Wednesday, August 7, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் J K SIVAN
பதினைந்தாம் நாள்  தொடர்கிறது.

அஸ்வத்தாமன் விரக்தி

குருக்ஷேத்ரத்தில்  அம்புகளால் துளைக்கப்பட்டு ரண வேதனையில் துடித்தவர்களை விட பலமடங்கு வலியோடு திருதராஷ் ட் ரன் தனது இருப்பிடத்தில் துன்பம் அனுபவித்தான். " ஐயோ  என் தெய்வமே,  என் கௌரவ சேனை  நிர்கதியாகி  விட்டதே.  சஞ்சயா பார்த்து சொல்  என்ன நடக்கிறது அங்கே? துரோணரின் மரணம் என்னால் நம்பவே  முடியவில்லையே'' என்று அரற்றினான் திருதராஷ்டிரன்.  ''துரியோதனன் முதலாக  கௌரவர்கள் வருத்தத்திலும்  அதிர்ச்சியிலுமாக  கதி கலங்கி இருந்தார்கள். முகத்தில் கவலையும் நெஞ்சில் பயமும்  எல்லோரிடமும் தோன்றியது. துரோணர் மாதிரி ஒரு சிறந்த  வீரர் தலைவராக கிடைப்பது துர்லபம். சகுனி அங்கிருந்து ஓடிவிட்டான். கர்ணன் தனது சேனையோடு  பின் வாங்கினான்.  கோபத்தில்  ஆவேசத்துடன்  அஸ்வத்தாமன் மட்டுமே  சிகண்டியையும் அவனை எதிர்த்த  மற்ற  பாண்டவர்களையும்  தாக்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு இன்னும்  தனது தந்தை  மாண்டார்  என்பதே தெரியாத தூரத்தில்  யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். எதற்காக கௌரவப் படைகள் பின்வாங்குகின்றன என்று கவலையுடன் துரியோதனனைக்  கேட்டான்.  துரியோதனன்  பதில் கூற முடியவில்லை. கிருபர்  தான் விஷயத்தை அவனுக்கு சொன்னார். தனுர் வித்தையில் அஸ்வத்தாமன் இரண்டாவது துரோணர், கர்ணனுக்கு சமமானவன். அதர்மமாக என் தந்தையைக் கொன்ற  திருஷ்டத்யும்னன் என்னால் பழி வாங்கப் படுவான்''  என்று சபதம் செய்தான். இதற்கென்றே  என்னிடம் சிறந்த ஆயுதங்கள் இருக்கிறது என்றான்.  ஒருமுறை  நாராயணனே  ப்ராமணனாக வந்து என்தந்தை துரோணரிடம் உபசாரங்களை பெற்று  மனம் மகிழ்ந்து  ''த்ரோணா  உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்''  என்றார்.     ''நாராயணா, நான் தனுர் வித்தையில்  ஈடுபடுபவன் . எனக்கு  தங்களது நாராயண அஸ்திரம் தந்து அருளவேண்டும் '' என்கிறார்  துரோணர்.   அப்போது  '' உனக்கு இதை பரிசாக அளிக்கிறேன்'' என்று  தனது மிக்க சக்தி வாய்ந்த  நாராயண அஸ்திரத்தை தந்தார்  விஷ்ணு.. ''த்ரோணா,  நீ இதை உன்னை தாக்காதவர்கள் மீதோ,  அதர்மமாகவோ, நிராயுதபாணிகள் மீதோ  பிரயோகித்தால்  அது உன்னையே  அழித்துவிடும் என்பதில் கவனம் கொள்'' என்று சொன்னார்.   அந்த  நாராயண அஸ்திரத்தை பாண்டவர்கள்  சேனை அனைவர் மீதும்  பிரயோகித்து  அவர்களைக் கொல்வேன் . அந்த அஸ்திரம்  நான்  நினைக்கும்  விதத்தில் பல ரூபங்களில் பலர் மீது ஒரே சமயம்  பாய்ந்து அவர்களைக் கொல்லும் . இன்று தான் திருஷ்டத்யும்னனுக்கு கடைசி நாள்''  என்று கொக்கரித்தான்  அஸ்வத்தாமன்..  யுத்தம் தொடர்ந்தது.  அஸ்வத்தாமன்  நாராயண அஸ்திரத்தோடு  வந்து விட்டான்.  ''பீமா  என்னுடைய  காண்டீபம்  நாராயண அஸ்திரத்தையோ  பிராமணர்களையோ  தடுத்து கொல்லாது .எனவே  நான் அதை எதிர்க்க வழியில்லை.  நாராயண அஸ்திரம்  என்னை கொல்லவந்தால் காண்டீபத்தை கீழே போட்டுவிட்டு  அதை  ஏற்றுக் கொள்வேன்''  என்றான் அர்ஜுனன் . பீமன்  எதிர்த்தான். ஆயுதம் இல்லாதவர்களை  நாராயண அஸ்திரம் தாக்காது  என்பதால்  அனைவரும்  தங்கள் ஆயுதங்களை கீழே போட்டனர். பீமன் மட்டுமே  கதாயுதத்தோடு அதை எதிர்த்தான். அக்னியை கக்கிக் கொண்டு வந்த அஸ்திரம்  பீமனை கடுமையாக  தாக்கியது.  அது அவனை முற்றிலும்  தாக்கும் முன்னர்  அர்ஜுனன்  பீமனைச் சுற்றி  வருணாஸ்திரம் மூலம்  மழை அரணாக  செய்து விட்டான்.  அர்ஜுனனும்  கிருஷ்ணனும்  நர நாராயணர்களாக பீமனைச் சூழ்ந்து கொண்டு   அவனிடமிருந்த ஆயுதங்களை  கீழே  வீசினர்.   நாராயண அஸ்திரத்தால்  நர நாராயணர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.  பீமனும் நிராயுத பணியாகிவிட்டதால் அவனையும் தாக்க வழியில்லை. நாராயண  அஸ்திரம்  திரும்பி சென்றது.  ''அஸ்வத்தாமா  மீண்டும் உனது நாராயண அஸ்திரத்தை பிரயோகித்து அவர்களைக் கொல்''  என்றான் துரியோதனன் .  ''இல்லை துரியோதனா  ஒருமுறைக்கு மேல் அதை உபயோகிக்க முடியாது. அது சக்தியை இழந்துவிட்டது.'' என்றான் அஸ்வத்தாமன்.  அஸ்வத்தாமன்  திருஷ்டத்யும்னனை குறிவைத்து மற்ற ஆயுதங்களால் தாக்கினான். தேர் உடைந்தது. வில் உடைந்தது. அவனும் பதிலுக்கு  பலமாக தாக்கினான். தனிப்பட்ட முறையில் இருவருக்குமான  யுத்தமாக  அது அமைந்தது.  சாத்யகியும்  வேறொரு  பக்கத்தில்  அஸ்வத்தாமனைத்   தாக்கினான்.  அஸ்வத்தாமனைக் காக்க  கர்ணனும்  கிருபரும்  அங்கே படைகளுடன் சேர்ந்து கொண்டனர்.  அவர்களை எதிர்க்க  அர்ஜுனன் சேர்ந்து கொண்டான்.  அர்ஜுனனுக்கும்  அஸ்வத்தாமனுக்கும் பலத்த  போர்  நேரிட்டது. அம்புகள் சரமழையாக  பொழிந்தன. ரத்த வெள்ளம்  சிதைந்த உடல்கள், நொறுங்கிய தேர்கள், மாண்ட யானைகள், குதிரைகள் மலையாக எங்கும் குவிந்தன. அஸ்வத்தாமன்  சேதி தேசத்து அரசன் சுதர்ஷனையும்,  மாளவ தேசத்து அரசன் வ்ரிஹத்க்ஷத்திரனையும் கொன்றான்.   அர்ஜுனனின்  அம்புகளை  எதிர்கொள்ள முடியாமல் தனது எல்லா சாஸ்திரங்களையும் பிரயோகித்த அஸ்வத்தாமன் அர்ஜுனனை மீறி  த்ரிஷ்ட த்யும்னனை  நெருங்க முடியாமல்  திகைத்து  வில்லையும் ஆயுதங்களையும் கீழே எறிந்து விட்டு தேரை விட்டு இறங்கி சென்று விடுகிறான். வழியே  வியாசரை சந்திக்கிறான்.   ''தவ சிரேஷ்டரே,  ஏன்  என்னுடைய ஆயுதங்கள்  பயனற்று போயின? . சகல உயிர்களையும்  அழிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் எதுவுமே   அர்ஜுனனையோ, க்ரிஷ்ணனையோ அவனைச் சார்ந்த படையையோ அழிக்க வில்லையே  என்ன காரணம்.? "அஸ்வத்தாமா,   உனக்கே  தெரிந்திருக்கும் என்றல்லவோ நினைத்திருந்தேன்.   நாராயணன்  என்பவன்  சர்வ சக்திக்கும் மேலானவன்.  நாராயணன்  பலஆயிரம் ஆண்டுகள்  ஒருமுறை தவமிருந்து  சிவனிடம் இருந்து வரம் பெற்றான். ''நாராயணா , நீ எவராலும், எந்த ஆயுதத்தாலும் அணுகமுடியாதவன்.  நம் இருவருக்குள் யுத்தம் நேர்ந்தாலும் என்னிலும்  நீ சக்தி வாய்ந்தவனாகவே நிகழ்வாய்'' என்ற வரத்தோடு இப்போது வாசுதேவனாக  அர்ஜுனனைக் காக்கிறான்.  நீ  எப்படி அவனை வெல்லமுடியும் சொல்? உன் தந்தைக்கு இது தெரியுமே''  பல முறை எடுத்துச் சொல்லியும்  ஒருவரும் செவி சாய்க்கவில்லை.   என்ன செய்வது?''  என்கிறார் வியாசர். அர்ஜுனன்  நாராயணரிஷியின்  தவத்திலிருந்து உருவான ரிஷி நரனின் அம்சம். நீயோ  ருத்ரனின்  அம்சம். எவ்வாறு அவர்களோடு மோதி ஜெயிப்பது.   அர்ஜுனனும்  வியாசரை கேட்கிறான்;   ''குருநாதா  எனக்கு  ஒரு அதிசய காட்சி தென்படுகிறது.   நான் எப்போது போர் புரிந்தாலும்  என் ரதத்துக்கு முன்னே  ஒரு  பொன் மேனி சூரிய காந்தி தேஜஸோடு  கூடிய   உருவம், தரையில் கால் பாவாமல்,  கையில் ஒரு  சூலத்தோடு  நான் யாரை எதிர்க்கிறோனோ அவர்களை எனக்கு முன்பே  தாக்கி  வீழ்த்துகிறது. அந்த  ஒரு  சூலத்திலிருந்து  பல்லாயிர சூலங்கள் உருவாகி  எவராலும் அந்த உருவத்தின்  தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.  அந்த உருவம்  கொன்ற உடலைத்தான் என் அம்புகள்  தாக்கிக் கொண்டிருக்கிறது. யார் அந்த உருவம்.?   ''அர்ஜுனா  நீ பரமேஸ்வரனை தரிசித்திருக்கிறாய்.  வரம் பெற்றாய்.  உன்னைக் காக்க  அந்த செஞ்ஜடாதரனே, முக்கண்ணனே, உனக்காக போர் புரிகிறான். அவன் திரிகாலன். காலகாலன். சர்வ சக்தி ஸ்தாணு. ஹரன்.  அஸ்வத்தாமனோ, கர்ணனோ, கிருபரோ  உன்னை எதிர் கொள்ள முடியாத காரணமே அந்த மஹாதேவன் உன் முன்னே நிற்பது தான். உனக்கு நினைவிருக்கிறதா?  போர்  துவங்குமுன்  ஒரு நாள்  இரவு  மகாதேவனை வேண்டி  த்யானம் செய்  என்று கிருஷ்ணன் சொல்லவில்லையா. நீயும்  த்யானம் செய்தாய்.  உனக்கு ஜெயம் உண்டாகட்டும் என்று  சிவன்  ஆசிர்வதித்ததும் ஞாபகம் வருகிறதா?  உனக்காக அவரே  போர் புரிகிறார் '' என்கிறார் வியாசர். ''யுத்தம் தொடரட்டும். உனக்கு  வெற்றியே.  எங்கு  கிருஷ்ணன் இருக்கிறாரோ அங்கே  வெற்றியை தவிர வேறில்லை. இதை அடிக்கடி சொல்கிறேனே'' என்று கூறி வியாசர் மறைந்தார்.  இதை  சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொல்ல  கண்ணற்ற அவன் தலையை ஆட்டி இரு கைகளையும்  கூப்பினான்.  அதற்கு அர்த்தம் என்ன? அவன்  மனதில் என்ன எண்ணம் ஓடியது ?  என்று நீங்களே ஒவ்வொருவரும் யோசித்துக் கொள்ளுங்கள். துரோணர்  ஐந்து நாள்  இரவும் பகலுமாக யுத்தம் செய்து ப்ரம்ம லோகம் அடைந்தார்.  த்ரோண பர்வம் இதோடு முடிவடைகிறது.   இனி கர்ண பர்வம் செல்லப் போகிறோம். தயாராக இருங்கள். இந்த  மஹா பாரத கதைகளை  பி.சி. ராய்  என்பவர் ஒன்றரை  லக்ஷத்துக்கும் மேலான  வியாசரின் பாரத  சமஸ்க்ரித  ஸ்லோகங்களை  மொழிபெயர்த்து  அதை ஆங்கில வடிவில் ஒன்றுவிடாமல் படித்து   சுருக்கி தெளிவாக  எனக்கு தெரிந்த தமிழில் உங்களுக்கு அளித்து வருகிறேன்.  பாதி கிணறுக்கு மேல் தாண்டியாகி விட்டது. உங்களுக்கு பிடித்திருந்தால்  அது என்னுடைய கடின உழைப்புக்கு  ஊதியம்.
ஐந்தாம் வேதம்  என்ற  இரு பாகங்களாக  ஒவ்வொரு பாகமும் 500 பக்கங்களோடு வண்ண காகிதத்தில் ஓவியங்களோடு உங்களுக்காக காத்திருக்கிறது.  விலை கிடையாது. நன்கொடைக்கு  மட்டுமே.அதுவும்   அந்த புத்தகம் தயாரிக்க தேவையான காகித,செய்கூலிக்கான தொகை.  ஆயிரம் பக்கங்கள்.  ஆயிரம் ரூபாய் குறைந்த நன்கொடை. ரசீது உண்டு. மீண்டும்  தயாரிக்க இந்த பணம் உபயோகமாகும்.  நன்கொடைக்கு  வரி விலக்கு  உண்டு.   வாட்சப்பிலோ நேரிலோ  9840279080 தொடர்பு கொள்ளவும். ஜே கே சிவன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...