Friday, August 23, 2019

OM NAMASIVAYA




ஓம் நமசிவாய.. J K SIVAN

ஓம் நமசிவாய எனும்போது கண்முன் தோன்றுவது அந்த வெள்ளிப் பனி மலை, கைலாயத்தில் மோனத்தவம் இருக்கும் ஜடாமுடி தரித்த கங்கை சந்திரன் அரவம் பூண்ட பவழ மால் வரை மீது பனி படர்ந்ததுபோல் தாமிர வர்ண தேஹத்தில் விபூதி ருத்ராக்ஷ தாரியாக சிவன். அருவமாக, லிங்கமாகவும் தோன்றுபவன்.

பரமேஸ்வரா, உன்னை இரு கரம் கூப்பி வணங்குகிறேன். நீ பிரபஞ்ச நாயகன். தக்ஷிண திசை நோக்கி உபதேசிக்கும் மௌன குரு. தக்ஷிணாமூர்த்தி. திரிபுராந்தகன், (முப்புரம் இங்கே பேராசை, கோபம், அகம்பாவம்) கங்கை அணிந்தவன், உமேசன், கௌரீசன், ஞானஒளி, யோகீஸ்வரன். ஞானமூர்த்தி, மஹாதேவன், சங்கரன், ஹரன்,சம்பு,சதாசிவன், ருத்ரன் சூலபாணி ,பைரவன், நீலகண்டன், த்ரிலோசனன் எனும் முக்கண்ணன், த்ரியம்பகன், விஸ்வநாதன்,சந்திரசேகரன், அர்தநாரீஸ்வரன், நீல லோஹிதன், பரமசிவன், திகம்பரன், என்று பக்தர்களால் எண்ணிக்கையில்லா நாமங்களால் வர்ணிக்கப்படுபவன். என் சிவன்.

நீ காருண்யமூர்த்தி. மண்டையோடு மாலையும் திருவோடு கையிலும் கொண்ட பிக்ஷாடானன். நீ சம்ஹாரமூர்த்தி, அழிக்கும் கடவுள் மட்டும் அல்ல. வாழ்த்தி வரமளிக்கும் பிரபு. ஒன்று தெரியுமா உங்களுக்கு. நமது உடல் ஒரு நிலையில் ஒரு நாள் உதவாமல் போய் விடுமே, நோய் வந்து, வயோதிகத்தினால், அல்லது வேறு ஏதோ விபத்து காரணமாக. அப்போது இனிமேல் இந்த உடல் இந்த ஆத்மாவுக்கு சரிப்படாது என்று தெரிந்து அதை அழித்து, புத்தம் புதிய தேகத்தை நமக்கு தருகிறான் பரமன். அதன் மூலம் விரைவில் அவன் திருவடி நாம் அடைய உதவுகிறான். ஹரியை விட ஹரனை வெகு சீக்கிரத்தில் திருப்தியடையச் செய்யமுடியும். வரங்களை வாரி வீசுபவன் சிவன். சிறிது பிரேமை, பக்தி இருந்தால் போதும். ஓம் நமசிவாய என்ற பஞ்சாக்ஷரத்தை சொன்னாலே போதும். அதிலேயே திருப்தி அடைபவன் பரமேஸ்வரன். அவ்வளவு தாராள கருணை மனம் அவனுக்கு. அர் ஜூனனுக்கு பாசுபதம் வழங்கினான். பஸ்மாசுரன், ராவணேஸ்வரன் ஆகியோர் தவமிருந்து அவன் மனம் மகிழ்ந்து கேட்ட வரம் தந்தவன். மார்க்கண்டேயன் ஓடிவந்து கட்டிக்கொண்டான். அவனுக்காக மறலியை காலால் உதைத்தான் காலசம்ஹாரன் சிவன். காலால் உதைத்த கண்ணப்பனுக்கு கண்ணைக் கொடுத்தான். நந்தன் பக்தியை மெச்சி தன்னோடு சேர்த்துக்கொண்டான். திருவிளையாடல் புராணம் கதைகளாக சொல்கிறதே. என் அடிமுடி காணவா நினைக்கிறீர்கள். எங்கே இப்போது கண்டுபிடியுங்கள் என்று ப்ரம்மா விஷ்ணுவுக்கு அடிமுடி காணாமல் ஒளி ஸ்தம்பமாக வானளாவி நின்றவன் அல்லவா? பட்டினத்தார் வீட்டில் மகனாக இருந்தவனாயிற்றே.

பரமேஸ்வரனின் திரிசூலம், சத்வ, ரஜோ, தமோ குணங்களை குறிக்கிறது. ஒவ்வொரு ஜீவனையும் ஆட்டிப்படைப்பது அது தானே. இடது கரத்தில் உள்ள உடுக்கை, டமருகம், சப்த ப்ரம்மம், ஓம் எனும் பிரணவ சப்தத்தை குறிக்கிறது. அண்டத்தின் அத்தனை மொழிகளுமந்த சப்தத்திலிருந்து உருவானவை. சிரஸிலிருக்கும் பிறைச் சந்திரன் மனக் கட்டுப்பாட்டை குறிக்கிறது. கங்கை அம்ருதமாகிய சாஸ்வதத்தைக் காட்டுகிறது. யானைத்தோல் உடுத்தி இருப்பது அஹம்பாவத்தின் வ்ரித்தியை, திட மனதை குறிக்கிறது. புலித்தோல் ஆசையை வென்றதை காட்டுகிறது. ஒரு கையில் மானை ஏந்தி இருப்பது, அலைபாயும், மான் போல் வேகமாக ஓடும், மனசை கட்டுப்படுத்தி ஸ்திரமாக வைப்பதைக்காட்டுகிறது. கழுத்தில்,கைகளில் பிணைந்த சர்ப்பங்கள், ஞான வைராக்கியத்தை குறிக்கிறது. சர்ப்பங்கள் நீண்ட காலம் வாழ்பவை. காலத்தை வென்றவன் என்று அவை உணர்த்துகிறது. பரமேஸ்வரன் த்ரிநேத்ரன். முக்கண்ணன். அது ஞானக்கண்.

எதிரே அமர்ந்துள்ள நந்தி ப்ரணவாகாரம். சிவலிங்கம் மொத்தத்தில் எல்லாம் ஒன்றே என தெளிவாக்கும் அத்வைத சித்தாந்தம்.

கைலாச பனிச்சிகரம் இப்போது திபெத் எல்லையில் உள்ளது. கிட்டத்தட்ட 22980 அடி உயரம். அந்த பனிமலையே சிவலிங்க வடிவில் உள்ளது.ஓம் எனும் எழுத்தை பனிக்கட்டியாக எழுதியது போல் அமைந்த சிகரம். சூரிய ஒளியில் பொன்னார்மேனியனாக காண்கிறது. அங்கே அர்ச்சகரோ, பூஜையோ, இல்லை. சிந்து நதி உற்பத்தி ஸ்தானம் அந்த மலையடிவாரத்தில். எழுத்தால் விவரிக்க முடியாத ஆனந்த பரவச நிலையைத்தருவது. கைலாச ப்ரதக்ஷ்ண பரிக்ரமத்தில் 30 மைல்கள் சுற்றவேண்டும்.திடிப குஹா எனுமிடத்தில் ஆரம்பிக்கிறார்கள். மூன்று நாள் ஆகிவிடும். வழியில் கௌரி குண்டம் கண்ணில் படும். முழுக்க முழுக்க பனி படர்ந்த ஸ்தலம். பனியை விளக்கி ஸ்நானம் பண்ணவேண்டும் என்று நினைக்கும்போதே உடல் சில்லிட்டு போகிறதே. நமது பாரத தேசத்தில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் சிவ தர்சனத்திற்கு முக்கியமானவை. பெயர்களை சொல்கிறேன். முடிந்தவற்றை சென்று தரிசிக்கலாம்.


1. குஜராத்தில் சோமநாதர் ஆலயம்.
2. திருப்பதியில் இருந்து சென்றால் அருகே ஸ்ரீ சைல மலையில் மல்லிகார்ஜுனர் ஆலயம்.
3.குவாலியர் பிரதேசத்தில் உஜ்ஜயினியில் மகா காளேஸ்வரர் ஆலையம்.
4 நர்மதை நதிதீரத்தில் அமலேஸ்வரத்தில் ஓங்காரேஸ்வரர் ஆலயம்.
5.கயா அருகே பைஜ்நாத், (வைத்யநாத்) ஆலயம்.
6. தென்னிந்தியாவில் திருவிடைமருதூரில் மத்யார்ஜுனர் ஆலயம். 7. ஹிமாலயத்தில் கேதர்நாதர் ஆலயம்.
8. மும்பை அருகே கோதாவரி நதி தீரத்தில் நாசிக் எனுமிடத்தில் த்ரியம்பகேஸ்வரர் ஆலயம்.
9. தமிழ்நாட்டில் மற்றொரு பெரிய துவாதச லிங்கம் உள்ள இடம் ராமேஸ்வரம். ராமநாதேஸ்வரர் ஆலயம் .
10. பூனா அருகே பீமசங்கரம்
11. காசி விஸ்வநாதர் ஆலயம்.
12. கர்நாடக பகுதியில் கார்வார் எல்லையில் கோகர்ணேஸ்வரர் ஆலயம்.

என்னால் அனைத்தையும் சென்று பார்க்க இதுவரை முடியவில்லை. சில க்ஷேத்ரங்கள் இன்னும் பாக்கி இருக்கிறது. பரமேஸ்வரன் கிருபையால் தர்சனம் கிட்டினால் நான் பாக்கியசாலி. இல்லையேல் இருக்கிறது இன்னும் எத்தனையோ பிறவி. மனிதனாக உருவெடுத்தால்....!




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...