Wednesday, August 28, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
ஆந்தை தந்த அறிவுரை...

வைசம்பாயனரே , யுத்தம் முடிந்தாலும் அதன் விளைவுகள் அதைவிட ஆபத்து நிறைந்ததாக இருக்கும் போல அல்லவா தோன்றுகிறது?'' என்று வருந்தினான் ஜனமேஜயன்.

''உடல் யுத்தம் முடிந்தது. உள்ள யுத்தம் பூதாகரமாக பெருகியது ஜனமேஜயா. விவரமாக சொல்கிறேன் கேள்'' என்கிறார் வைசம்பாயன ரிஷி.

''துரியோதனனைக் கண்டு சத்தியம் செய்துவிட்டு மூன்று வீரர்களும் ஒரு காட்டுக்கு சென்றார்கள். படை சேர்த்து இனி பாண்டவர்களை வெல்வது கனவு. எப்படி பழிவாங்குவது?. நமது அரசனுக்கு கொடுத்த வாக்கை எப்படி நிறைவேற்றுவது? என்று துடித்துக்கொண்டிருந்தான் அஸ்வத்தாமன், புது தளபதி!கௌரவ சைன்யம் இல்லாத அதன் சேனாதிபதி.!

''சஞ்சயா, என் மக்கள் போய் விட்டார்கள், கண்ணற்ற நான், கிழவி என் மனைவி இருவரும் அனாதைகள் ஆகிவிட்டோம்.. இனி நான் எங்கே செல்வேன் எப்படி வாழ்வேன். பாண்டு புத்ரர்களின் அடிமையாக இருக்க விருப்பமில்லை. நினைக்க நினைக்க எனக்கு ஆறவே இல்லையே, ஏன், எப்படி ?

பீமன் ஒருவனேயா என் நூறு பிள்ளைகளையும் கொன்றான்?
அப்படியானால் விதுரன் முன்பே சொன்னது சரிதானா?
நான் தான் சபையில் பீமன் சொன்னதை வெறும் வீராப்பு என்று எடுத்துக்கொண்டு முட்டாளாகவே இருந்துவிட்டேனா?
எப்படி பீமன் என் மகன், சரி சமமாக பலம் உள்ளவன், பதினாயிரம் யானை பலம் கொண்டவன், கதாயுதத்தில் நிபுணன், அவனை அதர்ம வழியில் துடையைப் பிளந்து கொன்றதை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்?
துரோகம் அல்லவா அது?
எப்படி அஸ்வத்தாமன் இதற்கு பழி வாங்கப் போகிறான்?'' என்று நூறு கேள்விகேட்டான் நூறு பிள்ளைகளை இழந்த
திருதராஷ்டிரன்.

''இருண்ட காட்டில் அன்றிரவு மூன்று வீரர்களும் தங்கினார்கள். காட்டுவிலங்குகள் வராமல் ஒருவர் காவல் இருக்க வேண்டுமே. அஸ்வத்தாமன் பொறுப்பை மேற்கொண்டான். அவனால் மற்ற இருவரைப் போல தரையில் படுத்து தூங்க முடியவில்லை. மனம் கொதித்தது. என்னால் பாண்டவர்களை நேருக்கு நேர் வெல்ல முடியாது. கொன்று விடுவார்கள் என்னை. என்னை வளர்த்த துரியோதனனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவேண்டும்? என் தந்தையை நிராயுதபாணியாக இருக்கும்போது கொன்றவனை கொன்று பழி தீர்க்க வேண்டுமே. எப்படி ?

அந்த பெரிய ஆலமரத்தின் அடியில் அஸ்வத்தாமன் யோசித்துக்கொண்டு இருளில் அமர்ந்தபோது, ஒரு ஆந்தை கத்திக்கொண்டே வந்தது. ஆந்தையும் காகமும் ஜென்ம வைரிகள். பகலில் ஆந்தையை காக்கைகள் கொல்லும் , இரவில் ஆந்தை காக்கைகளை கொல்லும் . அந்த மரத்தின் மேலே கிளைகளில் அநேக காக்கைகள் அமர்ந்தவாறு உறங்கி கொண்டிருந்தன. நிசப்தம். கண்கள் பச்சையாக ஒளி வீச அந்த ஆந்தை சப்தமின்றி பறந்து வந்தது. மின்னல் தாக்குதலில் மேலே அமர்ந்த காக்கைகளை கால் நகத்தால், அலகால், பற்களாலும் தாக்கி இறகுகளை பிய்த்து, குத்திக் குதறி கொன்றது. பறந்தது.

இதைப் பார்த்ததும் பொறி தட்டியது அஸ்வத்தாமனுக்கு. இறைவன் எனக்கு உணர்த்திய நீதி இது. அஸ்வத்தாமனாகிய நானே இப்போது இந்த ஆந்தை. தூங்கும் பாண்டவர்கள் தான் காக்கைகள். உடனே சென்று என் எதிரிகளை கொல்வேன்'' என்று தனது மார்பின் மேல் படீர் படீர் என்று அடித்துக்கொண்டான் அஸ்வத்தாமன்.

நள்ளிரவில் பாண்டவர்கள் பாசறைக்கு சென்று அவர்கள் தூங்கும் நேரத்தில் அவர்களையும் பாஞ்சாலர்களையும் கொல்வது ஒன்று தான் வழி. விறுவிறு வென்று கிருபரையும், க்ருதவர்மனையும் எழுப்பினான், திட்டத்தை சொன்னான். அவர்களுக்கு இந்த திட்டத்தில் விருப்பமில்லை.

''அவர்கள் தீய வழியில் நம் சேனையின் அரசனை கொன்றதால் இந்த சூழ்ச்சியும் தவறில்லை'' என்று வாதாடினான் அஸ்வத்தாமன்.

''உழைப்பு இருந்தாலும் விதியின் ஒத்துழைப்பு இல்லையென்றால் பயனில்லை. அதே போல் விதி அவன் பக்கம் இருந்தாலும் அவன் எந்த உழைப்பும் இன்றி அதை வீணாக்கினாலும் பயனில்லை. துரியோதனன் பெரியோர் வாக்கை மதிக்கவில்லை, அவர்களை அலட்சியப் படுத்தினான், தவறான பாதையை வேண்டுமென்றே நாடினான். சகலமும் கடைசியில் உயிரோடு சேர்த்து இழந்தான். பேராசை பெருநஷ்டம் என்பதற்கு அவனே உதாரணம்.

என்னைக் கேட்டால் நாம் நேராக அஸ்தினாபுரம் சென்று திருதராஷ்டிரன், விதுரன் காந்தாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்கள் சொற்படி நடப்பதே உசிதம்'' என்கிறார் கிருபர்.

''எனக்கென்னவோ அவரவர் சித்தப்படி நடப்பது தான் உசிதம் என்று படுகிறது. ஒரே மனிதனுக்கு ஒரு நேரம் தோன்றும் முடிவு மறு கணம் தவறானதாக படுகிறதே.. சந்தர்ப்பம் ஒத்துழைத்தால் தவறான வழியும் கூட சரியான முடிவாக பலனளிக்கும். உயிரைத் திரணமாக மதித்து வெற்றியும் பெறுவான். (இது தான் ரிஸ்க் எடுப்பது!) ஒவ்வொருவனும் தனது வாழ்வில் ஒருமுறை யாவது இப்படி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முடிவை எடுத்து அதன் பலன் பேராபத்தை தருவதாக இருந்தாலும் நல்ல முடிவே தரும் என்று துணிந்து எடுக்கிறான். என் முடிவு அப்படிப் பட்டது.

இறைவன் ஒவ்வொரு உயிரையும் படைக்கும்போதே இது இப்படி நடக்கவேண்டும் என்று தலையில் எழுதி விடுகிறான்.

நான் பிறப்பால் பிராமணன், மேற்கொண்டது க்ஷத்ரிய தர்மத்தை, வில்லும் வாளும் தாங்கி மிகப் பெரிய வீரன் என்று பேர் .பெற்று என்ன பயன்? என் தந்தையைக் கொன்ற திருஷ்டத்யும்னனையும், அர்ஜுனனையும் இன்னும் பழிவாங்கவில்லை, என் அரசனையும் அவன் 99 சகோதரர்களையும் கொன்ற பீமனை இன்னும் பழிவாங்காத க்ஷத்ரியனாக இருந்து என்ன பயன்?

இன்று இரவு ஒரே நேரத்தில் இரண்டையும் நிறைவேற்று கிறேன். இன்று இரவே பாண்டவர் பாஞ்சாலர்கள் தங்கியிருக்கும் வாசங்களுக்கு சென்று இரவில் அவர்கள் தூங்கும்போது அதை மீளாத்தூக்கமாக பண்ணிவிடுகிறேன்.'' என்றான் அஸ்வத்தாமன்.

''அஸ்வத்தாமா, நீ துணிச்சலாக முடிவெடுத்துவிட்ட பிறகு என்ன சொல்ல? உனக்கு துணையாக நாங்களும் நாளை போருக்கு வருகிறோம். அங்கே உன் வீரத்தை காட்டி வெல்வாய். அதுவே நியாயம். இன்று இரவு நீ உறங்கு. நாளைக்கு பழி தீர்ப்போம், அல்லது மடிவோம்'' என்கிறார் கிருபர்.

''வாசுதேவனையும் அர்ஜுனனையும், பீமனையும் போரில் வெல்வது என்பது முடியாத காரியம். தானே போய் மரணத்தைத்தேடிக் கொள்ளும் சமாச்சாரம். அவர்களை என்னால் முடிந்த வழியில் கொல்வது எனக்கு நிம்மதியை தரும். யோசித்து தான் நான் செய்த முடிவு இது.''என்றான் அஸ்வத்தாமன்.

''உனக்கு சரியான வழியை உபதேசித்தால் ஏறாது. கரண்டி குழம்பில் மூழ்கி இருந்தாலும் ருசி அறியாது. நீ சுத்த வீரன். ஆயுதங்களைக் கடுமையாக, கொடியனவாக உபயோகிக்க தெரிந்தவன். துரோணர் மகன். வில்வித்தையில் நிபுணன். எனவே உன்னோடு நாங்கள் கடைசிவரை உதவிக்கு கூட நின்று, பாண்டவர்களை, பாஞ்சாலர்களை போரில் வெல்வதுவே சரி''

''இல்லை நேர்மை செத்து விட்டது என் தந்தை, கர்ணன், பீஷ்மர், துரியோதனன், பூரி ஸ்ரவஸ், ஜயத்ரதன், எல்லோருமே ஏமாற்றப் பட்டு கொல்லப் பட்டார்கள். நேர்மை இனி இல்லை. எப்படி என் தந்தை தனது ஆயுதங்களை கீழே வைத்தபோது கொல்லப் பட்டாரோ, அதே போல் திருஷ்டத்யும்னன் ஆயுதங்கள் இன்றி கவசமின்றி உறங்கும்போது கொல்லப் படுவது தான் சரியான பதில். உடனே இருவரும் என்னோடு வாருங்கள். நான் இப்போது உங்கள் தளபதி சொல்வதைக் கேட்கவேண்டும்.'' என்றான் அஸ்வத்தாமன்.

மூவரும் பாண்டவர் பாசறைக்கு சென்றார்கள். அஸ்வத்தாமன் கொடிய ஆயுதங்களை கையில் வைத்திருந்தான். மனதில் தனது தந்தையையும் பரமசிவனையும் பிரார்த்தித்து விட்டு மெதுவாக பாஞ்சாலர்கள் தங்கிய கூடாரத்தில் எவரும் அறியாவண்ணம் நுழைந்தான்.



இரவில் பாண்டவர்கள் பாசறையில் நடந்ததை இருட்டில் நாமும் அஸ்வத்தாமன் பின்னாலேயே போய் பார்ப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...