்கும் உடைந்த அம்புகள், ஒடிந்த வில் கள் , வாள்கள், உதிர்ந்த தலைகள், ஓடும் ரத்த ஆறு, வழி மறித்த இறந்த யானைகள், குதிரைகள். இவற்றிற்கு காரணமான அர்ஜுனன் முன்னேறிக் கொண்டிருந்தான். சாத்யகியோடு மோதிய கர்ணனின் மகன் ப்ரஸேனன் கொல்லப்பட்டான். கோபத்தில் சாத்யகியை எதிர்த்த கர்ணனை த்ரிஷ்ட த்யும்னனும் சிகண்டியும் தாக்கும்போது கர்ணன் த்ரிஷ்ட த்யும்னன் மகனை கொன்றான்.
வேறு ஒரு பகுதியில், வெகுமுக்யமான  ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...