Saturday, August 3, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்  J K SIVAN 
பதிநான்காம் நாள் யுத்தம் தொடர்கிறது        

                              உறுதியும் குருதியும்                                 

 பதினாலு  நாள் ஆகியும் போர் நிற்காமல் தொடர்ந்தது. வழக்கம்போலவே உயிர்கள் அழிவது தொடங்கியது. ஆயிற்று 14 நாட்கள் இதுவரை கடந்து முடிந்ததே. இன்னும் வெற்றி தோல்வி இன்றி இருபக்கமும் போர் புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.   அளவு கடந்த கோபத்தோடும், துரியோதனன் சுடுசொல் தாங்காமல் வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் துரோணர் பாண்டவர்களை சரமாரியாக  சாடினார். அவர் சென்ற வழியெல்லாம் ரத்த ஆறும் தொடர்ந்தது.

பாஞ்சாலர்கள் துரோணரைக்  குறிவைத்தனர். அவர்களது பரம வைரி அல்லவா அவர்? திருஷ்டத்யும்னன் முன்னிலையில் நின்று சேனையை நடத்த, பீமன் ஒரு புறம் அர்ஜுனன் ஒருபுறம் தாக்குதலை தொடர்ந்தனர். சிகண்டி யுதிஷ்டிரனுக்கு காவலாக ஒருபுறம் சாத்யகி மறுபுறமும் இருந்தனர். ஜயத்ரதன் மரணத்துக்கு பழி வாங்க முனைந்தார் துரோணர். கேகயர்களையும் திருஷ்டத்யும்னன் மகனையும் கொன்றார். சிபி என்ற அரசன் த்ரோணரை எதிர்த்து தாக்க அவரால் கொல்லப் பட்டான்.

கலிங்க சேனை பீமனை தாக்கியது. கலிங்க இளவரசனை பீமன் நிமிஷத்தில் கொன்றான். கர்ணன் அதிர்ந்து போனான். இறந்தவனின் சகோதரன் கர்ணனோடு சேர்ந்து எதிர்த்தான். த்ருவன் , ஜெயரதன் ஆகியோரும் பீமனால் உயிரிழந்தனர்.

''உன் பிள்ளைகள் துர்மதனும் துஷ்கர்ணனும் பீமனோடு மோதி மரணத்தை தழுவினார்கள் அரசே'' என்றான் சஞ்சயன். ''ஐயோ தெய்வமே '' என்ற கண்ணற்ற அந்த தந்தை. தலையில் அடித்துக் கொண்டான். பூரிசிரவஸ் மரணத்தை பழிவாங்க முதியவன் அவன் தந்தையான சோமதத்தன் யுதிஷ்டிரனை எதிர்த்து தேர் தட்டில் மயக்கமாக சாய்ந்த போது துரோணர் அவனுக்கு உதவியாக வந்து யுதிஷ்டிரனோடு போர் புரிந்தார். யுதிஷ்டிரனை காக்க த்ரிஷ்ட த்யும்னனும் சாத்யகியும் வந்து துரோணரை தாக்கினார்கள். சிகண்டியும் வந்து சேர்ந்து கொண்டு எதிர்த்தான்.

அர்ஜுனனின் கவனம் துரோணர் மீது சென்று அவன் அவரை மும்முரமாக தாக்கும்போது பீமன் தனது சேனையுடன் அங்கே வந்துவிட்டான். அஸ்வத்தாமன் சாத்யகியை தாக்கும்போது கடோத்கஜன் அவனுக்கு உதவ வந்துவிட்டான். அவனது ராக்ஷஸப் படை கௌரவ சேனையை மேய்ந்ததில் உடல்கள் சிதறின, தேர்கள் உடைந்தன. யானைகள் குதிரைகள் இறந்து பிணக் குவியல் மலையானது. ரத்த ஆறு கங்கா பிரவாகமாக ஓடியது. நீயா நானா போட்டி அஸ்வத்தாமனுக்கும் கடோத்கஜனுக்கும் அங்கே நடந்தது. கடோதகஜனின் ராக்ஷஸ படைகளை கொன்று குவித்தான் அஸ்வத்தாமன். சுரதா என்கிற துருபதன் மகனைக் கொன்றான். எதிர்த்த அவன் சகோதரன் சத்ருஞ்சயனையும் கொன்றான். வலனிகன், ஜயனிகன் மற்றும் ஜெயன் ஆகியோரும் தொடர்ந்து யமபுரி பயணமானார்கள். தன்னை எதிர்த்த வல்ஹிகனை பீமன் கொன்றான்.

''த்ரிதராஷ்டிரா, இப்போது மேலும் உன் மகன்கள் பத்து பேரை பீமன் கொன்றான். அவனை எதிர்த்த சகுனியின் சகோதரர்கள் கவாக்ஷன், சரவண, பிபி சுபாகன், பானுதத்தன் ஆகியோரையும் பீமன் உடனே கொன்றான்'' என்றான் சஞ்சயன்.

''துரியோதனா கவலை வேண்டாம். நான் இருக்கும் வரை உனக்கு வெற்றி நிச்சயம். அர்ஜுனனை நானே கொல்வேன். என்னிடமிருந்து அவன் தப்ப முடியாது. மற்றவர்கள் சரணடைவார்கள் இல்லாவிட்டால் மீண்டும் வனவாசம் தான். பார்த்துக்கொண்டே இரு.'' என்றான் கர்ணன்.
'கர்ணா நீ பேசுவதை கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இதுவரை செயலில் காணோமே. இதுவரை நிகழ்ந்த சம்பவங்களில் மோதலில் அர்ஜுனனிடம் நீ தோற்றதை தான் நாங்கள் கண்டோம்'' என்கிறார் கிருபர்.

''கிருபரே , நீரோ கிழவர், யுத்தம் அறியாதவர். பாண்டவர் ரசிகர். உம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும். நீர் பிராமணர் எனவே தப்பித்தீர்'' என்றான் கர்ணன்.
'' கர்ணா நிறுத்து. யாரைப் பற்றி இகழ்வாக பேசுகிறாய். எங்கே உன் வீரம் அர்ஜுனன் ஜெயத்ரதனை கொன்றபோது?. எங்கே உன் வீரம் பூரிசிரவஸ் கொல்லப் படும்போது?. எங்கே உன் வீரம் துரியோதனனை கந்தர்வர்கள் சிறைப்பிடித்தபோது.? எங்கே உன் வீரம் நம் அனைவரையுமே அர்ஜுனன் பெண்ணாக வந்து விராடநாகரில் வென்றபோது ? வெறும் பேச்சாளி நீ. என்னெதிரே என் மாமனைப்பற்றியா அவதூறு பேசுகிறாய்? . அவர் அருமை தெரியுமா உனக்கு. மூடு வாயை '' என்று கர்ணன் மீது வாளோடு தாவினான் கோபம் கொண்ட அஸ்வத்தாமன்.

துரியோதனனும் கிருபரும் தடுக்க அவனை மன்னித்து ''கர்ணா உன் அகம்பாவத்தை அதோ எதிரே வருகிறான் பார் அர்ஜுனன் அவனிடம் காட்டு '' என்றான் அஸ்வத்தாமன்.

சோமதத்தன் மீண்டும் சாத்யகியுடன் மோத வந்து விட்டான். ஒருவரை ஒருவர் சளைக்காமல் வில்களை உடைத்தும், அம்புகளை தடுத்தும் ஆயுதங்களை வீசியும், தேர்களை சிதைத்தும் போரிட்டனர். பீமன் வேறு சாத்யகியின் உதவிக்கு வந்துவிட்டான். சாத்யகியும் சோமதத்தனும் உடல் முழுதும் அம்புகளோடு ரத்தம் பெருகி ஓட தாக்கி கடைசியில் சோமத்தன் மார்பில் சாத்யகி ஒரு சக்தி வாய்ந்த அஸ்திரம் செலுத்தி அவனைக் கொன்றான்.

இன்னொருபக்கம் யுதிஷ்டிரன் த்ரோணரோடு மோதினான். யுதிஷ்டிரனை அம்புகளால் வாட்டினார் துரோணர். அடிபட்டு யுதிஷ்டிரன் தேர் தட்டில் சாய்ந்தான். யுதிஷ்டிரனை அப்புறப் படுத்த, அங்கே கிருஷ்ணனும் அர்ஜுனனும் வந்து துரோணரை தாக்கினார்கள்.

''யுதிஷ்டிரா, நீ துரோணரோடு மோத முயன்றது தவறு. உன்னைச் சிறை பிடிக்க அவர் முயலும்போது அவரை நீ நேரடியாக எதிர்ப்பது கூடாது. அவரைக் கொல்லவே பிறந்தவன் திருஷ்ட த்யும்னன் அவனை முன்னே நிறுத்து. நீ துரியோதனனை தாக்கு'' என்றான் கிருஷ்ணன்.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...