Friday, August 9, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்     J K  SIVAN 

15ம் நாள் யுத்தம் தொடர்கிறது 

                       ஒரு கலந்தாலோசனை 

''சஞ்சயா, என் மகன் துரியோதனன் என்ன செய்கிறான் என்று பார்த்து சொல்'' என்றான் திருதராஷ்டிரன்.

''அரசே, உங்கள் மகன் யுதிஷ்டிரனோடு போர் புரிந்து கொண்டிருக்கிறான். யுதிஷ்டிரன் அவன் தேரை உடைத்து, அவன் பாகனைக்  கொன்றுவிட்டான். வில் முறிந்து துரியோதனன் தனியே தரையில் நிற்கிறான். யுதிஷ்டிரன் அவனைக் கொல்ல. முயலவில்லை. அதற்குள் கர்ணன், கிருபர், அஸ்வத்தாமன் ஆகியோர் வந்து துரியோதனனைப்  பாதுகாத்து விட்டனர்.

பாஞ்சால சேனை கௌரவர்களை விடுவதாக இல்லை. இதற்கிடையே அர்ஜுனன் திரிகர்த்தர்களைக்  கொல்லும்போது , பீமன் கௌரவர்களை வாட்டி வதைத்தான். துரியோதனன் மீண்டும் வந்து யுதிஷ்டிரனைத் தாக்க பீமன், '' இது என்னுடைய இரை'' என்று துரியோதனனை தாக்க வந்தான். துரியோதனனை சுற்றி மற்ற வீரர்கள் வந்து அவனை விலகச் செய்தார்கள்.
அர்ஜுனன் வரவு பாண்டவ சேனைக்கு புத்துணர்ச்சி அளிக்க, கர்ணன் சாத்யகியை தவிர்த்து அர்ஜுனனோடு மோதினான். கர்ணனுக்கு ஆதரவாக துரியோதனன் சகோதரர்கள், சகுனி, அஸ்வத்தாமன், கிருபர் ஆகியோர் சேர்ந்துகொள்ள திருஷ்டத்யும்னன் சாத்யகி சிகண்டி நகுல சஹாதேவர்களோடு கர்ணனை எதிர்க்க யுத்தம் வலுத்தது.

எண்ணற்ற வீரர்களை இழந்து வெளிச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய அஸ்தமன காலத்துக்குள் யுத்தம் நிறுத்தப் பட்டது. 

அன்றிரவு, துரியோதனன் கூடாரத்தில் ஒரு கலந்தாலோசனை நடந்தது. முக்கியமான கௌரவ சேனாதிபதிகள் எல்லோரும் கூடி இருந்தனர்.

 '' கர்ணா, நீ எதிர்த்தும், எப்படி அர்ஜுனன் நமது சேனையில் எண்ணற்றவரை கொல்ல முடிந்தது ? என்று கேட்டான் துரியோதனன்.

''நண்பா, அர்ஜுனன் சாதுர்யம் நிறைந்தவன். சாமர்த்தியசாலி, அதோடு வீரத்திலும் பலத்திலும் மற்றவரை விட சிறந்தவன். அவனுக்கு தேவைப் பட்ட நேரத்தில் ஆலோசனை புரிய, உதவ கிருஷ்ணனும் இருப்பதுஅவனுக்கு அதிர்ஷ்டம். உங்களுக்கு கிருஷ்ணனின் பராக்ரமம், புத்திசாலித்தனம் எல்லாம் தெரியுமே. இன்று எங்களை அம்புத் திரைகளால் மூடி காரியம் சாதித்துக் கொண்டான்.பீமனை விட்டு யானைகள் குதிரைகளை சிதறடித்து எங்கும் புழுதி கிளப்பி ஒருவரை ஒருவர் சரியாக பார்க்க முடியாதபடி, தெரிந்து கொள்ளமுடியாதபடி கூட செய்தது கிருஷ்ணனின்  சாதுரியம்.   பாண்டவர்கள் நாளை தப்பமுடியாது  அதுவும்  அர்ஜுனன் என்னிடமிருந்து'' என்றான் கர்ணன் . '

'அப்படி நடந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி'' என்றான் துரியோதனன்.

நண்பர்களே, மஹாபாரதத்தில் மிகவும் விறுவிறுப்பான  விஷயம் 18 நாள் யுத்தம்  ஒன்றே. அதில் இதுவாரபாய் 15நாள் நடந்த யுத்தத்தை விவரித்து ரசித்தோம்.  இன்னும் மூன்று நாளில் யுத்தம் முடியும். 

விடிந்தால்  பதினாறாம் நாள் யுத்தம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...