Sunday, December 31, 2017

dasavatharam vaamanan



 தசாவதாரம்

                                      ஆதி நாராயணனின் அவதாரங்கள்..4

நாராயணன் குள்ளமான  மலையாள நம்பூத்திரியாக ஏன்   அவதாரம்  எடுத்தார்? வாமனன் என்று எல்லோரும் அவனது உருவத்தை வைத்தே  அழைத்து அவன் பெயர் என்னவென்றே இதுவரை  யாருக்கும் தெரியாதபடி எதற்கு வைத்தார்?   ஆதி நாராயணனின்  அவதாரங்களில் இது ஐந்தாவது அவதாரம்.  மனித உருவில் மஹாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம்.  தன்னை அளவில் குறைத்துக்கொண்டது  எதை எடுத்துக் காட்டுகிறது. மகா சக்தி வாய்ந்த  மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை குறைக்கவா?

மஹாபலி  ப்ரஹலாதனின் பேரன்.  பாதாள லோகத்தை தனது ஆளுமையில் வைத்து அரசாண்டவன். ராக்ஷஸ வம்ச  பேரரசன். பாதாள லோகம் மட்டும்  போதாது மற்ற எல்லா லோகங்களையும் வென்று தனது கைவசம் கொண்டுவர எண்ணம் கொண்டான்.  அது  நிறைவேற ஒரு பெரிய  காரிய சித்தி யாகம் பண்ண ஏற்பாடுகள் நடந்தது.  அந்த யாகம் முடிந்ததும் அனைவருக்கும் நிறைய ல் தானங்கள் வழங்கினான். நிச்சயம் அந்த யாகத்தின் பலனாக  மஹாபலி சர்வ லோகங்களுக்கும் அதிபதி யாகிவிடுவான் என்பதில் யாருக்கும் துளியும் ஐயமில்லை.  தேவர்கள் நடுங்கினர். மஹாபலி அவர்களை அடக்கி ஒடுக்கிவிடுவானே.  மஹாபலி யாகம் வெற்றிகரமாக நடந்த சந்தோஷத்தில் யார் எதை தானமாக  கேட்டாலும் வாரி வழங்கினான்.

வரிசையாக  எண்ணற்ற  பிராமணர்கள் அவன் அரண்மனையில் நின்று அவனிடம்  இருந்து தானம் பெற்றார்கள். அவர்களில் ஒரு குட்டையான பிராமணன் நடுவில் இருந்தான். காஸ்யபரின் பிள்ளை.  ஒரு கையில் தாழங்குடை, மற்றொரு கையில் கமண்டலம். இடையில் கோவணம். சிவந்த உடலில் மார்பில் பூணல்.
கையில் மோதிரவிறலில் தர்ப்பை பவித்ரம்.


வரிசை நகர்ந்து குட்டையன் மஹாபலி முன் நின்றான்.

அவன் உருவத்தை பார்த்து  மஹாபலி வேடிக்கையாக சிரித்தான்.  பிறகு   ''வா ப்ராம்மணா,  கால் கடுக்க வெகுநேரம் இந்த வரிசையில் நிற்கிறாயோ?''

''அரசே  உங்களிடம்  தானம் வாங்க நான் அதி ர்ஷ்டம்  செய்திருக்கவேண்டும். கால் கடுக்க நின்றாலும் கை நிறைய கொடுப்பவர்கள்  அல்லவா  நீங்கள்''என்றான்  வாமனன்,

''பரவாயில்லே  சாதுர்யமாக பேசுகிறாயே. நீ கேட்பதை கொடுக்க என் மனதுக்கு பிடித்திருக்கிறது. சொல் உனக்கு என்ன தானம் வேண்டும் என்னிடம்?''  என்றான்  மஹாபலி

''கால் கடுக்க என்று நீங்கள் சொன்னதால் என் மனத்திலும் காலே  முதலாவதாக நிற்கிறது.  என் சிறிய காலடியால் மூன்று அடி  மண் மட்டும் நீங்கள் தந்தால் போதுமே''

''மண்ணா , மூன்றடியா?''  என்ன உளறுகிறாய்.  போயும் போயும் இதையா கேட்பாய்.  நிறைய  கேள் பொன் ,மணி, வைரம் வைடூர்யம், காசு, பசு, தானியம்  அதெல்லாம் கேட்காமல்  ஏதோ கேட்கத்தெரியாமல் எதையோ கேட்டு நல்ல ஒரு சந்தர்ப்பத்தை இழக்கிறாயே. பாவம் விவரம் தெரியாதவன்  ஏதோ மாற்றி கேட்டுவிட்டாயோ?'' சரியாக சிந்தித்து சீக்கிரம் கேள். உனக்கு பின்னால்  நிறைய பேர் நிற்கிறார்கள் ''

''இல்லை ப்ரபோ   எனக்கு தேவையானதை தான் கேட்கிறேன்.  என் கால் அளவால்  மூன்றடி  மண் மட்டுமே போதும்''  

பைத்தியக்கார  பிராமணன். விசித்தரமானவன்.  சரி  இதோ நீ கேட்ட மூன்றடி மண் தந்தேன். அளந்து எடுத்துக் கொள்''  என்றான் மஹாபலி

வானம் இடித்தது. பூமி நடுங்கியது. பறவை, விலங்கு, தாவர இனம், கடல்  பூமி வானம் எல்லாமே சுழன்றது. மஹாபலி வாயைப் ;பிளந்து எதிரே பார்த்தான். குள்ளனைக் காணோம்.  எங்கே அவன்...  இது யார் ?  ஆகாசத்துக்கும் பூமிக்குமாக  ஒரு பேருருவம்  நின்றது. அதன் ஒரு காலடியில்  அவனது பாதாள லோகம் அனைத்தும்   அடங்கியது. ஐயோ  இது என்ன.  அது இன்னொரு காலால்  பூமி வானம்  இரண்டையும் அளந்து விட்டதே. உயர்ந்த அந்த காலடி  சத்யலோகத்தில் பிரமன் எதிரில் நிற்க  அவன் அதற்கு அபிஷேகம் செய்தான் என்று அன்னமாச்சார்யா ஒரு கீர்த்தனத்தில் பாடுகிறார். ''ப்ரம்ம கடிகின பாதமு'' .  சிறந்த பாடல் அது.

''மஹாபலி  நீ வழங்கிய தானம்  மூன்றடி மண்.  ஒரு  அடியால் பாதாளலோகங்கள் அனைத்தும் அளக்கப்பட்டது. ரெண்டாம் அடியால் பூமியும் வானமும், மண்ணும் விண்ணும் அளந்து மண் பெற்றேன். இனி நான் கேட்ட மூன்றாவது அடி மண் எங்கே ? சொல்.

மிரள மிரள விழித்தான் மஹாபலி. அவனையறியாமல் அவனது இரு கரங்களும் கூப்பின. திருவிக்ரமனாக எதிரே நிற்பவன்ம தன்னிடம் தானம் கேட்ட  வாமனனாக  வந்த  மஹா விஷ்ணுவே   என புரிந்து கொண்டான்.

கண்களில் தாரை தாரையாக  கண்ணீர் வடிந்தது. தனது தவறு புரிந்தது. ''பிரபு, மூன்றாவது அடியை எனது சிரத்தில் வையுங்கள் '' என்று கெஞ்சினான்.  ஆணவம் அழிந்தான். அதற்காகத்தானே விஷ்ணு இந்த அவதாரத்தையே எடுத்தார்.

''மஹாபலி. உன்னை எனக்கு பிடிக்கும். உன் ஆணவத்தை அழிக்கவே நான் இந்த அவதாரம் எடுத்தேன். இனி நீ இந்த சுதல லோகம் எனும் பாதாளத்தை நேர்மையாக ஆட்சி  செய்து வருவாய்.  அடுத்த மன்வந்தரத்தில் நீ தான் இந்திரன். உனக்கு மரணமில்லை. நீ ஒரு சிரஞ்சீவி ''  என்று வரமளித்தார் விஷ்ணு.  அந்த மன்வந்தரம் இன்னும் வரவில்லை. அது வருவதற்குள் நமக்கு  எத்தனை லக்ஷங்கள் பிறவி பாக்கி இருக்கிறதோ!


காஞ்சிபுரத்தில் சிவ காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆலயத்தின் அருகே  ஒரு வாமனன் கோவில் இருக்கிறது. இங்கு ஒரு கோவிலில் தான் விஷ்ணு வாமனனாக காட்சி தருகிறார்.  35 அடி  உயர 24 அடி  அகலமாக  உலகளந்த பெருமாள் இருக்கும்  கோயில்.  என்று யாரைக்கேட்டாலும் வழி சொல்லுவார்கள். திருக்கோவிலூரில் அற்புதமாக காட்சி அளிக்கிறார். சென்றிருக்கிறேன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...