Friday, August 23, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம் J K SIVAN
பாரதப் போர்  முடிந்தது                                                                           கொடியவனின் கோர மரணம் ''வைசம்பாயன ரிஷியே, என் கொள்ளு தாத்தா பீமசேனர் அவ்வளவு பராக்ரமசாலியா? கேட்கவே பெருமையாக இருக்கிறதே? என்ற ஜனமேஜயனுக்கு ரிஷி வைசம்பாயனர்   மேலும் சொல்வதை அப்படியே சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு சொல்ல அது நம் காதில் விழ மேலே தொடர்கிறோம். ''பீமன் ஒருவனே அன்று எழுநூறுக்கும் அதிகமாக தேர்களை உடைத்தான், ஆயிரக்கணக்கான யானைகளை கொன்றான், பதினாயிரம் கௌரவ வீரர்களை அழித்தான். ஆயிரக்கணக்கான தேர் குதிரைகளை தேரோட்டிகளை கொன்றான். துரியோதனன் சகோதரர்களை ஒழித்தான். ரெண்டே பேர் தான் பாக்கி. சுதர்சன் என்பவனும் துரியோதனனும். சுதர்சனையும் பீமன் உடலை மிதித்து கொன்றான்.
''கிருஷ்ணா, நமது படையும் பெரும்பாலாரை இழந்தது. எதிரே கௌரவ சேனையிலும் வெகு சிலர் தான் காணப் படுகிறார்கள். இன்று துரியோதனனை பீமன் அவன் சபதப் படி அழிக்கட்டும். மற்றுமுள்ள அனைவரையும் நான் கொல்கிறேன் . அதோ சுதர்சனன் தானே பீமனை எதிர்க்க வருகிறான்.கவனி. சகுனி யுதிஷ்டிரனை தாக்க படையோடு நெருங்குகிறான். துரியோதனன் சகாதேவனை தாக்கி அவன் தலையில் காயமுற்று தேர் தட்டில் அமர்கிறான். அர்ஜுனன் பல தலைகளை துண்டிக்கிறான். த்ரிகர்த்தர்கள் அவனை படையோடு எதிர்க்க அவர்கள் தலைவர்கள் சத்யசேனன் சத்யேஷு ஆகியோரை அர்ஜுனன் கொல்கிறான் . த்ரிகர்த்தர்களையும் அவர்கள் அரசன் சுசர்மனையும் அஸ்த்ரங்களால் கொல்கிறான். பீமனை  சந்தித்தவர்கள்  மரணத்தை சந்தித்தனர் .  சுற்றியிருந்த கௌரவ வீரர்கள் பிணமாயினர். சகுனி காந்தார படைகளோடு சகாதேவனை எதிர்க்க அவனது வில் அம்புகள் ஆயுதங்களை சகாதேவன் நொறுக்குகிறான். வாள் சண்டை தொடர்கிறது. சகுனி தனது எஞ்சிய படையோடு தப்ப முயற்சிக்கிறான். அவனை ஓடாமல் தடுத்து நிறுத்தி தாக்கும்போது ஒரு ஈட்டியை சகாதேவன் மேல் எரிய முயற்சிக்கும் சகுனியின் கையை வெட்டுகிறான். அடுத்து சகுனியின் தலை உடலிலிருந்து விடுபட்டு பூமியில் விழுகிறது. மகாபாரதத்தின் ஒரு முக்கியமான பாத்திரம், பாரதப் போரின் மூல காரணங்களில் ஒருவன் சகுனி. அவன் சஹாதேவனால் கொல்லப் பட்டான். ''அடடா என் மைத்துனன் சகுனியும் மாண்டானா'' என்று பெருமூச்சு விட்டான் திருதராஷ்டிரன். அவன் கண்களில் கண்ணீர் வறண்டுவிட்டதே. துரியோதனன் தன்னைச்  சுற்றி இருந்த படைகள் மாயமாக மறைந்துவிட்டதை உணர்கிறான். இனி தப்புவது ஒன்றே வழி என்று தோன்றுகிறது. எஞ்சி இருப்பது இரண்டாயிரம் தேர்கள், எழுநூறு சொச்சம் யானைகள், ஐந்தாயிரம் குதிரைகள், ஒரு பத்தாயிரம் வீரர்கள். எங்கே அந்த பதினோரு அக்ஷ்வுணி சைன்யங்கள்? அருகே குருக்ஷேத்ரத்தில் ஒரு பெரிய ஏரி இருந்தது. யாரும் அறியாமல் விரைந்து அங்கே சென்றான். அர்ஜுனன் அந்த எஞ்சிய சேனையையும் துவம்சம் செயது கொண்டிருந்தான். க்ருதவர்மன், அஸ்வத்தாமன், கிருபர் மட்டுமே போர் புரிந்து கொண்டிருந்தார்கள். சஞ்சயன் பிடிபட்டான். ஆனால் உயிரோடு விடப்பட்டான். துரியோதனனை வழியில் பார்க்கிறான். ''சஞ்சயா உன்னைத்தவிர வேறு யாரும் உயிருடன் இல்லையா? பதில் வருவதற்குள் துரியோதனன் ஆழமான அந்த ஏரிக்குள் இறங்கிவிட்டான். நீருக்குள் வசிக்கும் வித்தை தெரிந்தவன் அவன்.   கிருபர், அஸ்வத்தாமன், க்ருதவர்மன் ஆகியோர் அவனைத் தேடி அங்கே வருகிறார்கள். சஞ்சயனிடமிருந்து துரியோதனன் ஏரிக்குள் இருப்பதை அறிகிறார்கள். அன்றைய அஸ்தமனத்தோடு மஹாபாரதப் போரும் முடிவுக்கு வந்துவிட்டது. எல்லோரும் கூடாரத்துக்கு திரும்பினார்கள். பெண்கள் கணவனை இழந்து, மகனை இழந்து, சகோதரனை இழந்து, தந்தையை இழந்து கதறினார்கள். எஞ்சிய ஒரு சில வீரர்கள் அவர்கள் குடும்பத்தோடு ஊர் திரும்பினார்கள்.
விதுரனை சந்திக்கும் யுயுத்ஸு விடம் (திருதராஷ்டிரனின் வைஸ்ய மனைவிக்கு பிறந்தவன் என்பதால் பீமன் கையால் மரணம் அடையாதவன் ) ''எங்கே துரியோதனன், ஏன் அவனை விட்டுவிட்டு வந்தாய்? என்று விதுரன் கேட்க, எஞ்சிய மூன்று சேனாதிபதிகளும் துரியோதனனைக் காண ஏரிக்கரைக்கு சென்றதை சொல்கிறான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடுகிறார்கள். பிறகு தங்கள் பாசறைக்கு திரும்புகிறார்கள். அங்கே ஏரிக்கரையில் நின்ற மூன்று வீரர்களும் ''துரியோதன மஹாராஜா, நாங்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம். வெளியே வா. யுதிஷ்டிரனை வெல்வோம். நாங்கள் இருக்கும்வரை உனக்கு எந்த கவலையும் வேண்டாம்''என்று கூவுகிறார்கள். ''நீங்கள் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி, நாமும் இன்றிரவு சற்று ஓய்வெடுப்போம். மீண்டும் அவர்களை தாக்கி நாளை வெல்வோம் ''என்று குரல் கொடுக்கிறான் துரியோதனன். ''துரியோதனா இன்றிரவு முடியும் முன்பே நான் பாண்டவர்களை கொல்வேன் இது சத்தியம் ''என்கிறான் அஸ்வத்தாமன்.
யுத்தத்தின் போது தினமும் பீமனுக்கு ஏராளமான மாமிசத்தை உணவாக கொண்டு கொடுக்கும் சில வேடர்கள் அந்த பக்கமாக வந்தபோது துரியோதனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் நடந்த சம்பாஷணையை ஒளிந்திருந்து கேட்கிறார்கள். பாண்டவர்களுக்கு உணவு கொண்டு செல்கிறோம் என்றால் அஸ்வத்தாமனும் மற்றவர்களும் நம்மை கொன்றுவிடுவார்களே என்று பயந்து தான் அவர்கள் மறைந்திருந்தார்கள். பீமனும் மற்ற பாண்டவர்களும் ''எங்கே துரியோதனன்?'' என்று தேடுவது அவர்களுக்கு தெரியும். '' துரியோதனன் குரல் கேட்டோம், அவன் இந்த ஏரிக்குள் மறைந்திருக்கிறான் என்று சொன்னால் நிறைய பரிசு தருவார்கள்'' என்று முடிவு செய்து மாமிச உணவுகளோடு பாண்டவர் பாசறை செல்கிறார்கள். நிறைய பரிசுகள் தந்து அவர்களை மகிழ்வித்த பீமன் யுதிஷ்டிரனிடமும் க்ரிஷ்ணனிடமும் துரியோதனன் ஒளிந்துகொண்டு இருக்கும் ஏரி பற்றி சொல்ல அனைவரும் அங்கே செல்கிறார்கள். அந்த ஏரிக்கு துவைபாயன ஏரி என்று பெயர். தூரத்தில் பாண்டவ சைன்யம் சங்கநாதத்தோடு அங்கு நெருங்குவதை அறிந்த மூன்று சேனாதிபதிகளும் ''துரியோதனா நீ இங்கே இரு. நாங்கள் இருப்பதை கண்டால் இங்கே நீ மறைந்திருப்பதை அறிந்துவிடுவார்கள் நாங்கள் தொலைவாக சென்றுவிடுகிறோம்'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மூவரும் வேகமாக சென்று ஒரு பெரிய மரத்தின் பின் மறைந்து கொண்டு நடப்பதை கவனித்தார்கள். ''யுதிஷ்டிரா நீயும் அந்த வித்தை கற்றவன் தானே, நீரை திட பதார்த்த மாளிகையாக்கி அதில் ஆயுதங்களோடு இருக்கிறான் துரியோதனன், நீ அந்த மாளிகையை மீண்டும் நீராக்கி அவனை மேலே வரச்சொல் '' என்கிறான் கிருஷ்ணன். ''துரியோதனா வெளியே வா. நீ ஒரு அரசன். உனக்காக மற்ற மன்னர்கள் தம் உயிரை போர்க்களத்தில் விட நீ பேடித்தனமாக நீருக்குள் ஒளிவது உனக்கு அவமானம் இல்லையா? குரு வம்சத்துக்கு இழுக்கா நீ ? நீயும் ஒரு க்ஷத்ரியனாக இருந்தால் வெளியே தைரியமாக வா. உலகிலேயே சிறந்த வீரன் என்று சொல்வாயே, வந்து எங்களை வென்று உன் ராஜ்யத்தை ஆள். அல்லது வீரமரணம் எய்து.  . ஜலவாசம் எதற்கு? ' என்றான் யுதிஷ்டிரன். "நான் ஒளிந்து கொள்ளவில்லை. ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறேன். உங்களோடு போரிட எந்த தயக்கமும் இல்லை. இதோ வருகிறேன். நீங்கள் ஆயுதங்களோடு படைகளோடு யுத்தம் புரிய வந்திருக்கிறீர்கள். தனியனாக எந்த வித வாகனமும் ஆயுதமும் இன்றியும் உங்களை எதிர்ப்பேன். ''இப்போது தான் நீ க்ஷத்திரியன் என்று நிரூபிக்கிறாய். நீ ஆயுதம் எதுவேண்டுமானாலும் கொண்டு எங்கள் ஐவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து யுத்தம் புரிந்து வெற்றியைத்தேடு. மற்றவர்கள் உன்னை தாக்காமல் பார்த்துக்கொண்டிருப்போம்.  ''ஓ அப்படியா. என் கையில் எனது கதாயுதம் இருக்கிறது. உங்களில் எவர் கதாயுதம் கொண்டு என்னோடு யுத்தம் புரிய விருப்பமோ அவர் என்னோடு யுத்தம் புரியலாம். ஒருவரை அநேகர் தாக்குவது முறையல்ல. ஒவ்வொருவராக கூட என்னோடு , மோதலாம். முதலில் யார் தயார்? என்றான் துரியோதனன். ''துரியோதனா நீயா முறை பற்றி பேசுபவன். சிறு குழந்தை அபிமன்யு நிராயுதபாணியாக யுத்தம் புரிந்த போதும் ஐந்து மஹாரதர்களும் , அதிரதர்களும் சேர்ந்து அவனைக் கொன்றீர்களே அப்போது எங்கே போயிற்று உன் நேர்மை நெறி முறை எல்லாம்? யுதிஷ்டிரன். கிருஷ்ணன் குறுக்கிட்டு ''யுதிஷ்டிரா நீ என்ன பேசுகிறாய். துரியோதனன் பதிமூன்று வருஷங்களாக கதாயுதம் பயிற்சி பெற்று மிகவும் சக்தி வாய்ந்த கதாயுதம் ஒன்றை தயார் செயது வைத்திருக்கிறான். பீமனைக்   கொல்வதற்கென்றே தயாரான அதை நீயோ மற்றவர்களோ பீமனைத் தவிர எதிர்த்து தப்ப முடியாது. பீமனிடம் பலமிருக்கலாம். ஆனால் கதாயுதம் பிரயோகிப்பதில் துரியோதனன் நிகரற்றவன். அவனை வெல்ல எவரும் இல்லை என்று பலராமர் சொல்லியிருக்கிறார். அப்படி இருக்க எங்களில் ஒருவனை நீ ஜெயித்தால் ராஜ்ஜியம் உனதே என்று நீ சொல்லியதே ஆபத்தானது. பீமன் அவனை வெல்வதே கொஞ்சம் கடினம் தான்.'' என்றான் ''கிருஷ்ணா,  எப்படியும் நான் துரியோதனனை வென்று கொல்வேன்'' என்றான் பீமன். துரியோதனன் வெளியே வந்து கதையுடன் காத்திருந்தான். ''துரியோதனா, இந்த நாளுக்குத்தானடா இதுவரை காத்திருந்தேன். சிறுவயது முதல் நீ செய்த தீங்குகளுக்கெல்லாம் உனக்கு இன்று தான் வட்டியோடு முதல் திரும்ப கிடைக்கப் போகிறது. உன் உயிரைக் கொடுத்து அதை பெற்றுக் கொள் . உன் தம்பிகள் போன ஊருக்கு உன்னையும் அனுப்பி வைக்கிறேன். சீக்கிரமே போய் குசலம் விசாரி '' என்றான் பீமன். அந்த நேரம் அங்கே பலராமனும் வந்து விட்டதால் அவர் முன்னிலையில் இந்த யுத்தம் ஆரம்பித்தது. இருவருமே அவரிடம் கதாயுத பயிற்சி பெற்றவர்கள்.
'' தீர்த்த யாத்திரை துவங்கி 42 நாள் ஆகிவிட்டதே. இன்று வந்ததும் இந்த என் இரு மாணவர்களும் கதாயுத போட்டியில் ஈடுபடுவதை காண சந்தோஷமாக இருக்கிறது என்கிறார் பலராமன். நடந்த விஷயங்களை பலராமர் க்ரிஷ்ணனிடமிருந்து அறிகிறார். தனது தீர்த்த யாத்திரை அனுபவங்களை பலராமன் எல்லோருக்கும் எடுத்து சொல்ல, கடைசியில் எஞ்சியிருப்பது யார் என்று கேட்கிறார்.
கௌரவ சேனையில் துரியோதனனைத் தவிர்த்து கிருபர், அஸ்வத்தாமன், க்ருதவர்மன் மூன்று பேர் மட்டுமே என்று அறிந்து வருத்தமடைகிறார் பலராமர்.
பீமனும் துரியோதனனும் கதையை சுழற்றி ஒருவரை ஒருவர் தாக்குகிறார்கள். வாயும் பேசுகிறது. பீமன் சிறுவயதிலிருந்து அவனுக்கும் பாண்டவர்களுக்கும் துரியோதனன் இழைத்த அநீதிச் செயல்களை, அதர்மத்தை, சகுனியின் உபதேசத்தால் அவன் இழைத்த தீங்குகளை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லி அதற்கு பிரதியுபகாரமாக இப்போது அவனைக் கொல்வதைபற்றி பேசுகிறான். துரியோதனனும் அவனை எதிர்த்து வாக்குவாதம் செயது பீமனின் கடைசிநாள் அது என்று சொல்கிறான். கதாயுதங்கள் மோதும் சப்தம் எங்கும் எதிரொலிக்கிறது. பூமி அதிர்கிறது. இரு மதங்கொண்ட யானைகள் போல் இருவரு ம் மோதுகிறார்கள். தாவுகிறார்கள், விழுகிறார்கள், புரள்கிறார்கள். ஒருவர் முயற்சி அடுத்தவருக்கு தெரியும். எந்த தாக்குதலை எப்படி தடுக்கவேண்டும் என்று அறிந்தவர்கள். ''கிருஷ்ணா இருவரில் யார் வெல்லக்கூடும் என்று கவலையோடு கேட்கிறான் அர்ஜுனன்? ''பீமன் மஹா பலசாலி. துரியோதனன் கதாயுத வித்தையில் நிபுணன்'. கதாயுத நுணுக்கத்தை மீறி தனது பலத்தால் பீமன் துரியோதனனை விதிகளை மீறி  கொல்ல வாய்ப்பு இருக்கிறது. நேர்மை நியாயம், நீதி முறைகளை மீறிய துரியோதனனோடு யுத்தத்தில் விதிகளை மீறி தாக்குவது தவறல்ல. அப்போது தான் வெற்றி நிச்சயம். பீஷ்ம துரோணர், கர்ணன் ஆகியோரை கொன்ற வெற்றியின் பலனை இழக்க கூடாது.. யுதிஷ்டிரன் மீண்டும் தவறு செய்ய அனுமதிக்காக கூடாது. அநீதி இழைத்தவன் அநீதியாலே தான்  முடிய வேண்டும். பீமா நன்றாக யுத்தம் செயகிறாய் என்று அவனது கவனத்தை கவர்ந்த கிருஷ்ணன் தனது இடது துடையை தட்டிக் காட்டுகிறான். குறிப்பறிந்த பீமன் அடுத்த தாக்குதலின் போது சரியான சந்தர்ப்பத்தில் துரியோதனனின் இடது தொடையை தனது வஜ்ராயுதம் போன்ற கதாயுதத்தால் பிளக்கிறான். இரு துடைகளுமே கூழாகி துரியோதனன் ஒரு பெரிய மலைபோல் சாய்கிறான். வானில் இடி முழங்குகிறது. பேய்க்காற்று வீச்சில் மரங்கள் தலை விரித்தாடுகிறது. எங்கும் புழுதி பறக்கிறது. காக்கை கூகைகளின் சப்தம் எதிரொலிக்கிறது. பூமி நடுங்குகிறது. ''ஏ துரியோதனா உன் சபையில் அனைவர் முன்னே, இந்த தொடையை தட்டி தானே திரௌபதியை வந்து அதன் மேல் உட்கார் என்று சொன்னாய். திரௌபதைக்கு பதிலாக என் கதாயுதம் உன் தொடையில் அமர்ந்து விட்டது பார்த்தாயா? இடது காலால் துரியோதனன் தலையை உதைக்கிறான். மிதிக்கிறான். என் சபதத்தை முடித்தேன்'' என்று கூவுகிறான் பீமன்.. பலராமன் ''பீமன் செய்தது தவறு. இடுப்புக்கு கீழே தாக்கியது முறையில்லை என்று பீமனை தனது கலப்பையால் தாக்க எழுகிறார் . கிருஷ்ணன் அவரை இரு கரத்தாலும் அணைத்து தடுத்து, பீமன் '' உன் தொடையை பிளப்பேன். உன் தலையை காலால் மிதிப்பேன்'' என்று சபதம் செய்த பிறகு அதை நிறை வேற்றுவதில் முறை தவறு அல்ல என்று சமாதானம் செயது துரியோதனனும் சகுனியும் சேர்ந்து  இழைத்த அநீதிகளை எடுத்து சொல்கிறான். சுய லாபத்திற்காக முறையை மீறுவது தான் தவறு. கடனைத் தீர்க்க அதை செய்தாலோ சொன்ன வாக்கை நிறைவேற்ற அதை புரிந்தாலோ தவறல்ல என்று பலராமனும் ஒப்புக் கொள்கிறார்.  ''யுதிஷ்டிரா யுத்தம் முடிந்தது. நீ வெற்றி பெற்று இனி ராஜ்யாதிகாரம் பண்ணலாம். இனி நீயே குரு வம்ச அரசன். ராஜசூய யாகம் செய்த உலகமறிந்த சக்ரவர்த்தி'' என்று வாழ்த்தி பலராமன்  துவாரகைக்கு திரும்புகிறார். சங்கநாதம் முழங்குகிறது. கொடிகள் பறக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...