Tuesday, August 6, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
பதினைந்தாம் நாள் யுத்தம்

ஹா, அஸ்வத்தாமன் மாண்டானா?

இதை ரத்த சேற்றில் நடந்த யுத்தம். ரத்த வெள்ளத்தில் குரு க்ஷேத்திரம் குருதி க்ஷேத்திரமாகவே எங்கும் காணப்பட்டது. துவாபர யுகம் முடிந்து கலியுகம் வந்துவிட்டதோ, அதற்கு அறிகுறி தான் இந்த உயிர்சேதமோ. புனரபி ஜனனம் பாக்கியோ?

போர் துவங்கியதும் பாண்டவ சைன்யம் மும்முரமாக கௌரவ சைன்யத்தை தாக்க தொடங்கியது. அர்ஜுனனும், பீமனும் மீண்டும் கௌரவ சேனையின் அளவை குறைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோருடன் சேர்ந்து அர்ஜுனனை எதிர்த்தான். துருபதனின் மூன்று பேரர்களும் த்ரோணரால் கொல்லப்பட்டார்கள். துருபதன் விராடன் இருவரும் கடுமையாக அவரை எதிர்த்தாலும் கடைசியில் இருவரையுமே துரோணர் கொன்றுவிட்டார்.

தன் தந்தை துருபதனைக் கொன்றதால் ,ஆவேசத்தோடு பழி வாங்க த்ரிஷ்ட த்யும்னன் துரோணரை எதிர்த்தான். இதுவரை இல்லாத ஆக்கிரோஷத்தோடு யுத்தம் இரு சேனைகளும் நடந்தது. பீமனும் திருஷ்டத்யும்னனும் அசுரத்தனமாக போரிட்டனர். யார் எதிரே என்று தெரியாதபடி புழுதித்திரை படர்ந்தது. இரு பக்கமும் உண்மையில் 'உயிரைக் கொடுத்து' தான் யுத்தம் புரிந்தனர். எங்கும் ரத்த வெள்ளம்.

அர்ஜுனனும் துரோணரும் ஒருவரை ஒருவர் வீராவேசமாக தாக்கினார்கள். ஒருவர் விட்ட அஸ்திரம் மற்றொருவருக்கு தெரிந்தது அதை எதனால் தடுக்கவேண்டும் அன்று அறிந்து அடுத்த சக்தி வாய்ந்த அஸ்திரத்தை விடுத்து அதை எதிராளி புரிந்துகொண்டு தடுத்ததால் , மிகச் சிறந்த வில் வீரர்கள் இருவர் போர் புரிந்தனர். எங்கும் அம்பு மழை. உடலெல்லாம் ரத்தம்.

' 'அர்ஜுனா என் வீர மகனே, என்னே உன் சாதுர்யம், உன்னை கடின ஆயுதங்களால், அஸ்த்ரங்களால் சோதித்து, நீ தங்குய், தாங்குவாய் என்று உன் மீது கொடிய ப்ரம்மாஸ்திரங்களை வீசினேன். லாகவமாக நீ அவற்றை எதிர்த்து என்னை தாக்கி என் உடம்பை ரத்தம் கக்கச் செய்தாய். என்னை எதிர்த்து வெல்பவன் நீ ஒருவனே'' என மனமார புகழ்ந்தார் துரோணர். அவர் சென்ற பாதையில் ஆயிரமாயிரம் உயிர்களைக் கொன்று கொண்டே சென்றார்.

அப்போது ஜமதக்னி, விஸ்வாமித்ரர், அத்ரி, துரோணரின் தந்தை பாரத்வாஜர், வல்கியர் , கர்கர், ஆகியோர் சூக்ஷ்ம சரீரத்தில் தோன்றி ''த்ரோணா, நீ செய்வது சரியல்ல, உனது மரண காலம் வந்து விட்டது, ஆயுதங்களை எறிந்துவிட்டு எங்களைப் பார், ஒரு அந்தணன் நீ . க்ஷத்ரிய தர்மத்தை பின் பற்றி உன்னிலும் சக்தி குறைந்த பல்லாயிரம் உயிர்களை போக்குவது அதர்மம். பிரம்மாஸ்திரம் என்ற மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதத்தால் அதை எதிர் கொள்ள சக்தியற்ற எண்ணற்ற உயிர்களை கொல்வது உனக்கு தர்மமல்ல. ஒரு கணமும் தாதிக்காமல் உன் ஆயுதங்களை விட்டொழித்து உன் தவறை திருத்தி த்யானம் செய்வாயாக'' என்றனர்.துரோணர் மனம் இதனால் சஞ்சலமுற்றது.

யுத்தம் தொடர்ந்தது. எண்ணற்ற உயிர்கள் தான் சேதமாயினவே ஒழிய வெற்றி தோல்வி இருபக்கமும் இல்லை. கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும் பாண்டவர்களையும் அழைத்து ''யுதிஷ்டிரா துரோணரை எதிரத்து போர் புரிந்து வெல்வது என்பது இனி நேரப்போவதில்லை. அவர் கையில் தனுசு (வில்) இருக்கும்வரை எவரும் அவரை வெல்வதென்பது நிகழாது. அவர் சற்று நேரமாவது வில்லை கீழே வைத்தால் அந்த நேரம் எந்த சாதாரண மனிதன் கூட அவரை கொல்ல முடியும். உதாரணமாக அவருக்கு தனது புத்ரன் அஸ்வத்தாமன் மேல் அளவுகடந்த பாசம். 'அஸ்வத்தாமன் இறந்தான்'' என்ற பேரிடி செயதி கேட்டால் ஒருவேளை துரோணர் சற்று நேரம் போரை நிறுத்தி வில்லை கீழே வைக்கலாம். அந்த நேரம் அவரைக் கொல்வது எளிது. யாரையாவது விட்டு அந்த சப்தத்தை துரோணர் காதில் விழும்படியாக சொல்லச் சொல். ''என்றான் கிருஷ்ணன்

அர்ஜுனன் இதற்கு சம்மதிக்காவிட்டாலும் ஒருவாறு யுதிஷ்டிரன் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான். பீமசேனன் யுத்தத்தில் அன்று மாளவ தேச அரசன் இந்திர வர்மனது யானையாகிய அஸ்வத்தாமா என்ற பெரிய யானையை கொன்றான். பிறகு உரக்க ''அஸ்வத்தாமாவைக் கொன்றேன் '' என்று கர்ஜித்தான். தூரத்தில் இருந்த துரோணர் செவியில் பீமன் குரல் நாராசமாக விழுந்து அதிர்ச்சி யுற்றார்.

ஏற்கனவே ரிஷிகள் சொன்ன உபதேசம் அவர் மனத்தில் ஒரு குற்ற உணர்ச்சியை தோற்றுவித்திருந்தது அல்லவா? . பீமனின் குரல் வேறு எங்கிருந்தோ தனது ஒரே வீர மகன் அஸ்வத்தாமன் அன்றைய யுத்தத்தில் கொல்லப்பட்டான் என்ற துக்க சேதி அவரை உலுக்கியது. எதிரே த்ரிஷ்ட த்யும்னன் விடாமல் அவர் மேல் அஸ்திரங்களை செலுத்திக் கொண்டிருந்தான். சிகண்டியும் வேறு தாக்கினான். சோகமும் களைப்பும் அவரை வாட்ட அவர் மனம் உண்மையிலேயே என் மகன் அஸ்வத்தாமன் மாண்டானா? மாவீரன், சகல அஸ்திர வித்தைகளும் கற்ற நிபுணன், அவனை பீமன் கொன்றானா? இருக்க முடியாதே, அஸ்வத்தாமனை கொல்வது எளிதல்லவே'' என்று சிறிது சஞ்சலமும் சந்தேகமும் அவரை அலைக்கழித்தது. எப்படி சந்தேகத்தை நிவர்த்தி செயது கொள்வது? எதிரே யுதிஷ்டிரன் தன்னை தாக்குவதை அறிந்தார். ' யுதிஷ்டிரன் 'ஸத்யஸந்தன் அல்லவா, இவனையே கேட்போம். அவன் தவறான செயதி சொல்ல மாட்டானே என்று தோன்றியது துரோணருக்கு.

''யுதிஷ்டிரா நீ சொல், என் மகன் அஸ்வத்தாமன் போரில் கொல்லப்பட்டானா?'' என துரோணர் கேட்டார்.

''யுதிஷ்டிரா, அரை நாளில் முழுவேகத்தோடு துரோணர் உன் சைன்யத்தை அழித்து உன்னை சிறை பிடித்து உங்களை மீண்டும் துன்பத்தில் ஆழ்த்திவிடுவார். எத்தனையோ உயிர்களைக் காக்க ஒரு பொய் சொல்வதில் தவறில்லை. எனவே உடனே த்ரோணரிடம் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் என்று சொல் '' என்றான். அதற்குள் பீமன் நான் அஸ்வத்தாமன் என்கிற இந்த்ரவர்மனின் யானையைக் கொன்று அந்த விஷயம் துரோணருக்கு கேட்கும்படியாக சொல்லிவிட்டேன் என்றான்.

''ஆச்சாரியரே, ஆமாம் அஸ்வத்தாமா கொல்லப்பட்டது. அது ஒரு யானை '' என்கிறான் யுதிஷ்டிரன்., அஸ்வத்தாமன் மாண்டான் என்கிற செய்தி யுதிஷ்டிரன் வாயிலாக கேள்விப்பட்டதும் துரோணர் நிலை குலைந்தார். இரண்டாவதாக அது ஒரு யானை என்ற அவனது சொல் அவர் காதில் விழாமல் பலத்த சங்கநாதங்கள் பேரிகைகள் ஒலித்தன. மீளாத துயரத்தில் துரோணர் ஆழ்ந்தார். புத்ர பாசத்தில் கண்களில் ஆறாக நீர் வழிந்தது. சிலை போல் ஆயுதங்களை தேர் தட்டில் வைத்துவிட்டு அமர்ந்தார். நீ செய்தது தவறு என்று ரிஷிகள் சொன்னது காதில் ரீங்காரம் செய்தது. தான் ஒரு குற்றவாளி என கருதினார்.

இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்து அவரைக் கொல்லவே பிறந்த திருஷ்டத்யும்னன் கூரான கொடிய சக்திவாய்ந்த அம்பு ஒன்றை பொருத்தி அவர் மார்பின் மீது எய்தான். துரோணர் அதை எதிர்த்து தடுக்க முயற்சித்தும் அவர் கையோ, வில்லோ அவர் செயலில் இல்லை. நான்கு ஐந்து நாட்களாக பாண்டவ சைன்யத்தை துவம்சம் செய்த மாவீரரால் வில்லை தூக்கக் கூட முடியாத சோகம் பீறிட்டு அவரை வாட்டியது. அவர் மார்பில் பட்டு தெறித்த அம்புகளைக் கண்டு அதிசயித்த திருஷ்டத்யும்னன் தனது கூரிய வாளுடன் அவர் மீது பாய்ந்தான். துரோணரின் இடது கண்ணும் இடது கையும் துடித்தது. அது நல்ல சகுனம் இல்லையே. அழிவு நெருங்கிவிட்டதன் அடையாளம். பீமன் ''திருஷ்டத்யும்னா, நீ த்ரோணரைக் கொல்வத ற்கென்றே வரத்தினால் பிறந்தவன். உனது காரியத்தை சீக்கிரம் முடி'' என்றான். சிகண்டி பீமன் சாத்யகி ஆகியோர் த்ரோணரைக் காத்து நின்ற படைகளை அழித்தனர்.

துக்கம் மேலிட்டு ''அஸ்வத்தாமா அஸ்வத்தாமா '' என்று சொல்லிக் கொண்டே கண்மூடி தலை குனிந்து மௌனமாக தேர் தட்டில் அமர்ந்தார் துரோணர். அவர் வில் அவரிடமிருந்து ஏற்கனவே மெல்ல நழுவி கீழே விழுந்தது. தனது கூரிய வாளால் அவரை கொன்றான் திருஷ்டத்யும்னன். தலை துண்டித்து கீழே விழுந்தது. அதை எடுத்து துரியோதனன் சேனையின் மீது வீசி எறிந்தான் திருஷ்டத்யும்னன். ஒரு மஹா வீரர் ரிஷி பாரத்வாஜரின் மகன் த்ரோண கலசத்தில் பிறந்த துரோணர் விண்ணுலகெய்தினார் .

குருவை இழந்த அர்ஜுனன் கண்களில் நீர் பிரவாகமாக ஓடியது. அந்த கணம் முதல் யுதிஷ்டிரன் தேர் சக்கரங்கள் இதுவரை பூமியில் படியாமல் நின்றவை பூமியைத் தொட்டன.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...