Thursday, August 15, 2019

GAYATHRI MANTHRAM

தகுதி உண்டா?   J K  SIVAN 


நான் சின்ன வயதில் ராஜா ராணி கதை என்றால் சொல்பவருக்கு அடிமையாகி விடுவேன். பிறகு நான் கதை சொல்ல ஆரம்பித்ததும் என்னை சுற்றி இருந்த என் குடும்பத்து சிறுசுகள் என்னை வெல்லத்தை ஈ மொய்ப்பது போல் சூழ்ந்து கொண்டதற்கும் காரணம் இந்த மாதிரி வாய் பிளந்து கேட்க வைக்கும் விறுவிறுப்பான கதைகள் தான்.

இது ஒரு நல்ல கதை. அர்த்த புஷ்டி உள்ளது.

இந்த கதையில் வருபவன் ஒரு நல்ல ராஜா. ராஜா நல்லவனாக இருக்கிறதே ஜனங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் இல்லையா. ராஜா என்ற பேரில் எத்தனை அக்கிரமம் சிலர் செய்கிறார்கள். அவனுக்கு நல்ல ஆச்சார சீலனான பிராமண மந்திரியும் அமைந்தது அதைவிட ஆச்சர்யம்.

ஒரு நாள் ராஜா திடீரென்று மந்திரி வீட்டுக்குள் நுழைந்தான். மந்திரி கதவைச் சார்த்திக்கொண்டு உள்ளே மந்திரங்கள் ஜபித்துக்கொண்டிருப்பதாக அவன் மனைவி சொன்னாள் . ராஜா மந்திரிக்காக வெளியே காத்துக்கொண்டு இருந்தான். மந்திரி சற்று நேரத்தில் வெளியே வந்து ராஜாவை வரவேற்றான்.

''நீங்கள் என்ன ஜபம் செய்து கொண்டிருந்தீர்கள்?''

''அரசே, நான் காயத்ரி ஜபம் பண்ணிக்கொண்டிருந்தேன்''

''அது எந்த விதத்தில் உயர்ந்தது?''

''அரசே, அது மந்திரங்களுக்கெல்லாம் ராணி என்றே அதை சொல்லலாம்''

'' சரி அவ்வளவு ஒசத்தியா அது. எனக்கு நீங்கள் இப்பவே அதைச் சொல்லிக்கொடுங்கள்''

''அரசே, மன்னிக்கவேண்டும். என்னால் அந்த மந்திரத்தை உங்களுக்கு உபதேசிக்க முடியாதே''

'' சரி அப்படியென்றால் நான் வேறு ஆள் பார்க்கிறேன்'' என்றான்கோபத்தோடு அரசன்.

கொஞ்சநாள் சென்றபின் ராஜா மந்திரியின் வீட்டுக்கு வந்தான். ஊஞ்சலில் அமர்ந்துகொண்டே நான் காயத்ரி மந்திரத்தைக் கற்றுக்கொண்டு விட்டேன். எனக்கு கற்றுக்கொடுக்கமாட்டேன் என்று ரொம்ப பிகு பண்ணினீர்கள். அது ரொம்ப சுலபமானதாக தானே உள்ளது. எளிதில் கற்றுக்கொண்டேன். இதோ சொல்கிறேன் கேளுங்கள்'' என்று பெருமையோடு ஒப்பித்தான் ராஜா. ராஜா பெருமிதத்தோடு ஊஞ்சலில் ஆடிக்கொண்டே சந்தோஷமாக மந்திரத்தை உரக்க உச்சரித்தான். முடித்து விட்டு கேட்டான்:

''என்ன சொல்கிறீர்கள் மந்திரி, நான் மந்திரத்தை சரியாகச் சொன்னேனா இல்லையா?''

''அரசே, மந்திரம் சொன்னதென்னவோ சரிதான். ஆனால் சொன்ன விதம் தான் சரியில்லை''

''என்ன தவறு நான் சொன்னதில்? கொஞ்சம் கோபமாகவே கேட்டான் அரசன்

..........................

''என்ன பேசாமல் இருக்கிறீர் சொல்லும் என்ன தப்பு அதில்?'''

''சற்று மௌனத்திற்கு பிறகு மந்திரி அருகில் இருந்த அவனது காவலாளியை பார்த்தான்

'' இங்கே வா'' என்று கூப்பிட்டான்

''அய்யா என்ன செய்யணும்?'' என்றான் அருகில் வந்த ராஜாவின் காவலாளி.

''இதோ இருக்காரே இந்த ராஜா, இவரை அந்த தூணிலே கயிற்றாலே கட்டிப்போடு உடனே''

'காவலாளி விழித்தான். வியர்த்தது. ராஜாவையும் மந்திரியையும் கையைக்கட்டிக்கொண்டு பார்த்தான்.

''என்ன சும்மா இருக்கே? சொன்னதை உடனே செய். இந்த ராஜாவை அந்த தூணிலே கயிற்றால் கட்டு'' அதட்டினார் மந்திரி.

ராஜா அதிர்ந்து போனான். காவலாளியும் தனது எஜமான் மந்திரி சொன்னதை செய்யவில்லை. பேசாமல் கையைக்கட்டிக்கொண்டு நின்றான். ரெண்டு மூணு தடவை மந்திரி அதிகாரத்தோடு சொன்னாலும் காவலாளி கேட்கவில்லை. ராஜாவிற்கு இதற்குள் அதி பயங்கர கோவம் வந்து விட்டது. காவலாளியை கோபத்தோடு பார்த்தான்.

' ஏய் இங்கே வா, இந்த நயவஞ்சக மந்திரியை உடனே கயிற்றால் கட்டி அரண்மனைக்கு இழுத்து வந்து சிறையில் அடை" என்றான்.

உடனே காவலாளி மந்திரியை கயிற்றால் பலமாக கட்டி அரண்மனைக்கு இழுத்து செல்ல முயன்றான் .

மந்திரியோ வயிறு குலுங்க சிரித்தான்.

ராஜாவுக்கு மண்டை குழம்பியது. ''என்னய்யா சிரிப்பு இதிலே உன் உயிர் ஊசலாடும்போது''

''அரசே, இப்போது இங்கே நடந்தது தான் நீங்கள் என்னைக்கேட்ட கேள்விக்கு பதில்'' என்றான் மந்திரி கயிற்றில் கட்டப்பட்டு.

''என்ன சொல்கிறாய் மந்திரி நீ?''

''அரசே இந்த காவலாளிக்கு நான் இட்ட கட்டளையும் நீங்கள் இட்ட கட்டளையும் ஒன்றே. அந்த காவலாளியும் ஒரே ஆள் தான். ஆனால் அதிகாரம் இட்ட தகுதியில் தான் வித்யாசம். நான் சொன்னபோது கேட்காதவன் நீங்கள் சொன்னபோது உடனே கேட்டான் அல்லவா?. அதுபோல் மந்திரங்களை உச்சாடனம் பண்ணும்போது அதற்கேற்ப மந்திர சக்திக்கான தகுதியோடு உச்சாடனம் செய்தால் பலனளிக்கும். காயத்ரி மந்த்ரம் ஸ்ரத்தையோடு மனம் ஒன்றி செய்யவேண்டிய ஒரு சிறந்த மந்த்ரம். ஊஞ்சலில் ஆடிக்கொண்டும் தினத்தந்தி பத்திரிகை படித்துக்கொண்டோ, இட்டிலி சாப்பிட்டுக்கொண்டோ சொல்வதற்கு சினிமா பாட்டல்ல!!

(இந்த கதை ரமண மகரிஷி சொன்னது. கொஞ்சம் கண் காது மூக்கு வைத்து நீட்டியிருக்கிறேன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...